பூவொடு புரையும் கண்ணும்
திணை :- நெய்தல்
துறை :- வரைவிடை ஆற்றாள் எனக்கவன்ற தோழிக்கு தலைவி கூறியது.
தலைவன் மணமுடிக்கும்வரை தலைவி பிரிவுத் துயர் தாங்கமாட்டாள் என்ற நினைப்பில் வருந்திய தோழிக்கு தலைவி தன் நிலையை கழிவிரக்கத்தோடு கூறியது.
பாடியவர் :-
மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதனார்
பாடல் :
பூவொடு புரையும் கண்ணும் வேயென
விறல் வனப்பு எய்திய தோளும், பிறையென
மதி மயக்குறூஉம் நுதலும் நன்றும்
நல்லமன் வாழி தோழி - அல்கலும்
தயங்குதிரை பொருத தாழை வெண்பூக்
குருகென மலரும் பெருந்துறை
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ வூங்கே.
பதவுரை :
தோழி! அல்கலும் தயங்கு திரை-
இராக்காலங்களில் விளங்கும் மெல்லிய அலைகளால்;
பொருத தாழை - மோதுகின்ற தாழை மரங்களில்; வெண்பூ - வெண்ணிறமான பூக்கள்; குருகு என - நாரையைப் போல; மலரும் - மலர்ந்து காட்சியளிக்கும். பெருந்துறை விரி நீர் சேர்ப்பனொடு -இத்தகைய பெரிய துறையை உடையதும் அகன்ற நீர்ப்பரப்பினை உடையதுமான நெய்தல் நிலத் தலைவனொடு; நகாஅவூங்கே சிரித்துப் பழகுவதற்கு முன்பு,
பூவொடு புரையும் கண்ணும் - தாமரைப் பூவைப் போன்று விளங்கும் என் கண்களும்;
வேய் என விறல் வனப்பு எய்திய தோளும் - மூங்கிலைப் போல எல்லோரையும் வெற்றி கொள்ளும் அழகுடைய என் தோள்களும்; பிறையென மதி மயங்குறூஉம் நுதலும் - பிறைச் சந்திரனோ என எண்ணுமாறு பிறரது அறிவை மயக்கும் நெற்றியும்;
நல்லமன் - பெரிதும் நன்றாகவே இருந்தன. (இப்பொழுது அது கழிந்தது)
அருஞ்சொற்கள் !
புரையும்
- போல (புரைய);
வேய் - மூங்கில்;
விறல் - வெற்றி;
மதி - அறிவு;
நுதல் - நெற்றி;
குருகு - பறவை (நாரை);
பொருத - மோதுகின்ற
பொருள்:
தோழி, இராக்காலங்களில் விளங்கும் மெல்லிய அலைகளால் மோதுகின்ற தாழை மரங்களில், வெண்ணிறமான பூக்கள், நாரையைப் போல மலர்ந்து காட்சியளிக்கும். இத்தகைய பெரிய துறையை உடையதும் அகன்ற நீர்ப்பரப்பினை உடையதுமான நெய்தல் நிலத் தலைவனோடு சிரித்துப் பழகுவதற்கு முன்பு தாமரைப் பூவைப் போன்று விளங்கும் எனது கண்களும் மூங்கிலைப் போல எல்லோரையும் வெற்றி கொள்ளும் அழகுடைய என் தோள்களும், பிறைச் சந்திரனோ என எண்ணுமாறு பிறரது அறிவை மயக்கும் நெற்றியும், பெரிதும் நன்றாக இருந்தன. இப்பொழுது அது கழிந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக