17.9.25

ஒல்லாந்தர் காலம்

ஒல்லாந்தர் காலம்

போர்த்துக்கேயர் காலத்தையடுத்து ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம்பெறும் காலப்பகுதி ஒல்லாந்தர் காலமாகும். கி.பி. 1658 - 1796 வரை 138 ஆண்டுகளை உள்ளடக்கிய இக்காலப் பகுதியில் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ இலக்கியங்களும் இந்துமதம் சார்ந்த இலக்கியங்களாகவும் ஏறத்தாழ இருபது இலக்கியங்கள் வரை தோற்றம் பெற்றுள்ளன. ஒல்லாந்தர் காலத்து இலக்கியங் களைப் பின்வருமாறு பட்டியற்படுத்தலாம்.

1)    காவியம் : திருச்செல்வர் காவியம்

2)    புராணம் : சிவராத்திரி புராணம், ஏகாதசிப்புராணம், பிள்ளையார் கதை, யோசேப்பு புராணம்.

3)    தூது : கிள்ளைவிடு தூது, பஞ்ச வண்ணத்தூது

4)    அம்மானை : திருச்செல்வர் அம்மானை

5)    காதல் : வெருகல் சித்திரவேலாயுதர் காதல்

6)    அந்தாதி : கல்வளையந்தாதி, புலியூரந்தாதி மறைசையந்தாதி,

7)    கோவை : கரவைவேலன் கோவை

8)    பள்ளு : பறாளாய் விநாயகர் பள்ளு, தண்டிகைக் கனகராயன் பள்ளு

9)    பதிகம் : இணுவில் சிவகாமி அம்மைப் பதிகம்

10) ஊஞ்சல் : வட்டுக்கோட்டை பத்ரகாளி அம்மை ஊஞ்சல்

11) துதி : இணுவில் சிவகாமி அம்மை துதி

12) பிள்ளைத் தமிழ் : இணுவில் சிவகாமி அம்மை பிள்ளைத்தமிழ்

13) வரலாறு : யாழ்ப்பாண வைபவமாலை

14) நாடகம் : அலங்காரரூபன் மலையநந்தினி, அதிரூபாவதி வாளபிமன், நொண்டி நாடகம், அனிருத்தன் நாடகம்

15) விளக்க நூல் : காசியாத்திரை விளக்கம்

16) மருத்துவம் : அமுதாகரம்

17) சோதிடம் : சந்தான தீபிகை
ஒல்லாந்தர் காலத்தில் எழுந்த இலக்கியங்களுள் காவியம் குறிப்பிடத்தக்கதாகும். காப்பிய இலக்கியத்துக்கான இலக்கண நெறிமுறைக்குட்பட்டு தமிழ் மரபோடு ஒத்துப்போகக் கூடிய வாறு அமையும் திருச்செல்வர் காவியம் இக்காலத்திற்குரிய தாகும். சிந்து தேசக் கதையொன்றின் தமிழாக்கமாக அமையும். இக்காவியம் கிறிஸ்தவ மதப் பெரியாராகிய திருச்செல்வராயன் என்பவரின் உயர்வு பற்றி எடுத்துக் கூறுகின்றது. இக்காப்பியம் காப்புச் செய்யுள் ஒன்றும், பாயிரம் 34 பாடல்களும், 24 படலங் களில் 1912 பாடல்களுமாக மொத்தம் 1947 விருத்தப் பாக்களை யுடையது. இக்காவியத்தைப் பாடிய ஆசிரியர் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வசித்த பூலோகசிங்க முதலியார் என்று அழைக்கப்படுகின்ற அருளப்ப நாவலர் அவர்களாவார்.

ஒல்லாந்தர் காலத்தில் தோன்றிய மற்றோர் இலக்கிய வகை புராணங்கள் ஆகும். இந்து மதப் புராணங்களாகிய சிவராத்திரி புராணம், ஏகாதசிப்புராணம், பிள்ளையார் கதை என்பனவும் கிறிஸ்தவ மதப் புராணமாகிய யோசேப்பு புராணமும் இக்காலத்தில் தோன்றியவையாகக் குறிப்பிடப்படுகின்றன.

சிவராத்திரி விரதத்தின் தோற்றத்தையும் அதனை நோற்றிடும் வகையினையும் சிவராத்திரி விரதத்தினால் பலனடைந்தவர்களின் கதையினையும் கூறும் சிவராத்திரிப் புராணம் காப்புச் செய்யுள் ஒன்றினையும், கடவுள் வாழ்த்துப் பாக்கள் இருபதினையும், பாயிரச் செய்யுள் மூன்றினையும், ஒன்பது சருக்கங்களில் 691 பாடல்களையும் உடையது. இதைப் பாடிய ஆசிரியர் வரத பண்டிதர் எனக் குறிப்பிடப்படுகின்றார்.

திருமால் விரதங்களுள் சிறந்ததாகிய ஏகாதசி விரத நிர்ணயத் தையும் இவ்விரதம் அனுஷ்டித்தோர் சரிதங்களையும் கூறும் ஏகாதசிப் புராணம் காப்புச் செய்யுள் ஒன்றினையும், கடவுள் வாழ்த்துப்பாடல் ஐந்தினையும், அவையடக்கச் செய்யுள் ஒன்றினையும், மூன்று சருக்கங்களில் 258 விருத்தப்பாடல்களையு முடையது. இதுவும் வரத பண்டிதரால் ஆக்கப்பட்டது.

ஆனைமுகன் (பிள்ளையார்) பிறந்த வரலாறு, அவன் கயமுகாசுரனை அழித்து மூஷிகத்தை வாகனமாக்கியதும், ஆவணிச் சதுர்த்தி விரதச் சிறப்பும், மார்கழி விநாயக சஷ்டி விரத மகிமையும் கூறுவது பிள்ளையார் கதையாகும். இது அகவற்பா வினால் ஆக்கப்பட்டது.

கிறிஸ்தவ மதப் புராணமாக அமைவது யோசேப்பு புராண மாகும். அர்ச்சியேட்டர் யோசேப்புவின் வரலாற்றினைக் கூறுகின்றது. இப்புராணத்தில் இருபத்தொரு படலங்களும் 1023 பாடல்களும் உடையதெனக் கூறப்படுகின்றது. இதன் ஆசிரியர் கூழங்கைத் தம்பிரான் எனக் குறிப்பிடப்படுகின்றார். இப்புராணம் அச்சிடப்பட்டதாகத் தெரியவில்லை. சைமன்காசிச் செட்டி எடுத்துக் காட்டியுள்ள ஆற்றுப் படலத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களே இன்று கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

ஒல்லாந்தர் காலத்தில் எழுந்த மற்றோர் இலக்கிய வடிவம் தூதுப்பிரபந்தமாகும். காங்கேசன்துறையில் உள்ள கண்ணிய வளை என்னுமிடத்தில் எழுந்தருளி இருக்கும் குருநாதசுவாமி மீது வரதபண்டிதரால் பாடப்பட்ட கிள்ளைவிடு தூது இக்காலத்தில் எழுந்ததாகும் 216 கண்ணிகளைக் கொண்ட இத்தூதுப்பிரபந்தம் கண்ணகி அம்மனின் கோபத்தினாலுண்டாகும் அம்மை நோய் முதலியவற்றை நீக்கவென உருவெடுத்த குருநாதர் பவனிவரக் கண்ட பெண்ணொருத்தி அவர் மேலுற்ற காதலினைத் தன் கிளிமூலம் சொல்லியனுப்பி குருநாதர் மலையை வாங்கிவா எனத் தூது விடுத்து குருநாதசுவாமியின் சிறப்பினைக் கூறுவதாக அமைந்துள்ளது.

இணுவையூர் இளந்தாரி என்ற கைலாயநாதன் மீது பாடப்பட்ட தூதுப் பிரபந்தமே பஞ்ச வண்ணத்தூதாகும். இயற்றமிழும் நாடகத்தமிழும் விரவிவரச் செய்யப்பட்டதாக அமையும் இத்தூதுப் பிரபந்தத்தில் கைலாயநாதன் இணுவையில் வீதி உலா வந்தததும் சந்திரமோகினி என்ற பெண் அவனைக் கண்டு காதல் கொண்டு வெண்ணிலா, கிளி, அன்னம், தென்றல், தோழி என்பனவற்றைத் தூது அனுப்பியதும் கைலாயநாதன் அவளை மணந்துகொள்ளச் சம்மதிப்பதாகத் தோழியிடம் சொல்லியனுப்பி யதும் கூறப்பட்டுள்ளது. பிள்ளையார், சிவகாமியம்மை, சுப்பிரமணியக் கடவுள், வைரவர், பத்திரை ஆகியோருக்கு வணக்கம் கூறப்பட்டுள்ளது. இதனை ஆக்கியோர் இணுவில் சின்னத்தம்பிப் புலவர் ஆவார்.

திருச்செல்வர் காப்பியத்தின் கதையும் அமைப்பும் அம்மானை வடிவில் பாடப்பட்டதால் திருச்செல்வர் அம்மானை என அழைக்கப்படுகின்றது. திருச்செல்வர் காவியத்தைப் பாடிய பூலோகசிங்க முதலியாரே திருச்செல்வர் அம்மானையும் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒல்லாந்தர் காலத்திலே தோன்றிய காதல் இலக்கியமாக வெருகல் சித்திரவேலாயுதர் காதல் விளங்குகின்றது. திருகோண மலைக்குத் தெற்கேயுள்ள வெருகல் பகுதியில் கோயில் கொண்டருளியிருக்கும் சித்திரவேலாயுத சுவாமி மீது பாடப்பட்ட தாகும். சித்திரவேலாயுதர் வீதியுலா வந்ததும் அவரைப் பார்த்து அவர் மீது காதல் கொள்வதாகவும் கொண்டு பாடப்பட்டுள்ளது. இது 421 கண்ணிகளையுடையது. இதனை அருளியவர் தம்பலகாமம் வீரக்கோன் முதலியாராவார்.

அந்தாதி இலக்கிய வடிவமும் ஒல்லாந்தர் காலத்தில் தோற்றம் பெற்றதனை நல்லூர் சின்னத்தம்பிப்புலவரின் கல்வளையந்தாதி, மறைசை அந்தாதி என்பனவும் மயில்வாகனப்புலவரின் புலியூரந்தாதியும் புலப்படுத்துகின்றன. யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயிலுள்ள கல்வளைப்பகுதியில் எழுந்தருளியுள்ள விநாயகர் மீது பாடப்பட்ட அந்தாதி நூலே கல்வளையந்தா யாகும் கட்டளைக் கலித்துறை யாப்பினால் ஆக்கப்பட்டது நூற்றந்தாதி இலக்கணத்துக்கமைய நூறு செய்யுட்களையுடையது.

திருமறைக்காடு எனப்படும் வேதாரணியத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் வேதாரணியேசுவரர் மீது பாடப் பட்டது. கட்டளைக் கலித்துறையாப்பினால் செய்யப்பட்ட திரிபந்தாதியாக விளங்குகின்றது. திருமறைக்காடரைப் புகழ்ந்து அவரை வணங்கி மக்கள் ஈடேற்றம் அடையலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிதம்பரத்தில் எழுந்தருளியிருக்கும் சிதம்பரேஸ்வாப் பெருமானைப் போற்றிப் பாடப்பட்ட நூலே புலியூரந்தாதி யாகும். கடவுள் வாழ்த்து நீங்கலாக நூறு கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களைக் கொண்டு நூற்றந்தாதியாகவும், யமக அந்தாதி யாகவும் விளங்குகின்றது.

ஒல்லாந்தர் காலத்தில் தோன்றிய கோவை இலக்கியமாக கரவை வேலன் கோவை விளங்குகின்றது. யாழ்ப்பாணத்தின் கரவெட்டிக் கிராமத்தில் வாழ்ந்த சேது நிலைப்பட்ட மாப்பாண முதலியார் மகன் வேலாயுதபிள்ளையைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது. வேலாயுதபிள்ளையின் புகழைக் கூறுவ தாக அமையும் கரவைவேலன் கோவை 425 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைக் கொண்டு விளங்கியது என்பர். இதனைப் பாடிய ஆசிரியர் நல்லூர் சின்னத்தம்பிப்புலவர்.

பிரபந்த வகைகளுள் ஒன்றாகிய பள்ளுப்பிரபந்தமும் ஒல்லாந்தர் காலத்தில் தோற்றம்பெற்றது. பறாளாய் விநாயகர் பள்ளு, தண்டிகைக் கனகராயன் பள்ளு என்பன இக்காலத்தில் தோன்றின. சுழிபுரம் பகுதியில் உள்ள பறாளாய் என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் விநாயகப்பெருமானை பாட்டுடைத் தலைவராக கொண்டு பாடப்பட்டது, பறாளாய் விநாயகர் பள்ளுப் பிரபந்தமாகும். பள்ளுப் பிரபந்த இலக்கணத்துக்கு அமைய மூத்த பள்ளி, இளையபள்ளி, பள்ளன், பணக்காரன் ஆகிய நான்கு பாத்திரங்களைக் கொண்டு பறாளாய் விநாயகரின் பெருமைதோன்ற சிந்து, விருத்தம், கலிப்பா ஆகிய பாவைகளால் செய்யப் பட்டது. மூத்தபள்ளி ஈழமண்டலப் பள்ளியாகவும் இளைய பள்ளியை சோழமண்டலப் பள்ளியாகவும் சித்திரித்து ஈழநாட்டுப் பெருமையையும் சோழநாட்டுப் பெருமையையும் கூறப்படு கின்றது. 130 பாடல்களைக் கொண்டு விளங்கும் பறாளை விநாயகர்பள்ளைப் பாடியவர் நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்.

காரைக்காட்டிலிருந்து தெல்லிப்பழையில் வந்து குடியேறிய கனகராய முதலியாரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு மாவிட்டபுரம் சின்னக்குட்டிப் புலவரால் பாடப்பட்ட பள்ளுப் பிரபந்தமே தண்டிகைக் கனகராயன் பள்ளுப் பிரபந்தமாகும். பள்ளுப்பிரபந்த இலக்கணத்துக்கமைய மூத்தபள்ளி, இளைய பள்ளி, பள்ளன், பண்ணைக்காரன் ஆகிய நான்கு பாத்திரங்களே இடம்பெறுகின்றன. இதில் வரும் மூத்தபள்ளி வடகாரைப் பள்ளி யாகவும் இளையபள்ளி தென்காரைப் பள்ளியாகவும் சித்திரிக்கப் பட்டு வடகாரை வளமும் தென்காரை வளமும் கூறப்படுகின்றது. இது 153 பாடல்களை உடையது.

பதிகம் என்னும் இலக்கிய வடிவமும் ஒல்லாந்தர் காலத்தில் தோற்றம் பெற்றது. இணுவிலில் எழுந்தருளியிருக்கும் சிவகாமியம்மை மீது பாடப்பட்டது. இதனைச் சிவகாமி அம்மை துதி எனவும், சிவகாமி அம்மை பிள்ளைத் தமிழ் எனவும் கூறுவர். இணுவைச் சின்னத்தம்பிப் புலவரால் பாடப்பட்டது. இது பன்னிரு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தத்தால் ஆன பத்துச் செய்யுட்களையுடையது.

ஊஞ்சற் பதிகமும் ஒல்லாந்தர் காலத்தில் தோன்றியது. வட்டுக் கோட்டைப் பிட்டியம்பதி பத்திரகாளியம்மை மீது கணபதி ஐயரால் பாடப்பட்ட ஊஞ்சற் பதிகம் குறிப்பிடத்தக்கதாகும். பத்ரகாளி அம்மனின் புகழ் கூறி ஆடீரூஞ்சல் எனப் பாடப்பட்டு அம்மனுக்குரிய நிவேதனப் பொருட்களையும் குறிப்பிடுகின்றது. இப்பதிகம் எண்சீர் விருத்தப்பாக்களால் ஆக்கப்பட்ட பத்துச் செய்யுட்களை உடையது.

வரலாற்று நூலாகக் கொள்ளப்படும் மாதகல் மயில்வாகனப் புலவரால் வசன நடையில் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவ மாலை ஒல்லாந்தர் காலத்தில் தோற்றம் பெற்றமை கவனிக்கத் தக்கது.

நாடக இலக்கியத் துறையிலும் ஒல்லாந்தர் காலத்தில் வளர்ச்சியினைக் காணமுடிகின்றது. வட்டுக்கோட்டை கணபதி ஐயரின் அலங்காரரூபன் நாடகம், அதிரூபாவதி நாடகம், மலையந்தினி, வாளபிமன் நாடகங்களும் இணுவைச் சின்னத்தம்பி புலவரின் நொண்டி நாடகம், கோவலன் நாடகம், அனிருத்தன் நாடகம் என்பனவும் குறிப்பிடத்தக்கன.

விளக்க நூல் என்ற வகையில் மாதகல் மயில்வாகனப் புலவரின் காசி யாத்திரை விளக்கம் குறிப்பிடப்படுகின்றது. அந்நூல் அழிந்து விட்டமையால் அதனைப் பற்றிய விளக்கம் அறியுமாறில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வரத பண்டிதரால் ஆக்கப்பட்ட விஷ வைத்திய நூலாகிய அமுதாகரம் இக்காலத்தில் தோன்றியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

சோதிட நூல் என்ற வகையில் இல்லறத்தோர்க்கு இன்றியமை யாத சந்தான பலனை இனிதியிம்பும் வடமொழிச் சந்தான தீபிகையை தமிழில் மொழிபெயர்த்துப் பாடப்பட்ட சந்தான தீபிகையை அராலி இராமலிங்க முனிவர் இக்காலத்திலேயே ஆக்கியுள்ளார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக