ஆரியச் சக்கரவர்த்திகள் காலம்
ஈழத்துப் பூதந்தேவனார் காலமாகிய சங்க காலத்தை அடுத்து ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இடம்பெறும் காலப்பகுதி ஆரியச் சக்கரவர்த்திகள் காலமாகும். கி.பி. 1216 - 1621 வரை உள்ளடக்கிய இக்காலப் பகுதி ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச் சிக்கு அடிக்கல் நாட்டப்பட்ட காலம் எனக் குறிப்பிடலாம். இக்காலப்பகுதியில் இடம்பெறும் பிரதான இலக்கிய முயற்சிகளாக
வரலாறு சார்ந்த இலக்கியங்கள்
அறிவியல் சார்ந்த இலக்கியங்கள் (சோதிடம், வைத்தியம்)
சமயம் சார்ந்த இலக்கியங்கள்
பொதுமக்கள் சார்பான இலக்கியங்கள்
காப்பிய இலக்கியம்
என்பன தோற்றம் பெற்றன.
யாழ்ப்பாண வரலாற்று மூலங்கள் எனக் கொள்ளப்படும் வையாபுரி ஐயரின் வையாபாடல் முத்துக்கவிராயரின் கைலாய மாலை,
கவிராயரின் கோணேசர் கல்வெட்டு என்பன குறிப்பிடத் தக்கனவாக அமைகின்றன. மேலும் இராசமுறை, பரராசசேகரன் உலா என்பன மறைந்து விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையை ஆண்ட மன்னர்களைப் பற்றியும், இலங்கைக்குப் பிற தேசங்களில் இருந்து குடிகள் வந்தேறிய முறை பற்றியும், ஈழத்தில் வன்னியர் குடியேற்றம் பற்றியும் பல தகவல்களைத்தரும் நூலாக வையாபாடல் விளங்குகின்றது. இந்நூல் 104 விருத்தப்பாக்களைக் கொண்டு அமைகின்றது.
யாழ்ப்பாணத்து நல்லூரில் பிரபல்யம் பெற்றிருந்த கைலாசநாதர் கோவிலினை சிங்கையாரின் என்ற தமிழ் மன்னன் கட்டி பிரதிஷ்டை செய்த வரலாற்றையும் யாழ்ப்பாணத்து அரசர் களின் வரலாற்றையும் கூறும் நூலாக கைலாயமாலை திகழ் கின்றது.இது 310 கண்ணிகளைக் கொண்ட கலிவெண்பாவினால் அமைந்தது.
திருகோணமலையில் வீற்றிருக்கும் கோணேசர் ஆலய வரலாற் றினையும் குளக்கோட்டு மன்னனின் திருப்பணிகளையும் கிழக்கு மாகாணத் தமிழ் மக்களது வாழ்க்கைச் சித்திரிப்புக்களையும் விளக்கும் நூலாகக் கோணேசர் கல்வெட்டு விளங்குகின்றது. இலங்கையிலே தமிழில் தோன்றிய வரலாற்றுச் சார்புடைய நூல்களிலே கோணேசர் கல்வெட்டுத் தனித்துவமுடையது என பேராசிரியர் சி.பத்மநாதன் குறிப்பிடுவர்.
ஆட்சியாளரின் பெயரால் அரசியல் ஒருமைப்பாடு காணும் பண்பிற்கு எடுத்துக்காட்டாக பரராசசேகரன் உலா அமைகின்றது என பேராசிரியர் கா. சிவத்தம்பி குறிப்பிடுவர்.
குருநாகல் பகுதியிலுள்ள தம்பதெனியாவில் நான்காம் பராக்கிரமபாகு மன்னர் ஆட்சிக்காலத்தில் அவைக்களப் புலவ ரான தேனுவரைப் பெருமாள் என்று அழைக்கப்படும் போசராச பண்டிதரால் பாடப்பட்ட சரசோதிமாலை என்ற சோதிட நூலே ஈழத்தில் எழுந்த முதல் தமிழ் நூலாக விளங்குகின்றது. இது பன்னிரெண்டு படலங்களையும் 934 விருத்தப்பாக்களையும் உடையது. செய்தோனால், செய்வித்தோனால், பொருளால், இடத்தால், காலத்தால், செய்யுளால், செய்யுட் தொகையால் நூலுக்குப் பெயரிடும் முறையை மாற்றி "புண்டரிகத்தார் மார்பன் புகழ்ச் சரசோதி மைந்தன்" எனத் தன்னைத்தான் கூறும் நூலாசிரியர் தன் தந்தை பெயரால் நூலுக்குப் பெயரிட்டு புதுமையைப் புகுத்தியுள்ளார்.
சரசோதிமாலையின் பின் வந்த வடிவமாக அமையும் சோதிட நூலே சோமசன்மா என்பவரால் பாடப்பட்ட செகராசசேகரமாலையாகும். இந்த நூல் ஒன்பது படலங்களையும் 290 விருத்தப்பாக்களையும் கொண்டு திகழ்கின்றது.
சோதிட நூல்களையடுத்து இடம்பெறும் அறிவியல் நூல்களாக வைத்திய நூல்கள் சிறப்புப் பெறுகின்றன. ஈழத்தில் முதலில் தோன்றிய வைத்திய நூலாகத் திகழ்வது செகராசசேகரம் ஆகும். இதன் ஆசிரியர் பெயர் அறியுமாறு இல்லை. இது ஆயுள் வேத மருத்துவ முறையைத் தழுவி எழுந்துள்ளது. இந்நூல் அந்தாதித் தொடையினாலும் விருத்தப்பாவினாலும், வெண்பாவினாலும் ஆக்கப்பட்டுள்ளது. இந்நூலில் 1600 பாடல்கள் வரை பதிப்பிக்கப் பட்டுள்ளன.
செகராசசேகரத்தையடுத்து சிறப்பிடம் பெறும் ஈழத்து வைத்திய நூல் பரராசசேகரம் ஆகும். இந்நூல் ஆரியச் சக்கரவர்த்திகள் ஆட்சிக் காலத்தில் கூட்டு முயற்சியாக இருந்திருக்கலாம் என பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை குறிப்பிடுவர். இந்நூல் 8000 செய்யுட்களைக் கொண்டுள்ளது. முன்னர் 12000 செய்யுட்கள் கொண்டு விளங்கியது என்பர். தற்போது ஏழு பாகங்களாக அச்சிடப்பட்டுள்ளது. இதன்பதிப்பாசிரியர் ஏழாலையை பொன்னையாபிள்ளை ஆவர்.
ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் தோற்றம் பெற்ற சமய இலக்கியங்களாக தட்சண கைலாய புராணம், திருக்கரசை புராணம், வியாக்கிரபாதபுராணம் என்பன விளங்குகின்றன.
தட்சண கைலாய புராணம் திருகோணமலையில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் கோணேசப் பெருமானையும் மாதுமை அம்மையாரையும் சிறப்பித்துக் கூறுகின்றது. திருக்கோணேஸ்வரத்தின் தோற்றம், ஆதி வரலாறு என்பனவும் அதனோடு தொடர்புடைய வேறு சரிதங்களையும் கூறுகின்றது. இது வட மொழியில் உள்ள மச்சேந்திய புராணத்தைத் தழுவிச் செய்யப்பட்டது. இந்நூல் பாயிரம் நீங்கலாக 'ஏழு' சருக்கங் களையும் 620 விருத்தப்பாடல்களையும் உடையது. இந் நூலாசிரியர் பற்றிய கருத்து முரண்பாடு உள்ளது. இந்நூலை 1887ஆம் ஆண்டு சென்னையில் முதன்முலாகப் பதிப்பித்து வெளியிட்ட கா. சிதம்பரஐயர் பதிப்பில் இந்நூல் யாழ்ப்பாணத்து மகாவித்துவான் சிங்கைச் செகராசசேகரன் இயற்றியது என்று கூறப்பட்டுள்ளது. 1916ஆம் ஆண்டு பருத்தித்துறையில் பதிப்பித்து வெளியிட்ட பு.பொ. வைத்திலிங்க தேசிகர் பதிப்பில் "பிரம்மஸ்ரீ பண்டிதராசர் அருளிச் செய்த ஸ்ரீதட்சண கைலாய புராணம்" என்று உரைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆக்கியோன் பெயரை அறுதி யாகக் கூறுவது இயலாதுள்ளது. இது அந்தாதித் தொடையில் விருத்தப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது.
திருகோணமலைக்கு அருகில் மகாவலிகங்கைக் கரையில் கரசை என்னும் பதியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் புகழை விரித்துக் கூறும் நூலாக திருக்கரசைப் புராணம் திகழ் கின்றது. ஈழத்தின் பெருமையினையும் மகாவலிகங்கையின் சிறப்பினையும் கூறுகின்றது. இந்நூலாசிரியரின் இயற்பெயர் அறியுமாறு இல்லை. இந்நூல் பாயிரம் நீங்கலாக 'நான்கு' சருக்கங் களையும் 170 விருத்தப்பாக்களையும் உடையது. வடமொழியில் சூத முனிவர் சொன்ன புராணத்தை தழுவிச் செய்யப்பட்டது என்பது பாயிரத்தின் பதின்மூன்றாவது செய்யுளால் அறிய முடிகின்றது.
அளவெட்டியைச் சேர்ந்த வைத்தியநாதத் தம்பிரான் அவர்கள் வடமொழியில் உள்ள வியாக்கிர பாத மான்மியத்தைத் தழுவி வியாக்கிர பாத புராணம் இயற்றியுள்ளார். இது அச்சுவாகனம் ஏறாமையால் கிடைக்கவில்லை. சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் தாம் எழுதிய தமிழ்ப்புலவர் சரித்திரம் எனும் நூலில் இரு பாடல்கள் அப்புராணத்துக்குரியதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் பற்றி மேலதிக தகவல்கள் பெறமுடியாதுள்ளது. இவ்விரு பாடல் களுள் ஒன்று விநாயகர் பற்றியும் மற்றையது சிவபெருமானைப் பற்றியும் கூறுகின்றது.
ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் தோன்றிய பொதுமக்கள் சார்பு இலக்கியங்களில் விதந்து குறிப்பிடப்படுபவை கதிரைமலைப்பள்ளும், கண்ணகி வழக்குரை ஆகிய இரண்டு மாகும்.
ஈழத்தில் எழுந்த பள்ளுப் பிரபந்தங்களுள் காலத்தால் முந்திய தாக கதிரைமலைப்பள்ளு விளங்குகின்றது. இந்நூல் 130 செய்யுட் களை உடையது. பள்ளுப் பிரபந்த இலக்கண மரபுக்கேற்ப
அமைந்துள்ளது. கதிர்காம முருகனைப் பாட்டுடைத் தலைவ னாகக் கொண்டு பள்ளன். மூத்தபள்ளி, இளையபள்ளி, பண்ணைக் காரன் ஆகிய நான்கு சாதாரண பொதுமக்களே பாத்திரங்களாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர். விருத்தப்பாவும் சந்தப்பாவும் கொண்டு ஆக்கப்பட்ட இந்நூலின் ஆசிரியர் யாரென அறியுமாறு இல்லை. ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் தோன்றிய ஏனைய இலக்கியங் களைப் போன்று மொழிபெயர்ப்பாகவோ தழுவல்களாகவோ அமையாது ஈழத்துக்கேயுரிய தனித்துவமான இலக்கியமாகவும் இந்நூல் திகழ்கின்றது.
ஈழத்தில் எழுந்த மற்றோர் பொது மக்கள் சார்பிலக்கியம் கண்ணகி வழக்குரையாகும். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரக் கதையினை பொதுமக்களுக்கேற்ற வகையில் சில நீக்கப்பட்டும் புதுப்பிக்கப்பட்டும் செய்யப்பட்டுள்ளது. இந்நூல் கண்ணகி வழக்குரை என்ற இதே பெயரில் கிழக்கு மாகாணத்திலும், கோவலனார் கதை என்று யாழ்ப்பாணத்திலும், சிலம்பு கூறல் முல்லைத்தீவுப் பகுதியிலும் வழங்கப்படுகின்றது. இந்நூல் 'பதினைந்து' காதைகளையும் 2219 பாடல்களையும் கொண்டுள் ளது. அகவல், வெண்பா, சிந்து முதலிய யாப்புக்களைக் கொண்டு ஆக்கப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் "சகவீரன் எனக் குறிப்பிடப்படுகின்றார்.
ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் எழுந்த முதற்காப்பிய இலக்கியமாகக் குறிப்பிடப்படுவது அரசசேகரியினால் ஆக்கப் பட்ட இரகுவம்சமாகும். வடமொழியில் மகாகவி காளிதாசனால் எழுதப்பட்ட இரகுவம்சத்தின் தமிழாக்கமாகும். இந்நூல் பொதுக்காண்டம், சிறப்புக்காண்டம், பொதுச் சிறப்புக் காண்டம் என்ற மூன்று பெரும் பிரிவுகளையும் இருபத்தாறு படலங்களை யும்
2444 விருத்தப்பாக்களையும் உடையது. திலீப மகாராசர் காமதேனுவை வழிபட்டு இரகு என்பவனைப் புத்திரனாகப் பெற்ற கதையும், தசரதன் மகன் இராமன் கதையும், இராமன் மகன் குசன் கதையும் கூறப்படுகின்றன. இக்காப்பியத்தின் செய்யுள் நடை எளிதில் பொருள் உணர்ந்துகொள்ளமுடியாத சொல்நடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக