24.11.25

சோழர்காலம் ஒரு காவிய காலமாகும்

தமிழ் இலக்கியவரலாற்றில் சோழர்காலம் ஒரு காவிய காலமாகும். இக்கூற்றின் பொருத்தப்டபாட்டினை தக்க எடுத்துக்காட்டுகளுடன் ஆராய்க?

 

முடியுடை மூவேந்தர்களும் தமிழ்நாட்டை ஆண்ட காலம் மாறிப்போய் சோழர்கள் மட்டும் வீரநடைபோட்டு தனிப்பேரரசைநிறுவி இப்பேரரசுக்கு ஈடாக ஒரு பேரரசும் இல்லை என்னும் நிலை வைத்து, விரிந்த சாம்ராஜ்யத்தை தமிழர் தேசம் கண்டகாலம் சோழர் காலமாகும் இக்காலத்திலே தமிழ்நாடு பலதுறைகளிலும் முன்னேறிச் சென்றது. இமையம் வரைக்கும் சோழப்பேரரசின் எல்லை நீண்டது போல இமையத்தின் உச்சியளவிற்கு இலக்கிய முயற்சிகள் உயர்ந்துகிடந்தன. அந்தவகையில் இக்காலத்தில் காவியங்கள். சிற்றிலக்கியங்கள், இலக்கண நூல்கள், தத்துவ நூல்கள், நிகண்டுகள், உரைகள் எனப் பல்வேறுபட்ட இலக்கிய முயற்சிகளின் மத்தியில்எழுந்த காவியங்களை இரண்டு வகைப்படுத்தலாம்.

01. பெருங்காவியம்

02. சிறுகாவியம்

தமிழில் தோன்றிய காவியங்களை வைத்து நோக்கும்போது சோழர்காலத்தில்தான் பெருந்தொகையான காவியங்கள் தோன்றின. தமிழ் இலக்கிய வரலாற்றுக் காலங்களில் ஆரம்பகாலமாகிய சங்ககாலத்தில் காவியங்கள் தோன்றவில்லை சங்கம்மருவியகாலத்தில் மாத்திரம் சிலப்பதிகாரம் மணிமேகலை என்னும் இரட்டைக்காவியங்கள் தோன்றின. பல்லவர்காலத்தில் பக்தி இலக்கியங்கள், நாயக்கர் காலத்தில் தலபுராணங்கள், ஐரோப்பியர்காலத்தில் சமயநூல்கள், 20-ம் நூற்றாண்டில் புனைகதை இலக்கியங்கள் என்றவகையில் ஆதிக்கம் செலுத்தப்பட்டனவே தவிர காவியங்களுக்கு இடமளிக்கப்படவில்லை. இருந்தபோதும் அமாவாசை வானில் செய்மதி விளக்குகள் பளிச்சிட்டதுபோல ஒருசில காவிய இலக்கியங்கள் தோன்றியுள்ளன.

பெருங்கதை பல்லவர்காலத்தில்

நாயக்கர்காலத்தில் வில்லிபாரதம்

ஐரோப்பியர்காலத்தில் சீறாப்புராணம், தேம்பாவணி

20-ம் நூற்றாண்டு சிறுகாவியம்

எனவேதான் தண்டியாசிரியர் கூறிய காவிய இல்கணங்களை அனுசரித்து சோழர்காலத்தில் பெருந்தொகையான காவியங்கள் தோன்றினவென்று கூறப்படுகின்றது.

காவியம் என்பது கடவுள் வாழ்த்து முதலியவற்றை உடையதாய் ஒப்பற்ற குணங்களையுடைய ஒருவனை தன்னிகரில்லாத் தலைவனாகக் கொண்டு அவனுடைய பிறப்பு வளர்ப்பு செயற்கரிய செயல்கள், முடிசூட்டு, திருமணம், புனல் விளையாட்டு, தூது. போர், ஊடல், கூடல் போன்ற அமசங்களோடு நாடு, நகரம், மலை, கடல், நதி, இருபருவம். முச்சுடர் பற்றிய வர்ணணைகளுடன் அறம், பொருள், இன்பம், வீடு பயக்கப் பாடுவது எனப்படுகின்றது. இவற்றுள் ஒன்றேனும் குறைவுபடப் பாடுவது சிறுகாவியம் எனப்படுகின்றது.

இந்தவரையறையை வகுத்துக் கொண்டவர்கள் சமண பௌத்தர்கள் ஆவர். ஏனெனில் இக்காலத்தில் பெருந்தொகையாக தோன்றிய காவியங்களில் பல காவியங்கள் சமண பௌத்தம் சார்ந்தே பிறந்திருக்கின்றமையினாலாகும்.

கம்பராமாயணம், பெரியபுராணம், கந்தபுராணம் போன்ற பேரிலக்கியங்கள் தண்டியாசிரியர் கூறிய காவிய இலக்கணத்திற்கு அமைவாகப் பாடப்பட்டவையாயினும் கடவுளை நாயகனாக்கி சமயக்கதைகளைக் கூறியிருப்பதனால் பெருங்காப்பிய அந்தஸ்துடைய இவை காவியமாகக் கொள்ளப்படாது பேரிலக்கியங்களுக்குள் அடக்கப்பட்டுள்ளன. ஆனாலும் காவியத்திற்குரிய அம்சங்கள் கைவரப் பெற்றமையால் இவற்றையும் இக்காலத்திற்குரிய காவியங்களாகக் கொள்ளமுடியும்.

சோழர்காலத்தில் ஐம்பெருங்காப்பியத்தில் மூன்று காவியமும் ஐஞ்சிறுகாவியத்தில் ஐந்தும், பெரியபுராணம், கந்தபுராணம். கம்பராமாயணம், நளவெண்பா முதலியவற்றோடு சேர்த்து பத்திற்கு மேற்பட்ட காவியங்கள் தோன்றிய காரணத்தால் இக்காலத்தை காவியகாலம் என்றே கூறவேண்டும்.

வடமொழியில் இருந்து காவியத்திற்கு இலக்கணம்கூறும் நூலை (தண்டியலங்காரம்) தண்டியாசிரியர் சோழர் காலத்தில் இயற்றினர். அத்தோடு வடமொழி இலக்கியவடிவமாகிய காவியமும் முதன் முதலில் சிவகசிந்தாமணியிலேயே தோற்றம் பெறுகின்றது. பொன் சக்திவேல் அவர்கள் காவியத்தின் தோற்றம், வளர்ச்சி, உச்சக்கட்டம்,வீழ்ச்சி ஆகியனயாவும் இக்காலத்திலேயே இடம்பெற்றிருப்பதாகக் கூறியிருப்பதும் சோழர் காலத்தை காவியகாலமாக கொள்ள வைக்கின்றது. அவர் கூறியதன்படி,

காவியத்தின் தோற்றம் சீவகசிந்தாமணி

காவியத்தின் வளர்ச்சி சூளாமணி

காவியத்தின் உச்சம் கம்பராமாயணம்

காவியத்தின் வீழ்ச்சி கந்தபுராணம்

காவியம் தோன்றுவதற்கு தன்னேரில்லாத்தலைவன் தோன்ற வேண்டும் இத்தகைய தலைவர்களாக சோழவேந்தர்கள் நிமிர்ந்தெழுந்தனர். கி.பி 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த திருப்புறம்பியப்போரில் சேரர், பாண்டியர் என்னும் இருசாரரையும் சோழர்கள் வலியடக்கி சோழப்பேரரசு நிறுவப்படுகின்றது. தமிழ்நாடு வடவேங்கடம் தென்குமரிக்கு இடைப்பட்ட நிலப்பரப்பிற்கு உட்பட்டுநில்லாது விரிவடைந்தது. இராஜராஜசோழன் வடக்கிலும் மேற்கிலும் பலநாட்டரசர்களோடு போர் புரிந்து வென்று அந்நாடுகளையும் தன்னாட்சிக்கு உட்படுத்தினான். இமையத்தைக் கைப்பற்றி இமையவரம்பனானான். அவன் மகன் இராஜேந்திரசோழன் கங்கைநாடு, இலங்கை, யாவா, சுமத்திரா முதலிய தீவுகளையும் வென்று கங்கை கொண்ட சோழன் எனப்பட்டான். இப்படியாகத் தமிழ்நாட்டின் ராஜ்ய எல்லை விரிவுபடுத்தப்பட்டது. கங்கை தொட்டுகடாரம் ஈறாக. சிங்களம் தொட்டு சீயம் ஈறாகவுள்ள அத்தனை நாடுகளையும் கைப்பற்றி தமது ஆணைக்கு உட்படுத்தி ஒருமுடியின்கீழ் ஆண்டனர். இராஜராஜசோழன் காலத்து கல்வெட்டு,

"திருமகள் போலப் பெருநிலச் செவ்வியும்

தனக்கேயுரிமை பூண்ட மனங்கொளக்"

என்றும், சேக்கிழார் பெரியபுராணத்தில்

"கொற்ற ஆழி குவலயம் சூழ்ந்திட .."

என்றும் குறிப்பிடுமளவிற்கு புவிச்சக்கரவர்த்திகளாக சோழச்சக்கரவர்த்திகள் திகழ அவர்களை தன்னேரில்லாத் தலைவர்களாகக் காணமுடிந்தது. எனவே அவர்களை நாயகனாகக் கொண்டு காவியங்களும் பிறந்தன.

காவியம் தோன்றுவதற்கு நாட்டுச் சூழ்நிலையும் முக்கியமானதாகும். சோழர்காலத்தில் அகப்புறச் சூழ்நிலைகள் காவியத்திற்கு சாதகமாகவே அமைந்தன. சோழர்கள் தனியரசை நிறுவி எதிர்த்த மன்னர்களை எல்லாம் அடக்கி, பகைமையை துவம்சம் செய்து, எல்லா மன்னர்களையும் தமது ஆணைக்கு உட்பட்டு திறைசெலுத்தும் நிலையில் வைத்தால் போர், வன் முறைகள் என்பன நிலவவில்லை. இதனால் நாட்டில் அமைதி நிலவியது. இந்த அமைதி காவியத் தோற்றத்திற்கு சாதகமான காரணியாகும்.

நாட்டில் அமைதி மாத்திரமின்றி செல்வம் செழித்து வறுமை அகலவேண்டும். இச்சூழ்நிலை சமைத்து கொண்டதாலும் இக்காலத்தில் காவியங்கள் பல மலர்ந்து கொண்டன. சோழர்கள் மிகச்சிறந்த கடற்படையைக் கட்டியெழுப்பினார்கள். இதனைக்கொண்டு கடல்கடந்த நாடுகளையும் ஆழ்கடலுக்கு நடுவேயுள்ள திபகற்பங்களையும்கூட தமது முடிக்குரிய தாக்கினர். இந்துமாவாரி சோழர்கள் நீந்தி விளையாடிய குளம் என்று ..நீலகண்டசாஸ்திரி அவர்கள் குறிப்பிடுமளவிற்கு சிறந்த கடற்படை இப்படையாலும் பிற படைவல்லாண்மையாலும் வெற்றிகொள்ளப்பட்ட நாடுகளில் இருந்து சூறையாடப்பட்ட செல்வம், தம் ஆணைக்குட்பட்ட நாடுகளிடம் இருந்து கிடைக்கும் நிறைவருமானம் "சுற்றுமன்னர் திறைகடை சூழ்ந்திட என்று புகழ்ந்து நிற்கிறார். சேக்கிழார், இந்துசமுத்திரத்தீவிலே கடற்கொள்ளையரின் அட்டகாசம் மிகுந்திருந்த வேளையில் மேற்குறிப்பிட்ட பலம்மிக்க சோழர் கடற்படையால் ஈட்டிய கொள்ளை வருமானம், தமிழ்நாட்டின் எல்லைப்பரப்பு விஸ்தரிக்கப்பட்டதனாலும் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பினாலும் கிடைத்த வரிவருமானம் (400க்கு மேற்பட்ட வரிவருமானம் கிடைத்தது) இவ்வாறு ஏற்பட்ட செல்வப்பெருக்கு பலவகையில் காவியம் தோன்றுவதற்கான புறச்சூழ்நிலையாக அமைந்துகொண்டது. காவியங்கள் எழுவதற்கு நல்லகதைகள் இருக்கவேண்டும். முன்னைய காலத்துக்கதைகள் எடுத்துவரப்பட்டதன் மூலம் காவியங்கள் படைக்கப்பட்டன.

காவியங்கள் படைக்கப்படுவதற்கு கல்வி அறிவும் இன்றியமையாததாகும். சோழர்கள் வடமொழியைப் போற்றினர். வடமொழிக்காரரை அழைத்து வடமொழிக் கிராமங்களை அமைத்து காவியங்கள் படைக்கவைத்தனர். புலமை எங்குள்ளதே எவரைப் பற்றியுள்ளதோ அவரை வரவேற்று உதவியும். ஊக்கிவிப்பும் அளித்தனர். உதாரணமாக குலோத்துங்கசோழன் திருவெழுந்தூர் கம்பரின் புலமையை அறிந்து அவரைப் பல்லக்கிலே ஏற்றி அரசசபைக்கு அழைத்துவரச்செய்து சரியாசனத்தே வைத்தமையைக் குறிப்பிடலாம்.

காவியம் உருவாவதற்கு ஏற்றமாதிரியான சமூகமும் இக்காலத்தில் காணப்பட்டது. சோழர் காலத்து மக்களை இருபிரிவாக நோக்கலாம். ஒருபிரிவினர் உழுவித்து உண்போர் அடுத்தபிரிவினர் உழுது உண்போர் உழுவித்து உண்போருக்கு வேலை இல்லாதபடியால் அவர்களுக்கு பொழுதுபோக்குத் தேவைப்பட்டது. அதனால் அவர்கள் காவியங்களைப் படைத்தார்கள். உழுதுண்டு வாழ்வோருக்கு ஓய்வு தேவைப்பட்டதால் அவர்களும் அந்நேரங்களில் காவியங்களை படித்தார்கள்.

சோழர்காலத்தில் காவியத்திற்குப் பொருத்தமான பாவினமாகிய விருத்தம் அமையப்பொற்றது. பல்லவர்காலத்தில் உணர்ச்சிமிக்கக் கருத்துக்களை கற்பனை அனுபவங்களோடு அமைத்துப்பாடவல்ல பாவினமாக விருத்தப்பாவை நாயன்மார்கள் பயிற்றுவித்துக் கொண்டனர். இவ்வாறு விருத்தப்பா பல்லவர் காலத்தில் வளர்ந்திருந்தமையாலும் அவற்றை எடுத்துவந்து காவியங்களுக்கு ஏற்றமுறையில் பயன்படுத்திக்கொண்டமையாலும் இக்காலத்தில் காவியங்கள் பொருந்தொகையாக தோன்றலாயின.

காவியங்கள் தோன்றுவதற்கு அரிய பெரிய காவியங்களைப படைக்கவல்ல அற்புதசக்தி படைத்த புலவர்கள் தோன்ற வேண்டும் வளர்ப்பினால் யாரும் புலவர்கள் ஆகிவிடமுடியாது அவர்கள் பிறக்கவேண்டும் பேரிலக்கியங்களைச் சிருஷ்டித்தவர்கள் எல்லாம் உண்மையில் மொழிக்கு கிடைத்த அவதார புரிஷர்கள் என்றேதான் கூறவேண்டும். அந்தவகையில் ஆற்றல் படைத்த கம்பர், ஒட்டக்கூத்தர், சேக்கிழர், புகழேந்தி, திருத்தக்கதேவர் போன்ற புலவர்கள் தோன்றியமையாலும் இக்காலத்தில் காவியங்கள் பன்மடங்காகியிருந்தன.

புவிச்சக்கரவர்த்திகளாய் சோழர்கள் திகழ்ந்த காலத்தில் புவியாகிய தமிழ்நாடு பலதுறைகளிலும் கண்ட விளைச்சல்கள்போல் கவிச்சக்கரவர்த்திகள் முடிசூட்டப்பட்டபோது கவிதை விளைச்சல்களாகிய காவியங்கள் தோன்றுவது ஒன்றும் வியப்பில்லை. இருந்தபோதும் தமிழ்மொழியில் தோன்றிய காவியங்களில் பெருந்தொகையான காவியங்கள் தோன்றிய காரணத்தாலும், காவியம் அல்லாத பிறஇலக்கியங்களில் காவியப்பண்பு செறிந்து காணப்படுவதாலும் காவியம் தோன்றுவதற்கு ஏற்ற நாட்டின் அமைதி, தன்நிகரில்லாத் தலைவன், செல்வம், கல்வியறிவு, நல்லகதைகள், ஆற்றல்மிக்கப்புலவர்கள் போன்றன பொருத்தமுற அமைந்து கொண்ட காரணத்தையும் கொண்டுதான் சோழர்காலம் காவியகாலம் எனநிரூபிக்கப்படுகின்றது.

ஆனால் தோற்றிய இக்காலக்காவியங்கள் பல வடமொழி இலக்கியமரபுகளையும் இலக்கண மரபுகளையும் கதைகளையும் உள்வாங்கிப்படைக்கப்பட்டன என்பது சோழர்காலம் காவியகாலம் என்ற கீர்த்திக்கு சிறிதளவு அபகீர்த்தியை உண்டு பண்ணிவிட்டது. தமிழ்நாட்டுக் கதைகளை எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டுப் புலவர்களின் சொந்தக்கற்பனை அனுபவஆற்றல்களால் உருவான சிலப்பதிகாரம் மணிமேகலை என்னும் இருகாவியங்கள் இருப்பதுவும் இதற்கு ஒருவகையில் காரணம் எனலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக