17.9.25

சங்கமருவிய காலத்தில் அற இலக்கியங்கள் தோன்றியமைக்கான காரணங்கள்

சங்கமருவிய காலத்திலே அதிகளவான அற இலக்கியங்கள் தோன்றியமைக்கான காரணங்களை குறிப்பிட்டு விளக்குக?

 

சங்க கால போரால் ஏற்பட்ட விரக்தி

சங்க காலத்திலே ஆட்சி செய்த முடியுடை வேந்தர்கள் அடிக்கடி போரிலே ஈடுபட்டார்கள். இதனால் இறப்புக்கள் அதிகம் நிகழ்ந்தது. குறிப்பாக ஒரு குடும்பத்தின் ஆண் வர்க்கமே அடியோடு அழிந்து போகும் அளவுக்கு போரானது கொடூர விளைவுகளை உண்டு பண்ணியது. உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. உடைமைகள் சேதமாக்கப்பட்டன. பெண்கள் விதவைகளாக்கப்பட்டார்கள். பலர் அங்கவீனர்களானார்கள். இத்தகைய கொடிய போரியல் தன்மையில் இருந்து மக்களை விடுவித்து அவர்களுக்கு தர்மத்தையும் அகிம்சையையும் போதுக்கும் முகமாக அற இலக்கியங்கள் தோன்றின.

சங்ககால அக வாழ்வில் ஏற்பட்ட சலிப்பு

சங்ககாலத்தில் வாழ்ந்த மக்கள் கண்டதே காட்சி கொண்டதே கோலம் எனும் நெறிமுறையற்ற வாழ்வை மேற்கொண்டிருந்தார்கள். இப்படித்தான் வாழவேண்டும் எனும் கோட்பாடு அறவே ஒழிந்து எப்படியும் வாழலாம் எனும் தன்மை மேலோங்கியிருந்தது. இத்தகைய சூழலை கண்ணுற்று மக்களுக்கு வாழ்வியல் தத்துவத்தை போதிக்கும் முகமாக அற இலக்கியங்கள் தோன்றின.

சமண பௌத்த சமயங்களது செல்வாக்கு

சங்ககாலத்தில் சைவம் வைணவம் முதலிய சமயங்கள் செல்வாக்குப் பெற்றிருந்தன. ஆனால் சங்கமருவிய காலத்தில் களப்பிரரின் வருகையினால் சமணம் பௌத்தம் முதலிய சமயங்களும் தமிழ்நாட்டுக்குள் நுழைந்து தமது செல்வாக்கை நிலைநிறுத்துவதற்காய் பொதுமக்களோடு நெருங்கி அவர்களது வாழ்வியலோடு தொடர்புறும் வகையிலே தமது நகர்வினை மேற்கொண்டார்கள். இதற்கு அவர்களுக்கு மிகவும் ஏற்புடையதாக விளங்கியது இலக்கியங்களே ஆகும். இதனாலும் அற இலக்கியங்கள் அதிகம் தோன்றின.

தமிழக சூழலில் வைதீகத்தின் இறுக்கமான நிலை

சங்க மருவிய காலத்துக்கு முன்பாக தமிழ்நாடு முழுவதும் பரவுபட்டு விளங்கிய சைவ சமயமும் வைணவ சமயமும் மத ரீதியாக பல்வேறுபட்ட இறுக்கமான கொள்கைகளை கடைப்பிடித்து வந்தன. குறிப்பாக கணவன் இறந்த பெண்கள் உடன்கட்டை ஏறுதல் கைம்மை நோன்பு கடைப்பிடித்தல் முதல் தீண்டாமை வரை பல்வேறு சமூகப் பிறழ்வான கொள்கைகள் பின்பற்றப்பட்டதால் மக்கள் அதிலிருந்து விடுபட்டு புதிய ஒரு வாழ்வியலை நோக்கி நகர விரும்பிய சூழலில் அவர்களுக்கு வழிகாட்ட அற இலக்கியங்கள் தோன்றின.

வித்தியாதானத்தின் முக்கியத்துவம்

சங்கமருவிய காலத்தில் செல்வாக்கு பெற்ற சமண பௌத்த சமயங்கள் தமது சமயத்தை செல்வாக்கு பெறச் செய்யும் நோக்கில் வித்தியாதானத்தை தமது கொள்கையாக கொண்டனர். இத்தகைய தன்மையால் சமண பள்ளிகளும் பௌத்த விகாரைகளும் கல்விக் கூடங்களாக மாற்றப்பட்டதோடு அல்லாமல் அங்கு மதக் கல்வியும் போதிக்கப்பட்டது. இத்தகைய போதனைக்கு தோற்றம் இன்றியமையாததாகிவிட்டது. அற இலக்கியங்களின்

பண்பாட்டு கலப்புக்கள்.

சங்கமருவிய காலத்தில் களப்பிரரது வருகை, சமண பௌத்த சமயங்களது செல்வாக்கு போன்றவற்றால் தமிழகத்தில் புதியதொரு பண்பாட்டுச் சுழல் தோன்றியது. குறிப்பாக தமிழ்ப்பண்பாடு, வடநாட்டுப் பண்பாடு போன்ற பண்பாடுகள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தின. பொய்மையான வாழ்வியல் முறைக்கு இட்டுச் சென்றன. இத்தகைய சூழலில் மக்களை நெறிப்படுத்த அற இலக்கியங்கள் அதிகம் தோன்றின.

அற இலக்கிய கர்த்தாக்களது எழுச்சி

சங்ககாலத்தில் வாழ்ந்த புலவர்கள் இலக்கிய மரபின்படி அகத்தையும் வீரத்தையுமே முதன்மையான பாடுபொருளாக கொண்டு இலக்கியங்கள் படைத்தார்கள். இங்கு காதலும் வீரமுமே முதன்மை பெற்றன. இவர்களால் படைக்கப்பட்ட இலக்கியங்களும் தனிப்பாடல்களும் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் அல்லது வாழ்கிறார்கள் என்பதையே முதன்மையாக வெளிப்படுத்தி காட்டின. ஆனால் சங்கமருவிய காலத்தில் வாழ்ந்த புலவர்கள் மக்கள் இப்படித்தான வாழ ஆவண்டும் என்ற நெறியினை போதிக்க முனைந்தார்கள். இதற்கு அறத்தை பாடுபொருளாக கொண்டு இலக்கியங்களையும் படைத்தார்கள். குறிப்பாக வள்ளுவர், அரையனார், விளம்பிநாகனார், நல்லாதனார் முதலானோர் குறிப்பிடத்தக்கனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக