சங்ககாலம் தொடக்கம் ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் வரை ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி நோக்கும் போக்கும்
ஈழமும் பூதன் தேவனாரும்
ஈழத்துத் தமிழ்
இலக்கிய வரலாற்றை ஆராயப் புகுபவர்கள் ஈழத்தின் ஆரம்ப
காலமாக தமிழ்ச் சங்கப் புலவர்களில் ஒருவராக இருந்த ஈழத்துப் பூதன்
தேவனாரைக் கொள்ளும் மரபு உண்டு. ஈழத்துப் பூதன்
தேவனாரால் பாடப்பட்ட செய்யுட்களில் ஈழம் பற்றிய எதுவித குறிப்புக்களும் இல்லை.
ஈழத்துப் பூதன்
தேவனார், மதுரை
ஈழத்துப் பூதன்
தேவனார், பூதன்
தேவனார் போன்ற
பெயர் விகற்பங்கள் மட்டுமே காணப்படுகின்றன. இதனால் இவற்றில் வரும்
ஈழம் என்ற சொல் இலங்கையைத்தான் குறிப்பிடுகின்றது எனச் சித்தாந்தமாகக் கொள்ளமுடியாது என கலாநிதி பொ. பூலோகசிங்கம் குறிப்பிடுவார். ஈழத்து பூதன்
தேவனார் இலங்கையிற் பிறந்து வளர்ந்தவர் என்பதை நிரூபிக்கும் வரை அவரது பாடல்களை ஈழத்து இலக்கிய வரிசையில் இணைத்துக் கூறமுடியுமா என்பது சந்தேகமே எனவும் அப்புலவர் பெயருக்கிட்டுள்ள அடைமொழியான ஈழத்து என்ற சொல்லை மட்டும் கொண்டு அவர் ஈழத்தவர் என்று
கூறுவது தக்கதெனத் தோன்றவில்லை. ஈழவர்
என்ற வகுப்பினர் கேரள நாட்டில் வாழ்ந் தனர் என அறியப்படுகின்றது. அவர் வாழ்பதியும் ஈழம் என வழங்கப்பட்டிருத்தல் சாலும் எனக் கலாநிதி க.செ. நடராசா குறிப்பிடுவார்.
ஈழத்துப் பூதன்
தேவனாரை இலங்கையர் என்று
முதன்முதற் கூறியவர் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த மகாவித்துவான் சி.கணேசையர் அவர்களே. இவர்களது கருத்துக்களை எல்லாம் நுணுகி ஆராய்ந்த பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை தொல்லியற் சான்றுகளையும் இலக்கியச் சான்றுகளையும் கல்வெட்டாதாரங் களையும், புவியியற் சின்னங்களையும் கொண்டு பூதன்
தேவனார் இலங்கையைச் சேர்ந்தவர் என்று
முடிவுகட்டுகின்றார். இவர் காட்டிய சான்றுகளைத் தகுந்த ஆதாரம் காட்டி மறுக்கும் வரை ஈழத்துப் பூதன்
தேவனாரை இலங்கை நாட்டவர் என்று
கூறுவதற் குத் தயங்கவேண்டியதில்லை என கலாநிதி எஸ்.சிவலிங்கராஜா குறிப்பிடுவார். ஈழத்துத் தமிழ்
இலக்கிய வளர்ச்சிப் போக்கினை ஈழத்துப் பூதன்
தேவனார் வாழ்ந்த காலமாகிய சங்க காலத்தி லிருந்தே பேராசிரியர் ஆ. சதாசிவம் ஆரம்பித்து தமது ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியத்தில் விளக்கியுள்ளார்.
ஈழத்துப் பூதன்
தேவனாரால் பாடப்பட்ட (07) செய்யுட்கள் சங்க இலக்கியத்தொகை நூல்களில் தொகுக்கப்பட்டுள்ளன. அவை நற்றிணை 366, அகநாநூறு 88,231,307, குறுந்தொகை 343,360,189 என்பனவாகும். ஈழத்து என்று
அடைமொழி பெற்றிராத வேறு பல இலங்கைப் புலவர்கள் பாடிய
பாடல்கள் அடையாளம் காண முடியாமல் போயிருக்கலாம்.
ஈழத்துப் பூதன்
தேவனாரினது பாடல்களில் தலைவியினது அங்க வர்ணனையை அகம் 307 நற்றிணை 366ல் காண முடிகின் றது. குறுந்தொகை 360ஆம் செய்யுளில் குறிஞ்சியில் முருக
வழிபாட்டின் ஒரு கூறாகிய வெறியாட்டு நிகழ்ந்தமையை "வெறியென உணர்ந்த வேலவன் நோய் மருந்து" என்ற தொடர் மூலம்
உணரமுடிகின்றது. அகநானூறு 231ஆம் செய்யுள் நடுகல் வழிபாட்டுடன் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது.
அகம் 88ஆம் செய்யுளும் குறுந்தொகை 343ஆம் செய்யுளும் 360ஆம் செய்யுளும் உள்ளுறை கொண்டு பாடப்பட்டுள்ளன. அகம் 307ஆம் செய்யுளும் நற்றிணை 366ஆம் செய்யுளும் இறைச்சிப் பொருளும் கொண்டு புனையப்பட்டமை இவரது
பாடல்களின் சிறப்பம்சம் ஆகும்.
இவர் பாடிய
குறுந்தொகை 189ஆம் செய்யுள் உரையாசிரியர்களினால் மேற்கோள் காட்டப் பட்டமையும் இவரது
சிறப்பாகும்.
ஈழத்துப் பூதன்
தேவனாரை அடுத்து கி.பி. 14ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத் தமிழ்
வேந்தர் ஆட்சி
நிறுவும் வரை ஈழத்துத் தமிழ்
இலக்கிய வரலாறு இருண்டே காணப்படுகின்றது. கி.பி. 9ஆம், 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதப்படும் அனுராதபுரத் தில் உள்ள நாலுநாட்டார் கல்வெட்டில்
"போதி நிழலமர்ந்த புண்ணியம்போ லெவ்வுயிர்க்குந் தீதி வருள் சுரக்குஞ் சிந்தையா - னாதி வருதன்மங் குன்றாத மாதவன் மாக் கோதை யொரு தர்ம பாலனுளன்."
என வருகின்ற வெண்பாவின் அமைப்பு அக்காலப்பகுதியிற் சிறந்த தமிழ்
இலக்கியப் பாரம்பரியம் இருந்ததனையே கோடிட்டுக் காட்டுகின்றது. இத்தகைய செய்யுள் வளம் கி.பி. 9ஆம், 10ஆம் நூற்றாண்டளவில் ஈழத்தே விருத்தியடைந்திருந்தது என்றால் அதற்கு சில நூற்றாண்டுகளின் முன்னரே அங்கு
தமிழ் இலக்கிய மரபு வளர்ச்சியுற்றிருக்க வேண்டும் என்பது தெளிவு என்பார் கலாநிதி க.செ. நடராஜா, தமிழ்க் கல்வி
தமிழ்ப்புலமை சிறப்பாக நிலவியமையாலேயே இத்தகைய யாப்பு வடிவில் கல்வெட்டு அமைக்கப்பட்டிருக்கலாமென ஊகிப்பதும் தவறாகாது என்று
கலாநிதி எஸ். சிவலிங்கராஜா குறிப்பிடுவர்.
கி.பி. 12ஆம் நூற்றாண்டிற்குரியதெனக் கருதப்படும் பதவியாக் கல்வெட்டில்
"உத்தமர்தங் கோயில் வலகழி எனலும் நித்த நியமம் நெறிவளர் சித்தமுடன் சீரிளமை சேர்ந்த பதியில் விளையாரம்ப பேரிளமை யார்த்துகள் போதா வாயிரங் கொண்டுரைப்பார் திரு சூத்தமாக முயன்றான் முயன்ற திரு."
எனப் பொறிக்கப்பட்டிருக்கும் இணைக்குறளாசிரியப்பாவின் சிறப்பும் கி.பி. 13ஆம் நூற்றாண்டிற்குரியது எனக் கருதப்படும் பண்டுவஸ்நுவரக் கல்வெட்டில் வரும்.
தென்னிலங்கைக்கோள் பராக்கிரமபாகு நிஸங்கமல்லற் கியாண்டஞ்சிற்
தினகரன் சுறவி வணைந்தவத்தையிலுத்திரட்டாதி யேழ் பக்கம்-பொன்னவன் தின நற்சாத யோகத்தில் ஊர்தரு போதிமாதவர்தம் பொற்பமர் கோயில் முனிவராலயந்தேனறந் திகழ் சாலையுஞ் செயித்தம்
அன்னவை திகழ ஐவர் கண்டன் வனுபேரிலங்கை அதிகாரி அலகுதபுயன் தென்பராக்ரமன் மேனைச் செனெவி நாதன் திருப்பியரன்
மன்னிய சிறப்பில் மலிதருமழகாற் பராக்ரம அதிகாரிப் பிரிவுன வளர்தர அமைத்தான் ஸ்ரீபுரநகருள் மதிமான் பஞ்சரன் மகிழ்ந்தே."
விருத்தப்பாவின் சிறப்பும் ஈழத்தின் தமிழ்
இலக்கிய பாரம்பரிய வளர்ச்சியை வலியுறுத்துகின்றது.
சைவக் கோயிலைப் பாடும் ஈழத்து இலக்கியங்களுள் இன்று
கிடைக்கும் ஈழத்தவரால் பாடப்பட்ட மிகத்
தொன்மையான செய்யுளாக பதவியாச் செய்யுள் காணப்படுகின்றது. பௌத்த
நிறுவனங்கள் எடுக்கப்பட்டதைக் கூறும் பண்டுவஸ்நுவரக் கல்வெட்டில் சோதிடக் கலைச்சொற்கள் காணப்படுகின்றன என பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை குறிப்பிடுவர்.
யாழ்ப்பாண அரசின் படைகள் கேகாலை மாவட்டம் வரையிலே சென்று வெற்றியீட்டிய நிகழ்ச்சியைக் கூறும் கி.பி. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோட்டகம எனுமிடத்தில் உள்ள கல்வெட்டில் வரும்.
கங்கணம்வேற் கண்ணிணையாற் காட்டினார் காமர்
வளைப் பங்கயக்கை மேற்றிலதம் பாரித்தார் பொங்கொலி நீர்ச் சிங்கைநக ராரியனைச் சேரா வனுரேசர் தங்கள் மட மாதர் தாம்.
என்ற செய்யுளின் வெண்பா யாப்பும் கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரை ஈழத்துத் தமிழ்
மொழியினதும் இலக்கியத்தினதும் வளர்ச்சிப்படிகளின் முயற்சிகளை உணர்த்துகின்றன. இருப்
பினும் ஆரியச் சக்கரவர்த்திகள் ஈழத்தில் ஆட்சியை அமைக்கும் வரை அதற்கு முன்னுள்ள இலக்கிய வளர்ச்சியினை அறிய முடிய வில்லை. அதற்குப்பல காரணங்களைக் குறிப்பிட்டுக்காட்டலாம்.
கி.பி. 14ஆம் நூற்றாண்டுவரை ஈழத்தில் உறுதியற்ற அரசு நிலவி யிருக்கலாம். இதனால் அரச சபைகளிலே தமிழ்
இலக்கிய முயற்சி களுக்கு ஆதரவில்லாத நிலை ஏற்பட்டிருக்கலாம். இத்தகைய சூழ்நிலை ஈழத்துத் தமிழ்
இலக்கிய வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்தியதனாலோ என்னவோ ஈழத்து இலக்கிய வளர்ச்சியினை அறியமுடியவில்லை.
கி.பி. 14ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் ஈழத்தில் வாழ்ந்த தமிழ்
மக்கள் வரலாற்றுப் பேண் முறையைப் பின்பற்றாது விட்ட
மையும் ஈழத்துத் தமிழ்
இலக்கிய வளர்ச்சிப் போக்கினை அறிய இயலாமைக்குக் காரணமாயிற்று எனலாம். தமிழ்
நாட்டில் ஆட்சி
செலுத்திய பல்லவ
மன்னர்கள் வரலாற்றுப் பேண் முறையைப் பின்பற்றியது போன்று ஈழத்தில் பின்பற்றப்படாததனால் அக்கால ஈழத்துத் தமிழ்
இலக்கிய முயற்சிகளை அறியமுடியாது போய் விட்டது.
ஈழத்துத் தமிழ்ப் புலவர் பெருமக்களால் பாடப்பட்ட இலக்கி யங்கள் பேணிப்பாதுகாக்கப்படாமையும் ஈழத்துத் தமிழ்
இலக்கிய வளர்ச்சிப் போக்கினை அறிய இயலாமைக்குக் காரணம் எனலாம். ஈழத்துப் பூதன்தேவனார் பாடல்கள் தமிழ்
நாட்டில் தொகுக்கப் பட்டுப் பேணப்பட்டதனால் இன்று
கிடைத்திருக்கின்றது. அத்தகைய நிலை ஈழத்தில் இருக்கவில்லை எனலாம். தமிழ்
நாட்டில் சங்க இலக்கியங்கள் தோன்றிய காலகட்டத்திலே ஈழத் திலே வாழ்ந்த தமிழ்ப்புலவர்களும் இலக்கியங்களை ஆக்கியிருப் பார்கள். இப்புலவர்களின் ஆக்கங்கள் தொகுப்போர், தொகுப்பிப்போர் இன்றி
அழிந்தொழிந்திருக்கலாம் என கலாநிதி எஸ்.சிவலிங்கராஜா குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது.
ஈழத்தில் கிடைத்துள்ள கி.பி. 9/10 ஆம் 12ஆம் 13ஆம் 14ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுக்களைக் கொண்டு நோக்கும்போது ஈழத்தில் செழுமைமிகு தமிழ்
இலக்கியப் பாரம்பரியம் இருந்தது என்பது வலியுறுத்தப்படுகின்றது. கி.பி. ஆம் 8ஆம் நூற்றாண்டில் தமிழ்
நாட்டில் தோன்றிய பக்தி
இயக்க
நாயன்மார்களாகிய சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் திருக்கோணேஸ் வரம், திருக்கேதீஸ்வரம் ஆகிய தலங்கள் மீது தோத்திரப்பாடல்கள் பாடியுள்ளனர். அவை தமிழ் நாட்டில் பேணப்பட்டு வந்தமை யால் இன்று கிடைக்கின்றன. ஈழத்தில் பக்திப் பனுவல்கள் தோன்றாமல் விட்டமைக்கு மிக நீண்ட காலமாக பௌத்தமதச் செல்வாக்குக்கு உட்பட்ட ஈழத்தில் பௌத்தத்திற்கெதிரான தமிழ்
நாட்டுப் பக்தியியக்கத்தினது செல்வாக்கு இலங்கைத்தமிழர் மத்தியில் சிறிதுசிறிதாகவே செல்வாக்குப் பெற்றிருக்க வேண்டும் என பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை குறிப்பிடுவர்.
நீண்டகால இடைவெளிக்குரிய தமிழ்
இலக்கிய ஆக்கங்கள் இலங்கையிற் கிடைக்காமற் போனதற்கு இன்னுமோர் காரணத் தையும் குறிப்பிடுவர். சிங்கள இலக்கிய வரலாற்றில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக
தொடர்ச்சியான சாசனம் இடம்பெற்று வரும்
ஆதி சிங்கள பாரம்பரியத்தில் கி.பி 13ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட இலக்கியங்கள் இன்று
கிடைக்காம லிருக்கும் மர்மத்தை விளக்குவதாக தமிழர் முதலிய அந்நியப் படை எடுப்பின்போது அவை அழிந்தொழிந்து இருக்கவேண்டும் என்ற கருதுகோள் காலஞ்சென்ற பேராசிரியர் மலலசேகரா அவர்களினால் முன்வைக்கப்பட்டது. இக்கூற்று உண்மையெனக் கொள்ளப்பட்டால் இலங்கைத் தமிழர் ஆதிக்கம் அடக்கி ஒடுக்கப் பட்ட காலப்பகுதிகளில் ஈழத்துத் தமிழ்
இலக்கியங்களும் அழிந்
தொழிந்து போயிருக்கலாம் எனப் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை குறிப்பிடுவர்.
இந்நிலையில் இருந்து விடுபட்டு யாழ்ப்பாணத் தமிழரசு ஏற்பட்ட பின்னரே தமிழ்
நூல்களைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டு அதற்கேற்ற வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் என்ற மன்னர் குலத்தினர் செந்தமிழ்ச் சங்கம் நிறுவித்தமிழ் வளர்த்த செய்தியினை யாழ்ப்பாண வைபவமாலை கூறுவதால் அறியலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக