பாரதியார் கவிதைகள் அறிமுகம்
(1882 - 1921)
நவீன தமிழ்க் கவிதையின் பிதாமகன் என்று அழைக்கப் படுபவர். கவிதைக்கு அவர் கொடுத்த வரைவிலக்கணம்
'சுவை புதிது பொருள் புதிது
வளம் புதிது சொல் புதிது
சோதி மிக்க நவகவிதை எந்நாளும்
அழியாத மகா கவிதை
என்பதாகும். எளிய பதம், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொதுமக்கள் விரும்பும் மெட்டு என கவிதையை புதிய வழியில் நடக்கச் செய்தவர்.
நாட்டு விடுதலை, அறியாமை, நாடு,
மொழி, இனம்,
சமூக ஏற்றத்தாழ்வு, பொதுவுடைமை போன்ற பல துறைகளில் கவிதை எழுதியவர். அவர் பாடாத துறையில்லை; பாடுபடாத துறையு மில்லை; எழுதாத பிரச்சினையுமில்லை. இன்றைய சமூகப் பிரச்சினை களுக்கான தீர்வு பாரதியாரின் படைப்புக்களிலே உண்டு. இதனால்தான் இவரை மகாகவி, தீர்க்க தரிசனக் கவி, நவயுகக் கவி, புதுமைக் கவி, புரட்சிக் கவி, மறுமலர்ச்சிக் கவி, தேசியக் கவி, உலக மகாகவி என்றெல்லாம் போற்றுகின்றனர்.
பெருங்காப்பிய மரபை உடைத்து குறுங் காப்பியம் என்னும் நவீன காப்பிய மரபைத் தோற்றுவித்தவன். கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய முப்பெரும் பாடல்களும் பாரதியை நினைவுகூர்ந்து கொண்டே இருக்கும்.
''பாலுஞ் சோறும் வீட்டிற்கு உறுதி
பாரதி பாடல் நாட்டுக்கு உறுதி" என்பதை நினைவிற் கொள்க.
கண்ணன் பாட்டு
கண்ணன் பாட்டு தொடர்பாக தமிழறிஞர்களிடையே மூன்று விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.
i. மகாபாரதத்திலும் வைணவ புராண இலக்கிய மரபிலும் வரும் கிருஷ்ணனே கண்ணன் பாட்டில் வருபவன்.
ii. கண்ணன் பாட்டில் வரும் கண்ணன் கவிஞருடைய கற்பளை யில் முகிழ்ந்த உருவம்.
iii. கவிஞரது வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டு அவருக்கு தார்மீக பலமும் தெளிவும் அளித்த பெருமகன் ஒருவரின் பிரதி விம்பமே கண்ணன்.
பாமாலை சூட்டாத கவிகள் அருமை. கண்ணன் என்ற கவர்ச்சி பாரத நாட்டின் குல தெய்வமாகிவிட்ட கண்ணனுக்கு யுருவத்திற்கு பாரதியும் ஒரு கற்பனை மாலை சூட்டியிருக்கிறார் என்றெல்லாம் பலர் கூறினும் எல்லாவற்றுக்கும் சிகரம் வழங்குவது கண்ணனின் காதல் காட்சிகளே.
சாதாரண ஆண் பெண் காதல் நெகிழ்ச்சியில் பல்வேறு கவசங்களைக் கையாண்டு தெவிட்டாத தேக சுகத்தைப் பாடும் அந்தக் கவிதையின் கற்பனை தமிழ் இலக்கிய அகத்துறை காட்சிகளிலும் பக்தி இலக்கியப் பண்புகளிலும் எந்நாளும் அறியாத மகா கவிதை.
கண்ணம்மா என் காதலி அவரது பரபக்தி அனுபவத்தின் முதிர்ச்சி என்றே கொள்ளவேண்டும். தலைவன் பால் தோழியை தூதுவிடுதல், சிறைப் புறத்திருத்தல், நாணிக் கண் புதைத்தல், குறிப்பிடம் தவறுதல் ஆகிய அகப்பொருள் இலக்கியத் துறைகளை பாரதியார் கண்ணன் பாட்டில் நன்றாகவே பயன்படுத்தியுள்ளார்.
முகத்திரை களைதல் என்ற புதியதோர் துறையை அகப்பொருளில் பாரதி பயன்படுத்தியிருக்கின்றான். தலைவியின் முகத்திரையை தானே களைந்து பாரதியார் தன்னுடைய பெண்ணுரிமைக் கொள்கையை பக்திநெறி தழுவிய கண்ணன் பாட்டில் புகுத்தியுள்ளார். தேசிய ஒருமைப்பாடு, பெண்ணுரிமை, சோசலிசம் ஆகிய சமுதாயக் கருத்துக்களும் கண்ணன் பாட்டில் இடம்பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக