25.11.25

A/L, சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகியவற்றை இரட்டைக் காப்பியங்கள்

 

 

1.   சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகியவற்றை இரட்டைக் காப்பியங்கள் என்று கூறுதல் பொருந்துமா? விளக்குக?

 

ஐரோப்பியருடைய வருகைக்கு முன்பு தமிழிலே தோன்றிய இலக்கியங்களுள் முதன்நிலையில் வைத்துப் போற்றப்பட்ட இலக்கிய வடிவம் காப்பியம் இக்காப்பியங்கள் ஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறுகாப்பியங்கள், பேரிலக்கிங்கள், காவியமரபுதழுவி எழுந்த இலக்கியங்கள் என்று பகுக்கப்படுகின்றன. இவற்றினுள்ளும் முதல் பகுப்பாகியஐம்பெருங்காப்பியத்தில் உள்ளடக்கப்பட்ட முதல் இரு காவியங்களாகவே சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கொள்ளப்படுகின்றன. இவை இரண்டும் இரட்டைக்காப்பியங்களா அல்லது தனித்தனிக் காப்பியங்களா என்ற கருத்து வேறுபாடுகள் நிலவிவருகின்றன. இவை இரண்டும் தோற்றம் பெற்ற காலங்கள் வேறுபட்டு நிற்பதும், இலக்கிய அமைப்பு முறையும்; பண்பும் மாறுபட்டு அமைவதும், வேறுபல காரணங்களும் இவை இரட்டைக் காப்பியங்கள் அல்ல என்பதை உணர்த்தி நிற்கின்றன. இரு காப்பியங்களுக்குமிடையிலான இறுக்கமான கதைத்தொடர்பு காலவேறுபாட்டைமேவி இரட்டைக் காப்பியங்களே என்று அழுத்தி நிற்கின்றது. கோவலன் கண்ணகியை திருமணம் செய்துவாழ்கின்றான். அந்நாளில் ஆடலரசி மாதவிமேல் மோகித்துப் போய் அவளுக்கு மாலையிட்டு பன்னிரண்டு ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்கின்றான். பின்பு கண்ணகியிடம் திரும்பிவருகின்றான். வாழ்வதற்காக கண்ணகியின் சிலம்பை மதுரை நகரிலே விற்கச் சென்றபோது கள்வன் எனப் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறான் கண்ணகி பாண்டியனோடு வழக்குரைக்கிறாள். பின்பு மன்னன் மடிகிறான். மதுரை எரிகிறது. இதுவே சிலப்பதிகாரத்தின் கதையாகும். இதன் தொடர்ச்சியாகவே மதுரைக் கூலவாணிகர் சீத்தலைச்சாத்தனார் மணிமேகலைக் காவியத்தில் கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலையின் துறவற வாழ்க்கையை கூறிச் செல்கின்றார். இங்கு இரண்டு காவியங்களதும் கதையை இணைக்கும் பாலமாக மாதவி விளங்குகிறாள். இன்னொருவகையில் கூறுவதானால் சிலப்பதிகாரத்தின் பாட்டுடைத்தலைவன்; கதைநாயகன் கோவலன் மணிமேகலையின் கதைநாயகியாக அதாவது பாட்டுடைத்தலைவியாக இருப்பவள் கோவலன் மகள் மணிமேகலை மாதவிகூட தன்மகள் மணிமேகலையை கண்ணகிமகள் என்று உறவு முறைப்படி அழைக்கிறாள் இதனால் சிலப்பதிகாரத் தலைவி கண்ணகி மணிமேகலைத்தலைவி அவள்மகள் மணிமேகலை இத்தகைய கதைத் தொடர்பினால் இவற்றை இரட்டைக்காப்பியம் என கருதமுடிகின்றது.

சோழநாட்டிலே பிறந்த கண்ணகி பாண்டி நாட்டிலே தனது கற்பின் திண்மையை நிறுவி மங்கையர் திலக கற்புக்கரசியாகி சேரநாட்டினிலே பத்தினித் தெய்வமானாள். இவ்வாறு மூவேந்தர் பெருமை பேசப்படுகின்றது. தம்மள் முரண்பட்டுக்கிடந்த தமிழ் மன்னர்களான மூவேந்தர்களையும் ஒழுங்குபடுத்தி ஒற்றுமைப்படுத்த சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ எடுத்துக் கொண்ட இறுதிமுயற்சி இதுவென அறிஞர்கள் கூறுவர். இவ்வாறு பாடும்படி இளங்கோவடிகளை வேண்டிக்கொண்டது மணிமேகலை ஆசிரியரான சீத்தலைச்சுத்தனார் என்றே அறியக்கிடக்கின்றது.

"முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது

அடிகள்நீரே அருளுக"

சிலப்பதிகாரத்தில் வஞ்சிக்காண்டத்தில் அதன் ஆசிரியரான இளங்கோவடிகள் சாத்தனார் என்ற புலவரைப்பற்றிக் குறிப்பிடுகின்றார். பறம்பு மலைக்கு தன்மனைவி வேண்மாளுடன் சேரன் செங்குட்டுவன் சென்றான் அவன் தம்பியாகிய இளங்கோ தன் நண்பரும் தமிழ்ப் புலவருமான மதுரைச் சீத்தலைச்சாத்தனார் என்பவருடன் அங்கே சென்றான். அங்குவைத்து மன்னன் செங்குட்டுவனுக்கு கண்ணகி கதையைக் கூறிய சாத்தனாரே அச்சரிதத்தை பாடுமாறு தன் நண்பனான இளங்கோவை வேண்டுகிறார். அதன்படியே இளங்கோவடிகள் இந்தக் கண்ணகியின் வரலாற்றை விரித்துச் சிலப்பதிகாரம். என்னும் தலைசிறந்த முத்தமிழ்க்காப்பியத்தை இயற்றினார். எனவே சாத்தனாரும் இளங்கோவும் நண்பர்களாகவும் சமகாலத்தவராகவும் இருந்திருக்கின்றனர் இருவருக்கும் இக்கதையும் தெரிந்திருக்கின்றது. அந்தவகையில் ஒருவர் சிலப்பதிகாரம் பாட மற்றவர் அதன் தொடர்ச்சியாக மணிமேகலையை பாடியுள்ளார் என்றே கொள்ளக்கிடக்கிறது.

இவற்றை மேலும் உறுதிப்படுத்துவதாக சிலப்பதிகார முடிவிலே "மணிமேகலையோடு உரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம்" என்ற உரைபெற்று சிலப்பதிகாரக்கட்டுரை முடிவு பெறுகின்றது. இதனால் சிலம்புக்கதை தொடர்ந்து மணிமேகலையுடன் முற்றுப் பெறுகிறது என்பது தெளியப்படுகிறது. இதிலிருந்து சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ மூலமாகவே சிலப்பதிகாரத் தொடர்ச்சி மணிமேகலை என்பதை அறியமுடிகிறது.

ஐம்பெருங்காப்பியங்கள் ஒவ்வென்றும் ஏதோ ஒரு வகையில் மதக்கருத்துக்களை தாங்கி வருவனவாகவும் ஏதோவொரு மதத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படுவனவாகவுமே அமைந்திருக்கின்றன. அந்தவகையில் சிலப்பதிகாரத்துள் சைவம் சமணம் என்ற மதங்கள் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. மணிமேகலையில் பௌத்தமதம் செல்வாக்குப் பெற்றிருக்கின்றது. தமிழக்கிய வரலாற்றின் ஆரம்பகாலங்களை நோக்கும்போது சமணசமயத்தின் வீழ்ச்சியே பௌத்தத்தின் முகிழ்ச்சியாக விளைந்திருக்கின்றது. அவ்வாறே பௌத்தசமயம் எழுச்சிபெற்று பிரசார நடவடிக்கைகள் திவிரப்படுத்தப்பட்டு சமணம் வலியிழந்து சமணப் பள்ளிகள் எல்லாம் பௌத்த விகாரைகளாக மாறியகாலத்தில் எழுந்ததே மணிமேகலை எனவே சிலப்பதிகாரத்தை அடுத்து எழுந்த காவியமே மணிமேகலை என்பது துலக்கமாகின்றது.

சிலப்பதிகார ஆசிரியர் தன் இலக்கியத்தில் மதுரைக் காண்டம் புகார் காண்டத்துடனே தான் எடுத்துக்கொண்ட கதையை கூறி முடித்து விடுகின்றார். முடியுடை மூவேந்தரையும் பாடவந்த இக்காவியம் சோழன், பாண்டியன் பற்றிக் மூவரைக் காண்டத்திலும், புகார்காண்டத்திலும் கூறிவிட்டது ஆனால் சேரனின் புகழ் கூறப்படவில்லை. சேரமன்னர் கோயில் எடுத்த வரலாற்றைக் கூறுவது வஞ்சிக்காண்டம் எனவே சேரமன்னனின் புகழைப்பாட வேண்டும் என்பதற்காக சிலப்பதிகாரத்தின் பின்னர் பாடப்பட்டு சிலப்பதிகாரத்தோடு பின்னாளில் சேர்க்கப்பட்டதே வஞ்சிக்காண்டம் என அறிஞர்கள் பலர் கருதுகின்றனர். இவ்வாறு சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக வஞ்சிக்காண்டம் பாடியதுபோல வஞ்சிக்காண்டத்தின் தொடர்ச்சியாக மணிமேகலை பாடப்பட்டது என்றும் கூறமுடிகின்றது.

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்களா அல்லது தனிக் காப்பியங்களா என்ற கருத்துவேறுபாடுகள் இடம்பெறுகின்ற வேளையில் இவை இரட்டைக் காப்பியங்களே என்பதற்கான நிறுவல்கள் பொருத்தப்பாடடைந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இவ்வேளையில் இவை இரண்டும் காவியமே இல்லை என்ற கருத்துக்கள் இடங்கொள்வதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இளங்கோவடிகள் தன் சிலப்பதிகாரத்தை தானே காவியம் என்று கருதவில்லை தொடர்நிலைச் செய்யுள் என்றே கருதுகின்றார்.

"உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்

ஊழ்வினைப்பயன்வந்து உகுக்கும்"

என்ற அடிகள் மூலமாக இது துலக்கமாகின்றது. இவ்வாறே பிற்காலத்தவர் இந்நூலை உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள் என்று அழைப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். மணிமேகலையில் காவியம் என்ற சொல் இடம்பெற்றாலும் தண்டியாசிரியர் கூறிய காவிய இலக்கணத்திற்குள் அது உட்பட்டு அமையவில்லை.

தண்டியாசிரியர் கூறும் காவிய இலக்கணங்களுள் ஒன்றான கடவுள் வாழ்த்து சிலப்பதிகாரத்தில் இல்லை இயற்கையைத் தெய்வமாகக் கூறப்படுவதால் கடவுள் வாழ்த்து உண்டு என்று அழுத்திக் கூறப்பட்டாலும் அவை ஏற்றுக்கொள்ளக்கூடியனவல்ல இந்நூலில் பொருள்பற்றியும், இன்பம் பற்றியும் கூறப்படுகின்றது. மீதி இரண்டும் அதாவது அறமும் வீடும் மணிமேகலையில் கூறப்படுகின்றது எனவே இரண்டையும் சேர்த்தால் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் விபரிக்கும் பெருங்காப்பியமாக கொள்ளமுடியும் இதனை அடியார்க்கு நல்லார் எடுத்துரைக்கிறார்.

வடமொழிக்காவிய இலக்கணத்தைத் தழுவி தண்டியாசிரியர் தமிழ் மொழியில் எழுதிய தண்டியலங்காரம் கி.பி 7ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் முன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல்கள் இவ்வாறு இவை முந்தி எழுந்தமையால் பிந்தி எழுந்த காவிய இலக்கணத்தைப் பேணி எழுந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பொருத்தமானதில்லை மேலும் ஏனைய காவியங்கள் எல்லாம் வடமொழிக்கதையைக்கூற இவை இரண்டும் தமிழ்நாட்டு மண்வாசனைக்குட்பட்டு தமிழ்மொழி கலாசரங்களின் இடைத்தாக்கத்தில் முகிழ்ந்த கதையைக் கூறியதால் தமிழார்வலர்கள் இவற்றையும் காவிய வரிசையில் சேர்த்திருக்கிறார்கள்.

எவை எவ்வாறு இருப்பினும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்களேயாகும். கதைத்தொடர்ச்சி ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு செல்வதாக பல ஆதாரங்கள் காட்சிப்படுத்துகின்றன. அனுமானிக்க வைக்கின்றன;. பாத்திரப் படைப்பிலும் ஒற்றுமைகள் நிலவுகின்றன. சிலப்பதிகாரத்தில் இடம் பெறும் பாத்திரங்கள் மணிமேகலையிலும் இடம்பெறும் இரண்டிலும் பெரும்பாலும் ஆசிரியப்பா அமைந்துள்ளது. இவ்வாறு கருவாலும் பொருளாலும் அமைப்பாலும் இவை இரண்டும் ஒத்து அமைவதால் இவற்றை இரட்டைக் காப்பியம் என்பர். காலத்தால் வேறுபட்டதாயினும் பேராசிரியர் பொன் சக்திவேல், தமிழ்நாணயத்தின் ஒருபக்கம் சிலம்பு என்றால் அதன் மறுபக்கம் மேகலை என்று கூறியது போல கதைத்தொடர்பினால் உண்மையில் இவை இரட்டைக்காப்பியமேயாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக