விபுலானந்த அடிகளாரின் வாழ்வும் பணியும்
ஈழத்திருநாடு பெற்றெடுத்த பேரறிஞர்கள் பலர். அவர்களுள் தமிழ் உலகு போற்றும் பெருமைக்குரியவர்களாகத் திகழ்ந்தோருள் குறிப்பிடத்தக்கவர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தராவார். அவர் தமது வாழ்நாள் முழுவதும் துறவறத்தில் நின்று தமிழ் வளரத் தவம் புரிந்த பெருந்தகை. தமிழுக்கும் இந்து சமயத்திற்கும் அவராற்றிய பணிகள் அளப்பரியன. தமிழிசையின் பெருமையை, யாழ் என்னும் பழந்தமிழ் இசைக்கருவியின் அருமையை உலகறியச் செய்த பெரியார் அவர். ஆன்மிகம், சமூகம், கல்வி, இலக்கியம், கலைச் சொல்லாக்கம் ஆதியாம் அனைத்துத் துறைகளிலும் முன்னின்று உழைத்தவர். அவரது பணிகள் ஒப்பற்றவை; என்றும் அவரை நினைவூட்டும் தன்மையன.
மீன்பாடும் தேனாடு என்று போற்றப்படுவது மட்டக்களப்பு. அம்மாவட்டத்தைச் சேர்ந்த காரேறு மூதூரில் சாமித்தம்பிக்கும் கண்ணம்மைக்கும் அருந்தவப் புதல்வராக 1892 ஆம் ஆண்டு பங்குனி மாதம் இருபத்தொன்பதாம் திகதி இவர் பிறந்தார். தாய், தந்தையர் இவருக்கு மயில்வாகனம் எனப் பெயர் சூட்டினர். மயில்வாகனம் இளமையில் கல்வியில் மிக்க ஆர்வம் கொண்டவராக விளங்கினார். தமிழ். ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளையும் கற்றுத் தேறினார்.
விஞ்ஞானக் கல்வியில் நாட்டம் கொண்டார். பௌதிக சாஸ்திரத்தில் பி.எஸ்.ஸி (BSc) பட்டமும் பெற்றார். யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபரானார். அங்கு பணியாற்றிய காலத்திலேயே அவரது மனம் துறவு வாழ்க்கையை நாடிற்று. இதன் காரணமாக இவர் தமிழ் நாட்டில் உள்ள இராமகிருஷ்ண சங்க மடத்தைச் சார்ந்து தமது முப்பதாவது வயதில் துறவியானார். மயில்வாகனம் என்னும் இயற்பெயரைத் துறந்து பிரபோத சைதன்யர் என்னும் திருநாமத்தைப் பெற்றார். பின்னர் தமது முப்பத்திரண்டாவது வயதில் குருப்பட்டம் பெற்றுச் சுவாமி விபுலானந்தர் என்னும் பெயரைப் பெற்றார்.
இயல்பாகவே தமிழ் மீது தீராத பற்றுக்கொண்ட அடிகளார் தமிழில் ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை எழுதினார். தீந்தமிழ்க் கவிதைகள் பலவற்றைப் படைத்தார். நாடகத்துறையிலும் ஆர்வம் காட்டினார். முத்தமிழ்த் துறையிலும் இவரது ஆற்றல்களை நன்கறிந்த அண்ணாமலை அரசர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதற்றமிழ்ப் பேராசிரியராக இவரை நியமித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவர் பணியாற்றிய காலம் பாரத நாட்டில் சுதந்திர வேட்கை தீவிரம் பெற்றிருந்த காலம். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் சுதந்திர வேட்கை மிகுந்த பாடல்களில் அடிகளாருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. பாரதியின் பாடல்களையே பாடுதற்குப் பலர் அஞ்சிய அக்காலகட்டத்தில் அவரது பாடல்களின் அருமையினைப் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்து அவற்றைப் பாரெங்கும் பறைசாற்றிட வேண்டுமென மாணவர்களை வழிப்படுத்தினார். பாரதியின் கவித்துவ ஆற்றலைத் தமிழுலகுக்கு வெளிப்படுத்தியவர்களுள் அடிகளாரும் ஒருவர் என்றால் அது தவறல்ல.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிப் பலரதும் பாராட்டுதல்களைப் பெற்ற அடிகளார் பின்னர் இமயமலைச் சாரலில் உள்ள மாயாவதித் தவப்பள்ளியில் தங்கியிருந்தார். அங்கு தங்கியிருந்த காலத்தில் "வேதாந்த கேசரி", "பிரபுத்தபாரதம்" என்னும் பத்திரிகைகளின் ஆசிரியராகவும் பணியாற்றினார். அங்கிருந்து மீண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதற் தமிழ்ப் பேராசிரியராக நியமனம் பெற்றார்.
அடிகளார் இசைத்துறைக்கு ஆற்றிய பணிகள் மகத்தானவையாகும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில் அங்கு இசைப் பேராசிரியராகவிருந்த க. பொன்னையா பிள்ளையோடு கலந்துரையாடியதன் பேறாக இசைத்தமிழ் ஆய்வில் ஈடுபட்டார். பதினான்கு ஆண்டு காலம் ஆராய்ந்ததன் பேறாக இசை உலகம் போற்றிடும் வகையில் "யாழ் நூல்" என்னும் பெரும் நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் இசைத்தமிழ் ஆய்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்நூலின் அரங்கேற்றம் அண்ணாமலை நகரில் திருக்கொள்ளம்புத்தூர்க் கோயிலில் பேரறிஞர்கள் பலர் முன்னிலையில் நடைபெற்றது.
எழுத்தாற்றல், பேச்சாற்றல், கவிபுனையும் ஆற்றல் அனைத்தும் பெற்ற அடிகளார் பல்வேறு இதழ்களிலும் ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வெளியிட்டுள்ளார். பல நூல்களையும் ஆக்கியுள்ளார். இயல்பாகவே கவித்துவ ஆற்றல்மிக்க அடிகளாரின் கவிதைகள் இனிமையும் எளிமையும் அழகும் வாய்ந்தவை. ஆங்கில கவிவாணர்களின் கவிதை வளத்தினை அவற்றின் சுவை குன்றாது தமிழாக்கித் தமிழர்கள் படித்துச் சுவைக்க வழிசெய்த அடிகளார் திருச்சி வானொலிக் கவியரங்கிலே கண்ணப்ப நாயனார் புராணத்தைத் தமது கவிதை நடையிலே பாடியமை அனைவரையும் கவர்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வெனலாம்.
மட்டுநகர் வாவியில் எழும் இன்னொலியைக் கூர்ந்து கேட்டு அதன் அருமையினைச் சுவைத்து மகிழ்ந்து நீரரமகளிர் இன்னிசைப் பாடல்", என்னும் உரைத்தொடரினைத் 'தமிழ்ப் பொழில்' (துணர் 16 மலர் 21 என்னும் இதழில் வெளியிட்டார். அடிகளாரின் இனிய கவிதைகள் கற்போர் இதயங்களைக் காந்தம் போற் கவரவல்லன. ஈசன் உவக்கும் இன் மலர் மூன்று', 'கங்கையில் விடுத்த ஓலை' ஆதியன அடிகளாரின் கவித்துவ ஆற்றல்களுக்குச் சிறந்த சான்றுகளாகும். நாடகத்துறையிலும் அடிகளார் தமது பங்களிப்பினைச் செய்துள்ளார். ஆங்கிலம், ஆரியம் ஆதியாம் மொழிகளில் அடிகளார் பெற்றிருந்த புலமை 'மதங்க சூளாமணி' என்னும் நாடகத் தமிழ் நூலின் முதலாம் இயலாகிய உறுப்பியலிலே நன்கு பிரதிபலிக்கிறது. தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கூறும் நாடகத்தமிழ் பற்றிய கருத்துக்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் இயலில் ஷேக்ஸ்பியரின் பன்னிரண்டு நாடகங்களின் சிறப்பியல்புகள் விளக்கப் பட்டுள்ளன. மூன்றாம் இயலில் நாடகம் பற்றிய பலரது கருத்துக்களும் தரப்பட்டுள்ளன. அடிகளாரின் கவிதைகள், கட்டுரைகள் பலவும் அவரது மறைவின் பின்னர் நூல் வடிவம் பெற்றுள்ளன. அவை அடிகளாரின் தமிழ்ப் பணிகளை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன. இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குப் பயன்படும் வகையில் பல கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். 'ஆங்கில வாணி' என்ற கட்டுரையில் ஆங்கிலப் புலவர்கள் பலருடைய இலக்கிய ஆக்கங்களின் சிறப்புக்களை எடுத்துக்காட்டியுள்ளார். 'யவனபுரத்துக் கலைச்செல்வம்' என்ற கட்டுரையில் கிரேக்க இலக்கியங் களில் காணப்படும் சில பண்புகளைத் தமிழ்மொழியுடனும் வடமொழி யுடனும் ஒப்பு நோக்கி எழுதியுள்ளார்.
இந்த வகையில் ஈழத்தில் ஒப்பியல் ஆய்வுக்கு முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார் எனலாம். அடிகளார் செந்தமிழ் நடையினையே கையாண்டுள்ளார். எனினும் நாட்டார் இலக்கிய வழக்கினைப் புறக்கணிக்கவில்லை.
அடிகளார் மொழிபெயர்ப்புத்துறையிலும் பிரபலம் பெற்று விளங்கினார். இவரது மொழிபெயர்ப்புகள் தழுவல் மொழியாக்க வகைகளைச் சார்ந்தனவெனக் கருதப்படுகிறது. இவற்றில் மொழிபெயர்ப்பாளரின் புலமை மேலோங்கி நிற்பதைக் காணமுடிகிறது. அடிகளார் தமிழ் வளர்ச்சிக்காகவும் இந்துசமய வளர்ச்சிக்காகவும் ஆற்றிய தொண்டுகள் அளப்பரியன. கிழக்கிலங்கையின் பல பகுதிகளிலும் யாழ்ப்பாணத்திலும் (யாழ்- வைத்தீஸ்வராக் கல்லூரி) இராமகிருஷ்ண சங்கத்தின் மூலம் பல பாடசாலைகளை நிறுவினார். ஏழைச் சிறார்கள் தங்கியிருந்து கல்வி பயிலச் சிறுவர் இல்லங்களையும் ஏற்படுத்தினார். இதன் மூலம் ஆதரவற்ற சிறுவர்கள் கல்வியறிவு பெற்றிட வழிவகுத்தார். இலங்கை கல்வித் திணைக்களத்துடன் தொடர்புகொண்டு தமிழ் மாணவர்களுக்கு உகந்த பாடத்திட்டங்களை வகுத்திட உதவினார். சென்னைத் தமிழ்ச் சங்கத்தின் கலைச் சொல்லாக்கக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார். பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் மொழி பெயர்த்திட உதவும் கலைச்சொற்களை ஆக்கிட வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.
யாழ்ப்பாணத்தில் தமிழிலக்கிய வளர்ச்சிக்குத் தொண்டாற்றும் நோக்குடன் தோற்றம் பெற்ற யாழ்-ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்திலும் முக்கிய பங்குகொண்டு உழைத்தார். ஈழம் தொட்டு இமயம் வரை புகழ் பரப்பிய, முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் நினைவாக இலங்கை அரசு அவர் உருவப்படம் பொறித்த முத்திரையை வெளியிட்டுக் கௌரவித்தது. அவரது உருவச் சிலைகளை ஊர்கள் தோறும் நாட்டி மக்கள் வழிபாடு செய்கின்றனர். அவரின் பிறந்த தினத்தையும் மறைவு தினத்தையும் விழாவெடுத்து நினைவு கூருகின்றனர். மட்டக்களப்பில் உள்ள சிவானந்த வித்தியாலயமும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விபுலானந்தர் இசை, நடனக் கல்லூரியும் அடிகளாரை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. ஈழ நாட்டுக்குப் பெருமை சேர்த்த அடிகளாரின் நாமம் தமிழ் உள்ளவரை நிலைத்து நிற்குமென்பதில் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக