அறநூல்கள் பெருந்தொகையாக எழுந்தமைக்கான காரணங்கள்
சங்ககாலத்தை அடுத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறும் காலப்பகுதி சங்கம் மருவிய காலம் ஆகும். கி.பி. 4 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முடியவுள்ள ஏறத்தாழ 300 ஆண்டுகளை உள்ளடக்கியது எனப் பேராசிரியர் வி. செல்வநாயகம் குறிப்பிடுவர்.
சங்கமருவிய காலச் சமுதாயச் சூழ்நிலை அக்காலத்தே அற இலக்கியங்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தன எனலாம். சங்க காலத்தில் நிலவிய குழுமுறை அமைப்புக்களும், அவற்றினது போட்டிகளும் போர்களும் மலிந்த குறுநில மன்னர்களது ஆட்சியிலும், அக்கால சமுதாய நிலையிலும் ஏற்பட்ட திருப்தியின்மையே சங்கம் மருவிய காலத்தில் அரசு என்ற நிறுவனத்தினது தோற்றத்திற்கு வித்திட்டது எனலாம். சங்கம் மருவிய காலத்தில் அரசு என்ற நிறுவனம் உருப்பெறுவதனை அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களான திருக்குறள், நாலடியார், சிலப்பதிகாரம் முதலியன தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. திருக்குறளில் இருபத்தைந்து அதிகாரங்களில் அரசினது தோற்றம், தன்மை, அரசு செயற்பட வேண்டிய முறை என்பன விரிவாகப் பேசப்படுகின்றன.
"படை குடி கூழ் நட்பு அமைச்சு அரன்
இவையாறும் உடையான் அரசருள் ஏறு" என அரசினது தோற்றத்தையும்
"குடி தழீயி கோலோச்சும் மானில மன்னன்
அடி தழீயி நிற்கும் உலகு
எனவும்
"குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்"'
என அரசு செயற்பட வேண்டிய முறையினையும் தெளிவாக விளக்கிய வள்ளுவர் அவ்வாறு அரசு செயற்படாவிட்டால் ஏற்படும் விளைவினை
"அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை."
எனக் குறிப்பிட்டு கொடுங்கோல் ஆட்சியில் குடிமக்கள் துன்பப்பட்டு ஆற்றாது அழும் கண்ணீர் அவ் அரசை அழிக்கும் படையாகும் என வலியுறுத்துகிறார். இவ்வாறே.
"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்"
எனச்
சிலப்பதிகாரமும்
"மண்ணதிர்ப்பின் மன்னவன் கோலதிர்க்கும்""
என்பதனால் நாட்டில் உள்ள குடிமக்கள் கலங்கின் மன்னனின் ஆட்சியும் கலைந்து விடும் என நான்மணிக்கடிகையும் குறிப்பிடுகிறது. அன்பு நிறைந்த படையும் பகைவர் பலர் ஒன்று சேர்ந்து எதிர்ப்பினும் எள்ளளவும் அச்சம் கொள்ளாத அழிக்க இயலாத எயிலரனும், நிறைந்த சிறப்பாகிய பொருள் வைப்பும் ஆகிய மூன்றும் நிலம் ஆளும் அரசர்க்கு சிறந்த உறுப்புக்கள் ஆகும் என்பதனை
"பத்திமை சான்ற படையும் பலர் தொகினும்
எத்துனையும் அஞ்சா எயிலரனும் - வைத்தமைந்த
எண்ணின் உலவா விரு நிதியும் இம்மூன்றும்
மண்ணாளும் வேந்தரக் குறுப்பு"" எனவரும் திரிகடுகச் செய்யுள் மூலம் அரசு செயற்பட வேண்டிய முறையை உணர முடிகிறது. இவற்றின் மூலம் சங்கம் அரசின் தோற்றத்தை அறிய முடிகிறது. இவ்வரசானது உறுதியானதாகவும் செயற்றிறன் மிக்கதாகவும் மக்கள் நலன்பேணுவதாகவும் அமைவதற்கு அங்கு அமைதி சுமூகம் மிக்க சூழ்நிலை அவசியமாகிறது. இந்நிலையில் அத்தகைய சூழ்நிலையை உருவாக்கித் தரவல்லது. அறஒழுக்கப் போதனைகளே என்றுணர்ந்த சமுதாயம் அற இலக்கியங்களைப் பெருந்தொகையாகத் தோற்றுவித்தது.
சங்க காலத்தில் இருந்த வணிக முறையானது சங்கம் மருவிய காலத்தில் பெருவணிக வர்க்கமாக எழுச்சி பெற்றது. சிலப்பதிகாரம் சங்கம் மருவிய காலப்பெருவணிக வர்க்க எழுச்சியின் மகோன்னத நிலையைப் படம் பிடித்துக் காட்டும் உன்னத இலக்கியமாகத் திகழ்கிறது. சங்ககாலத்தில் அரசரையும் வள்ளலையும் புகழ்ந்து போற்றிய தமிழ் இலக்கியம் சங்கம் மருவிய காலத்தில் வணிகர்குல எழுச்சியின் பின்னணியில் சிலப்பிகாரம் மணிமேகலை என்பன வணிகர் குலத்தைப் பாடுவதாயிற்று. "அரசர் முதலியோரை காப்பியத் தலைவராகக் கொள்ளாது பொதுமக்களையே காலியத்தலைவராகக் கொள்ளும் குடிமக்கள் காப்பியங்களாக விளங்குகின்றன" எனத் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் குறிப்பிடுவர். சிலப்பதிகாரத்தை நோக்கும் போது கோவலனும் கண்ணகியும் அவர்தம் தந்தையாரான மாசாத்துவனும் மாநாய்க்கனும் சாதாரண மக்களாகக் காட்டப்படவில்லை. மாசாத்துவானை "உயர்ந்தோங்கு செல்வத்தான' எனவும் "இருநிதிக்கிழவன்"" எனவும் கவிஞர் குறிப்பிடுவது வணிகர்குல எழுச்சியையே புலப்படுத்துகிறதென்பது தெளிவாகிறது. மேலும் கோவலன் கண்ணகி திருமணத்தில் மங்கல நாண்
வலம்வந்தபோது "பணிநலம் வெண்குடை அரசு எழுந்ததோர் படி எழுந்தது அகலுன் மங்கல அணி யெழுந்தது' எனக் குறிப்பிடுவதும் பெருவணிக வர்க்க எழுச்சியினையே காட்டுகின்றது. செல்வச் செருக்குள்ள வணிகர்கள் தாம் சிறப்புற்ற காலத்தில் அரசனையும் தமது செல்வாக்கிற்குள் "அடக்கி" வைத்திருக்க விரும்புவர். மன்னனை முதலாகக் கொண்டு அவர் மூலமாக தமது வர்க்கச் செயற்பாட்டை நடத்தினும் தமது கட்டுப்படுத்தவும் கண்டிக்கவும் தயங்கமாட்டார். என்பதையே இவ் இருநூல்களும் காட்டுகின்றன. சுருங்கக் கூறுவதாயின் "அரசியல் பிழைத்தோற்கு அறம் கூற்றாகும் என்றும் கோசத்தின் செல்வச் செருக்கால் மன்னனைக் பின்னால் வணிகரின் வலிய கரங்களைக் காணலாம் " எனப் பேராசிரியர் க. கைலாசபதி குறிப்பிடுவது பெருவணிக வர்க்க எழுச்சியின் தன்மையை மிகத் துல்லியமாகப் புலப்படுத்துகிறது.
கோவலன் கொலை செய்யப்பட்டதற்காக நீதி கேட்கச் கண்ணகி நெடுஞ்செழியனிடம் "தேரா மன்னா செப்புவதுடையேன்"" என விளித்துக் குற்றம் சுமத்துவதும் தன்னை மன்னனுக்கு அறிமுகப்படுத்தும் போது
"ஏசாச் சிறப்பின் இசை விளங்குப் பெருங்குடி மாசாத்து வணிகன் மகனே கோவலன் மனைவி கண்ணகி"" எனக் கூறுவதும் ஆகி பெருவணிக குலத்தைச் சேர்ந்த புனிதவதியாரது வரலாறும் அக்கால வணிககுல எழுச்சியினைப் புலப்படுத்துகின்றன. வணிகம் சிறப்புற நடைபெறுவதற்கு அமைதி சுமூகம் மிக்க சூழ்நிலை அவசியமாகிறது. வாணிபத்தின் மூலம் செல்வத்தைப் பெருக்குவதற்கு அவ்வாணிபமும் அறவழியிற் செய்யப்பட வேண்டும். இதனையே
"வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தம்போற் செயின்""
"பத்தினிப் பெண்டிர் அல்லேம் பலர் தம்
கைத்தூண வாழ்க்கைக் கடாவிய மான்றே""
என மணிமேகலையில் மாதவி மணிமேகலை ஆகியோரின் துறவுச் செயலை அறிந்து சித்திராபதி கொதித்துக் கூறுவது கோடிட்டுக் காட்டுகிறது. இதற்கு அரசர்களும் செல்வர்களும் ஆதரவு கொடுத்து உரமூட்டி வளர்த்தனர். செல்வக் குடியில் பிறந்த ஆடவருக்கு விபச்சாரவாழ்வு சமூக உரிமையாக மாறத் தொடங்கியது. இந்நிலையில் கட்டுப்பாடிழந்து, வீழ்ச்சியடைந்து விரக்தி, வேதனை, துன்பம், துயரம், ஏழ்மை, திருட்டு, பொய்,
புரட்டு முதலியவை மலிந்து புரையோடிப் போய் இருந்த சமுதாயத்தில் ஈகை, அன்பு, அறம்,
கற்பு, நேர்மை, பிறன்மனை நோக்காமை போன்ற அறக் கொள்கைகளை அறநெறியாளர் பரப்பி சமுதாயத்தைச் சீர்திருத்த முயன்றனர்.
சங்கம் மருவிய காலச் சமுதாயச் சூழ்நிலையில் தமிழ் மக்களது எண்ணங்களையும், மன உணர்வுகளையும் புரிந்து கொண்டு அவர்களின் நல் வாழ்விற்கு அறமே வழியெனக் கண்டு தம்மதக் கருத்துக்களாக அற ஒழுக்கக் கருத்துக்களை தமிழகத்திலே பிரச்சாரம் செய்ய சமண பௌத்தத் துறவிகள் முற்பட்டனர். சங்ககாலப் போர்களினாலும் சங்கம் மருவிய காலக் களப்பிரர் படையெடுப்பாலும் தமிழ் மக்கள் ஓயாத ஓலங்களையும் துன்பத்தையும் தொடருகின்ற மரண துயரங்களையும் அனுபவித்த காலகட்டத்தே தமிழகத்திற்கு வந்து புகுந்த சமண, பௌத்த மதங்களின் துறவிகள் தமிழ் மக்களை மேன்நிலைப் படுத்த அறமே சிறந்த வழியெனக் கண்டனர். புறநானூற்றுக்காலப் போர்களினாலும் களப்பிரர் படையெடுப்பாலும் கலங்கிய தமிழகம் அன்பைத் தன் உயிராகக் கொண்ட சமணத்திடம் ஆறுதலை நாடியது""" எனப் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் குறிப்பிடுவது புறநானூற்றுக் காலப் போர்களினாலும் காதல் வாழ்க்கை, வீரவாழ்க்கை என்பவற்றில் ஊக்கம் கெட்டு நொந்த தமிழ் மக்களுக்கு சமண பௌத்த மதங்களின் அகிம்சைக் கருத்துக்கள் நல்விருந்தாக அமைந்தனையே காட்டுகின்றது.
சங்க காலத்தில் பெண்களும் ஆண்களோடு சமமாக மதிக்கப்பட்டனர். ஆண்களும் பெண்களும் கூடிப்பழகியதற்கும் சேர்ந்து நீர் ஆடியதற்கும் சங்க இலக்கியங்களில் சான்றுகள் பல உள்ளன. பெண்கள் சமூகவிழாக்களில் பங்குபற்றிச் சுதந்திரமான வாழ்க்கை நடத்தினர்.
"துணைப் புணர்ந்த மடமங்கையர்
பட்டு நீக்கி துகிலுடுத்தும்
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும் ?
எனவரும் பட்டிணப் பாலை வரிகளில் பெண்கள் கணவருடன்
கூறப்படுகிறது. சேர்ந்து கள்ளருந்திய செய்தி பெரும்பாணாற்றுப் படையில் பெண்கள் கள்ளருந்தியதனால் அவர்களின் கண்கள் குளிர்ச்சி அடைந்திருந்தமையை
"நறவு பெயர்த் தமைத்த நல்லெழின் மழைக்கண்
மடவரன் மகளிரொடு பகல் விளையாடி
என்பதால் அறியலாம். கல்லா மாந்தரொடு பெண்கள் கைகோர்த்து விளையாடியமையை
"கையா மெல்விதி னொதுங்கிக் கையெறிந்து
கல்லா மாந்தரொடு நருவளர் திளைப்ப
என மதுரைக் காஞ்சியும் குளங்களில் பெண்கள் பாய்ந்து நீராடுவதனை
"நுரைத்தலைக் குரை புனல் வரைப்பகம் புகுதொறும்
புனலாடு மகளிர் இதுமெனக் குடைய
எனப் பொருநர் ஆற்றுப்படையும் குறிப்பிடுவதிலிருந்து அறியலாம். இவ்வாறு பெண்களின் சுதந்திரம் அளவு கடந்து இருந்தாலும் களவொழுக்கம் மலிந்த சங்க சமுதாயத்திலேயே பெண்களின் நன்மையை முன்னிட்டு சில கட்டுப்பாடுகள் அக்காலத்திலேயே விதிக்கப்பட்டு இருக்கலாம். என்பதற்கு
முல்லை சான்ற கற்பின் மெல்லியல்
எனச் சிறுபாணாற்றுப் படையும்
உயர்நிலையுலகத்து கற்பின் குரும்பை
மணிப்பூம் புதல்வன் தாயே"
என ஐங்குறு நூறும்
"வடமீன் புரையுங் கற்பின் மடமொழி""
எனப் புறநானூறும் கூறுவதனால் உய்த்துணர முடிகிறது. இக்கட்டுப்பாடுகள் சங்கம் மருவிய கால அறநூலாருக்கு அற இலக்கியம் புனைவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கலாம். இந்நிலையில் சிலப்பதிகாரக் காவியம் பற்றிய சிந்தனையையும் மனங்கொள்ள வேண்டியுள்ளது. கண்ணகி போல் அடங்கி ஒடுங்கி வாழும் பெண்களை முன்னிலைப்படுத்தி அறக் கருத்தை வலியுறுத்தும் சிலப்பதிகாரம் தோன்றக் காரணமாயிற்று எனக் கருதலாம்.
தமிழர் வரலாற்றில் சங்ககால மக்களது வாழ்வில் ஏற்பட்ட விரக்தி மனப்பான்மையும் சங்கம் மருவிய காலத்தில் அறநூல்கள் தோன்றுவதற்குக் காரணமாயிற்று எனலாம். சங்ககால மக்களின் வாழ்வில் அக ஒழுக்கங்களில் காணப்பட்ட நேர்மையீனமும் போரினது கொடுமையும் சீரழிவும் சங்கம் மருவிய காலத்தில் மக்களை அகிம்சையின்பால் ஈர்த்திருக்கலாம். சங்ககால மக்களின் வாழ்க்கை மிகச் சிறப்பானது எனக் கூறிவந்த போதிலும் அக்கால இலக்கியங்களை நுணுகி நோக்கும் போது சங்ககால மக்களிடையே விரக்தி, வேதனை, துன்பம், துயரம் முதலியன மலிந்திருந்ததனை அவதானிக்க முடிகிறது. மிகவுயர்ந்த பண்பாகப் போற்றப்பட்ட காதல் ஒழுக்கத்தின் பின்னணியில் நிறைவேறாத காதல்களும் கை கூடாத திருமணங்களும் நிகழ்ந்தமைக்கு
"யாருமில்லைத் தானே கள்வன் தானது பொய்ப்பின்
யானவன் செய்கோ திணைத்தாளன்ன சிறுபசுங்கால
ஒழுகுநீர் ஆரல்பார்க்கும் குருகு உண்டு
தான் புணர்ந்த ஞான்றே"
எனத் தலைவனால் வஞ்சிக்கப்பட்ட தலைவி தன் துயரநிலையைத் தோழிக்குக் கூறுவதாக அமையும் குறுந்தொகைச் செய்யுளைப் பதச்சோறாகக் குறிப்பிடலாம்.
வீரமென்றும், புறம் என்றும் புகழ்ந்து போற்றும் ஓயாத அழுகையும் வாழ்க்கைக்கையின் பின்னணியில் தொடருகின்ற மரண ஓலங்களும் நிலவியமைக்கான சான்றுகள் பலஉள புறநானூற்றில் வரும்.
"கெடுக சிந்தை கடிதிவள் துணிவே
மூதின் மகளிர் ஆதல் தகுமே
மேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை
யானை எறிந்து களத்து ஒழிந்தனனே
நெருதல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்
பெருநிரை விலக்கி ஆண்டுபட்டனளே
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிது வரித்து உடீஇப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்க என விடுமே
என்ற பாடலில் புறநானூற்றுப் புலவன் வீரத்தாயை வியந்து போற்றினாலும் அது குடும்பத்தின் பரிபூரண அழிவின் தன்மையையே சுட்டி நிற்கிறது எனக் கருதலாம். இச் சூழ்நிலையில் வாழ்ந்த மக்கள் அகிம்சை, நீதி,அறம்,ஆசாரம், ஒழுக்கம் என்பவற்றை அவாவியதில் ஆச்சரியமில்லை எனலாம். பொறியாலும், புலனாலும் உள்ளுணர்வுகளாலும் கவர்ச்சி அடைந்து காதல் வாழ்விலும், வீர வாழ்விலும் ஊக்கம் கொண்டு வாழ்ந்த தமிழ் மக்கள் அவ்வாழ்க்கையில் துன்பத்தைக் கண்டனர். "புறநானூற்றுக்கால வாழ்க்கை முறையில் திருப்தி அடைந்தவர்களாக இருந்திருந்தால் புதுமையை ஏற்றிருக்க மாட்டார்கள். தம்முடையதும் தம்முன்னோருடையதும் வாழ்க்கை
முறையில் அதிருப்தி ஏற்பட்டிருக்காது விட்டால் புறநானூறு தோன்றிய தமிழ் நாட்டில் திருக்குறள் தோன்றி இருக்க முடியாது எனப் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை கூறுவது சங்ககாலக் குறைபாடுகள் சங்கம் மருவிய காலத்தில் அறநூல்கள் பெருந்தொகையாகத் தோன்றுவதற்கு காரணமாக இருந்துள்ளது என்பதையே உணர்த்துகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக