இலங்கை ஆற்றுப்படை
வினா விடைகள் :
1. இக் கட்டுரையில் ஆசிரியர் கூறவந்த விடயம் என்ன?
இராமாயணத்தில் குறிப்பிடப்படும் இலங்கை பற்றிய அபிப்பிராய பேதங்களை நீக்கும் வகையில், அது இலங்கை யையே குறிக்கின்றது என பல்வேறு சான்றுகளுடன் வாசகர் களை வழிப்படுத்துவதே ஆசிரியர் கூறவந்த விடயமாகும்.
2. அதனை எவ்வாறு வெளிப்படுத்துகின்றார்?
வழிப்படுத்துவதற்குப் பொருத்தமாக இலங்கையாற்றுப் படை என தலைப்பிட்டமை.
வரலாற்று சாசனங்களை முன்வைத்தல்.
வரலாற்று நூல்கள், இதிகாச நூல்கள், இலக்கிய நூல் களை ஆதாரம் காட்டுதல்.
இலங்கையின் மலைநாட்டில் உள்ள நிலவியல் இடப் பெயர்களை துணையாக கொள்ளுதல்.
இலங்கையில் நிலவிவரும் கர்ண பரம்பரையான ஐதிகங் களை சாதகமாக காட்டுதல்.
வெளிநாட்டு ஆய்வியலாளர்களின் குறிப்புகளூடாக வெளிப்படுத்தல்.
3. இராமாயணத்தில் குறிப்பிடப்படும் இலங்காபுரி இலங்கையே என்பதை வெளிப்படுத்தும் வரலாற்று ஆதாரங்கள் எவை?
i. இலங்கையை ஆட்சிசெய்த கயவாகு என்ற அரசனை 'கடல்சூழ் இலங்கை கயவாகு' என சிலப்பதிகாரம் கூறும் வரலாற்றுச் செய்தி.
ii. இலங்கையின் வரலாற்றை கூறும் மகாவம்சம் என்ற நூல் ஆதிமுதல் அந்தம் வரை இலங்கை என்றே குறிப்பிடுகின்றது.
iii. இந்தியாவிலிருந்து இலங்கை வந்த விஜயன் இலங்கை யில் இருந்த இயக்கர்களின் அரசியான குவேனியை மணம் செய்ததாகவும் இயக்கர்களின் தலைநகரம் இலங்காபுரி என்றும் மகாவம்சம் கூறுகின்றது.
iv. புதுக்கோட்டையில் கிடைத்த வீரபாண்டியனது சாசனம் ஒன்றில் இலங்கையை வென்று திருகோணமலையிலும் திரிகூட பர்வதத்திலும் மீன் இலச்சினை பொறித்ததாக கூறப்பட்டுள்ளது.
V. ஹெத்தார கோறளை பற்றிய பழைய சாசனம் அலுத் நுவார என்ற இடத்திற்கு தேவர்கள் விழாவைப் போல சூரிய சந்திர கொடிகளுடன் அணிவகுத்து இராமன் சென்றதாக கூறல்.
vi. வரலாற்று ரீதியில் தேவநம்பியதீசன் என்ற மன்னன் கட்டிய விகாரைகளில் ஒன்றான அரிட்டவிகாரம், சீதையைக் கண்டு இராமனிடம் செல்லும்போது அனுமன் தங்கிய அரிஷ்ட பர்வதத்தையே குறிக்கின்றது.
4. இராமாயணத்தில் குறிப்பிடப்படும் இலங்காபுரி இலங்கையே என்பதற்கு ஆசிரியர் தரும் இலக்கிய ஆதாரங்கள் எவை?
i. சிலப்பதிகாரத்தில் இலங்கையை ஆட்சிசெய்த மன்னன் கயபாகு, 'கடல் சூழ் இலங்கை கயவாகு' என குறிப்பிடப் படுகின்றான்.
ii. பழைய இதிகாசமாகிய மகாவம்சம் என்ற நூலில் ஆதி முதல் அந்தம் வரை இலங்கை என்றே அழைக்கப் படுகின்றது. அந்நூலில் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த விஜயன் இயக்கர்களின் அரசியாகிய குவேனியை திருமணம் செய்ததாகவும் அவளது தலைநகரம் இலங்காபுரி என கூறுகின்றது.
iii. இராமாயணம் திரிகூட பர்வதமலையின் உச்சியில் உள்ள இலங்காபுரியை இராவணன் தலைநகராக கொண்டிருந் தான் என கூறுகின்றது.
iv. இராவணனது தலைநகராகிய இலங்காபுரி நிலவில் ஆகாயத்தில் மிதப்பது போல காட்சியளித்ததாக அனுமானுக்கு தோன்றியதாக இராமாயணம் கூறுகின்றது.
v. இராமருடைய சேனை தென் சமுத்திரத்தின் கரையோர மாக வருவதை இராவணன் பார்த்ததாக இராமாயணம் கூறுகின்றது.
vi. அனுமன் சீதையை கண்டு பின்னர் இராமனிடம் திரும்பிச் செல்லும்போது அரிஷ்ட பர்வதத்தில் தங்கியதாக வான்மீகி இராமாயணம் கூறுகின்றது.
vii. இராவணன் வாழ்ந்த இடம் பாண்டி நாட்டிற்கு எதிரில் இருந்ததாக சுக்ரீவன் தன் சேனாவீரர்களுக்கு சொன்ன தாக கிஷ்கிந்தா காண்டம் 41ம் சர்க்கத்தில் வான்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. இதனை கம்பராமாயணத்தில் 'தென்தமிழ் நாட்டகன் பொதியில்' என்ற பாடலிலும் அறியலாம்.
viii. சம்புராமாயணம் இலங்கையை 'சிம்ஹௗத்வீபம்' என வெளிப்படையாகவே கூறுகின்றது.
ix. அகநானூற்றில் 70ம் செய்யுள் பாண்டி நாட்டின் தனுஷ்கோடியில் இலங்கை செல்வதற்கு ஆலோசனை நடத்திய சம்பவத்தைக் கூறுகின்றது.
x. தனுஷ்கோடியில் இராமர் இலங்கை செல்வதற்கு சிவனை வழிபட்ட சம்பவம் சம்பந்தருடைய இராமேசுவரப் பதிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
5. இராமாயணத்தில் குறிப்பிடப்படும் இலங்காபுரி இலங்கையே என்பதை கர்ணபரம்பரையாக வரும் ஐதிகங்களைக் குறிப்பிடுக?
சீதாபிராட்டி சிறையிருந்த இடமாகிய அசோகவனம் இலங்கையின் உயர்ந்த சிகரங்களில் ஒன்றாகிய ஹக்கலா என்ற இடத்தை சார்ந்தது என்பதை மக்கள் இன்றும் பேசிக் கொள்கின்றார்கள். (சீதாதலாவ)
இதற்கப்பாலுள்ள பாலுகமா அனுமனால் எரியுண்ட பாழடைந்த கிராமம் என்பதும் ஓர் ஐதிகம். இவ்விடத்தில் புல் பூண்டும் முளைப்பதில்லையாம்.
ஹக்கல என்ற இடத்திற்கும் அப்புத்தளை என்ற இடத்திற்கும் இடையே வெளிமட என்ற கிராமத்தில் இராமலங்கா என்ற இடத்திலேயே இராவணன் இறுதி யாகப் போர் செய்து இறந்தான் என்பதை புத்தபிக்குகள் கர்ண பரம்பரையான கதையாக கூறுகிறார்கள்.
மேலும் இம் மலைப்பகுதியில் இராவணன் தன் தலை நகரில் இருந்து வெளிச்செல்ல உபயோகித்த இராவணஎல்லா என்ற குகை இருந்ததாகவும் சொல்லப்படு கின்றது.
6. இலங்காபுரியே இலங்கை என்பதற்கு வெளிநாட்டவர் தரும் சான்றுகள் எவை?
மேல் நாட்டறிஞர்களில் ஒருவரான பார்ஜிட்டர் என்பவர் இராமாயணம் கூறும் இடங்களைப் பற்றி ஆராய்ந்த இவர், தென்னிந்தியாவிற்கு அண்மையில் உள்ள இலங்கையே இராமாயணத்தில் கூறப்பட்ட இலங்கை என்கிறார்.
மேஜர் போர்ப்ஸ் என்பவர் அடர்ந்த காடுகள் செறிந்த பகுதிகளுக்கூடாக சென்று மக்களுடன் கலந்துரையாடி வெளியிட்ட 'இலங்கையில் பதினோராண்டுகள்' என்ற நூலில் தூரும் வெலா பன்சாலா என்ற இடத்தில் சீதாபிராட்டி தன் கற்பு நிலையை நிரூபிப்பதற்கு தீக்குளித்து சத்தியம் செய்ததாக குறிப்பிடுகின்றார்.
பிரிட்டானிக்கா பல்பொருட் பேரகராதியில் சேது அணை தொடர்பான பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ் அணையினூடாகவே இராமரின் படைவீரர்கள் சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தானுஷ்கோடிக்கு அருகில் உள்ள இராமேசுரத்தில் இராமர் சிவபெருமானை வழிபட்டார் என்ற ஐதிகம் நீண்ட காலம் நிலவி வருகின்றது.
7. 'சேதுக்கரையே இராமர் அணை' என்பதை ஆசிரியர் எவ்வாறு எடுத்துக் காட்டுகின்றார்.
சேது என்பது அணையைக் குறிக்கும். தனுஷ்கோடி யிலிருந்து இராமரின் சேனை கடலைக் கடந்து இலங்கை செல்வதற்கு அணை கட்டியதாகவும் சொல்லப்படுகின்றது. இதற்கு சான்றாக மன்னார் தீவு வரையில் மணல் திட்டு ஒன்று தொடராக முப்பது மைல் தூரம் வரை கடலில் காணப்படுகின்றது. பிரிட்டானிக்கா பல்பொருட் பேரகராதியிலும் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் இத்திட்டுக்கள் இடையீடின்றி
ஒரே தொடராக இருந்தன
என்று குறிப்பிட்டுள்ளது.
சேதுக் கரையையே
வான்மீகி முனிவர்
மஹேந்திர துவாரம்
எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாணிக்கவாசக சுவாமிகளும்,
'மன்னு மாமலை மகேந்திரமதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும் எனக் குறிப்பிட் டுள்ளார். ஆகவே மகேந்திரம் சேது நாட்டில் உள்ளது. ஆகவே சேதுக்கரையே இராமர் அணையாகும் என கட்டுரை யாசிரியர் நிறுவியுள்ளார்.
8. இலங்காபுரியின் அமைவிடம் தொடர்பாக கட்டுரையாசிரியர் கூறுவனவற்றை எடுத்துக்காட்டுக?
திரிகூட பர்வதமலையின் உச்சியிலேயே இலங்காபுரி அமைந்திருந்தது. இதன் மூன்று பக்கங்கள் இயற்கையாகவே தலைநகரைச் சுற்றியுள்ள மதில்கள் போல் காணப்பட்டன. பகைவர்கள் அணுகமுடியாத இயற்கையரண்களாக காணப் பட்டன. மூன்று பக்கங்களிலும் செங்குத்தாக ஐயாயிரம் அடி உயரமுடைய மலைத்தொடர்கள் பயங்கரமான தோற்றத் துடன் காணப்பட்டது. எனினும் இதற்கிடையில் முப்பது மைல் அகன்று பதிந்த வள்ளம் போன்ற சமதரையும் காணப்பட்டது. இப்பிரதேசத்திற்குள்தான் ஹக்கல அப்புத்தளை நகரங்களுக்கு இடையே அழகான தோற்றத்தையும் தரக்கூடியதாக காணப் பட்டது. தலைநகரில் இருந்து இராவணன் தப்பிச் செல்வதற்கு அந்தரங்கமான ஓர் சுரங்கப்பாதையும் காணப்பட்டது. அது இராவண எல்ல என்ற பெயருடைய குகையாகும். இந்நகரம் இரவில் நிலவில் ஆகாயத்தில் மிதப்பது போல தெரியும். தலைநகரில் இருந்து அம்பாந்தோட்டையில் உள்ள உப்பளத்தையும் பார்க்கக் கூடியதாக இருந்தது.
9. கட்டுரையாசிரியரின் மொழிநடைச் சிறப்பினை ஆராய்க?
பொது மக்கள் விளங்கிக்கொள்ளும் வகையில் எளிய நடையில் பழகு தமிழில் மரபு கெடாது எழுதப்பட்ட மொழிநடையாக எழுதப்பட்டுள்ளது.
மொழிநடையில் இலக்கண அமைதி பேணப்பட்டுள்ளது.
கருத்துக்களை நிறுவுவதற்கு பிறநாட்டறிஞர்களினது கருத்துக்களும் புராண இதிகாச இலக்கியங்களில் பெறப்பட்ட விடயங்களையும் ஆதாரம் காட்டி எழுதப்பட்ட மொழிநடையாக உள்ளது.
வாக்கிய அமைப்பு சிறியதாக இருப்பினும் பொருட் செறிவுடையதாக அமைந்துள்ளது.
திரிசொல், திசைச்சொல் கலப்பில்லாது இயற்சொல்லால் இயன்று மொழிநடையாக உள்ளது. பிறநாட்டு அறிஞர் களின் பெயர்கள் ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ளன. வடசொற் பிரயோகமும் இடம்பெற்றுள்ளது.
10. ஆற்றுப்படை என்றால் என்ன என்பதை விளக்கி அதனூடாக கட்டுரையாசிரியர் வெளிப்படுத்தியனவற்றைப் புலப்படுத்துக?
ஆற்றுப்படை என்பது வழிப்படுத்தல் எனப் பொருள்படும். பொருள் பெற்ற ஒருவன், வறிய இரவலனைக் கண்டால் தான் பெற்ற செல்வத்தை இரவலனுக்கு கூறி அவ்வள்ளலிடம் சென்று பொருள் பெறுமாறு வழிப்படுத்தலாகும்.
கட்டுரையாசிரியர் இராமாயணத்தில் குறிப்பிடப்படும் இலங்கை நமது நாடே என்று தர்க்கரீதியான ஆதாரங்கள் காட்டி வாசகரை வழிப்படுத்திச் செல்கின்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக