19ஆம் நூற்றாண்டின் ஈழத்து இலக்கிய வளர்ச்சி
19ஆம் நூற்றாண்டில் தோன்றிய பெருந்தொகையான தமிழ் இலக்கியங்கள் சமயப் பிரச்சார நோக்கம் உடையதாகவே இருந்துள்ளன. கிறிஸ்தவ மதப் பிரச்சாரமும் அதற்கு எதிரான இந்து மதப் பிரச்சார முயற்சிகளும் கற்றோரை மட்டுமன்றி மற்றோரையும் எட்டும்படி அவை சம்பந்தமான இலக்கிய ஆக்கங்களை உருவாக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. இவ்வகையில் தெய்வங்கள் மீதும் தெய்வங்கள் உறையும் திருத்தலங்கள் மீதும் பாடப்பட்ட இலக்கியங்களே பெருந் தொகையாகத் தோற்றம் பெற்றுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. 19ஆம் நூற்றாண்டின் ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பானது புராணங்கள், சிற்றிலக்கியங்கள், இலக்கண நூல்கள், தத்துவ நூல்கள், கண்டன நூல்கள், நாடக நூல்கள், அகராதித்துறை மொழிபெயர்ப்புத் துறை,
வசன நூல்கள், வரலாற்று நூல்கள், அறிவியல் துறை,
பத்திரிகைத்துறை எனப் பல் துறைகளிலும் புதுப்பொலிவுடன் புகழ்பூத்து விளங்குவதனை அக்கால இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன.
பழமையான செய்திகளையும், நிகழ்வுகளையும் கூறுவது புராணம் ஆகும். புராணம் இலக்கியங்கள் பல இக்காலத்தே தோற்றம் பெற்றுள்ளன. வல்வை வயித்திலிங்கம் பிள்ளையின் சாதி நிர்ணய புராணம், சபாபதி நாவலரின் சிதம்பர சபாநாதபுராணம், மாதகல் ஏரம்பஐயரின் நருவாசல புராணம், அளவெட்டி கனகசபைப் புலவரின் கிறிஸ்தவ புராணமாகிய திருவாக்குப் புராணம், புலவர் சுப்பையனாரின் கனகிபுராணம் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
ஈழத்துப் புலவர்களால் சிறப்பாகக் கையாளப்பட்ட சிற்றிலக்கி யங்களில் ஒன்று ஊஞ்சல் ஆகும். "ஆசிரிய விருத்தப்பாவாலா அல்லது கலித்தாழிசையாலோ பொலிதருங்கிளையோடும் பொலிக" எனப்பாடுவது ஊஞ்சல் ஆகும். மூளாய் சித்திவிநாயகர் ஊஞ்சல், சுன்னாகம் ஐயனார் ஊஞ்சல், வண்ணை நகருஞ்சல் போன்ற பல ஊஞ்சற் பதிகம் தோன்றியமையை குறிப்பிடலாம்.
பல்வகைப் பாக்களும், பாவினங்களும் அமைய புயவகுப்பு முதல் ஊசலீறாக பதிணெண்ணுறுப்புக்களும் கலந்து அகம் புறமாகிய பொருள் விரவி எண்வகைச் சுவைகள் மலிய அந்தாதித் தொடையாய் அமைக்கப்படுவது கலம்பகம் நீர்வேலியைச் சேர்ந்த பீதாம்பரப் புலவரால் பாடப்பட்ட ஆகும். மறைசைக் கலம்பகம் இக்காலத்தே தோன்றிய கலம்பக இலக்கிய மாக அமைகின்றது.
அகப்பொருட் துறைகள் அமைய நானூறு கட்டளைக் கலித்துறைப்பாக்களால் பாடப்படுவது கோவைப் பிரபந்த மாகும். வட்டுக்கோட்டை நாகேசு ஐயரால் அடைக்கலம் தோட்ட கந்தசுவாமியார் மீது பாடப்பட்ட அடைக்கலங்கோவை வல்வெட்டியைச் சேர்ந்த குமாரசுவாமி முதலியாரால் பாடப்பட்ட அருளம்பலக்கோவை என்பன குறிப்பிடத்தக்கன.
நூறு திருப்பாட்டுக்களைக் கொண்ட பகுதி சதகமாகும். உடுப்பிட்டி சின்னத்தம்பிப் புலவரின் வீரபத்திரர் சதகம், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த சதாசிவம் பிள்ளையவர்களின் திருச்சதகமும் குறிப்பிடத்தக்க சதக இலக்கியங்களாக விளங்கு கின்றன.
அகவற்பாவினால் ஆக்கப்படும் பிரபந்தம் அகவல் ஆகும். நல்லூர் பரமாநந்தப்புலவரின் நல்லைக்கந்தரகவலும் மயில்வாகனப் புலவரின் விநாயகரகவலும் குறிப்பிடப்படு கின்றன.
ஒரு பாடலின் இறுதி எழுத்து, அசை, சீர் அல்லது அடி அடுத்த பாடலின் முதலாக அமைய வரும் நூறு வெண்பாக்கள் அந்தாதி ஆகும். மாவை பொன்னம்பலப்பிள்ளையவர்களின் மாவை யந்தாதி, சபாபதி நாவலரின் மாவையந்தாதி திருகோணமலை ஆறுமுகப்புலவரின் திருகோணமலையந்தாதி, இருபாலை சேனாதிராசா முதலியாரின் நல்லையந்தாதி முதலியவை இக்காலத்து அந்தாதி இலக்கியங்கள் ஆகும்.
குறத்தி குறி கூறுவதும் குறவனுடன் பேசி மகிழ்வதுமாகிய செய்திகளை முன்னிலைப்படுத்திப் பாடும் பிரபந்தம் குறவஞ்சி யாகும். இருபாலை சேனாதிராசா முதலியாரின் நல்லைக் குறவஞ்சி, வட்டுக்கோட்டை விஸ்வநாத சாஸ்திரியாரின் வண்ணைக் குறவஞ்சி நகுலமலைக் குறவஞ்சி நல்லூர் சரவணமுத்துப் புலவரின் திருகோணமலைக் குறவஞ்சி என்பன குறிப்பிடத்தக்கன.
காதல் விரகதாபத்தால் துன்புற்ற ஒருவர் மற்றொருவர் பால் தம் வருத்தத்தைத் தெரிவிக்கும்படி உயர்திணைப் பொருட்களை யேனும், அஃறிணைப் பொருட்களையேனும் விடுப்பது தூது ஆகும். நல்லூர் சந்திரசேகர பண்டிதரின் கிள்ளைவிடு தூது,
திருகோணமலை சரவணமுத்துப்பிள்ளையின் தத்தைவிடு தூது இக்காலத்திற்குரியதாக விளங்குகின்றது.
வெண்பா யாப்பினால் பெயர்பெற்ற இலக்கியங்களும் இக்காலத்தில் தோற்றம் பெற்றுள்ளன. இருபாலை சேனாதிராசா முதலியாரின் நல்லை வெண்பா, நீராவிக் கலிவெண்பா என்பனவும் சுன்னாகம் முருகேசு பண்டிதரின் மயிலணிச் சிலேடை வெண்பா, குடந்தை வெண்பா என்பன விளங்கு கின்றன.
பதிக வடிவமாக பீதாம்பரப் புலவரின் வல்லிபுரநாதர் பதிகம். உடுப்பிட்டி சிவசம்புப் புலவரின் கந்தவனநாதர் பதிகம், வல்லிபுரநாதர் பதிகம் என்பன விளங்குகின்றன. நாயக்கர் காலத்தில் தோன்றிய திருப்புகழ் ஈழத்தில் 19ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றுள்ளது. பீதாம்பரப் புலவரின் மறைசைத் திருப்புகழ், அருள்வாக்கி அப்துல்காதிருப் புலவரின் சந்தத்திருப்புகழ், அசனாலெப்பைப் புலவரின் நவரத்தினத்திருப்புகழ் என்பவை குறிப்பிடத்தக்கன.
பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற மூன்று அங்கங்கள் கொண்ட இசைப்பாடல் வடிவில் அமைந்த பிரபந்தமாகிய கீர்த்தனையும் இக்காலத்தே தோற்றம் பெற்றது. உடுப்பிட்டி சின்னத்தம்பிப் புலவரின் சிவதோத்திரக் கீர்த்தனை, நல்லூர்ப் பரமானந்தாப் புலவரின் நல்லைக் கந்தன் கீர்த்தனை என்பன குறிப்பிடப்படுகின்றன.
நாடக இலக்கியங்களும் இக்காலத்தே வளர்ச்சியடைந்தது. "இலங்கையில் மிகச் சிறப்பாக வளர்ந்த இலக்கியத்துறை நாடகம் எனலாம்" என கலாநிதி மு.வரதராசன் குறிப்பிடுவார். ஆரம்பத்தில் மரபுவழி வந்த கூத்துமுறை நாடகங்கள் பின் விலாச நாடகங்களாகவும், நாடகங்களாகவும் வளர்ச்சி அடைந்துள்ளன. கீத்தாம் பிள்ளையின் (1798) எருமை நாடகம், நொண்டி நாடகம், ஏரம்பதோர் நாடகம் என்பனவும் சுவாமிநாதரது (1765-1824) இராம நாடகம், தருமபுத்திர நாடகம் என்பனவும் கந்தப்பிள்ளையின் (1766-1842) இராம விலாசம், இரத்தின விலாசம், சந்திரகாச நாடகம், கண்டி நாடகம், ஏரோது நாடகம், சமநீக்கிலார் நாடகம் முதலியவையும் சிறப்பாக குறிப்பிடப்படுகின்றன.
மேலை நாட்டு இலக்கியத்துறையாகிய அகராதித்துறையும் ஈழத்தில் தோற்றம் பெற்றது. ஐரோப்பிய பாதிரியாராகிய வின்ஸ்லோ ஐயரின் தமிழ் ஆங்கில அகராதி, (1862) போர்சிவல் பாதிரியாரது தமிழ் ஆங்கில அகராதி, ஆங்கில தமிழ் அகராதி என்பனவும் சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரின் இலக்கியச் சொல்லகராதியும் உடுவில் சந்திரசேகர பண்டிதரின் தமிழகராதி யும் கு. கதிரைவேற்பிள்ளையின் தமிழ் பேரகராதியும் நா. கதிரைவேற்பிள்ளையின் யாழ்ப்பாணத்தமிழ் அகராதியும் குறிப்பிடப்படுகின்றன.
இலக்கண நூல்கள் பலவும் இக்காலத்தில் தோன்றியுள்ளன. ஆறுமுகநாவலரவர்களின் இலக்கணச் சுருக்கம், இலக்கண வினாவிடை என்பனவும் சேர்.
பொன். இராமநாதனின் செந்தமிழ் இலக்கணம் சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவரின் இலக்கணச்சந்திரிகை, வினைப் பகுபத விளக்கம், என்பனவும் புலோலி ந. குமாரசுவாமிப் புலவரின் நன்நூற் காண்டிகையுரை விளக்கம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையின் சிவிலியன் தமிழ் இலக்கணம் என்பனவும் குறிப்பிடப்படுகின்றன.
மேலைநாட்டு இலக்கிய வடிவங்களுள் ஒன்றாகிய நாவல் இலக்கிய வடிவம் தோற்றம் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். 1885ஆம் ஆண்டு வெளிவந்த அறிஞர் சித்திலெப்பையின் அசன்பேயுடைய கதை ஈழத்தின் முதன் நாவல் என்ற சிறப்பைப் பெறுகின்றது. Orson vallentine என்ற போர்த்துக்கேய நெடுங் கதையைத் தழுவி திருகோணமலை இன்னாசித்தம்பியால் ஊசோன் பாலந்தை கதை 1891 ஆம் ஆண்டு வெளிவந்தது 1895 ஆம் ஆண்டு திருகோணமலை தி.த. சரவணமுத்துப்பிள்ளையின் மோகனாங்கி என்ற நாவல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
மதக் கருத்துக்களை விளக்கும் தத்துவ நூல்களும் தோன்றி யுள்ளன. ஆறுமுகநாவலரின் சைவசமய நெறியுரை, சைவ வினாவிடை நா. கதிரைவேற்பிள்ளையின் சைவசித்தாந்த சுருக்கம், சைவசந்திரிகை சங்கர பண்டிதரின் சைவப்பிரகாசனம், சு. சிவபாதசுந்தரம் அவர்களின் சைவபோதம் சி.வை. தாமோதரம் பிள்ளையின் சைவ மகத்துவம் வைத்திலிங்கம் பிள்ளையின் சைவ மகத்துவ திக்கார நிக்கிரகம் என்பவை குறிப்பிடப்படுகின்றன.
இந்து மதத்திற்கு எதிரான கிறிஸ்தவர்களது கண்டன நூல்களும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான இந்து மதத்தவர்களது கண்டன நூல்களும் தோற்றம் பெற்றுள்ளன. சுன்னாகம் சங்கர பண்டிதரின் கிறிஸ்தவ மத கண்டனம், சிவதூஷண கண்டனம் என்பவையும் ஆறுமுகநாவலரது வச்சிரதண்டம், சுப்பிரபேதம் என்பனவும் சபாபதி நாவலரின் சித்தாந்த மரபு கண்டன கண்டனம் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
19ஆம் நூற்றாண்டில் தோன்றிய வசன இலக்கியங்களாக 1869 இல் சதாசிவம் பிள்ளையின் நன்னெறிக்கதா சங்கிரகம் 1875 இல் இராயர் அப்பாசிக் கதை 1893ல் நன்னெறிக்கதை 1898 இல் நைதர்சரிதம் என்பன குறிப்பிடப்படுகின்றன. தவிர ஆறுமுக நாவலரது பாலபாடம் முதலிய நூல்களும் விதந்து குறிப்பிடத் தக்கனவாகும்.
பதிப்புத் துறையும் இக்காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைந்துள்ளன. இத்துறைக்கு முன்னோடியாக ஆறுமுகநாவலர் விளங்கினார். நாவலர் பதிப்பு என்றால் சுத்த மானது எனத் தமிழறிஞர் பெருமைப்படும் அளவிற்கு சிறப்பாக நெறிப்படுத்தியவர். இவரையடுத்து சி.வை. தாமோதரம் பிள்ளையவர்களையும் குறிப்பிட்டுக்காட்டலாம்.
உரைநடை உயர்வு பெற்று ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உரமூட்டியதும் குறிப்பிடத்தக்கதாகும். ஆறுமுகநாவலர் உரை நடையின் உயர்வுக்கு உறுதுணை புரிந்தார். இவரின் உரைநடை யின் சிறப்பினைக் கண்ட வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் "வசனநடை கைவந்த வல்லாளர்" எனவும் பேராசிரியர் வி. செல்வநாயகம் அவர்கள் "தற்கால உரைநடையின் தந்தை" எனவும் குறிப்பிடுவதைச் சுட்டிக்காட்டலாம். இவரால் எழுதப் பட்ட வசன நூல்கள் கண்டன நூல்கள் என்பனவற்றில் இவரின் உரைநடைத் தெளிவைக் காணலாம்.
கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்திற்காக வந்த மிஷனரியினர் பத்திரிகைகளையும் ஆரம்பித்தனர் மானிப்பாய் அச்சுக்கூடத்தில் இருந்து 1841ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் திகதி உதயதாரகை என்ற இலங்கையின் முதல் தமிழ்ப்பத்திரிகை உதயமாயிற்று. வாசனைப் பழக்கத்தை தூண்டுவதையும்இந்துக்களின் கவனத்தை தன்பால் ஈத்தலையும் முதன்மைப்படுத்தத் தோன்றிய உதயதார கையைத் தொடர்ந்து உதயாதித்தன், உரைகல்லு, வித்தியாதர்ப் பணம்,
விறிமன், இலங்காபிமானி, இலங்கைக் காவலன் போன்ற கிறிஸ்தவ பத்திரிகைகளும், இலங்கை நேசன், சைவ உதயபானு, சைவசமயபோதினி, விஞ்ஞானவர்த்தினி போன்ற சைவப் பத்திரிகைகளும் முஸ்லிம்நேசன் சர்வஜனநேசன் சைபுல் இஸ்லாம், இஸ்லாம் மித்திரன், இஸ்லாம் பாதுகாவலன் போன்ற இஸ்லாமியப் பத்திரிகைகளும் வெளிவந்துள்ளன.
மொழிபெயர்ப்பு முயற்சிகளும் இக்காலத்தில் இடம் பெற்றுள் ளன. புலோலி வ. கணபதிப்பிள்ளையின் வடமொழி மொழி பெயர்ப்பாகிய வில்ஹனியம், வாதபுரேசர்கதை என்பனவும் குமாரசுவாமிப் புலவரினால் சமஸ்கிருதத்தில் இருந்துமொழிபெயர்க்கப்பட்ட மேகதூதக்காரிகை, இராமோதந்தம், சாணக்கிய நீதிவெண்பா என்பனவும் காசிவாசி செந்திநாதை யரின் நீலகண்டபாஷ்யம் திருஞானசம்பந்தப் பிள்ளையின் தர்க்காமிர்தம் நாகநாதபண்டிதரின் மானவ தர்மசாஸ்திரம், பகவத் இதை, மேகதூதம் என்பனவும் மொழிபெயர்ப்பு இலக்கியங் களாகும்.
வரலாறு சார்பான இலக்கியங்களாக சைமன் காசிச் செட்டியவர் கவின் தமிழ்ப்புலவர் வரலாறு (Tamil plutarch) இலங்கைச் சரித்திர சூசனம் (மொழிபெயர்ப்பு), சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரின் தமிழ்ப் புலவர் சரிதம், ஆர்னால்ட் சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகம், பூபாலபிள்ளையின் தமிழ் வரலாறு போன்ற வற்றைக் குறிப்பிடலாம்.
அறிவியற்துறை இலக்கியங்களாக சுப்பிரமணியபிள்ளையின் பதார்த்த விஞ்ஞானம், பால வைத்தியம், பிரசவ வைத்தியம் என்பனவும் நாகேசு ஐயரின் அமுத நுணுக்கம் என்னும் விட வைத்திய நூலும் டாக்டர் கிறீன் அவர்களின் மனுஷ அங்காதி பாதம், பிரசவ வைத்தியம், இரண வைத்தியம் முதலியவற்றை யும் குறிப்பிடலாம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக