19.11.25

விவேக சிந்தாமணி -01- தமிழ் இலக்கிய நயம்

 

விவேக சிந்தாமணி

இந்நூல் எந்தக் காலத்திற்கு உரியது, யாரால் பாடப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை. நாயக்கர் காலத்திற்குரிய சிற்றிலக்கியம் என்றும் கூறுவர். நீதிக்கருத்துக்கள், சிருங்காரச் சுவை நிரம்பிய பாடல்களை உள்ளடக்கிய இவ்விலக்கியம், தனிப்பாடல்களின் தொகுப்பு என்ற கருத்தும் நிலவுகின்றது.

இப்பாடல்கள் பெண்ணின் அழகை நாகரிகமான முறையில் விபரிக்கின்றன. கவிஞனின் சொல்லாட்சியும் கற்பனையும் இரசித்து இன்புறத்தக்கன.

 

01. விவேக சிந்தாமணி எக்காலத்திற்குரிய இலக்கியம் என நம்பப்படுகிறது? இந்நூல் எவ்வகை இலக்கியம்?

நாயக்கர் காலத்திற்குரிய இலக்கியம் என நம்பப்படுகிறது.

சிற்றிலக்கியம்

 

02. விவேக சிந்தாமணியின் உள்ளடக்கங்கள் யாவை?

நீதிக் கருத்துக்கள், சிருங்காரச் சுவை நிரம்பிய பாடல்கள்

 

03. விவேக சிந்தாமணியை இயற்றியவர் யார்?

யாரென்பது அறியப்படவில்லை

வந்தது வான்உறு மதியமோ!

 

தேன்நுகர் வண்டு மதுதனை உண்டு

தியங்கியே கிடந்ததைக் கண்டு

தான்அதைச் சம்பு வின்கனி என்று

தடங்கையில் எடுத்துமுன் பார்த்தாள்;

வான்உறு மதியம் வந்ததுஎன்று எண்ணி

மலர்க்கரம் குவியுமென்று அஞ்சிப்

போனது வண்டோ பறந்ததோ பழந்தான்

புதுமையோ இது எனப் புகன்றாள்.

பொருள்

தேனை உண்ணும் இயல்புடைய வண்டுகள் மலர்களில் உள்ள தேனையுண்டு மயங்கிக் கிடந்தன. அவற்றைக் கண்டாள் ஒரு மங்கை. அவற்றை நாவல் பழங்கள் என நினைத்து அவற்றுள் ஒன்றைத் தன் பெரிய கையில் எடுத்துப் பார்த்தாள். அப்போது அந்த வண்டு அவளது முக அழகால் வானத்தில் உலாவும் சந்திரன் வந்தது என எண்ணி, (அவளது) கையான தாமரை மலர் குவிந்துவிடும் என அஞ்சிப் பறந்து போய்விட்டது. பின்னர் அவள் பறந்து போனது வண்டோ, அன்றிப் பழமோ வேறு என்ன புதுமையோ எனச் சொன்னாள்.

அரும்பதங்கள்

நுகர் (தல்) - உண்(ணு)

மது - கள் / தேன்

தியங்கி -மயங்கி

தடங்கை - அகன்ற கை

வான் - வானம்

மதியம் -நிலவு

புகன்றாள் - சொன்னாள்

வினாவிடை

 

. வந்தது வான்உறு மதியமோ!

01. தலைவியின் கையிலிருந்த வண்டு பறந்து போகக் காரணம் என்ன?

தேனையுண்டு மயங்கிய வண்டினை நாவல் பழம் என்று நினைத்து தனது கையில் எடுத்துப் பார்த்தாள் தலைவி. அப்போது அவளது முக அழகை சந்திரன் என நினைத்து, அவளது கையான தாமரை மலர் குவிந்துவிடும் என்றெண்ணி வண்டு பறந்து போய்விட்டது.

02. 'தேன்நுகர் வண்டு மதுதனை உண்டு....எனத் தொடங்கும் பாடலில்கவிஞரின் கற்பனையாற்றலை எடுத்துக்காட்டுக்களுடன் விளக்குக?

பெண்ணின் அழகை வர்ணிக்காத கவிஞர்களே இல்லை எனலாம். இங்கும் கவிஞன் பெண்ணின் முக அழகை வர்ணிக்க முற்படுகின்றான். அது எப்படியெனில், தலைவி வண்டினை கையில் எடுத்து உற்றுப் பார்த்தபோது வண்டு தலைவியின் முகத்தை சந்திரன் என்று எண்ணுகிறது. சந்திரனைக் கண்டதும் தாமரை மலர் குவிவது இயல்பு. அப்போது தான் அமர்ந்திருப்பது தலைவியின் கை என்பதை அறியாத வண்டு, அது தாமரை மலர் என்றெண்ணி, மலர் குவிந்துவிடும் என்றஞ்சி பறந்து விடுகிறது. இங்கு பெண்ணின் முகத்தையும் கையையும் வர்ணிக்கும் கவிஞனின் சொல்லாட்சியும் கற்பனையாற்றலும் நயந்து இன்புறுதற்குரியது.

03. இச்செய்யுளில் இடம்பெறும் உருவக அணியைக் குறிப்பிட்டு, அதன் சிறப்பினை விளக்குக?

'வான் உறு மதியம்' என்பதே இப்பாடலில் காணப்படும் உருவக அணியாகும். தலைவியின் முகத்தைக் கண்ட வண்டு அது சந்திரன் என்று எண்ணுகிறது. இங்கு பெண்ணின் முகத்தை சந்திரனாக உருவகித்துக் கூறியிருப்பது நயக்கத்தக்கது.

04. கவிஞனின் கற்பனையாற்றலை எடுத்துக்காட்டுக்களுடன் விளக்குக?

தேனையுண்டு மயங்கிக் கிடக்கும் வண்டினை பெண் நாவல் பழம் என நினைக்கிறாள்.

வண்டு அவளது முக அழகைக் கண்டு அம்முகம், வானத்தில் உலவும் சந்திரனோ என எண்ணுகிறது. இதன் மூலம் அப் பெண்ணின் அழகு கற்பனை நயத்தோடு காட்டப்படுகிறது.

அவளது கையை வண்டானது தாமரை மலரோ என நினைத்து, அது குவிந்துவிடும் என அஞ்சிப் பறக்கிறது. இரவில்தாமரை மலர்கள் சந்திரனைக் கண்டு குவிவது வழக்கம். அதனால் அவள் முகத்தைக் கண்டு சந்திரன் என எண்ணியும், இரவு வந்துவிட்டதால் அவளது கரங்களை குவிகின்ற தாமரை மலராகக் கருதியும் வண்டு பறப்பது கற்பனை நயம் மிக்கது.

பறந்தது வண்டோ, பழமோ, வேறு புதுமையோ என பெண் மயங்குவதும் கவிஞரது கற்பனையின் உச்சமாகும்.

05.இச்செய்யுளில் இடம்பெறும் உவமை அணியை எடுத்துக் காட்டுக?

மலர்க்கரம் என்று கூறப்படுவது உவமையாகும். இங்கு கரம் தாமரை மலருக்கு உவமிக்கப்பட்டிருக்கிறது.

பெண்ணினுடைய கைகள் குவிவதை, வண்டானது தாமரை மலர் குவிவது போல நினைத்து (மாலையானால் தாமரை குவிவது வழக்கம்) அஞ்சிப் பறந்து போகிறது. இங்கு கரத்திற்கு குவிகின்ற தாமரை மலரை ஒப்பிட்டிருப்பது சிறப்பாகும்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக