கடல் புறா பாகம்
-01
அத்தியாயம் - 14
அழைப்பு
பாலூர் பெருந்துறையின் நீதி மண்டபத்திற்குள் பட்டப் பகலில் நுழைந்து தன்னையும் மற்றத் தமிழரையும் சிறைமீட்ட அநபாயச் சோழனின் அபரிமிதத் துணிவை எண்ணி எண்ணி வியந்தும் அந்த அமானுஷ்யமான சாதனையை அவன் எப்படிச் செய்ய முடிந்தது என்பதன் மர்மத்தை அறிய முடியாததால் குழம்பியும், அநபாய னுடன் வந்த கடாரத்துக் கட்டழகி வில்லைப் பிடித்து நின்ற அழகையும், அழகெலாம் அசைய அசைய அவள் புரவியில் வந்த விந்தையையும் நினைத்ததால் ஆனந்தத் துக்கு அடிமைப்பட்டும், பலவித உணர்ச்சிகளுக்கு இலக் காகி ஏதும் பேசாமல் நகரத்தின் தெற்குக் கோடியில் கோதாவரியின் கரையருகே இருந்த குடிசைக் கூட்டத்துக்கு வந்து சற்றுச் சுரணையடைந்த இளையபல்லவன் அங்கு மறைந்து தங்க இடமேதும் இல்லாததைக் கண்டு, இங்கு எதற்காக வந்தோம்?' என்று ஆச்சரியப்பட்டு அதைப்பற்றி மாத்திரம் இரண்டொரு கேள்விகள் அநபாயனைக் கேட்டான். அந்தக் கேள்விகளுக்கு, "மறைய வேண்டிய இடத்துக்கு இரவில்தான் செல்ல முடியும் என்று அநபாயன் பதில் சொன்ன பிறகு குடிசைகளுக்கு அப்பா லிருந்த தோப்புக்குள் தன்னையும், காஞ்சனா தேவியையும் அழைத்துச் சென்று ஒரு தனிக் குடிசையில் தங்களைத் தங்க வைத்ததும், தப்புவதற்கு வழி சொல்ல இரவில் ஒருவர் வருவார் என்று கூறியதும் மிகமிக விந்தையா யிருந்தது இளைய பல்லவனுக்கு. அது தவிர, குடிசைக்குள் நுழையு முன்பாக ஆகாயத்தை நோக்கிக் கண்களை உயர்த்தி அநபாயன் ஆராய்ந்ததற்கும் காரணம் புரியாத கருணாகர பல்லவன் குடிசைக்குள் அநபாயன் நுழைந்ததும் முகத்தில் பல சிந்தனைகள் பாய்ந்தோட அவற்றால் சலனப்பட்ட கண்களுடன் அவனை ஏறெடுத்து நோக்கினான்.
கருணாகர பல்லவனின் கண்களில் தோய்ந்து கிடந்த சிந்தனைக் கடலின் ஆழத்தைப் புரிந்துகொண்ட அநபாய சோழன் சற்றே புன்முறுவல் செய்ததன்றி, கருணாகரா! உன் உள்ளம் குழம்பிக் கிடக்கிறதை உன் கண்கள் காட்டு கின்றன. அப்படியென்ன குழப்பம் உனக்கு? என்று கேட்கவும் செய்தான்.
அந்தக் கேள்வி பெரும் விசித்திரமாயிருந்தது இளைய பல்லவனுக்கு. பிற்காலத்தில் சரித்திரம் சொன்னாலும் நம்பத்தகாத அளவுக்குக் காரியங்களை அன்று சாதித்து, தன் மனத்தை மட்டுமின்றி, அனந்தவர்மன் இன்னும் ஆயிரக்கணக்கான பாலூர்ப் பெருமக்கள் முதலிய பலர் புத்தியையும் குழப்பிவிட்ட அநபாயன், அன்று செய்த தெல்லாம் சகஜமாக நடக்கக்கூடிய பணிபோல் பாவித் துப் பேசியதைக் கண்ட இளையபல்லவன் மிதமிஞ்சிய வியப்படைந்ததன்றி, "எனக்கு மட்டுமல்ல குழப்பம் அநபாயரே! உங்கள் இன்றைய செய்கை கலிங்கத்தையே குழப்பியிருக்கும். எல்லோருக்கும் பிரமிப்பையும் அளித் 'திருக்கும்" என்றும் கூறினான்.
அநபாயனின் உதடுகளில் விரிந்த புன்னகை, புலியின் கண்களைப் போல் பளிச்சிட்ட அவன் விழிகளிலும் துள்ளி விளையாடியது. அந்தப் புன்னகையைத் தொடர்ந்து வந்த பேச்சிலும் ஓர் அலட்சியம் இருக்கத்தான் செய்தது. இதில் குழப்பத்திற்கோ பிரமிப்பிற்கோ என்ன இருக்கிறது. கருணாகரா ? நமது மக்கள் அநீதமாக வதைக்கப்படு கிறார்கள். அவர்களைக் காப்பது எனது கடமை. என் ஆருயிர்த் தோழனைத் தீர்த்துக் கட்ட அனந்தவர்மனும் பீமனும் ஏற்பாடு செய்தார்கள். அந்த ஏற்பாட்டைக் குலைப் பது என் கடமை.
சோழர்கள் உதவி நாடிக் கடாரத்தின் மன்னனும் இளவரசியும் இந்தத் துறைமுகத்தில் இறங்கி னார்கள். அவர்களைச் சோழ நாடு செல்லாமல் தடை செய்யவும் ஏற்பாடு நடந்தது. அந்த ஏற்பாட்டை உடைப் பது என் கடமை.
இந்தக் கடமைகளைத்தான் செய்தேன். இதில் குழப்பத்திற்கு இடமில்லை. தவிர,
கடமைகள் இன்னும் பூர்த்தியாகவுமில்லை என்றான் அநபாயன், ஏதோ சாதாரண விஷயத்தைச் சொல்லுபவன் போல்.
கருணாகர பல்லவன் கண்கள் அநபாயனை நன்றாக ஆராய்ந்தன. குடிசையின் கூரையைத் தொட்டுவிடுவது போன்ற உயரத்துடனும், மந்தகாசம் தவழும் முகத்துடனும் நின்றிருந்த அவன் கம்பீரம் இளையபல்லவனின் இதயத் தில் பெருமிதத்தை விளைவித்ததென்றால், பெரிய காரியங் களைச் சாதித்த அவன் அவற்றைக் கடமையெனச் சாதா ரணமாகக் கூறியது அந்தப் பெருமிதத்தை ஆயிரம் மடங்கு உயர்த்தவே, இத்தனை சிறந்த கர்ம வீரனைப் பெற்ற தமிழ்த்தாய் சிறப்புடையவள்' என்று தாய்நாட்டையும் வாழ்த்தினான் கருணாகர பல்லவன். அப்படி இதயத் துக்குள் வாழ்த்திக்கொண்டு சொன்னான். கடமைகளை நிறைவேற்றுவது காவலன் கடமைதான். ஆனால் அதை நிறைவேற்றிய முறைதான் குழப்பத்தைத் தருகிறது என்று.
"குழப்பமென்ன அதில்!" அநபாயன் கேள்வி அனாயாசமாக எழுந்தது.
"பட்டப்பகலில் நீதி மண்டபத்திற்கு வந்தீர்கள்."
"விசாரணை பட்டப்பகலில்தானே நடந்தது?
உண்மை. ஆனால் நீதி மண்டபத்திற்குள் உங்களை நான் எதிர்பார்க்கவில்லை.
வேறு எங்கு எதிர்பார்த்தாய்?
"சிறையிலிருந்து நீதி மண்டபம் செல்லும்போது அல்லது நீதி மண்டபத்திலிருந்து கொலைக்களம் போகும் போது."
ஏன் அப்படி?"
"சிறையில் காவல் அதிகம். அங்கிருந்து எங்களை மீட்க முடியாது. நீதி மண்டபத்திலும் காவல் அதிகம். அங்கிருந்தும் எங்களை மீட்க முடியாது. ஆகவே வெளியில் தான் மீட்பீர்கள் என்று நினைத்தேன்."
இதற்குப் பதில் சொல்லு முன்பு மெள்ள நகைத்தான் அநபாயன். அவன் நகைப்பைக் கண்ட இளையபல்ல வன் சற்றுக் கோபத்துடனேயே கேட்டான்: ஏன் நகைக் கிறீர்கள் அநபாயரே?
மீண்டும் நகைத்த அநபாயன், கருணாகரா! கலிங்க மன்ன்ர் இருவரும் இப்படியே நடந்துகொண்டு, சோழ நாடு கலிங்கத்தை ஒரு நாள் வெற்றி கொள்ள நேர்ந்தால், உன்னைத்தான் நான் கலிங்கத்தின் அரசபீடத்தில் உட்கார வைப்பேன் என்று பதில் கூறினான்.
ஏன் அத்தனை பெரிய பதவி எனக்கு?
உன் கருத்து கலிங்க மன்னர்கள் கருத்தை ஒத்திருக் கிறது. ஆகவே கலிங்கத்தை ஆள்வதற்கு அவர்களுக்கு அடுத்தபடி நீதான் தகுதி!
அப்படியா? இளையபல்லவன் குரலில் கோபம் மண்டிக் கிடந்தது.
அந்தக் கோபத்தை அதிகரிக்க இஷ்டப்பட்டவன் போல் மீண்டும் சொன்னான் அநபாயன்: நீ நினைத்தது போல்தான் பீமனும் நினைத்தான், அனந்தவர்மனும் நினைத்தான்.
அப்படி நினைப்பதுதானே இயல்பு? இளைய பல்லவன் குரலில் உக்கிரம் ஏறிக் கொண்டிருந்தது.
அதைக் கவனிக்காமலே விளக்க முற்பட்ட அநபாயன், "இயல்பு அதுதான் கருணாகரா, அந்த இயல்பை உணர்ந்து அதை மீறி நடந்ததால்தான் உங்களை மீட்க முடிந்தது. காவலிருக்குமிடத்தில் அசிரத்தையிருப்பது இயல்பு. அந்த அசிரத்தையை நான் பயன்படுத்திக் கொண்டேன். நான்கு சுவர்கள் தங்களுக்குப் பெரும் பாதுகாப்பு என்று நினைப்பது மனித இயல்பு. ஆகவே சிறைக் கூடத்திலும் நீதிக் கூடத்திலும் நான் துணிவுடன் நுழையமாட்டேன் என்று அனந்தவர்மனும் பீமனும் நினைத்தார்கள். ஆகை யால் சிறைச்சாலையில் சிரத்தையற்று இருந்தார்கள். அங் கிருந்து நான் தப்பினேன். நீதி மண்டபத்தில் அசிரத்தையா யிருந்தார்கள். அங்கிருந்து உன்னைத் தப்புவித்தேன். பாலூர்ப் பெருந்துறையின் மக்கள் தொகையில் மூன்றி லொரு பங்கு தமிழர்கள். அவர்களில் பெரும்பாலோர் வணிகர்கள். சிலர் படைப்பிரிவிலுமிருக்கிறார்கள். சிலர் சுங்கச் சாவடியிலிருக்கிறார்கள். தமிழர்களைத் தவிர சில வேங்கி நாட்டாரும் படையில் சேர்ந்திருக்கிறார்கள். இந்தக் கோதாவரிக்கு அக்கறையிலிருக்கும் வேங்கி நாட்டு அரியணையில் இன்று விஜயாதித்தன் அமர்ந்திருக்கலாம். ஆனால் அதில் அமர வேண்டியவன் நானாகையால் இங்குள்ள வேங்கி நாட்டவரில் பலர் என்னிடம் பக்தி கொண்டவர்கள். ஆகவே பாலூரில் கலிங்க மன்னர்களை ஆதரிப்பவர்களை விட என்னை ஆதரிப்பவர்கள் தொகை அதிகம். ஜனத்தொகையில் மூன்றிலிரண்டு பங்கான வேங்கி நாட்டவரையும் தமிழரையும் ஒதுக்கிவிட்டால் மற்றவர் சிறுபான்மை. தவிர என்றாவது ஒருநாள் வேங்கி நாட்டை என் வசப்படுத்த வேண்டுமானால் இங்குள்ள வேங்கி நாட்டவர், தமிழர் ஆகிய இருபாலர் உதவியும் எனக்குத் தேவையாயிருக்கும். அதனால்தான் அடிக்கடி சோழ நாட்டிலிருந்து இங்கு வருகிறேன். இங்கு வந்து போதிய பக்கபலத்தையும் திரட்டியிருக்கிறேன். இந்த அரசாங்கத்தின் ஒவ்வோர் இடத்திலும் என்னைச் சேர்ந்த வர்கள் இருக்கிறார்கள். சிலர் வணிகர், சிலர் படை வீரர், சிலர் மாலுமிகள். ஆனால் எல்லோரும் என் ஒற்றர்கள், பணத்தாலல்ல. என்னிடம் பக்தியால் கட்டுப்பட்டவர்கள். ஆகையால்தான் அவசியமான வீரர்களைத் திரட்டிக் கொண்டு உங்களை விடுவிக்க முடிந்தது... என்று சொல்லிக் கொண்டு போனவனை இடைமறித்துக் கேட்டான் இளையபல்லவன், அப்படியானால் நீதி மண்டபத்தைச் சுற்றிக் காவல் அதிகமில்லையா?"
இருந்தது. ஆனால் இருந்தவர் கலிங்கப் படையி லுள்ள வேங்கி, தமிழ்நாட்டு வீரர்கள். அவர்களைக் காவலுக்கு அனுப்ப முன்னதாக ஏற்பாடு செய்தேன் என்றான் அநபாயன் பதிலுக்கு. காவலரை அனுப்ப நீங்கள் ஏற்பாடு செய்தீர்களா இளையபல்லவன் வியப்புடன் வினவினான்.
"காவலரை அனுப்பும் அதிகாரம் படைத்தவர், சேனாதிபதியைப்போல் அத்தனை அதிகாரம் படைத்த வரல்ல. இருப்பினும் ஒரு தமிழர் அந்த வேலை பார்க் கிறார் என்று சுட்டிக் காட்டினான் அநபாயன்.
பாலூர்ப் பெருந்துறை உண்மையில் அநபாயச் சோழன் பாசறை என்பதை அறிந்துகொண்ட கருணாகர பல்லவன், அநபாயன் சிறையிலிருந்து தப்ப முடிந்ததற்கும் தூதுப் புறா மூலம் செய்தியனுப்ப முடிந்ததற்கும் காரணங் களைப் புரிந்துகொண்டான். நீதி மண்டபத்தைச் சுற்றி நின்ற காவலரே தாங்கள் தப்புவதற்கு உதவியாயிருந்ததால் தான்,
தங்களைப் படையினர் யாரும் பின்தொடரவில்லை என்பதையும் உணர்ந்து கொண்டான். இத்தனை வசதிகளி ருந்தாலும் அனந்தவர்மனும் பீமனும் கலிங்க வீரர்களைக் கொண்டு தங்களைப் பிடிக்கக் கண்டிப்பாய் முயல்வார் களென்பதையும், அடுத்த சில நாழிகைகளில் பாலூர் நகரம் பூராவும் பீமனுடைய வீரர்களால் சோதனையிடப் படுமென்பதையும் சந்தேகமற அறிந்தானாகையால் அநபாயனை நோக்கிக் கேட்டான்: நமக்கு இங்கு என்ன துணையிருந்தாலும் கலிங்க அரசாங்கத்தின் பலம் நம்மைச் சும்மா விடுமா?"
"விடாது கருணாகரா! விடாது. அவசியமானால் பாலூருக்கு வடக்கேயுள்ள கலிங்கர் படைப் பிரிவும் இங்கே வரவழைக்கப்படும். ஆகையால்தான் இந்தத் தோப்புக்கு உங்களை அழைத்து வந்தேன். இங்கு உங்களை யாரும் தேடமாட்டார்கள். இங்கு இருப்பவர்களெல்லாம் தமிழகத்துப் பரதவர். இங்கு சோதனைக்கு வீரர்கள் வந்தால் உங்களை ஒளித்து வைக்கும் சக்தி இவர்களுக் கிருக்கிறது. இன்றிரவு எப்படியும் இந்தப் பாலூரை விட்டுக் கிளம்பிவிடத் தீர்மானித்திருக்கிறேன். அதற்கு வழி கண்டு பிடிக்க ஒருவரை நியமித்திருக்கிறேன். அவர் வருவார் என்றான்.
யாரவர்? என்று கேட்டான் கருணாகர பல்லவன். "வெளி நாட்டவர். உனக்குத் தெரியாது அவரை.
வந்த பின் அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அவர் வந்த பின்தான் நாம் வேறிடத்திற்குச் செல்ல வேண்டும்."
"எது அந்த இடம்?"
"அதையும் அவரே சொல்லுவார்."
அதைப்பற்றி மேலும் ஏதோ கேட்க முயன்ற கருணா கரனை,
'பொறு கருணாகரா!" என்று ஒரே வார்த்தையில் பேச முடியாமல் அடித்த அநபாயன், ஏதேதோ யோசனை
களில் நீண்ட நேரம் ஆழ்ந்தான். பிறகு எதையோ திடீரென நினைத்துக்கொண்டு எழுந்து, "கருணாகரா! இன்னும் சில நாழிகைகளில் மாலை நெருங்கும். அதற்குள் நான் ஒரு முக்கிய அலுவலைக் கவனித்துக்கொண்டு வருகிறேன் என்று சொல்லி, குடிசையை விட்டுப் புறப்பட்டு, அந்த அடர்த்தியான தோப்புக்குள் புகுந்து சில விநாடிகளில் மறைந்தான்.
அநபாயன் போக்கு ஒவ்வொன்றும் விசித்திரமா யிருந்தது இளையபல்லவனுக்கு. எதிரிகள் நாட்டில் வந்து அநபாயன் இஷ்டப்படித் திரிவதும் திடீரெனத் தோன்று வதும் மறைவதும் பெரும் வியப்பாயிருந்தது அவனுக்கு. 'பெரிய சாம்ராஜ்யத்தின் அரியணையில் இவரல்லவா அமர வேண்டும்?' என்று எண்ணினான். வீரராஜேந்திர ருக்குப் பதில், அநபாயர் மட்டும் சோழ அரியணையில் இருந்தால், தமிழர் பாலூரில் படுத்தப்பட்ட பாட்டுக்குக் கலிங்கம் படு தூளாக்கப்படும் என்பதை உணர்ந்தான். அத்தகைய ஒரு வசதி சோழ நாட்டுக்கு இல்லாததைக் குறித்துச் சிறிது வருந்தவும் செய்தான். வீரராஜேந்திரர் மகாவீரரானாலும் அவர் சமாதானத்தையே விரும்புபவர் என்பதையும், பிறர் வீணாகப் போரிட வந்த காரணத்தா லேயே அவர் பெரும் போர்களில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடினாரென்பதையும் உணர்ந்திருந்த இளையபல்லவன், போர் விருப்பமுள்ள அநபாயன் அரியணையில் இருந் திருந்தால் சோழ சாம்ராஜ்யம் எத்தனை விரிவடையும் என்று சிறிது பேராசையும் கொண்டான். இருப்பினும் அந்த எண்ணத்தை அடுத்த விநாடி அறுத்தெறிந்தான். 'சேச்சே! போரில் விளைவது நாசம். அது உதவவே உதவாது' என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.
இப்படி எண்ணச் சூழலில் புதைந்து கிடந்த இருத யத்தை உடைத்தன அந்தக் குடிசையின் ஒரு மூலையிலிருந்து எழுந்த, "அப்பா என்ன யோசனை! என்ன யோசனை!" என்று ஏளனச் சொற்கள். குயில் பேசத் துவங்கியது போல் எழுந்த குரலால் நனவுலகத்துக்கு வந்த கருணாகர பல்லவன், அப்பொழுதுதான் 'காஞ்சனா தேவியும் தானும் தனிமையிலிருப்பதை' உணர்ந்து குடிசை யின் மூலைக்குக் கண்களைத் திருப்பினான். வில்லையும் அம்பறாத் தூணியையும் இடைக் கத்தியையும் கழற்றி ஒரு மூலையில் வைத்துவிட்டு செவ்விய இதழ்களில் தவழ்ந்த இளநகையுடனும் முழந்தாள்களைக் கைகளால் சுற்றிக் கட்டிக் கொண்டாலும் மறையாத மன்மதாகாரத்துடனும் காட்சியளித்த காஞ்சனாதேவியைக் கண்ட கருணாகர பல்லவன் ஒரு விநாடி மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டான். பிறகு மெள்ளச் சொன்னான்: "மன்னிக்க வேண்டும், நீங்களிருப்பதை மறந்துவிட்டேன் என்று.
"மறந்துவிட நியாயமிருக்கிறது என்று சொல்லி நகைத்தாள் காஞ்சனாதேவி.
"நியாயமில்லை காஞ்சனாதேவி என்று இளைய பல்லவனின் குரல் தன்னைத்தானே கண்டித்துக் கொள்வது போலிருந்தது.
"ஏன் நியாயமில்லை?
"உயிரைக் காப்பாற்றியவர்களை மறப்பது நன்றி கொன்ற செய்கையல்லவா?"
"யார் உயிரைக் காப்பாற்றியது?"
"நீங்கள்தான் என் உயிரைக் காப்பாற்றினீர்கள்!"
"இல்லை இல்லை. அநபாயர் காப்பாற்றினார்."
"சரி... நீங்கள் துணை செய்தீர்கள்."
"அது துணை செய்ததாகாது."
"எப்படி ஆகுமோ?"
"சொற்படி நடந்ததாகும். அநபாயர் செயல் புரிபவர். நாம் கருவிகள், அவரிஷ்டப்படி இயங்குகிறோம். கருவி களைப் பாராட்டுபவர் உலகத்தில் உண்டா?"
அநபாய சோழனைப் பற்றி அவள் கொண்டிருந்த மதிப்பு கருணாகரனுக்கும் இருக்கத்தான் செய்தது. இருந்த போதிலும் அது அவள் வாயால் வந்தது சற்றுப் பொறா மையாகவே இருந்தது இளைய பல்லவனுக்கு. "உண்மை! உண்மை!" என்று அவன் சொன்ன பதிலைக் கேட்ட காஞ்சனாதேவி, அவன் குரலில் உற்சாகமில்லாததைக் கவனித்து அதன் காரணத்தையும் உணர்ந்து சற்று லேசாக நகைக்கவும் செய்தாள்.
அந்த நகைப்பொலி எத்தனையோ இன்பமாகத் தானிருந்தது. இருப்பினும் அநபாயனை அவள் பாராட்டி யதன் காரணமாக அந்த இன்பத்தை அனுபவிக்கச் சக்தி யில்லாதிருந்தது அவன் மனம். ஆகவே மேற்கொண்டு பதிலேதும் சொல்லாமல் தரையில் உட்கார்ந்து நிலத்தில் கண்களை ஓட்டினான். அந்த மௌனம் அளவுக்கு மீறி நிலைத்தது. குடிசையில் அந்த எழிலரசியுடன் தனிமையி லிருந்த சங்கடமும், தன்னைவிட அவள் அநபாயனைச் சிறப்பாக எண்ணிவிட்டாளோ என்ற இதய ஏக்கமும் இளைய பல்லவனைப் பல திசைகளில் இழுத்துக் கொண் டிருந்தாலும் மேலுக்குக் கல்லுப் பிள்ளையாரைப் போல் உட்கார்ந்திருந்தான் அவன்.
அவன் நிலையைப் புரிந்துகொண்ட காஞ்சனாதேவி யின் நிலையும் பெரிதும் சங்கடத்தில்தானிருந்தது. முதல் நாள் அறையில் ஏறிக் குதித்த சமயத்திலே அவனிடம் ஏற்பட்ட ஒரு நல்லெண்ணம் சென்ற இரண்டு நாள்களில் அன்பு என்று சொல்லும் அளவுக்குப் போய்க்கொண் டிருந்ததை அவள் உணர்ந்தாள். அது வெறும் அன்போடு நிற்காமல் உணர்ச்சிகள் அதை அதிகமாக முற்றவிட்டுக்கொண்டிருந்ததை நினைக்க நினைக்க அவள் மதிவதனம் அந்தச் சமயத்தில் வெட்கத்தால் செம்பருத்தியின் நிறத்தை அடைந்தது. அந்த உணர்ச்சிகளிலிருந்து தன்னை விடுவித் துக்கொள்ளப் பேச்சைத் துவக்கிய காஞ்சனாதேவி, "நீங்கள் என்ன பெண்ணா?" என்று மெல்லக் கேட்டாள்.
தலையைக் குனிந்தவாறே அவனும் கேட்டான்.
" ஏன்?"
பின் எதற்காகத் தலையைக் குனிந்துகொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள்?"
"யோசனையிலிருக்கிறேன்.
"யாரைப்பற்றி யோசனை?"
இதற்குப் பதில சொல்லவில்லை அவன்.
'உன்னைப் பற்றித்தான் யோசனை' என்று எப்படிச் சொல்லுவான்? அவன் பதில் சொல்ல முடியாதபடி கேள்வி கேட்டதை அவளும் உணர்ந்து கொண்டாளாதலால், அவள் மேற் கொண்டு கேள்வியும் கேட்கவில்லை, பதிலையும் எதிர் பார்க்கவில்லை. சிறிது நேரம் மௌனமாகவே உட்கார்ந் திருந்தாள். பிறகு எழுந்து குடிசையை விட்டு வெளியே சென்றாள். அவள் காலடி ஓசையைக் கேட்டதும் தலை தூக்கிய கருணாகர பல்லவன் பிரமிப்பில் ஆழ்ந்தான். அவன் கண்களுக்கெதிரே செக்கச் செவேலென்று வழ வழத்துமிருந்த ஆடுசதைகளுடன் இரண்டு கால்கள் நடந்து சென்றன. அவற்றின் கணைக்கால்களில் ஆபரணம் ஏது மில்லாதிருந்ததாலேயே அவற்றின் அழகும் பாதங்களின் அழகும் பன்மடங்கு விகசித்துக் கிடந்ததைக் கண்டன அவன் கண்கள். இளையபல்லவன் காஞ்சனா தேவி போகும் திக்கை நோக்கிச் சென்றான்.
அவள் நடந்த வேகம் அவள் பின்னழகைப் பல மடங்கு அதிகமாக எடுத்துக் காட்டியதைக் கண்ட கருணாகரபல்லவன் மனம் நிலைகுலையத் தொடங்கியது.
அந்த மோகன உருவத்தாள் கோதாவரியின் பிரவாகம் அலை மோதிக் கொண்டிருந்த இடத்தை அடைந்ததும் தன் கொண்டை ஆபரணத்தைக் கழற்றிக் கீழே போட்டு, குழலைப் பிரித்துவிட்டாள். பிறகு கோதாவரியின் புண்ணிய நீரில் இறங்கினாள்.
ஏதோ மந்திரத்தால் இயக்கப்பட்டவன் போல் நடந்து கோதாவரியின் கரையை அடைந்த கருணாகர பல்லவன் நதியில் கழுத்து மட்டும் ஆழ்ந்து கிடந்த அந்த நீர் மோகினியை நோக்கினான். கோதாவரிக்குள்ளிருந்து அப் பொழுதுதான் முளைத்தெழுந்த தாமரையைப் போல் தெரிந்த காஞ்சனாதேவியின் சொர்ண வதனத்தை இருட் டுக்கு முன்பு மிகச் செம்மையுடன் மிளிரும் அந்தி வேளை யின் செவ்விய கிரணங்கள் வருடிக்கொண்டிருந்தன.
சுமார் ஒரு நாழிகைக்குப் பிறகு அவள் ஆற்றிலிருந்து எழுந்து வெளியே வந்தாள். அவள் வெளிவந்த கோலத்தை மலைத்துப் பார்த்துக் கொண்டிருந்த இளைய பல்லவ னுக்கு அருகில் வந்த காஞ்சனாதேவி, "இளைய பல்லவரே! புரவி சவாரி செய்தபோது உடலெல்லாம் புழுதியாகி விட்டது. ஆகவே நீராடினேன். சற்று அப்புறம் இருங்கள். சேலையை உலர்த்திக்கொண்டு வருகிறேன் என்று கூறி விட்டு ஒரு புதரின் மறைவுக்குச் சென்றாள்.
காற்று பலமாயிருந்ததால் அரை நாழிகைக்குள் நன்றாக உலர்ந்துவிட்ட சேலையைக் கட்டிக் கொண்டும் குழலை எடுத்துச் சொருக்குப் போட்டுக் கொண்டும், புதரி லிருந்து வெளிவந்த காஞ்சனாதேவி கரையில் கிடந்த சல்லடத்தையும் கொண்டை ஆபரணத்தையும் எடுத்துக் கொண்டு, "வாருங்கள் என்று அவனை அழைத்துவிட்டு, தோப்புக்குள் முன்னால் நடந்தாள்.
தோப்பில் இருள் நன்றாகக் கவ்விவிட்டது. ஆங்காங் கிருந்த குடிசைகளில் தெரிந்த சிறு விளக்குகளின் அடையாளத்தைக் கொண்டு அவ்விருவரும் நடந்து சென்றார் கள். தோப்பிலிருந்து புஷ்பச் செடிகள் நானாவித புஷ்பங் களை மலரவிட்டு வாசனையை எங்கும் படரவிட்டுக் கொண்டிருந்தன. பக்கத்துச் செடியிலிருந்த புஷ்பக் கொத்து ஒன்றைக் கையில் ஒடித்து எடுத்துக்கொண்ட இளைய பல்லவன் குடிசை வாயிலுக்கு வந்ததும் காஞ்சனாதேவியை நோக்கினான்.
சற்று இருங்கள். விளக்கை ஏற்றுகிறேன் என்று உள்ளேயிருந்து வந்தது அவள் குரல்.
அதைக் கேட்டு வாயிலிலேயே நின்றவன் அடுத்த விநாடி குடிசைக்குள் விளக்கொளி வீசவே உள்ளே நுழைந் தான்.
விளக்குக்கு அருகே நின்று அதைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்த காஞ்சனாதேவி விளக்கை மட்டுமல்ல, அவன் உணர்ச்சிகளையும் தூண்டினாள். அதன் விளை வாகத் துணிவுடன் அணுகி அவள் குழலில் தன் கையி லிருந்த மலர்க்கொத்தைச் செருகினான் இளைய பல்லவன். சிரித்துக்கொண்டு அவள் அவனை நோக்கித் திரும்பினாள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக