8.10.25

அகத்திணை, புறத்திணை வேறுபாடு

அகத்திணை, புறத்திணை மரபுகளுக்கிடையிலான வேறுபாட்டினை விளக்கிக் காட்டு?.

அகத்திணை மரபு அகவயமான உணர்வோடு தொடர்புபட்டது. அது தலைவன். தலைவிக்கிடையிலான உள்ளத்துணர்வினை வெளிப்படுத்துவதாகும். மக்களின் வலிமையோடு தொடர்புடைய புறவயமான உணர்வினைக் கூறுவது புறத்திணை மரபாகும். போர், வீரம், வெற்றி, கொடைச்சிறப்பு முதலியவற்றை எடுத்துரைப்பதாகும். காதல் அகத்திணையின் பாற்பட போர் புறத்தினையின் பாற்படும்.

அகத்திணை என்பது அன்பின் ஐந்திணை, கைக்கிளை, பெருந்திணை என வகைப்படுத்துவது போல புறத்தினையும் ஐவகைப் போர் பற்றிய மரபுகளோடு காஞ்சித்திணை, பாடாண்திணை என வகைப்படுத்தப்பட்டன.

குறிஞ்சியின் புறம் வெட்சி என்றும், முல்லையினது புறம் வஞ்சி என்றும், மருதத்தினது புறம் உழிஞை என்றும், நெய்தலினது புறம் தும்பை என்றும், பாலையினது புறம் வாகை என்றும் கூறப்படும்.

அகத்திணைக்கு காதல் ஒழுக்கம் கூறப்பட்டது போல புறத்திணைக்குப் போர் பற்றிய ஒழுக்கம் கூறப்பட்டது. குறிஞ்சிக்குப் புணர்தலும், முல்லைக்கு இருத்தலும், மருதத்திற்கு ஊடலும், நெய்தலுக்கு இரங்கலும், பாலைக்குப் பிரிதலும் காதல் ஒழுக்கமாகும். வெட்சிக்கு ஆநிரைகளை கவர்தலும் கவர்ந்தவற்றை மீட்டலும்; வஞ்சிக்குப் பாசறை அமைத்துப் போர் செய்தலும்; உழிஞைக்கு கோட்டைகளைத் தகர்த்தலும், பாதுகாத்தலும்; தும்பைக்கு இறுதி வரை போராடுதலும்; வாகை வெற்றிக்கு அடையாளம் எனவும் போர் பற்றிய ஒழுக்கம் கூறப்பட்டது.

அகத்திணையில் அன்பின் ஐந்திணைக்குள் அடங்காதவை கைக்கிளை, பெருந்திணை என்று கூறப்பட்டன. கைக்கிளை ஒருதலைக் காதல் என்றும், பெருந்திணை பொருந்தாக் காமம் என்றும் கூறப்பட்டன. இது போல புறத்திணையில் காஞ்சித்திணை நிலையாமையையும், சீரிய குணங்களையும் எடுத்துரைத்தன.

அகத்திணையில் பெயர்சுட்டப்படும் மரபு காணப்படுவதில்லை. ஆனால் பெயர் சுட்டப்படும் காதற் பாடல்கள் புறத்திணையின் பாற்படும்.

அகத்திணைப் பாடல்களில் பாத்திரக் கூற்று மட்டுமே இடம்பெறும். ஆனால் புறத்திணையில் பாத்திரக் கூற்றுக்களோடு புலவர் கூற்றுக்களும் இடம்பெறும்.

அகத்திணைப்பாடல்கள் அகவற்பாவினால் அமைந்திருக்கப் புறத்திணைப் பாடல்கள் அகவலுடன் வஞ்சிப்பாவும் இணைந்து காணப்பட்டன.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக