25.10.25

A/L ஊர்காண் காதை சம்பவச் சுருக்கம்

சிலப்பதிகாரம்

தமிழில் எழுந்த காப்பியங்களில் தலைசிறந்தது சிலப்பதிகாரம். சேர அரசன் தம்பி இளங்கோவடிகளால் பாடப்பட்டது. காவிரிப் பூம் பட்டினத்தில் பெருங்குடி வணிகர் மரபில் உதித்த கற்பிற் சிறந்த கண்ணகியதும் அவள் கணவனாகிய கோவலனதும் வரலாற்றைக் கூறும் குடிமக்கள் காப்பியமாகும். மூன்று காண்டங் களையும் முப்பது காதைகளையும் கொண்டது. 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு' என்று மகாகவி பாரதியாரால் புகழ்ந்துரைக்கப்பட்டது. சோழநாடு, பாண்டியநாடு, சேரநாடு என்பனவற்றின் இயல்புகளையும் அவற்றின் தலைநகரான புகார், மதுரை, வஞ்சி என்பனவற்றின் பெருமை களையும் அவற்றினை ஆட்சிசெய்த சோழ, பாண்டிய, சேர மன்னர்களின் பெருமைகளையும் எடுத்துரைக்கின்றது. அரசியலில் வழுவிய வேந்தரை அறக்கடவுள் கூற்றாய் நின்று கொல்லும் என்பதும், புகழடைந்த பத்தினியை வானோரும் ஏத்துவர் என்பதும், இருவினையும் செய்தோனை நாடிவந்து தம் பயனை நுகர்விக்கும் என்பதாகிய மூன்று உண்மைகளை எடுத்துரைக்கின்றது. இது முத்தமிழ்க் காப்பியம் என்ற பெயரையும் பெற்றுள்ளது.

ஊர்காண் காதை

சம்பவச் சுருக்கம்

கவுந்தியடிகளைக் கோவலன் தொழுது எழுதல்

தியானத்தில் தம்மை மறந்து ஈடுபட்டிருந்த கவுந்தியடிகள் கண் திறந்ததும் அவரைத் தொழுது எழுந்தான் கோவலன். எவ்வளவோ தொல்லைகளினூடே தன்னையும் கண்ணகியையும் அன்புடன் வழிநடத்தி மதுரைக்கு கொண்டு சேர்த்தது பற்றி நன்றி தெரிவித்தான். எந்தவிதத் துன்பமும் அதுவரை அனுபவித்தறியாத கண்ணகிக்குத் தனது அறிவற்ற செயலால் தான் அளவுகடந்த துன்பத்தை அளிக்க வேண்டிய நிலைமைக்கு உள்ளானதைக் கோவலன் கண்ணீர் மல்கக் கவுந்தியடிகளிடம் எடுத்துரைத்தான்.

தாம் எதிர்பாராதவைகள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டதால் இனிமேலாவது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணமுடன் புதிய உணர்வுடன் கவுந்தியடிகளிடம் தனது கழிந்த கால வாழ்க்கையை பற்றி அவன் வேதனையுடன் கூறினான். இனிப் பிழைக்கும் வழி தேடி, மதுரையம்பதிக்குச் சென்று, மன்னர்களுக்கு அடுத்தபடியாக சிறப்புடன் வாழும் வணிகர்களிடம் பேசி வருவதாகக் கூறினான். எவ்விதமும் தானும் ஒரு வணிகனாக வேண்டும். இழந்த பொருட்களை எல்லாம் மீண்டும் பெற்றுத் தன்னை இகழ்வோர் மத்தியில் தலைநிமிர்ந்து நடக்கவேண்டும் என்ற பேராவலுடன் அன்பு மனைவி கண்ணகியுடன் மதுரைக்குப் புறப்பட்ட அவன், கவுந்தியடிகளின் அன்பான துணையால் வந்து சேர்ந்ததும் தன் எண்ணத்தை அந்த ஒப்பரிய அறவோரிடம் கூறி விட்டுப் புறப்பட எண்ணினான். தான் சென்று வருவது வரை கண்ணகிக்கு அடைக்கலம் அளித்திட வேண்டி நின்றான்.

கவுந்தியடிகளின் அறிவுரை

தன்னைப் பற்றிய வரலாறு அனைத்தையும் எதையுமே மறைக்காமல் கவுந்தியடிகளிடம் கூறியதால் கவுந்தியடிகள் தமக்குத் தெரிந்த சில அறிவுரைகளைக் கோவலனுக்குக் கூறினார்.

"நீ முற்பிறவியில் நல்வினை செய்தவன்தான்; ஆனால் நீ கொஞ்சம் தீவினையையும் செய்த காரணத்தால்தான் உனக்கு இத்தகைய துன்பங்கள் வந்து சேர்ந்தன. ஏதுமறியாத கண்ணகியைக் காட்டு வழியில் நடத்தி வந்து, தொல்லை கொடுத்தது எல்லாம் நீ செய்த தீவினையின் பயன்தான். இப்போது நடக்கும் நன்மை தீமையெல்லாம் முற்பிறவியில் செய்த நன்மை தீமைகளின் பயனே என்பதை மட்டும் நீ உணர்ந்துகொள்"

"பாவச் செயல்கள் எந்தக் காலத்திலும் செய்யக்கூடாது; அந்தச் செயல்களைச் செய்யும் எண்ணத்தை அறவே விடவேண்டும். புண்ணியத்தில் நம்பிக்கையற்றவர்கள் என்னதான் அறிவோர்கள் உரைத்தாலும் -அறச் செயல்களைப் பற்றியுரைத்தாலும் அவற்றைக் கருத்துடன் கொள்ளவே மாட்டார்கள். தாம் விரும்புவதையே செய்வார்கள். பணம் இருக்கும்போது, வாய்ப்பு, வசதி இவைகள் எல்லாம் இருக்கும்போது, இவைகளையெல்லாம் நிலையானவை என்றெண்ணிக் கொண்டு, எப்போதுமே இவை துணை நிற்கும் என்ற எண்ணத்துடன் நல்வினை எதைப் பற்றியும், நல்லவை எதைப் பற்றியும் சிறிதளவு கூடக் கவலைப்படாமல் செல்வம், செல்வாக்கு இவைகள் தம்மைவிட்டு என்றுமே நீங்கா என்ற நினைவில் இறுமாப்புடன் எதையும் செய்வார்கள். தம்மை பற்றிய சிந்தனையை அறவே விட்டுவிடுவார்கள். பணம்தான் உலகம். செல்வாக்குத் தான் எல்லாமே என்ற ஓர் ஆணவத்தனமான போக்கே இவைகளுக்கெல்லாம் மூலகாரணம்"

"தீமைகள் வரத்தான் செய்யும். அதுவும் முன்வினைப் பயனால் வரத்தான் செய்யும். அப்போது அவர்களால் தாங்கவே முடியாது. எவ்வளவுதான் பணமும் வாய்ப்பும் இருந்தும் என்ன பயன்? எதுவும் உதவிக்கு வராது என்பதை உணர்வது நலமாகும். முன்வினைப் பயனை அனுபவிக்கும்போது கற்றறிந்த ஞானிகள் கவலைப்பட மாட்டார்கள். முன்வினைப் பயன் என்ற ஒன்று உண்டு அதன் வழி அதன் பலாபலன்களை அனுபவித்தே தீரவேண்டும் என்பதை அவர்கள் எண்ணியவர்களாய் அமைதி காணுவார்கள். ஆனால் கற்றறிந்த ஞானிகள் அல்லாதவரின் நிலைமை இதற்கு மாறாக இருக்கும்.

"மாதருடன் தீய வழியில் உறவு கொண்டவர்களுக்கு வரும் துன்பம் எவ்வளவு என்று சொல்லவேண்டியதேயில்லை. இவற்றை எல்லாம் நன்கு அறிந்திருந்தும் இந்த மாதர்கள் நெறி கெட்டு அலைகிறார்களே என்பதை எண்ணவே வேதனை வளருகின்றது. உணவும், பெண்கள் மூலம் கிடைக்கும் இன்பமுமே வாழ்க்கை என்று எண்ணியவர்களாய் வாழ்ந்து சுகபோகங்களில், நீந்தி விளையாடினால் வாழ்க்கையில் தவிர்க்க இயலாத நிலையில் சிக்கலும் சீரழிவுகளும் ஏற்படவே செய்யும் என்பது உறுதியாகும். ஆழ்ந்த ஞானத்தால் தம் உள்ளத்தைப் புனிதமாக்கிக் கொண்டவர் களுக்கு இதுபோன்ற துன்பங்கள் எல்லாம் வரவே வராது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.இதனால்தான் பெரியோர், அறவோர் என்று போற்றப்படுபவர்கள் எல்லாரும் பெண்ணாசையையும் பொன்னாசையையும் அறவே அடக்கிக் கொண்டார்கள். இவ்விதம் அடக்க முடியாது துன்புற்றவர்களில் நீயும் ஒருவனாகிவிட்டாய்.

"நீ மட்டுமல்ல, உன்னைப் போன்று இந்த மோகத்திற்கு அடிமையாகி எல்லாமே இழந்தவர்கள் எண்ணற்றவர்கள். மனிதர்கள் மட்டுமின்றித் தேவர்கள் கூட இந்தப் படுகுழியில் இறங்கிக் துன்பத்தை அனுபவித்துச் சீரழிந்துள்ளார்கள் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளுண்டு. "இராமன் தன் மனைவி சீதையுடன் காட்டிற்குள் சென்றானே ஏன், காட்டிற்குச் சென்று எவ்வளவு துன்பப்பட்டான். சீதையைக் கவர்ந்து சென்றானே இராவணன் எதனால்? எவ்வளவு தொல்லைகள், எவ்வளவு துயரங்கள். இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன? எல்லாமே முற்பிறவியில் செய்யும் நல்வினை, தீவினைகளைப் பொறுத்துத் தான் அமையும் என்பதைத் தானே காட்டுகின்றன. "நளன் கதைதான் தெரியுமே உனக்கு! ஏன் அவனுக்கு அந்தச் சீரழிவு? தன் அன்புக் காதலி தமயந்தியிடம் எவ்வளவு காதல் கொண்டிருந்தான்! இருவரும் இணைபிரியாமல் தானே இருந்தார்கள். ஒருவரில்லையேல் மற்றவர் இல்லை, வாழவே முடியாது என்று இருந்த அந்தக் காதலர்களின் வாழ்வு என்னவாயிற்று? தமயந்தியைக் கானகத்தில் தனியே காரிருளில் விட்டுச் சென்றது ஏன்? யாருடைய குற்றம்? யாருடைய குற்றமும் இல்லை; எல்லாமே தீவினைப் பயன்தான்; ஆமாம். முற்பிறவியில் செய்த பாவச் செயல்தான் காரணம் என்பதை அறியவேண்டும். இராமன் சீதையைப் பிரிந்து துன்புற்றான் என்பதை அறிவோம். நளன் கதையும் தெரிந்தது தான். ஆனால், நீ செய்த புண்ணியத்தால் உன் அன்பு மனைவியை பிரியவில்லை; உன் அன்பு மனைவியைப் பிரிந்து நீ வாழவில்லை. உன் மனதில் அறிவின் உணர்வு எழுந்தவுடன் ஓடோடி வந்து உன் மனைவியுடன் சேர்ந்துவிட்டாய். மீண்டும் கூறுகின்றேன், எல்லாமே முன் செய்த வினைப்படிதான் நடக்கும்"

"நீ உன் எண்ணப்படி இப்போதே புறப்பட்டு மதுரை மாநகர் சென்றுவா, நல்ல வழியைத் தேடி இனிமேலாவது உன்னையே நம்பி வாழும் இந்தப்பேதைப் பெண்ணான கண்ணகியுடன் இல்லறத்தை இனிது நடத்து. நீ இழந்த பொருட்களைப் பற்றியோ நீ நடந்துகொண்ட முறைகளைப் பற்றியோ இனி எண்ணுவதால் பயனே இல்லை. உன் கவலையை விட்டு நீ சென்று வருக" என்று கூறிக் கவுந்தியடிகள் கோவலனை அனுப்பி வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக