20.10.25

A/L கட்டுரை செய்யும் தொழிலே தெய்வம்

செய்யும் தொழிலே தெய்வம்

குறிப்புக்கள் :

1.
முன்னுரை

2.
தொழிலைப் போற்றுதல்

3.
உழைப்பே தெய்வம்

4.
அறிஞர் தம் கருத்து

5.
வாழ்க்கை இலட்சியம்

6.
முடிவுரை

'செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்

திறமைதான் நமது செல்வம்'

என்பது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாட்டு வரிகளாகும். நாம் எந்தத் தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. எப்படிச் செய்கிறோம் என்பதுதான் முக்கியம். செய்யும் தொழிலில் உயர்வு, தாழ்வு என்ற பேதம் எதுவுமில்லை. பேதம் பேசுவதும் தவறு. செய்யும் தொழிலே தெய்வம் என நாம் கருத வேண்டும். செய்யும் தொழிலில் நமது திறமை பளிச்சிட வேண்டும். அதுவே மிகமுக்கியம் என்பதை உணர்தல் வேண்டும்.

தொழில்கள் எல்லாம் சிறப்புக்குரியன. அவை நம் வாழ்வுக்கு வளமளிப்பன. அவற்றை நாம் போற்ற வேண்டும். இதனையே மகாகவி பாரதியாரும்,

'இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!

இயந்திரங்கள் வகுத்திடு வீரே!

கரும்பைச்சாறு பிழிந்திடு வீரே!

கடலில் மூழ்கிநன் முத்தெடுப்பீரே!

அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்

ஆயிரந் தொழில் செய்திடு வீரே!

பெரும் புகழ்நுமக் கேயிசைக் கின்றேன்

பிரம தேவன் கலையிங்கு நீரே!

தொழிலாளர்களையும் மிகவும் உயர்வாகப் பாடுகின்றார். 'கைவருந்தி எனத் தொழிலையும் அத் தொழிலை மேற்கொள்ளும் பிரம தேவனாகவும் தெய்வமாகவும் உருவகித்துக் காட்டுவதன் மூலம் உழைப்பவர் தெய்வம்' என்று வியந்து பாராட்டுகின்றார். தொழிலாளர்களைப் தொழில் செய்வோரின் சிறப்பினை இவ்வுலகுக்கு உயர்த்திக் காட்டுகின்றார் பாரதியார்.

'அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்

ஆயிரம் தொழில் செய்திடு வீரே!

என்று தொழில் செய்ய முன்வாரீர் எனப் பாடுகின்றார். இதன் மூலம் தொழில் செய்வோரைப் போற்றுகின்ற பாரதி, தொழில் செய்யாது வீணில் உண்டு களித்திருப்போரைக் கண்டிக்கவும் தவறவில்லை.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்

உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்'

என்று தொழிலின் பெருமையை இமயத்தின் உச்சியில் ஏற்றி வைக்கின்றார். பாரதி வழிவந்த பாவேந்தர் பாரதிதாசனாரும்.

'சித்திரச் சோலைகளே உமை அன்று

திருத்த இப்பாரினிலே அன்று

எத்தனை தோழர் தம்

இரத்தம் சிந்தினரோ உங்கள் வேரினிலே

என்கிறார். கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளையும் பாடுபடும் பாட்டாளி மக்களைப் பாராட்டத் தவறவில்லை.

'பாடு படுபவர்க்கே - இந்தப்

பாரிடம் சொந்தமையா!

காடு திருத்தி நல்ல - நாடு

காண்ப தவரல்லவோ?" என்கிறார்.

தொழில் மகத்துவத்தை, தொழிலாளர்களின் உழைப்பை மதித்துப் போற்றாத சமூகம் ஒரு போதுமே எழுச்சி பெற முடியாது என்பதை இன்றைய உலகில் நாம் நிதர்சனமாகக் காணமுடிகிறது. இதனாற்றான் செய்யும் தொழிலைத் தெய்வமாகக் கருதிச் செயற்பட வேண்டும். அவற்றுள் பேதம் காணுதல் கூடாது என வலியுறுத்தப்படுகிறது.

'வையகம் காப்பவரேனும் - சிறு

வாழைப்பழக்கடை வைப்பவரேனும்

பொய்யகலத் தொழில் செய்து - பிறர்

போற்றிட வாழ்பவர் எங்ஙணும் மேலோர்'

என்னும் பாரதியின் கூற்றை நாம் சிந்தையிற் கொள்ளுதல் வேண்டும்.

நியூயோர்க் மருத்துவக்கல்லூரியில் பணிபுரியும் டாக்டர் ஸாம் ஜேனஸ் என்பவர் ஏறத்தாழ இருநூறு கோடீஸ்வரர்களை நேர் கண்டு உரையாடியுள்ளார்.

உழைப்பால் முன்னுக்கு வந்த கோடீஸ்வரர்கள் எல்லோருமே தங்கள் அந்தஸ்துக்குக் குறைவு என்று எந்த வேலையையும் குறைத்து மதிப்பிடுவதில்லை. எந்த வேலையைச் செய்யவும் இவர்கள் தயாராக இருக்கிறார்கள்' என்கிறார்.

இந்த மனப்பான்மை உள்ளதாற்றான் அவர்கள் உலக அரங்கில் முடிசூடா மன்னர்களாகத் திகழ்கிறார்கள். செய்யும் தொழிலே தெய்வம் எனக் கருதுவதாற்றான் அவர்கள் தொழிலில் உயர்ந்து கோடீசுவரர்களாக விளங்குகிறார்கள்.

இவர்களோடு நம்மவர்களை ஒப்பிட்டுப் பார்ப்போமாயின் நமது தாழ்வு நிலைக்கான காரணம் நன்கு விளங்கும். உழைப்பே தெய்வம் என்பதை நாம் நன்குணர்தல் வேண்டும்.

"
கைகளைக் கொண்டு உழைப்பவன் பாட்டாளி;

கைகளோடு மூளையையும் பயன்படுத்தி உழைப்பவன் தொழில் வினைஞன். கைகள், மூளை இவற்றுடன் இதயத்தையும் செலுத்தி உழைப்பவன்தான் கலைஞன்' என்றார் லூயி நிஸர் என்பார். இக்கருத்தை நம் ஈரநெஞ்சில் இறுகப் பற்றிக் கொண்டால் எத்தொழிலையும் கேவலமாக எண்ணிப் பழித்துரைக்கும் எண்ணமே நம் இதயத்துள் எழா.

உழைப்பால் உயர்ந்த இரஷ்ய மக்களின் கருத்தை நாம் மனதிற் கொள்ள வேண்டும். 'உத்தரவால் வாழ்கிறான் பணக்காரன்: உழைப்பால் வாழ்கிறான் ஏழை' என்பது அவர்கள் தம் உள்ளத்து ஏந்தும் உயரிய கருத்தாகும். உழைப்பின் மகிமையை உணர்த்த இதைவிட வேறு வாசகமும் வேண்டுமோ?

'
ஒரு கவிதை எழுதுவதில் உள்ள பெருமை ஒரு நிலத்தை உழுவதில் இருக்கிறது ' என்றார் ஜோர்ஜ் வாஷிங்டன். உழவுத் தொழில் மட்டுமல்ல. அனைத்துத் தொழிலுமே வந்தனைக்குரியன. 'தாழாதே! எவரையும் தாழ்த்தாதே! என்றார் எமிலி ஜோலா. அதையே நம் இலட்சியமாகக் கொள்ள வேண்டும். எத்தொழில் செய்பவராயினும் என்ன? எல்லோரும் மனிதர்களே..... அந்த எண்ணம் இருந்தால் நாம் வாழ்வோம். எந்நாளும் புகழ் சேரும்.

என்ன வளம் இல்லையிந்தத் திருநாட்டில்?

ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்

ஒழுங்காய்ப் பாடுபடு வயல்காட்டில்

உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்' என்ற திரைப்படப் பாடலை ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்போமாயின் நமது பணி என்ன என்பது புலனாகும். உழவுத் தொழில் உன்னதமான தொழில், உழவன் சேற்றிலே கால் வைப்பதாற்றான் நாம் சோற்றில் கை வைக்க முடிகிறது. என்ற உண்மையை நாம் மனதிற் கொள்ள வேண்டும்.

உழவுத்தொழில் மட்டுமல்ல. ஒவ்வொரு தொழிலுமே உயர்ந்ததுதான். உன்னதமான தொழில்களை நாம் புறக்கணித்துவிட்டு ஆடை நலுங்காமல் நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் பதவிகளைத் தேடிக் காலத்தை வீணே போக்குகின்றோம். இந்நிலை மாறவேண்டும். எத்தொழிலையும் ஏற்றுச் செய்திடும் மனநிலை பெறவேண்டும். அத்தகு மனநிலை பெற்றிட்டால் செய்யும் தொழிலே தெய்வம் எனக் கருதி நாம் வாழ்ந்திட முடியும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக