16.9.25

ஆரியச் சக்கரவர்த்திகள் கால இலக்கியப் பண்புகள்

ஆரியச் சக்கரவர்த்திகள் கால இலக்கியப் பண்புகள்

ஆரியச்
சக்கரவர்த்திகள் காலத்தில் தோன்றிய இலக்கியங்களைக் கவனித்த பின்னர் அவ் இலக்கியங்கள் சுட்டுகின்ற பண்புகளை நோக்க வேண்டியது அவசியமாகும். ஆரியச் சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் பண்புகளாக பின்வருவனவற்றைக் குறிப் பிடலாம்.

1)      வடமொழி மொழி பெயர்ப்புக்களாக அமைதல்

2)      மன்னர் புகழ் பாடுதல்.

3)      செந்தமிழ்ப் பண்பு மிகுந்திருத்தல்.

4)      விருத்தப்பா செல்வாக்குப் பெறுதல்.

5)      பிரதேச உணர்வு வெளிப்படுதல்.

6)      வரலாற்றுப் பேண்முறை வெளிப்படுதல்.

7)      மதக் கருத்துக்களை வெளிப்படுத்தல்.

8)      பொது மக்களின் இலக்கியத் தோற்றம் வெளிப்படல்.

9)      காவியப் பண்பு காணப்படுதல்.

10)  எளிதில் பொருளுணர முடியாத் தன்மை காணப்படுதல்.

என்பன போன்ற அம்சங்கள் காணப்படுகின்றன. வடமொழி மொழிபெயர்ப்புக்களாகவே ஆரியச் சக்கரவர்த்திகள் கால இலக்கியங்கள் விளங்குகின்றன. வட மொழியில் எழுதப்பட்ட சோதிட நூல்களை மொழிபெயர்த்தே சரசோதிமாலை, செகராசசேகர மாலை என்னும் சோதிட நூல்கள் தோற்றம் பெற்றது என்பதை

"முன்னூ லுணர்ந்த முனிவோர்கள்

முதலோர் மொழிந்த சோதிடமாம்

பன்னூல் விளங்கும் பொருளதனைப்

பார்மே னிகழும் படியாக

வன்னூலுரைத்த நெறிவழுவா

தாராய்ந் தூசி நுழைவழியின்

மென்னூல் செல்லும் செயல்போலத்

தமிழ்நூ லிதனை விளம்பலுற்றேன்"

எனச் சரசோதி மாலைச் செய்யுளும்.

''வனைந்துமா முனிவோர் சொன்ன வடகலைச் சோதிடத்தைப்

புனைந்தென் கலையாற் சட்டை பூட்டிய விதனைக் கேட்டு

முனிந்திட வேண்டா நல்லோர் முற்றுமா ராய்ந்து குற்ற

நினைந்ததை யகற்றி நன்காய் நிச்சயத் திடுகை நீரே"

எனச் செகராசசேகர மாலைச் செய்யுளும் குறிப்பிடுகின்றன.

வட மொழியில் எழுந்த ஆயுள் வேத வைத்திய நூல்களை மொழிபெயர்த்தே செகராசசேகரம், பரராசசேகரம் ஆகிய வைத்திய நூல்கள் தோன்றின.

மணிதங்கு வரையு ளாதி

மன்னுயிர் படைத்த போது

பிணிதங்கு வகையு நோயின்

பேருடன் குணமுங் காட்டி

அணிதங்கு மருத்துங் காட்டு

மாயுரு வேதந் தன்னைக்

கணிதங்கு வகையால் வேதங்

கடந்தமா முனிவன் செய்தான்

எனவும்

செய்தவர் தமது நூலும்

தேர்ந்ததோர் தெரிப்பும் பாக்கிற்

பொய்தவம் புயர்ந்த பௌவம்

போலுமிங் கிதனை யாய்ந்து

வெய்தவ நோய்கள் தீர

விருத்தவந் தாதி யாகக்

கொய்தவ வொழுங்கிலே தான்

கோப்புறச் செப்பலுற்றாம்.

எனச் செகராசசேகர வைத்திய நூல் குறிப்பிடுகின்றது.

தன்வந்திரி என்பவரால் வடமொழியிற் செய்யப்பட்ட ஆயுள்வேத நூலைத் தழுவியே பரராசசேகரம் என்ற வைத்திய நூல் தோன்றியது என்பது

"தாரணியோர் மிகப்புகழ்தன் வந்திரி செய்த

தகவுடைய சீர்த்தி பெறு மாயுள் வேதப்

பேரணியும் வாகடத்தைப் பெரிது பேணிப்

பெட்புடைய தமிழ்ப்பாவாற் பேசும் வண்ணம்"

என்ற பரராசசேகர வைத்திய நூலில் வரும் பாயிரச் செய்யுளால் அறிய முடிகின்றது.

வடமொழியில் உள்ள மச்சேந்திய புராணத்தைத் தழுவி தட்சண கைலாயபுராணம் தோற்றம் பெற்றது என்பது

"மாதரவி லிறைஞ்சுகதை கயிலாய

புராணமென வறைய லுற்றேன்

மாதுரிய மச்சேந்திய வடபுராணத்

தியம்பு மருவத் தானே"

என வரும் தட்சண கைலாயபுராணப் பாயிரச் செய்யுள் கூறுகின்றது.

வடமொழியில் மகாகவி காளிதாசனால் இயற்றப்பட்ட இரகுவம்சக் காப்பியத்தையே அரசகேசரி மொழிபெயர்த்து இரகுவம்சத்தைப் பாடினார் என்பது,

''வன்றி சைக்காளி தாசன் வடமொழி

தென்றி சைத்தமி ழானனி செப்புகே"

என வரும் பாயிரச் செய்யுள் கூறுவதனால் அறிந்து கொள்ளலாம்.

பாராளும் மன்னர்களையும் அவர் தம் பெருமைகளையும் பாராட்டிச் செல்வது தமிழ் இலக்கியங்களின் பண்பாகும். இவ்

அம்சம் ஆரியச் சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களில் தெளிவாகக் காணமுடிகின்றது.

"காமனுஞ் செங்கை வள்ளல் கதிரவன் மரபில் வந்தோன்

பாமாலை சூடு மீளிப் பராக்கிரம வாகு பூபன்"

எனப் பராக்கிரமபாகு மன்னனைச் சரசோதிமாலை புகழ்கின்றது.

''சந்தமுந் தருமநெறி கோடாத

தவப் பெருமான் றழைத்த கீர்த்திக்

கந்த மலை யாரியர்கோன் செகராச

சேகரமன் கங்கை நாடன்."

எனச் செகராசசேகர மன்னனை செகராசசேகரமாலை குறிப்பிடு கின்றது.

முகவாதசன்னிக்கு மருந்து கூறுமிடத்தில்,

"திட்டமுறு வலிகளும் திகிலுற் றடங்கியே

செகராச சேகர

என்றும்"

"சிங்கையாரியனை யெதிரொன்னார்க ளென்னவே திசை கெட் டகன்று விடுமே"

எனவும் பாம்புக் கடிக்கு மருந்து கூறுமிடத்தில்,

"மிலங்குமணி முடிபுனையு மிலங்கை வேந்தர்

சீரிய பொன் நிறையளக்கச் செங்கோலோச்சுஞ்

செகராச சேகரமன் சிங்கை மேவு

ஆரியர்கோன் வெண்குடையினிழலே செய்யு"

எனவும் செகராசசேகர வைத்திய நூல் செகராசசேகர மன்னனை வழுத்துகின்றது.

பரராசசேகரம் என்ற வைத்தியநூல் சுரசூலைக்கு வைத்தியம் கூறுமிடத்தில், "பாரின் மேவுதிற லரச னானபரராச சேகரனை" எனவும் நயனரோகம் பற்றிய செய்யுளில், "பார்மேவு மரசர்குல திலகமான பரராசசேகரன்" எனவும்,

திரிபலைக் குழம்பு என்னும் செய்யுளில்

"பரராச சேகரன் பணித்த செங்கோல்

காத்தபுவி யோர்களிரு நீக்குமாபோற்

கண்ணினிரு னீக்குமிது திண்ணந்தானே"

எனப் பரராசசேகர வைத்திய நூலை ஆக்குவித்தோனாகிய பரராச சேகர மன்னனைப் போற்றுவதைக் காணமுடிகின்றது.

தட்சண கைலாயபுராணம் தோற்றம் பெற்ற காலத்திலிருந்த செகராசசேகர மன்னனை "செம்பொன்மா மெளலிச் சென்னிச் செகராசசேகரன்" என திருநகரச் சிறப்பில் கூறுகின்றது.

கைலாயமாலை சிங்கையாரியச்சக்கரவர்த்திகளை விளிக்கும்

போது,

'சீமான் செயவீரன் சித்தசனே ரொத்தமன்னன்

கோமானெனும் சிங்கையாரியர் கோன்"

என்று போற்றுவதும் குறிப்பிடத்தக்கதாக அமைகின்றது.

வையாபாடலில்,

"மன்னனான இளவலெனும் சங்கிலியை"

என்று சங்கிலி மன்னனையும்

"மன்னனான விரவி குல பரராசசேகரன்"

என்று பரராசசேகர மன்னனையும்

"கந்தமலி தாரிளவல் செகராச சேகரன்''

என செகராசசேகர மன்னனையும் பாராட்டுவதனைக் குறிப் பிட்டுக் காட்டலாம்.

ஆரியச் சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பம்சம் செந்தமிழ்ப் பண்பு மிகுந்திருத்தலாகும். இக்காலத்தில் தோன்றிய தமிழ் இலக்கியங்கள் வடமொழி மொழிபெயர்ப்புக்களாகவும் தழுவல்களாகவும் அமைந்தாலும் இவ் இலக்கியங்கள் அனைத் திலும் செந்தமிழ்ச் சொற்கள் சீர்பெற்று வருவதனைச் சிறப்பாக குறிப்பிடலாம். தண்டமிழ் விருத்தப்பாவாற் சரசோதி மாலை செய்த போசராச பண்டிதர்

"நாவினா லுலகோர் போற்றும் நற்கதிர்ப்பரிதியுச்சி

மேவினாற் குற்றம் யாவும் மிகுந்திட ரெய்து மேலும்

பாவினாற் புனைந்த செஞ்சொல்"

என தமிழ் நூல் விளங்கப் புவி மீதுதெழுந்த சரசோதி மாலையின் செந்தமிழ்ப் பண்பினைக் குறிப்பிடலாம். பைந்தமிழ் விருத்திப் பாவால் ஆகிய செகராசசேகர வைத்திய நூலில்

"மனிதங்கு வரையுளாதி மன்னுயிர் படைத்த போது

பிணி தங்கு வகையு நோயின் பேருடன் குணமுங் காட்டி" என செந்தமிழ்ச் சொற்கள் விரவி வருவதும் கவனிக்கத்தக்கது.

வட மொழிப் புராணத்தை தழுவி தமிழில் தோன்றிய தட்சண கைலாய புராணத்தில் வரும்

"சிந்தை நீ சிந்தையிற் றெளியும் சோதி நீ

யெந்தை நீ யாயுநீ யெங்கட் காவி நீ"

என்ற செய்யுள்ளடிகளில் செந்தமிழ் நடை சிறப்பாக அமைதலைக் குறிப்பிடலாம்.

"சொல்லுற்ற சீர்க் குளக்கோட்டு மன்னன் சொல்லிய

சொற்படியே கல்வெட்டுப் பாடெனப் பாடினன்"

எனக் கோணேசர் கல்வெட்டிலும் பொது மக்கள் சார்பிலக்கியம் எனப் போற்றப்படும் கோவலனார் கதையில் வரும்

"இட்டமுடன் கண்ணகியார் இனிய மணம் முடிப்பதற்கு

பட்டணத்தில் உள்ளவர்க்கும் பல திசையில் உள்ளவர்க்கும்"

என்னும் அடிகளிலும்

"நஞ்சு போல் விழி மங்கையர் கூடி

நயங்கள் பேசியிசை பாடியாடி பஞ்சு போலடி மெல்ல

நடந்து பணைத்த கொங்கை கனத்திடை தொய்ய"

என்னும் அடிகளிலும் வரும் செந்தமிழ்ச் சொற்களையும் குறிப் பிடலாம்.

"பதிபசு பாசம் மூன்றும் பகர்ந்திடிலனாதியாகும்" என பரராசசேகரத்திலும் கயற்பிறங்கின பிறங்கின செங்கமலம்"

என வடமொழியின் மொழிபெயர்ப்பாகிய இரகுவம்சத்திலும்

"தக்கபல வளமும் சார்ந்து கல்வி

நாகரிக மிக்க திருநெல்வேலி"

எனக் கைலாய மாலையிலும்

''சோதியோர் வடிவமாகிச் சுடர்தொழச் சுடர்சேர் பொன்னின்

என வியாக்கிரபாத புராணத்திலும்

"திருவள ரிலங்கையின் சீரை யோதிட

வொருபொரு ளென்னவே யுலகம் யாவையும்"

என வையா பாடலிலும் செந்தமிழ்ச் சொற்கள் சிறப்பாகக் கையாளப்பட்டு இருப்பதனைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

சோழர்கால இலக்கியங்களில் செல்வாக்குப் பெற்ற விருத்தப்பா ஆரியச் சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களிலும் செல்வாக்குப் பெற்றுள்ளது.

"தண்டமிழ் விருத்தப்பாவாற் சரசோதி மாலை செய்தான்" எனவும்

"
பைந்தமிழ் விருத்தப்பாவாலோரை நூல் பகரலுற்றான்

எனவும் வரும் சரசோதிமாலைச் செய்யுள் வரிகளும்

"தென்கலையாற் தருகவென வருள்புரிய விருத்தப்பாவாற்

செகராசசேகரமாலை செய்தான்

எனவரும் செகராச சேகரமாலைச் செய்யுள் வரிகளும்,

"வெய்தவ நோய்கள் தீர விருத்த வந்தாதியாக"

என செகராசசேகர வைத்திய நூலும்,

"மாரமுத விருத்தக் கவியறு நூற்று முப்பானைந் தளவேயாக" என தட்சண கைலாயபுராணமும்

"மிக்க திரும் வடபாடைப் புராணத்தைத் தென்கலையின் விருத்தப்பாவிற்''

எனத் திருக்கரசைப் புராணமும் குறிப்பிடுவது ஆரியச்சக்கரவர்த்தி கள் கால விருத்தப்பாவின் உயர் செல்வாக்கைக் காட்டுகின்றது. மேலும் பரராசசேகரம், கோணேசர் கல்வெட்டு என்பன விருத்தப் பாவால் ஆக்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவை தவிர கண்ணகி வழக்குரை அகவல், சிந்து, வெண்பா முதலிய யாப்புக்களால் ஆனதும் கதிரைமலைப்பள்ளு விருத்தப்பா, சந்தப்பா என்பவற்றால் ஆக்கப்பட்டதும் கைலாயமாலை கலிப்பாவால் ஆக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தம் பிரதேசத்தையும் அப்பிரதேசத்தின் இயற்கை வர்ணனை களையும் கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களையும் சித்திரிப்பது இலக்கியங்களின் பொதுப் பண்பாகும். இவ்வம்சம் ஈழத்து இலக்கியங்களிலும் சிறப்பாக இடம் பெற்றிருக்கின்றன.

"வரையெலா மாரம்மாரம் வனமெலா நன்கார் நன்கார்

நிரையெலாஞ் சாலிசாலி நிலையெலாங் கன்னல் கன்னல்

தரையெலா நீலநீலந் தடமெலா நாறு நாறுங்

கரையெலா மன்ன மன்னங் கடலெலா மீழம் மீழம்."

எனவும்

"பொலங்கொ ழீழமும் பொன்மலை போலுமே" எனத் தட்சண கைலாய புராணமும்

"வாரிவளஞ் சூழ் இலங்கை" எனவும் "புகழ் இலங்கை" "மகாவிலங்கை" என கோணேசர் கல்வெட்டிலும்

"தண்ணமர் சாலி முத்தும் தடங்கட லிப்பி முத்தும்

வண்ணவெண் பனில முத்தும் வரையறா வோல முத்தும்

கண்ணமர் கரும்பின் முத்துங் ககனமஞ் சீன்ற முத்தும்

வெண்ணில வில்லாப் போது மிகு நிலாக் கொழிக்கு மன்றே"

எனத் திருக்கரசைப் புராணமும்

"வேணிச் சங்கரர் தொண்டர்க ளென்று

வீடு தோறும் மிரப்பவர்க்கெல்லாம்

மாணிக்க மள்ளிப் பிச்சை கொடுத்திடும்

மாவலி கங்கை நாடெங்கள் நாடே"

என கதிரை மலைப் பள்ளிலும்

"பண்பு செறி தக்க பலவளமும் சார்ந்து

கல்வி நாகரிகம் மிக்க திருநெல்வேலி"

என்று திருநெல்வேலியின் சிறப்பினையும்

"கன்னல் செறிவளை கமுகு புடை சூழ்கழனி

துன்னு மிணுவில் துலங்க வைத்து"

என இணுவிலின் சிறப்பினைக் கைலாயமாலை கூறுவதனையும் சுட்டிக்காட்டலாம்.

வரலாற்றுச் சார்பு பேணப்பட்டமை ஆரியச் சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களில் விதந்து குறிப்பிடக்கூடிய அம்சமாகும். இவ்வகையில் வரலாற்று நூல்களாகக் கொள்ளப்படும் வையா பாடல், கைலாயமாலை ஆகிய நூல்கள் எழுச்சி பெற்றன.

"இலங்கை மாநகர் அரசு இயற்றிடு அரசன் தன்

குலங்கள் ஆனதும் குடிகள் வந்திடும் முறைதானும்"

எனவும்

"இலங்கையின் மண்டலத் தோர்தன்

கதையை நலம்பெறு தமிழினா னடியோதினான்

என வையா பாடலிலும்

"தேரிலங்கு குளக் கோட்டன் என்னும் இராசன்

நாற்கால் மண்டபத்திருந்தே எண்ணினான்"

என குளக்கோட்ட மன்னனின் திருப்பணியையும்

"பொழுது குலக் கயவாகு ராஜராஜன் பூசைவிதிக் கேகனக நாடு மீந்து"

என கயபாகு மன்னனின் பணியினையும் இவை போன்ற இன்னும் பலவுமான வரலாறு சார்ந்த கருத்துக்களை கோணேசர் கல்வெட்டிலும் தெளிவாகக் காணமுடிகின்றது. நல்லூரில் சிங்கையாரியன் கைலாசநாதர் கோவிலைக் கட்டிய வரலாற்றை விரிவாகவும் யாழ்ப்பாணத்தில் ஆட்சி செய்த அரசர் வரலாற்றைச் சுருக்கமாகவும் கூறும் கைலாயமாலை மாதகல் மயில்வாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலைக்கும் பிற்கால யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதிய பலருக்கும் முதன் நூலாக அமைந்தது என டாக்டர் .செ. நடராசா குறிப்பிடுவர்.

ஆரியச் சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களில் சமயச்சார்பு தெளிவாக வெளிப்படுகின்றது. சமய நூல்களாக தட்சண கைலாய புராணம் திருக்கரசைப்புராணம் என்பன எழுந்தாலும் இக்கால இலக்கியங்கள் இந்துமதக் கடவுளருக்கு முதல் வணக்கம் செலுத்தும் முறையைப் பின்பற்றியுள்ளன. சரசோதிமாலை ஆசிரியர் திருமாலைப் போற்றியிருப்பதும், செகராசசேகரமாலை விநாயகர், சிவபெருமான், விஷ்ணு, சரஸ்வதி ஆகிய தெய்வங்களை வழுத்தியிருப்பதும், பரராசசேகரம் விநாயகர், சுப்பிரமணியர், சரஸ்வதி ஆகியோரைத் துதித்திருப்பதும் தட்சண கைலாய புராணம் கோணேசப்பெருமானைப் போற்றியிருப் பதும், திருக்கரசைப்புராணம் சிவனை போற்றிப் பரவியிருப் பதனையும் குறிப்பிட்டுக் காட்டலாம்.

அரசரையும் வள்ளலையும் கடவுளையும் கடவுள் தம் மெய்யடி யாரையும் பாராட்டிச் சென்ற தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் சாதாரண பொதுமக்களுக்கு முதன்மை கொடுக்கும் நிலை நாயக்கர் காலத்திலே தோன்றிய முக்கூடற்பள்ளு, குற்றாலக் குறவஞ்சி ஆகிய இலக்கியங்களிலே உதயமாயிற்று. இப்பண்பு ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்திலே தோன்றிய கதிரைமலைப் பள்ளிலும், கோவலனார் கதையிலும் வெளிப்படுகின்றன. கதிரைமலைப் பள்ளில் பள்ளன், மூத்தபள்ளி, இளையபள்ளி, பண்ணைக்காரன் போன்ற சாதாரண பொதுமக்களே சித்திரிக்கப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டலாம்.

ஆரியச் சக்கரவர்த்திகள் கால இலக்கியங்கள் பிற நூல்களின் தழுவல்களாகவே அமைந்துள்ளன. கோவலனார் கதை என்னும் நூல் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தின் தழுவல் போன்று அமைந்து உள்ளதனால் அதைப்போலவே இதுவும் காப்பிய அமைப்புப்பெற்று விளங்குகின்றது. கலாநிதி .செ. நடராசா குறிப்பிடுவர். இரகுவம்சம் வடமொழிக் காப்பியத் தின் தமிழ் மொழிபெயர்ப்பாக அமைந்ததனால் இக் காப்பியத் தின் பண்பு அரசகேசரியினது இரகுவம்சத்திலும் பிரதிபலிப்பதாக அமைகின்றது என்று குறிப்பிடலாம்.

நாயக்கர் காலத்தில் காணப்பட்ட எளிதில் பொருள் உணர்ந்து கொள்ள முடியாத தன்மையினைப் பெற்ற ஈழத்து இலக்கியமாக அரசகேசரியினது இரகுவம்சம் விளங்குகின்றது. சொல்லணி, பொருளணி முதலியன நிரம்பப் பெற்று அரிதாகப் பொருள் உணரக்கூடியதாக சொற்றொடர் பெற்று விளங்கும் காப்பிய நடையின் தன்மைக்கு எடுத்துக்காட்டாக

''பண்ணிசைப் பரவை யொன்று பாடகர் பரவை யொன்று

நன்நடர் பரவை யொன்று நாவலர் பரவை யொன்றே

கின்னரப் பரவை யொன்று கீத யாழ்ப்பரவை யொன்றங்

கின்னியப் பரவை தானொன் றிவற்றினும் பரவை யேழே"

என வரும் பாடலைச் சுட்டிக் காட்டலாம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக