அறு குளத்து உகுத்தும்
திணை :- பாடாண் திணை
துறை :- இயன் மொழி
கொடை மடும் படுதல் அல்லது படை மடம் படான் என அரசனது இயல்பு மிகுதி தோன்றக் கூறியதால் இயன் மொழி ஆயிற்று.
பாடியவர் :- பரணர்
பாடப் பெற்றவர் : வையாவிக் கோப்பெரும் பேகன்
பாடல் :
அறுகுளத் துகுத்து மகல்வயற் பொழிந்தும்
உறுமிடத் துதவா துவர்நில மூட்டியும்
வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானைக் கழற்காற் பேகன்
கொடை மடம் படுத ல்லலது
படை மடம் படான் பிறர்
படைமயக் குறினே.
பதப்பிரிப்பு:
அறு குளத்து உகுத்தும் அகல் வயல் பொழிந்தும்
உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும்,
வரையா மரபின் மாரிபோல,
கடா யானைக் கழல் கால் பேகன்
கொடை மடம் படுதல் அல்லது,
படை மடம் படான், பிறர் படை மயக்குறினே.
பதவுரை :
அறு குளத்து உகுத்தும் - நீர் வற்றிய குளத்தில் பெய்தும்; அகல் வயல் பொழிந்தும் - அகன்ற
வயலினிடத்துப் பொழிந்தும்;
உறுமிடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும் இவ்வாறு குளத்திலும் வயல் நிலத்திலும் பெய்வதோடு அமையாது களர் நிலத்திலும் பெய்கிறது; வரையா மரபின் - எவ்விடத்திலும் வரையாத மரபினை உடைய; மாரி போல -
மழையைப் போல; கடாஅயானை
- மதம் கொண்ட
யானையையும்; கழல் கால் பேகன் - வீரக்கழல் அணிந்த காலையும் உடைய பேகன்; கொடை மடம் படுதல் அல்லது - பிறர்க்கு கொடை வழங்கும் போது அன்பு காட்டுவானே யன்றி;
பிறர் படை மயங்குறின் பிறர்
படையெடுத்து வந்த காலத்தில்;
படை மடம் பாரான் - அப்படைமீது அன்பு காட்டாது சினந்தெழுவான்
அருஞ் சொற்கள் :
அறுகுளம்
- வற்றிய குளம்;
உவர் நிலம் - களர் நிலம்
பொருள் :
மழையானது குறிப்பிட்ட இடத்தை வரையறை செய்யாது நீர் வற்றிய குளத்திலும் பெய்தது. அகன்ற
விளை நிலத்திலும் பெய்தது. இவ்வாறு குளத்திலும் விளை நிலத்தும் பெய்யாது களர் நிலத்திலும் பெய்தது. அம் மழைபோல மதம் கொண்ட யானையையும், வீரக்
கழல் அணிந்த காலையும் உடைய பேகன், பிறர்க்கு கொடை வழங்கும் போது அறியாமை உடையவன். பிறர்
படையெடுத்து வந்தபோது அப்படை மீது தான் அறியாமை படான்.
விளக்கவுரை :
இச் செய்யுள் பேகனின் கொடைச் சிறப்பினை வியந்து பாடியது. மழை எவ்வாறு வேண்டுமிடம் வேண்டா இடம் என்று வரையறை செய்யாது எல்லா இடங்களிலும் பொழிவது போல தன்னிடம் பரிசில் பெற வருபவர் எவராயினும் வேறுபாடு கருதாது கொடை வழங்கும் இயல்புடையவன்.
பாடல் பாடிய சந்தர்ப்பம் :
பேகனது கொடை நலம் தொடர்பாக சான்றோரிடையே ஒரு சொல்லாடல் நிகழ்ந்தது. சிலர் அவன் மயிலுக்குப் போர்வை கொடுத்தமை பற்றியும் முன்வந்தோர் பின்வந்தோர் என அறியாது வழங்குவது பற்றி அவர்களுக்கு மடம்பட மொழிந்தனர். அது கேட்ட பரணர் வீரக்கழல் அணிந்த பேகன் வரையாது வழங்கும்போது மாரி போலக் கொடை மடம் படுவதன்றி அரசர்களோடு போர் செய்யும்போது மடம் படுவதிலன் என கூறிய சந்தர்ப்பத்தில் பாடப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக