சங்க மருவிய கால இலக்கியங்களின் பண்புகளைத் துலக்குக?
முடியுடைய வேந்தரின் ஆட்சி நிலை தளர வடக்கேயிருந்து வந்த களப்பிரரின் கொடுங்கோலாட்சி தமிழகத்தில் நிலைபெற்றது. தமிழகத்தின் தனித்துவமான பண்பாடுகள் இழந்து வாழ்க்கை எப்படி வாழவேண்டும் என்று அறிவுரை கூறும் நிலைக்கு மாறிவிட்ட நிலையில் இலக்கியப் பண்புகளும் மரபுவழியில் இருந்து வேறுபடத் தொடங்கின.
1. பொருள் மரபு:
1.1 அறநூல்களின் தோற்றம் :
சங்க மருவிய கால இலக்கியங்கள் பெரும்பாலும் அறநூற் கருத்துக்களைக் கொண்டிருந்தன. பொதுவாக அறநூல்கள் நீதியையும் வாழ்க்கை ஒழுக்கங்களையும் ஒழுங்குபடுத்திக் கூறுவன. மனுதர்மத்தில் விதித்தன செய்தலும், விலக்குவன ஒழித்தலும் அறம் என்று கூறப்படும். கீழ்க் கணக்கு நூல்களில் பதினொரு நூல்கள் ஒழுக்க நூல்களாக காணப்பட்டன. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கதைகளினூடாக அறக் கருத்துக்களைக் கூறின. இதனால்தான் தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் இக்காலத்தை அறநெறிக் காலம் என்று கூறுவர்.
1.2 சமயச் சார்பான இலக்கியங்கள் :
சமய நெறி முதன்முதலாக சங்க மருவிய காலத்திலேயே இடம்பெறுகின்றது. சமணரும் பௌத்தரும் தமிழ் மொழியைக் கற்று, அதனூடாக தம் சமயக் கருத்துக்களை பரப்புவதில் தீவிரமாக உழைத்தனர். இதன் விளைவாகவே இக் காலத்தில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் எழுந்தன. மணிமேகலை முற்றிலும் சமயப் பிரசார நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
1.3 அகப்பொருள் பற்றிய நூல்கள் :
எந்த ஒரு காலப்பகுதியிலும் அதற்கு முந்திய காலப் பகுதியிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நூல்கள் தோன்றுவ தில்லை. இவ்வகையில் சங்ககால அகப்பொருள் மரபை பின்பற்றியதாக இக்காலத்தில் ஆறு நூல்கள் தோன்றின. ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது. திணைமாலை நூற்றைம்பது, கார் நாற்பது, கைந்நிலை என்பன அகப்பொருள் நூலாகும். சங்க கால அகப்பொருள் மரபிற்கு உதாரணமாக ஐந்திணை ஐம்பதில் வரும் இச் செய்யுளைக் குறிப்பிடலாம்.
'சுனைவாய் சிறுநீரை எய்தாது என்று எண்ணிப்
பிணைமான் இனிது உண்ணவேண்டி கலைமான்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி"
1.4 புறப்பொருள் மரபு :
சேரமான் கணைக்காலிரும்பொறைக்கும் சோழன் கோச்செங்கணானுக்கும் இடையே நடைபெற்ற போரில் தோல்வியடைந்த சேரனை சிறைமீட்க பொய்கையார் பாடிய களவழி நாற்பது என்னும் நூல் புறப்பொருள் பற்றியதாகும். இதன் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் களம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. போர்க்கள இயல்புகள், போரின் கொடுமை, நாற்படையின் திறம், சோழனின் வீரம் போன்ற செய்திகளை அறியலாம். இந்நூலே பரணிப் பிரபந்தத்தின் தோற்றத்திற்கான அடிப்படை என்றும் கூறுவர்.
1.5 பக்திப் பாடல்கள் :
சங்க மருவிய காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்த காரைக் காலம்மையாரும் முதலாழ்வார்களும் பாடிய பாடல்கள் தமிழ் இலக்கிய வரலாற்றின் பக்தி இலக்கிய மரபை தோற்றுவித்தது. காரைக்காலம்மையார் சிவனை முழுமுதற் கடவுளாகவும் முதலாழ்வார்கள் திருமாலை முழுமுதற் கடவுளாகவும் கொண்டு பாடிய பாடல்களே பல்லவர்கால பக்தி இலக்கிய மரபிற்கு ஓர் விடிவெள்ளியாக அமைந்திருந்தன.
2. செய்யுள் மரபு :
2.1 இலக்கிய வடிவம்:
சங்க கால இலக்கியங்கள் ஒரு பொருளை ஒரு பாடலில் பாடிய தனிச் செய்யுள் மரபைக் கொண்டிருந்தன. சங்க மருவிய காலச் செய்யுட்கள் ஒரு பொருளை பல செய்யுட்களில் பாடும் தொடர்நிலைச் செய்யுள் மரபாகும்.
சங்க மருவிய காலத்தில் முதன்முதலாக காப்பியங்கள் தோன்றின. இரட்டைக் காப்பியங்கள் என்றழைக்கப்படும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இக்காலத்தில் தோன்றின. பெண்ணிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் இவை தோன்றின.
சிற்றிலக்கியங்கள்:
பிரபந்தம் என்ற சொல் தமிழில் சிற்றிலக்கியங்களைக் குறிக்கும். பெருங்காப்பியம், சிறுகாப்பியம், புராணங்கள் தவிர்ந்த எல்லா இலக்கியங்களையும் சிற்றிலக்கியம் என்பர். சங்க மருவிய காலத்தில் அந்தாதி, மணிமாலை, பதிகம் முதலான சிற்றிலக்கிய வடிவங்கள் தோன்றியமை குறிப்பிடத் தக்கது.
2.2 யாப்பு வடிவம்:
சங்க மருவிய காலம் அறநூற் காலமாக இருந்தமையால் இக் காலத்தில் வெண்பா யாப்பு பெரு வழக்காக இருந்தது. சங்கப் பாடல்களை உணவு என்று சொன்னால் அறநூல்களை மருந்து என குறிப்பிடவேண்டும். அதற்கென ஒரு செறிவான வடிவம் அமைந்து கருத்துக்களில் அழுத்தம் தொனிக்க வேண்டும். செப்பல் ஓசையுடையதாக வினாவிற்கு இறுக்கும் விடையைப் போல அமையும் வெண்பா யாப்பே அறக்கருத்துக் களைக் கூற பொருத்தமாக இருந்தது.
சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட அகவல் யாப்பு முற்றாகக் கைவிடப்படவில்லை. சமய நெறிகளை கூறவந்த சிலம்பும் மேகலையும் அகவல் யாப்பிலேயே பாடப்பட்டன.
யாப்பு அடிப்படையில் சங்க மருவிய காலம் யாப்பு பரிசோதனைக் காலமாகவும் அமைகின்றது. காரைக்காலம்மை யார் தான் பெற்ற தெய்வீக அனுபவங்களை வெண்பா யாப்பில் பாடியபோது அது பொருத்தமற்றது என அறிந்துகொண்டார். பின்னர் திருவிரட்டை மணிமாலையை கட்டளைக் கலித்துறை யில் பாடியும் அதுவும் பொருத்தமற்றது எனக்கொண்டு திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தை விருத்தப்பாவில் பாடியமை குறிப்பிடத்தக்கது. இவ்வழியில் பக்தி மரபைப் பாட விருத்தமே சிறந்தது என பல்லவர் கால இலக்கியத்திற்கும் வழிகாட்டியிருந்தார்.
3. மொழி மரபு :
சங்க கால இலக்கியங்களை விட சங்க மருவிய கால இலக்கியங்களில் மொழி நடை நெகிழ்ச்சித் தன்மை கொண்ட தாக காணப்பட்டது. எனினும் வடமொழிச் சார்பு, வடசொற் பயன்பாடு தமிழ் இலக்கியங்களில் இடம்பெறத் தொடங்கியது எனலாம்.
