16.9.25

ஆரியச் சக்கரவர்த்திகள் காலமும் போர்த்துக்கேயர் காலமும் ஒப்பு நோக்கு

ஆரியச் சக்கரவர்த்திகள் காலமும் போர்த்துக்கேயர் காலமும் ஒப்பு நோக்கு

ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தையும் போர்த்துக்கேயர் காலத் தினையும் ஒப்பிட்டு நோக்குவதற்கு அவ்விரு காலங் களிலும் தோன்றிய இலக்கியங்களே சான்று ஆகும். ஆரியச் சக்கரவர்த்தி கள் கால இலக்கியங்களாக சோதிடம், மருத்துவம், வரலாறு, சமயம், பள்ளு முதலானவை குறிப்பிடப்படுகின்றன. போர்த்துக் கேயர் கால இலக்கியங்கள் கத்தோலிக்க மதத்தினைப் பிரச்சாரம் செய்யும் மத நூல்களாக விளங்குகின்றன.

ஆரியச் சக்கரவர்த்திகள் கால இலக்கியங்கள் இந்துமதம் சார்ந்த தெய்வங்களாகிய திருமால், சிவன், விநாயகர், முருகன், சரஸ்வதி, முதலான தெய்வங்களையே போற்றுகின்றன. மருவெழுங்கமல மீது நடந்தருள் மகிமையானை" என சரசோதிமாலையும் "நாரணனைப் பயோதியினனந்தலைவா" என செகராசசேகர மாலை என்பன திருமாலையும், "சிவனருளுமைங் கரத்தாலுலக மெலாம்" என விநாயகரை செகராசசேகர மாலையும் "சங்கரனை பிறை வேணிப் பிணையிருங்கை " எனச் சிவனையும் அயன் நாவிற் புக்கிருப்பாள்" எனச் சரஸ்வதியையும் செகராசசேகர மாலை குறிப்பிடுவதனைச் சுட்டலாம். போர்த்துக்கேயர் கால இலக்கியங்கள் இயேசுநாதரையும் சந்யேம்ஸ் என்ற கத்தோலிக்கப்புனிதரையும் பாராட்டியுள்ளன. "புவியோர்கள் தமக்காய் ஜெருசலேமிற் சுமந்த சிலுவையை" என ஞானப்பள்ளு இயேசு நாதர் சிலுவை சுமந்ததையும் முந்திய யாக்கோப்பு முத்தருக்கு முன் பிறந்த சந்தியாகின் கதையை" என அர்ச்யாகப்பர் அம்மானையும் குறிப்பிடுகின்றன. எனவே இவ்விரு காலங் களிலும் தோன்றிய இலக்கியங்கள் மத ரீதியாக வேறுபடுகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் தோன்றிய கதிரைமலைப் பள்ளு என்ற பிரபந்தத்தைப் பின்பற்றி போர்த்துக்கேயர் காலத்தில் ஞானப்பள்ளுப் பிரபந்தம் தோன்றியிருக்கலாம். பள்ளுப் பிரபந்த இலக்கிய வடிவம் இவ்விரு காலப்பகுதியில் தோன்றினாலும் கதிரைமலைப்பள்ளின் பொருள் மரபும் ஞானப்பள்ளின் பொருள் மரபும் வேறுபாடு உடையது. கதிரைமலைப்பள்ளு கதிர்காம முருகனைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு மகாவலி கங்கை என்ற ஈழத்துச் சூழ்நிலையில் உருவாக்கப்பட்டது என்பதனை "கானந்திகழ் கதிரையில் நிகழெதிர் காலங்களினருள் செயுமுருகன் பள்ளினிசை பாடவே" என்ற பாடல் வரிகளினால் அறியலாம். கதிரைமலைப்பள்ளில் மகாவலிகங்கைப் பள்ளி மூலமாக ஈழத்தின் தேசியக் கருத்துக்களை 'மணி கொணர்ந்து மணிவிளக்கேற்றிடும்" எனவும் "மாணிக்க மள்ளிப் பிச்சை கொடுத்திடும் எனவும் கூறப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்க தாகும். ஞானப்பள்ளு இயேசுநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு கத்தோலிக்க மதத்தைப் பிரச்சாரம் செய்து பாடப்பட்டத னால் ஞானப்பள்ளில் நாட்டுவளம் கூறும் பள்ளியர் ஈழத்தைப் பற்றிச் சிந்திக்காது ஜெருசலத்தையும் றோமாபுரியையுமே புகழ்ந்துள்ளமையை செங்கைமேவியகம்பு துளிர்த்த ஜெருசலை' எனவும் முற்ற நீதியகலாதிறையீன்ற றோமாபுரி" எனவும் குறிப்பிட்டுள்ளமையை சுட்டிக்காட்டலாம். ஆரியச் சக்கரவர்த்தி கள் கால இலக்கியங்களில் தேசியப் பண்புகள் மிகுந்து விளங்க போர்த்துக்கேயர் கால இலக்கியங்கள் கிறிஸ்தவ மதப் போதனை களையும் மேல்நாட்டு மக்களின் வாழ்க்கை முறைமைகளையுமே சித்திரிக்கின்றன எனப் பேராசிரியர் . சதாசிவம் குறிப்பிடுவர்.

ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தே தோற்றம் பெற்ற புராணம் என்னும் இலக்கிய வடிவம் போர்த்துக்கேயர் காலத்திலும் தோற்றம் பெற்றுள்ளது. ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் கோணேசர் பெருமானையும் மாதுமையம்மையாரின் புகழையும் பாராட்டிப் போற்றிப் புகழ்ந்த தட்சணகைலாய புராணத்தைப் பின்பற்றி போர்த்துக்கேயர் காலத்தில் தொம்பிலிப்பு என்ற புலவர் கிறிஸ்தவ மத விளக்கமாக விளங்கும் ஞானாநந்த புராணத்தை ஆக்கியுள்ளார்.

ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் ஆலய வரலாறும் அவ் ஆலயங்களில் எழுந்தருளியிருக்கும் இறைவனது பெருமை யினையும் சித்திரிப்பதாக தட்சணகைலாய புராணம், திருக்கரசைப் புராணம், கோணேசர்கல்வெட்டு என்பன தோற்றம் பெற்றுள்ளன. இவ்விலக்கியங்களை அடியொற்றியே போர்த்துக் கேயர் காலத்தில் பச்சிலைப்பள்ளிப் பற்றில் கிளாலியில் கோயில் கொண்ட யாக்கோப்பு என்னும் பெயரில் விளங்கும் சந்யேம்ஸ் என்ற புனிதரையும் ஆலய வரலாற்றையும் கூறும் அர்ச்யாகப்பர் அம்மானை எழுந்திருக்கலாம்.

ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் இருந்த மன்னர் புகழ்பாடும் தன்மை போர்த்துக்கேயர் காலத்தில் எழுந்த ஞானப்பள்ளுப் பிரபந்தத்தில் வரும் குயிற் சிந்துப் பகுதியில் உள்ள

"
பேரான பாராளும் பிடுத்துக்கால் மறுவென்றன்

பிறதானம் வீசவே கூவாய் குயிலே"

என்ற பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன.

ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தே கையாளப்பட்ட விருத்தப்பா, அகவல் சிந்து முதலிய யாப்பு வகைகள் போர்த்துக்கேயர் கால இலக்கியங்களிலும் வெளிப்படுகின்றன.

ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் எழுந்த தழுவல் இலக்கிய ஆக்கங்கள் தொடர்ந்து செல்வது குறிப்பிடத்தக்கதாகும். அர்ச்யாகப்பர் அம்மானையின் கதை இவ்வாசிரியருக்கு முன்னரும் தமிழிற் பாடப்பட்டிருக்கின்றது என்பது

பாண்டிக் கரையதனிற் பரதர்கள் கோத்திரர்கள்

வேண்டு சந்தியோகு கதை விருத்தப்பா வாயுரைத்தார்"

என இந்நூலின் சிறப்புப் பாயிரத்தில் இந்நூலாசிரியரே கூறுவதனால் அறியமுடிகின்றது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக