ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்திற்கு முன்பே இலங்கையில் தமிழ் இலக்கிய முயற்சிகள் இடம்பெற்றிருந்தமைக்கான காரணங்களைத் தெளிவுபடுத்துக.?
இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு ஆரியச் சக்கரவர்த்திகளினால் கி.பி 13ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட அரசினையே யாழ்ப்பாண அரசு என்பர். அதேவேளை 13ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தில் இலக்கிய முயற்சிகள் பற்றிய நோக்கு பிரதானமாக அமைகிறது
அக்காலத்தில் இலக்கியங்கள் பல வழக்கிலிருந்திருக்கின்றன. இருந்தும் அவற்றில் சில கால ஓட்டத்தில் கிடைக்கப் பெறாமல் அழிந்து போய் விட்டன.
ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றின் ஆரம்பநிலை இலக்கிய கர்த்தாவாக விளங்குபவர் ஈழத்துப் பூதந்தேவனார் ஆவார். இவரை பூதந்தேவனார், ஈழத்துப் பூதந்தேவனார், மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் எனப் பல பெயர்களால் அழைக்கின்றனர். பூதந்தேவனார் கி.பி 3ம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என பேராசிரியர் ஆ வேலுப்பிள்ளை குறிப்பிடுகிறார். இவர் பாடிய 7 செய்யுள்கள் சங்க இலக்கியத் தொகுப்புக்களில் காணப்படுகின்றன. அகநானூற்றில் 83, 231, 337 ஆகிய செய்யுளும் குறுந்தொகையில் 189, 343, 360 ஆகிய செய்யுள்களும் நற்றிணையில் 366வது செய்யுளும் பூதன்தேவனாரால் பாடப்பெற்றமையாகும். இச்செய்யுள்களில் எவ்விடத்திலாயினும் ஈழம் பற்றிய கருத்துக்கள் வெளிப்படையாகக் எவையும் காணப்படாமையால் புலவர் ஈழத்தவரா? இல்லையா? என்பதில் கருத்து முரண்பாடுகள் நிலவுகிறன.
ஈழத்து தமிழ் மொழியும் இலக்கியமும் வழக்கிலிருந்தமைக்கான பிரதான காரணீகளாக பின்னரும் கல்வெட்டுப் பாக்கள் காணப்படுகின்றன.
அநுராதபுர நானு நாட்டார் கல்வெட்டுப்பா
பதவியாக் கல்வெட்டுப்பா
பணிடுவாப்துவர கல்வெட்டுப்பா
கோட்டகம கல்வெட்டுப்பா என்பனவாகும்.
அனுராதபுர திராவிடக் கட்ட இடுபாடுகளுக்கு இடையே கண்டுபிடிக்கப்பட்ட நான்கு நாட்டார் கல்வெட்டுப்பா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். கி.பி 9ம் அல்லது 10ம் நூற்றாண்டுக்குரியது என இக்கல்வெட்டுப்பா கருதப்படுகிறது. அக்கல்வெட்டின் இறுதிப் பகுதி "போதி நிழலமர்ந்த புண்ணியன் போ லெவ்வுயிருக்கும்...குன்றாத மாதவன் மாக் கோதையொரு தர்மபாலனுளன்" தமிழ்ப் புலமை இக்காலப்பகுதியில் சிறப்புற்று விளங்கியதனை வெண்பா யாப்பில் அமைந்த இக் கல்வெட்டுப்பா உணர்த்துகிறது. இந்த வகையில் சிறந்த தமிழ்ப் பாரம்பரியம் ஒன்று இருந்திருக்கலாம் என ஊகிக்க முடிகிறது.
பதவியா கல்வெட்டுப்பாவில் "உத்தமர் தங்கோயில் வலகழி...சித்தமுடன் சீரிறமை சேர்ந்த..." என்ற விடயம் காணப்படுகிறது. இது கி.பி 12ம் நூற்றாண்டுக்குரியது எனக் கருதப்படுகிறது. இப்பா கோவில் பற்றிய செய்தியைத் தருகிறது. எனவே இக்காலப் பகுதியில் கோவில் பற்றிய செய்திகளைக் கூறும் இலக்கியங்கள் எழுந்திருக்கலாம் எனக் கொள்ளலாம்.
பண்டுவஸ்நுவர கல்வெட்டுப்பா கி.பி 13ம் நூற்றாண்டுக்குரியது எனக் கருதப்படுகிறது. பௌத்த நிறுவனங்கள் இலங்கையில் அமைக்கப்பட்ட செய்தியை எடுத்து இயம்புகின்றது. இது விருத்தப்பா யாப்பினைச் சேர்ந்ததாகக் கொள்ளப்படுகிறது. எனவே, விருத்தப்பாவின் சிறப்பும் ஈழத்துத் தமிழ் இலக்கிய பாரம்பரிய வளர்ச்சியினை எடுத்துக் காட்டுகிறது.
கோட்டகம 140 கல்வெட்டுப்பா கி.பி நூற்றாண்டுக்குரியதாக கருதப்படுகின்றது. இக்கல்வெட்டுப்பா யாழ்ப்பாண அரசின் படைகள் கேகாலை மாவட்டம் வரை சென்று வெற்றியீட்டிய செய்தியினைக் கூறுகின்றது. "சேது கங்கணம் வேற் கண்ணிணையார்.தங்கள் மடமாதர் தாம்" என்பது அப்பாடலாகும். இக்கல்வெட்டுப்பாவில் பா அமைதியும் கவித்துவமும் புலப்படுத்துகின்றமை ஈழ நாட்டில் இலக்கியப் பாரம்பரியம் ஒன்று சிறப்புற்று விளங்கியமையைக் காட்டுகின்றது.
கி.பி 3ம் நூற்றாண்டிற்கும் சரசோதிமாலை எழுந்த காலம் ஆகிய 14ம் நூற்றாண்டுக்கும் இடையே ஈழத்தில் எந்த ஒரு இலக்கியமும் தோன்றவில்லை ஆயினும், தமிழகத்தில் இலக்கியம் உச்ச வளர்ச்சி பெற்றிருந்தது. உம் பதினென் கீழ்க்கணக்கு நூல்கள், நாயன்மார்களின் பக்திப் பாடல்கள். காப்பியங்கள் போன்ற பல இலக்கியங்கள் தோற்றம் பெற்று இருந்தன.
தமிழ் நாட்டில் பக்தி இலக்கியம் உச்சம் பெற்று விளங்கிய பல்லவர் காலத்தில் ஈழத்தில்
உள்ள திருக்கேதீச்சரம் மீது நாயன்மார்கள் பக்திப் பாடல்கள் பாடி உள்ளனர். பாடல் பெற்ற சிவத்தலங்களைச் சூழ இலக்கிய வளம்மிக்க மக்கள் சமூகம் வாழ்ந்திருக்கலாம். நாயன்மார்களின் பாடல்களின் வீச்சு இவர்களைப் பாதித்திருக்கலாம். அதனால் இலக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.
சோழ அரசுகளின் அரச ஆதிக்கத்துக்கு இலங்கை உட்பட்டு இருந்த போது சோழ அரசின் அரச அவைப் புலவர் ஆகிய ஒட்டக்கூத்தர் இலங்கைக்கு வந்து தங்கிச் சென்றார் எனச் சிங்கள் மக்களிடையே பாரம்பரியக் கதை ஒன்று வழங்கி வருகிறது. இந்த வகையில் சோழர்களின் கலை இலக்கியங்களை ஆதரித்த மக்கள் ஈழத்திலும் இலக்கியங்களைத் தோற்றுவித்திருக்கலாம்.
பட்டினப் பாலை முதலானவற்றில் ஈழம் பற்றிய குறிப்புக்கள் காணப்படுவதால் பூதத் தேவனார் ஈழத்தைச் சார்ந்தவராவார் எனக் கருதப்படுகின்றது.
சங்கப் புலவரான முரஞ்சியூர் முடி நாகனார் என்பவரும் ஈழத்தவராக இருக்கலாம் என ஆ. முத்துத்தம்பிப்புலவர் குறிப்பிடுகிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக