20.10.25

A/L கட்டுரை தமிழ்ச் செல்வாக்கு

தமிழ்ச் செல்வாக்கு

குறிப்புக்கள் :

1. முன்னுரை - பொதுவான சிலபோக்குகள்

2.
பிற இடங்களில் பக்தி நெறியில் கூறுகள் - தொடர்பு

3.
உலகப் பொது நோக்கு

4.
நாடோடி ஞானிகள், சித்தர்கள்

5.
பொதுவான அறிவாராய்ச்சிச் சூழல்

6.
முடிவுரை

1. இந்தியாவில்

1.1 அனைத்து இந்தியாவிலும் தமிழ்ச் செல்வாக்கு

(i)
தமிழ் நாட்டிலிருந்து பக்திநெறி பரவியது

1. பொதுவான சில போக்குகள்

பிரமாண்டம், பவிஷ்யத் என்னும் புராண நூல்கள் பக்தி என்பதனை ஒரு பெண் குழந்தையாக உருவகப்படுத்தி இக்குழந்தை திராவிடம் அல்லது தமிழ் நாட்டில் பிறந்து (இப்புராணங்களின் சில பாடமுறைகள் குறிப்பாகக் காவிரியிலும் தாம்பிரபரணியிலும் இக்குழந்தை பிறந்ததாகக் கூறும்) தென்னகம் எங்கும் சென்று வளர்ந்து குஜராத்தினை அடையும் போது முதியவளாக மாறுகிறாள் என விவரிக்கின்றன. தமிழ் நாட்டு ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் உலகுக்களிக்ப் பெற்ற பக்தி

நெறியினையே இவ்வுருவகம் உறுதியாகச் சுட்டி நிற்கிறது எனலாம். தமிழகத்தின் இப்பக்தி இயக்கத்தில் பலவேறு போக்குகளைக் காண்கிறோம். இந்நெறி அனைத்திந்தியாவிலும் சென்று பரவி. அவ்வப்பகுதிகளில் பிரிக்க முடியாத ஓரியல்பாக அமைந்து விட்டது எனலாம். இவ்வாறு நாம் கூறும்போது நாட்டின் பலபகுதிகளிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்பெறும் இவ்வியக்கத்தின் சில தன்மைகளையே நாம் சுட்ட முடிகிறது. எனவே தமிழகத்தில் இவற்றிற்கான தோற்று வாய்களைக் கண்டறிகின்ற நிலையிலே ஒரு பொதுவான தொகுப்பு உருவமே இங்குக் காட்டப்பெறுகிறது. அப்போதும் இவை அனைத்துமே ஓராசிரியரிடம் விளங்குகின்றன என்று கொள்ளக்கூடாது.

() தொண்டு : தமிழகத்தில் பக்திநெறி துவக்க நிலைகளிலே வெறும் உணர்ச்சிக் கூப்பாடாக அமையவில்லை. உணர்ச்சி வெளியீடாக மட்டுமே அமையவில்லை: அறிவாராய்ச்சி நிலை மறக்கப்படவும் இல்லை. பொதுவாக மனிதனில் கடவுளைக் காணல் என்ற கருத்தே வலியுறுத்தப் பெற்றது எனலாம். மக்களின் சேவை இறைவனின் சேவையாயிற்று. இவ்வகைச் சேவையில் கைத்தொண்டு' புரிவது தெய்வீகமாகவே கருதப்பெற்றது.

() உலக மறுப்பின்மை : உலகின் மீது பற்று இல்லாமலிருத்தல் என்ற கொள்கை வலியுறுத்தப் பெற்றாலும் எந்த அடியாரும் உலக வாழ்வை மறுத்துப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறவில்லை. சில அடியார்கள் திருமணம் ஆனவர்கள். அவர்கள் மனைவியரும் அவர்களைப் போலவே புகழும் பெற்றார்கள். சைவ சமயத்தில் பெண் அடியார்களான காரைக்கால் அம்மையாரும் வைணவத்தில் ஆண்டாளும் விளங்குகிறார்கள். இவர்கள் எல்லோரும் பழுத்த அடியார்கள்: ஞானிகள்: சமயவழி நின்று இறைவனைக் காணத்துடித்த சித்தர்கள். இவர்களது பாடல்கள் அவர்கள் கண்ட கடவுள் அனுபவத்தை நமக்குக் காட்டி நிற்பன. இறைவனது திருவிளையாடலாகவும், அவனது அருளின் பருவடிவாகவும், நாம் உய்தி பெற அமைக்கப் பெற்ற சிறந்ததொரு பள்ளியாகவும் விளங்குகிற இவ்வுலகம் கடவுளின் ஒரு பெரிய அவதார வடிவமாக முழு அழகுடன் மிளிர்கின்றது.

"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் எனப்பாடுகின்றார் ஞானசம்பந்தர். இந்நோக்கிலேயே அவர் இறைவனின் கோயில்களைச் சுற்றிள்ள இயற்கையழகின் சிறப்பையெல்லாம் உணர்ந்து நயந்து போற்றிப் பாடுகின்றார். குழந்தைகளைத் தெய்வச் சின்னங்கள் என்றும் மலைநிலத்திலே ஓர் இளம் பாமரத்தாய் தன் குழந்தைக்காகப் பாடும் தாலாட்டால் மனம் கவரப்பட்டுத் திருவீழிமிழலை என்ற கற்கோயிலே உலகிற்கு வந்தது என்றும் திருஞான சம்பந்தர் கவிதையுணர்வோடு பாடுகின்றார்.

() இசை : பொதுவாக இப்பக்தர்களின் பாடல்கள் இசைப்பாடல்களாக அமைந்தன. திருஞானசம்பந்தர் இசையினால் மனமாசுகள் எல்லாம் நீக்கப்பட்ட நிலையில் இதயம் தூய்மையில் மலர்ந்து இறைவனின் தூய ஒளியினை வெளிக்காட்டி நிற்கிறது என்பர்.

() ஓரினம் : கடவுள் தொண்டர்கள் அன்பும் தொண்டும் நிறைந்த ஓரினத்தவர் ஆவர். அவர்கள் சாதிப் பிரிவினைகளையும் அவற்றின் உயர்வு தாழ்வுகளையும் நம்புவதில்லை. நந்தனார் போன்ற அரிஜனர் இறைவனால் விரும்பப்பட்டவர். திருப்பாணாழ்வாரைக் கோயில் கருவறைவரை கொண்டு சென்றது போலத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் போன்றோரைச் சம்பந்தர் போன்ற ஞானிகள் தூய வேள்வியறைக்குக் கொண்டு சென்றார்கள். திருமூலர் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என அறைகூவி நிற்பர். வைணவர்கள் ஆண்டவனின் அடியவர்களைத் "தொண்டர்க்குலம்" என்பர். மைசூர் மாநிலத்தில் உள்ள மேல்கோட்டை என்ற இடத்தில் உள்ள கோயிற் கதவுகளை அரிஜனங்கள் உட்பட எல்லோருக்கும் திறந்துவிட்டார் இராமானுசர் என்பர். இன்றும் இக்கோயில் அரிஜனங்களுக்காகத் திறந்துவிடப்படுகிறது. ஆனால் இராமானுஜருக்குப் பின் மீண்டும் தீண்டாமைக் கொள்கையும் சாதிக் கட்டுப்பாடுகளும் மக்களிடையே தலை தூக்கியதன் விளைவாக ஆண்டுக்கு ஒருமாதம் மட்டுமே அவர்களுக்காகத் திறந்துவிடப்பட்டிருந்தது.

() அன்பும் அனுபூதியும் : பக்தர்கள் திருமணத்திற்கு முன்னும் பின்னும் காதல் வாழ்வில் மக்கள் பயன்படுத்தும் மொழியினையும் பயன்படுத்தினர். ஆனால் சிற்றின்பம் என்கிற அளவுக்கு அவர்கள் இறங்கிவிடவில்லை. இறையனுபவம் என்பது ஏதோ சில குறியீட்டு மொழிகளாலன்றி வேறு எவற்றாலும் விளக்க முடியாத நிலையிலே இறைவன் மீது காதல் என்ற நிலையில் அதனை விளக்குவது எளிதாக அமைந்தது. திருமூலர் துணிவாக இறைவனைக் காதல் அல்லது அன்பு என்பதனோடு ஒப்பிடுகிறார். சங்கத்து அகப்பாட்டுக்கள் அன்பு என்பதனையே அடிப்படையாகவும், உலகத்திற்கெல்லாம் பொதுவாகி நின்று உள் நின்று ஒளிரும் உண்மையாகவும் கொண்டன. இந்த அன்பினது பல்வேறு கூறுபாடுகளையே தலைவன் தலைவி வாயிலாக அவைபாடுகின்றன. குறுகிய கால எல்லைக்குள் அடங்கிப் போகிற ஒரு குறிப்பிட்ட ஒன்றனைக் கூறாது உலகத்தை உள்ளடக்கிய பொதுவான பரந்த நோக்கமே அங்கு வலியுறுத்தப் பெற்றது. ஆழ்வார்களாலும், இறைவனையும் அன்பையும் ஒரு சேரக்கூறிய திருமூலரைப் பின்பற்றிய அடியார்களாலும் போற்றப்பட்டது. இந்த குறிக்கோள் வடிவமான அன்பே நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறைவன்மாட்டுத் தங்களுக்குள்ள அன்பினையே பாடினார்கள். இவ்வாறாகச் சங்க காலம் தொடங்கிப் பாரதியார் வரை இவ்வன்பு நெறிப் பாடல்களில் ஒரு தொடர்ச்சியினைக் காண்கிறோம்.

() பொருளில்லாச் சடங்குகள் : பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம் எனக் கருதத்தக்க சித்தர்களுள் குறிப்பாகச் சிவவாக்கியர் சடங்குகளை அவற்றின் குறியீட்டுப் பொருள் புரியாது கண்மூடித்தனமாகத் தொடர்ந்து பின்பற்றப்படுவதனைக் கண்டித்துள்ளார். சிலையை ஒரு குறியீடாகக் கருதாது, உண்மையாகக் கடவுளே என்று மயங்குகின்ற போது அது அறிவாராய்ச்சிக் கொவ்வாத மூடபக்தி ஆகிறது. சிவ வாக்கியர் கூற்றுப்படி உள் நிறைந்து இயங்கும் இறைவனையுணராது வெறும் சிலையை வணங்குதல் பயனற்றதேயாம். எங்கும் நிறைந்து இலங்கும் இறைவனையுணராதார்க்குப் புண்ணிய ஆறுகளில் நீராடுதல் போன்ற குருட்டுத் தனமான நம்பிக்கைகளின் அடிப்படையில் செய்யும் சடங்குகள். எல்லாம் பயனற்றவையே என்கின்றார் அப்பர் பெருமானும். ஆனால் நிர்க்குண வழிபாட்டு முறையும் சகுண வழிபாட்டு முறையும் வேறு பிரித்துக் காட்ட முடியாதபடி அவர்கள் பாடல்களில் பின்னிப்பிணைந்துள்ளன. இப்புலவர் பெருமக்களும் ஞானிகளும் ஒரு முறையிலிருந்து மற்றொரு முறைக்கு எளிதில் மாறிச் செல்கின்றனர். சகுண வழிபாட்டு முறையை இறுதி முடிவாகக் கொள்ளாத அத்வைதிகள் கூட இம்முறையைச் சாடவில்லை. சகள, நிஷ்கள வழிபாட்டு முறைகளும் கூடச் சிலபோது பேசப்படுகின்றன. இராமானுசர் கருத்துப்படி எங்கும் இறைவனை ஒருவன் உணர்கின்ற போது உலகில் காணும் அழகு வடிவங்கள் எல்லாம் இறைவனின் இயல்புக் கூறுகளில் ஒன்றான அழகு அல்லது சௌந்தர்யத்தின் அவதார வடிவங்களேயாம். அழகு பற்றி இக்கருத்தைக் கூறும்போது இதனாலேயே குருட்டு வழிபாட்டு முறையினைச் சரியானதென்று கருதுவதாகக் கொள்ளக்கூடாது.

() அரசியலும் மதமும் : எப்போதுமே அரசியலுக்கும் மதத்துக்கும் பூசல் இருந்ததில்லை. ஆனால் தெய்வீகம் போற்றும் புலவர் ஆளும் அரசனிடத்தே தெய்வத்தைக் காண்கிறார். எனவே அரசனை விஷ்ணுவின் பிரதிநிதியாகவே கண்டார்கள். அரசர்களின் ஈமச் சடங்குகளி முடிந்தவுடனே எஞ்சி நிற்பனவற்றின் மீது கோயில்கள் எழுப்பப்படுகின்ற வழக்கத்தினையும் காண்கிறோம். இவ்வகைக் கோயில் பள்ளிப்படைக் கோயில் எனப்பெறும். ஆனால் இவ்வழக்கம் கீழைக்கடல் நாடுகளில் காணப்பெறும் தேவராஜ நெறி அளவுக்கு வளர்ச்சியடையவில்லை. அரசியலுக்கும் மதத்துக்கும் பூசலில்லை என்று கண்டோம். ஆனால் புத்த மதத்தவரும் சைனரும் கொண்ட உலக மறுப்புக் கொள்கையைப் பின்னர்ச் சைவர்களும், வைணவர்களும் எதிர்க்க வந்தபோது இப்புத்த மதத்தினரும் சைனரும் அப்போது ஆண்டுவந்த அரசர்களோடு தமக்கிருந்த செல்வாக்கினைச் சைவ வைணவரின் பேரெதிர்ப்பினுக்கு எதிராகப் பயன்படுத்தினர் எனக் கருத இடமிருக்கின்றது. பல்லவ அரசன் மகேந்திரவர்மனும் பாண்டிய மன்னன் நெடுமாறனும் சைன மதத்தை மிகுந்த ஈடுபாட்டோடு பின்பற்றியோர். இப்பாண்டிய அரசனைச் சைவ சமயத்திற்கு மாற்றும் முயற்சியில் வெற்றி கண்டார் திருஞான சம்பந்தர் மகேந்திர வர்மனால் போற்றப் பெற்ற சைனர்கள் கொண்டிருந்த பகைமையின் காரணமாகப் பின் பெருந்தொல்லைகளுக்கு ஆளானார் அப்பரடிகள் என்பது மரபு. அப்பரே பாடுகின்றார்: "யாமார்க்கும் குடியல்லோம்." இந்த மனப்பான்மை இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த தேசிய கவி பாரதியாரின் பாடல்களில் ஒளி சிறந்து நிற்பதனைக் காணலாம். இவையன்றி இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சில செய்திகளையும் காண்கிறோம். எடுத்துக் காட்டாகப் 'பக்தர்களைப் போற்றாவிடில் நாடு அழிவுறும்' என்று திருமூலர் திருமந்திரத்தில் பாடுவதனைக் காட்டலாம். இப்பாடற் கருத்து பாபரையும் அன்றைய அரசர்கள் பின்பற்றிய போர்க் கொலையினையும் எதிர்த்த குருநானக்கின் முழக்கத்தை நமக்கு நினைவூட்டுகிறது.

2. பிற இடங்களின் பக்தி நெறியில் கூறுகள் (Aspects of Bhaktiwit)

இந்தியா முழுவதும் பரவிய பக்திநெறியின் துவக்க நிலை தென்னிந்தியாவே என்பதனைக் காட்டுவதற்காகவே மேற்கூறிய பக்திநெறியின் சில போக்குகள் - அவை சிறு வரவிற்றேயாயினும் இங்குச் சுட்டப்படுகின்றன. பிற்பட்ட வகுப்பாரிடையே தோன்றிய ஞானிகள் புகழ் பரப்புவதற்காகச் சாதி முதலான வேற்றுமைகளை வெறுத்தல், மகாராட்டிரம், ஆந்திரா, கருநாடகம், வட இந்தியா ஆகிய இடங்களில் காணப்பெறும் அறன் வலியுறுத்தல், அறிவின் உறுதியான தெளிவு, மக்களின் தொண்டே ஆண்டவன் தொண்டு என்று கொள்ளும் தூய ஞானத்தின் உணர்ச்சி ஒளி ஆகியனவற்றைத் தமிழ் நாட்டிலும் தமிழ்ப் பண்பாட்டிலும் நாம் காணலாம்.

3.தொடர்பு

ஆந்திராவோடும், கருநாடகத்தோடும் தமிழரின் தொடர்புகள் இருந்தன. தமிழ்ச் செல்வாக்கு சாளுக்கியர்க்குச் சென்றிருக்கலாம். பின்னே மராட்டிய ஆட்சியின் ஒரு பகுதி தஞ்சையில் இருந்த போது இச் செல்வாக்கு நேரடியாகவே நிகழ்ந்தது, இதன் விளைவாகத் தென்னிந்திய சைவ வைணவக் கதைகள் தஞ்சையில் தோன்றிய மராத்திய இலக்கியத்துள்ளும் புகுந்தன.

4. உலகப் பொது நோக்கு

பிற்காலத்தே வெளிநாட்டுச் சமயப் புகுத்தல்களை எதிர்க்கும் முகமாகச் சிலபோது பொறுத்துப் போகும் தன்மையின்மையும் குறுகிய நாட்டுப் பற்றும் காணப் பெற்றாலும், பொதுவாக ஓர் உலகப் பொது நோக்கும் இருந்து ஒருலகம் என்ற கருத்து வலியுறுத்தவும் பெற்றது. பிறரும் இந்திய ஒருமைப் பாட்டினை வலியுறுத்தியுள்ளனர். தமிழ் நாட்டில் இவ்விந்திய ஒருமைப்பாடு என்ற கருத்திற்கு மேலாக உலகப் பொதுநோக்கு என்ற கருத்தும் நிலவியது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பாடுகிறார் சங்கப் புலவர் பூங்குன்றனார். திருவள்ளுவர் இவ்வுலகப் பொது நோக்கினைக் கொள்வதே கல்வியின் பயன் என்கின்றார். "யாதானு நாடாமா லூராமா லென்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு" -திருவள்ளுவர்.''ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பார் திருமூலர். ஒளவையார் "சாதியிரண்டொழிய வேறில்லை எனப் பாடுவார். சுந்தரர் தமிழகத்தில் சாதி, பிரிவு, பால், வயது வேறுபாடுகளின்றி ஏதாவது ஒரு வழியில் மக்களுக்குத் தொண்டு செய்வதே இறைவனுக்குச் செய்யும் தொண்டு எனக் கருதிக்கொண்டு இந்நெறிக்காகத் தங்கள் வாழ்வையும் உறவினர்களையும் கூட உதறிவிடத் துணிந்து நின்ற பெருமக்களின் பெயர்களையெல்லாம் பாடிச் செல்கின்றார். இவ்வாழ்த்தும் வணக்கமும் தம்காலத்தே தாழ்வுற்ற நிலையிலிருந்த தமிழகத்திற்கு இறையருள் நிறைய உண்டு என்ற உறுதிகூறி நம்பிக்கையை உண்டாக்கவே ஆம். "அப்பாலும் அடிசார்ந்தார்" என்ற இவ்வழகிய தொடருக்கு நாயன்மார்களைப் பற்றிக் காவியமாகப் பாடவந்த சேக்கிழார் இவ்வாறெல்லாம் பொருள் கொள்கின்றார். சேக்கிழார் தம்முடைய பெருங்காவியத்தின் முதலிலும் இடையிலும் முடிவிலும் ''உலகெலாம்" என்ற தொடரைப் பயன்படுத்தியுள்ளார். இறைவனே இத்தொடரைச் சேக்கிழாருக்கு உணர்த்தி யருளினான் என்பது மரபு. இது இங்கு நாம் விளக்குகிறபடி தமிழகம் கூறிக் கொண்டிருக்கும் உலகப் பெருஞ் செய்தியை உள்ளடக்கியது போல உள்ளது. விஜய நகர ஆட்சிக் காலத்தே வாழ்ந்த அருணகிரி நாதர் இதனைப் பாடுகின்றார். சமரச சன்மார்க்கம் அருளிய இராமலிங்க அடிகள் திருமூலரைப் போலவே கடவுளைத் தந்தையாகவும், மக்களைக் குழந்தையாகவும் கூறி இவர்களை எல்லாம் ஒருங்கு இணைப்பது ஆன்மநேய ஒருமைப்பாடு எனப் பாடுவர்.

5. நாடோடி ஞானிகள்

இவ்வுலகப் பொதுநோக்கு என்னும் கொள்கையினை இந்திய ஞானிகள் இந்தியாவில் மட்டுமன்றிப் பிற நாடுகளிலும் சென்றுலவிப் பரப்பினர். விரைவாகப் போக்குவரவிற்குத் துணைபுரியத் தக்க வசதிகள் இல்லாத அந்தப் பழங்காலத்தே இக் கொள்கை இந்தியாவிலும் பிறநாடுகளிலும் இந் நாடோடி ஞானிகளால் பரவியது என்பதை எண்ணும்போது வியப்பாகவே உள்ளது. திருஞான சம்பந்தரும், சுந்தரரும் இலங்கைக்கும், இமாலயத்திற்கும், அங்குள்ள கேதாரத்திற்கும் சென்றிருக்க வேண்டும். திருமங்கையாழ்வாரும் வடபுலத்திலேயுள்ள பெரும் வைணவத் தலங்களான நைமிசாரண்யத்திற்கும் பத்ரிநாத்திற்கும் சென்றிருக்க வேண்டும். சங்கரரும் இந்தியா முழுவதும் சென்றிருந்தார். பின்னர் இராமானுஜரும் மணவாள மாமுனிகளும் பிற அறிஞர்களும் ஆழ்வார்களின் அருளிச் செயல்களை உலகெங்கணும் பரப்புவதில் பெரு வெற்றி கண்டனர். இதன் விளைவாக விசிஷ்டாத் வைதம் என்கின்ற தத்துவம் அத்வைதம் போல அனைத்திந்தியாவும் போற்றும் ஒரு தத்துவமாக ஓங்கியது. தமிழ் நாட்டிற்குப் புறம்பே இக் கொள்கையினைப் பின்பற்றி வாழ்ந்த பெருமக்கள் ஆழ்வார்களின் பாடல்களையெல்லாம் தெலுங்கர் தம் தெலுங்கு எழுத்துக்களிலும், கன்னடர் கன்னட எழுத்துக்களிலும், இந்தி பேசுவோர் இந்தியிலும், குஜராத்தியர் குஜராத்தியிலும் பின்னர் வங்காளியர் வங்காளத்திலுமாக மாற்றி எழுதித் தொண்டு புரிந்தனர். இவ்வாறு இப் பக்தி நெறி தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் சென்று பரவக் காணமாயிருந்தவர் இந்த நடமாடும் கடவுள் திருக்கூட்டத்தினரேயாம். புத்த மதம் உலக மதமாகப் பரவியதன் விளைவாக விளைந்த விளைவே இதுவும் எனலாம். இவ்வாறாகத் தென்னிந்தியச் செல்வாக்கு இந்தியாவில் மட்டுமன்றி இலங்கையிலும் கீழைக் கடல் நாடுகளிலும் விளங்கக் காண்கிறோம்.

6. இப் பரவலைப் பற்றிய மரபுகள்

இவ்வகைப் பரவலே பின்னர் இராமானுஜரின் தத்துவ மரபிற்கும் இராமானந்தரின் மரபிற்கும் இடையே தொடரபுள்ளது என்ற கதைக்கும் கம்பரின் இராமாயணத்திற்கும் துளசிதாசரின் இராமாயணத்துக்கும் தொடர்புள்ளது என்ற கதைக்கும் அடிப்படையாக அமைந்து வலுவேற்றி நிற்கிறது எனலாம். வட இந்தியாவிலிருந்தும் குருநானக, துளசிதாசர் போன்றோர் தென்னிந்தியாவிற்கு யாத்திரை வந்துள்ளனர். இன்றும் இவ்வுலகப் பொதுமை நோக்கு யாத்திரையாக வரும் பக்கிரிகளாலும், சித்தர்களாலும் பைராகிகளாலும், பிற ஆண்டவனின் அடியவர்களாலும் போற்றிப் பேணப்பட்டு வருகின்றது. இங்கு வலியுறுத்தப் பெறுவதெல்லாம் இவ்வகையான போக்கு தமிழ் நாட்டின் பக்தி இயக்கத்தில் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது என்பதே.

7. சித்தர்

உண்மை என்பது மதங்களுக்கும் விவாதங்கட்கும் கோட்பாடுகளுக்கும் சாதி வேறுபாடுகட்கும் அப்பாற்பட்டது என்ற கருத்தினை ஐயந்திரிபற இத்தமிழ் ஞானிகள் தெளிவாக்கியுள்ளனர். கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர். இவர்களது கடவுள் பற்றிய விளக்கமுறை "முசல்மான் இல்லை, இந்து இல்லை என்று கூறிய பழைய குருநானக்கின் எதிர்மறை முறையிலல்லாது "அவனே எல்லாம்: அவன் எங்கும் இருக்கிறான்: ஒவ்வொருவரும் அவனுடையவரே என்னும் உடன்பாட்டு முறையில் அமைந்ததாம். நம்மாழ்வார் நரகமும் இறைவனே' என்பர். நாத பந்த், சூஃபிக்கள், பக்கிரிகள், தென்னிந்திய சமயங்களைப் பின்பற்றிய அடியார்கள் ஆகியோரது தொண்டினால், சகிப்புத் தன்மையில்லாத கற்றவர் சிலர் போலல்லாமல் பாமரர்களிடையே எல்லா மதங்களையும் மதிக்கும் தன்மை என்ற மனப்போக்கு வளர்ந்தது. இம்மக்கள் இன்றும் பெருங்கூட்டமாக மசூதிக்கும், கிறித்தவக் கோயில்கட்கும், இந்துக்களின் ஆலயங்களுக்கும் சென்று மனத்துக்கண் மாசில்லாப் பெருமக்களின் ஆசிபெறக் கூடுகின்றனர். சித்தர் பாடல்கள் என்ற தமிழ்த் தொகை நூலில் பீர் முகம்மது போன்ற சூஃபிக்களின் பாடல்களையும் நாதா பந்தைச் சேர்ந்த கோரக்கர், மச்சேந்திரர் போன்ற நாதர்களின் பெயர்களையும் காண்கிறோம்.

8. பொதுவான அறிவாராய்ச்சிச் சூழல்

உருவ வழிபாட்டினை எதிர்க்கும் தமிழ் நாட்டுச் சித்தர்களைப்பற்றி முன்னரே குறிப்பிட்டேன். கன்னட மொழியில் "வசனகளு எனப்பெறும் வீரசைவர்களின் பாடல்களும், தெலுங்கு நாட்டில் 'பத்யங்கள்" எனப்பெறும் வேமனாவின் பாடல்களும் தமிழர்களுக்குச் சித்தர் பாடல்களையே நினைவூட்டும். இது பொதுவாக எங்கும் ஓர் அறிவாராய்ச்சிச் சூழலும் சிந்தனைப் போக்கும் பரவியிருந்தன என்பதற்குச் சான்றாகுமே தவிர ஒரு பகுதியிலிருந்து கருத்துக்களை இன்னொரு பகுதி கடன் வாங்கியது என்பதற்கான சான்றாகாது.

(ii) கம்பரின் இராமாயணம்

(i) கம்பன் : ஒவ்வொரு பகுதியினரும் ஒவ்வொருவிதமான கதை முறையைக் கொண்டிருந்தாலும் இராமாயணம் தங்கள் பகுதி இலக்கியமே என இந்தியாவின் பல பகுதியினர் தொடங்கித் தூரக் கிழக்கு நாட்டவர் வரை பலரும் உரிமை கொண்டாடுகின்றனர். இக்காப்பியத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு கம்பனுடையதேயாம். இதனைக் கடவுள் மனித அவதாரமாக வந்ததனை விளக்கும் நாடகக் காப்பியம் என்றும் கூறுவர். இதனைப் போன்றதொரு இலக்கியப் படைப்பு தமிழில் வேறு இல்லை. சைவ வைணவர்கள் மட்டுமன்றிக் கிறித்தவரும், முகம்மதியரும்கூட இதனைத் தலைசிறந்த செய்யுளிலக்கியம் எனப் போற்றுகின்றனர். மக்கள் பெருமளவில் இக்காப்பியம் முழுவதனையும் மனப்பாடமாகவே செய்து வாய்மொழி இலக்கியமாகவே வழங்கிவந்தமையினாலே இந்நூலின் புகழ் அது தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை தமிழ் வழங்குமிடமெல்லாம் ஓங்கிய வண்ணமாகவே உள்ளது.

(
) கன்னட நாட்டிலும் கேரளத்திலும்: தமிழ்ப் பகுதிகளிற் போன்றே கன்னட நாட்டிலும் கேரளத்திலும் இந்நூல் புகழ் பெற்று விளங்குவதுதான் இங்கு வியப்பு. கன்னட நாட்டைச் சேர்ந்த ஒரு கோயிலில் கம்பராமாயணத்தை விளக்க வகை செய்தமை பற்றிய செய்தியைப் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னடக் கல்வெட்டொன்று தெரிவிக்கிறது. கேரளத்தார் கம்பனைக் கடவுள் நிலைக்கு உயர்த்தியிருப்பது கம்பனிடத்தேயும் நூலிடத்திலும் அவர்களுக்குள்ள பற்றினைக் காட்டுகிறது, இலங்கையில் இராம இராவணப் போர் நிகழ்வதற்கு முன்னர் சிவபெருமான் இலங்கையைக் காவல் காத்து வந்த துர்க்கையிடம் இராமன் எளிதாக இலங்கைக்குள் நுழைவதற்கேற்ற வகையில் தன் இடத்தை விட்டு நீங்கிச் செல்லுமாறு கட்டளையிட்டார் என்றும், அது கேட்ட போர்க்கடவுளான துர்க்கை (ஒருவகையில் சிவபெருமானின் பத்தினியாவார்) சிவபெருமானிடம் நிகழப்போகின்ற போர்களுக்கெல்லாம் முடிமணியாகக் கருதத்தக்க இராம -இராவணப்போரைத் தான் பார்க்கின்ற வாய்ப்பினைப் பறித்து விடவேண்டாம் என வாதாடினாரென்றும், அதற்குச் சிவபெருமான் தான் எழுதப் போகும் செய்யுள் இலக்கியத்திலே (ஏனெனில் செய்யுள் இலக்கியம் என்பது உண்மை வாழ்க்கை எனும் நாடகத்தில் பங்குபெறுவோர்க்கும் பார்ப்போர்க்கும் தெளிவாகாத பல உண்மைகளைக் காட்டிலும் மிகச் சுவையுடையதாயும் பேருண்மையை யடக்கியதாயும் விளங்குதலின்) பெருஞ் சுவை பயக்கத்தக்க வகையில் அப்போரினை அவள் காணலாம் எனச் சொன்னாரென்றும், சிவபெருமான் தாம் உறுதியளித்தது போலவே கம்பனாக உலகில் பிறந்து இராமாயணத்தை எழுதினார் என்றும் கூறுவது ஒரு மரபு. கேரளச் சிவன் கோவில்களில், குறிப்பாக வடகேரளத்தில், திருவிழாக்காலங்களில் இராமாயணக் கதையைத் தோற்பாவைக் கூத்தாக நடித்துக் காண்பிப்பதைக் காண்கிறோம். இவ்வாறாகக் கம்பராமாயணம் முப்பத்திரண்டு தோற்பாவை அல்லது நிழற் கூத்துக்களாக ஆக்கப்பெற்றது. திரைக்குப் பின்னாலிருந்து ஆண்மக்கள் பாடல்களை நாடகப் பேச்சு வழக்கிற்கேற்ற வகையில் சிறிது மாற்றிப்பாட அப்பாடல்களுக்கான உரையை அழகாகவும் நகைச்சுவையோடும் மலையாள மொழியில் விரித்துக் கூறுவர். இந்த முப்பத்திரண்டு நாடகங்களும் சிவபெருமான் துர்க்கைக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்று முகத்தான் ஆக்கப்பெற்றன என்பது கருத்தாம். மறைந்த கவிமணி திரு தேசிக விநாயகம் பிள்ளையவர்கள் தென்கேரளக் கோவில்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் கம்பராமாயணத்தைப் படிக்கவும், விரிவுரை செய்யவும் நிவந்தங்கள் அளித்தமைக்கான சான்றுகள் கொண்டுள்ளன என்று என்னிடம் ஒருசமயம் சொன்னார்கள். ஆனால் இதுபோன்று தெலுங்கு நாட்டில் கம்பராமாயணம் வழக்கின்றி இருந்தமை வியப்பிற்குரியதே.

() துளசிதாசரில் கம்பன் : வடஇந்தியாவில் துளசிதாசரின் "ராம சரித்மானஸ்" என்ற நூலில் கம்பராமாயணத்தின் செல்வாக்கு உள்ளது என்று கருதுவர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள தருமபுரம், திருப்பனந்தாள் மடத்தினர் இம்மடங்களைப் பின்பற்றும் குமரகுருபரர் காசிக்குச் சென்று கம்பராமாயணத்தை இந்தி மொழியில் விளக்கியதோடு மட்டுமன்றிக் கங்கைக் கரையில் ஒருமடத்தினையும் தோற்றுவித்தார் என்பர். குமரகுருபரர் இந்தியில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் வாயிலாகத் தமிழ்மரபு இராமாயணத்தைத் துளசிதாசர் அறிந்திருக்கவேண்டும் எனச் சில தமிழறிஞர் கொள்வர். ஆனால் குமரகுருபரர் காசிக்கு வருவதற்கு முன்பேயே துளசிதாசர் தென்னாட்டிற்கு இராமேசுவரம் வரை வந்தபோது கம்பர் கண்ட இராமாயணத்தைக் கேட்டிருப்பார் என்பது இயலாத ஒரு செயலல்ல. துளசிதாசரே பிற இடங்களில் வழங்கும் கதை மரபுகளையெல்லாம் பயன்படுத்தியிருப்பதாகப் பாடுகிறார். அடுத்த நாள் வில் வளைத்துச் சுயம்வரம் நிகழ்வதற்கு முன்பே கம்பன் கண்ட இராமனும் சீதையும் ஒருவரையொருவர் நோக்கி அப்போதிருந்தே ஒருவரையொருவர் காதலிக்கவும் தொடங்கிவிடுகின்றனர். இத்தகைய திருமணத்திற்கு முந்தியதான காதல் அல்லது களவொழுக்கம் பழைய சங்க இலக்கியங்களால் பெரிதும் போற்றிப் புகழப்படுவது. இத்தகையதொரு நெறியினைத் துளசிதாசரும் சீதை பூசைக்குச் செல்லுமுன் இராமனைப் பார்த்ததாகக் கூறும்பகுதியில் பின்பற்றிக் கூறியிருப்பதே இங்கு முக்கியமாகக் கருதத்தக்கது.

சென்னைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த என்னுடைய நண்பர் திரு டாக்டர் சங்கரராஜ் அவர்கள் துளசிதாசரிடத்தே காணப்பெறும் கம்பனின் செல்வாக்கை மிக விரிவாக ஆராய்ந்திருக்கின்றார். இனிக் கம்பராமாயணத்திலும் வால்மீகியின் செல்வாக்கு விளங்குவதை விரிவாக ஆயவேண்டுவதில்லை. எனினும் ஆழ்வார்கள் பாடல்களின் அடிப்படையிலும் நாடோடிக் கதைகளாகவும் நாடோடிப் பாடல்களாகவும் வழங்கி வந்தவற்றின் அடிப்படையிலும் கம்பன் தன் இராமகதையை மேலும் விரிவாக்கி மெருகூட்டியுள்ளான் என்பதை இங்குக் குறிப்பிடத்தான் வேண்டும். வங்காளத்தினைச் சேர்ந்ததாகக் கருதப்பெறும் ''மஹிராவணா" கதையின் செல்வாக்கினையும் கவிஞர் கீர்த்திவாசரின் செல்வாக்கினையும் இங்குக் குறிப்பிட வேண்டும். பிற்காலத்தே தமிழ்நாட்டுப் பெண்களிடையே புகழ்பெற்ற வாய்மொழி இலக்கியம் 'மயில்ராவணன் கதை'. சைதன்யரின் மரபுடையோர் இக்கதையினைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்திருக்கலாம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக