போர்த்துக்கேயர் காலம்
ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தையடுத்து ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் இடம்பெறும் காலப்பகுதி போர்த்துக்கேயர் காலமாகும். போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்த கி.பி. 1505 முதல் கி.பி. 1658 வரையுள்ள 153 ஆண்டுகளை உள்ளடக்கியதாக இக்காலப்பகுதி விளங்குகின்றது. இக்காலத்தே தோற்றம் பெற்ற இலக்கியங்களாக ஞானப்பள்ளு, அர்ச்சயாகப்பர் அம்மானை, ஞானாநந்தபுராணம் முதலிய கத்தோலிக்க மத நூல்கள் விளங்கு கின்றன.
போர்த்துக்கேயர் காலத்தில் எழுந்த இலக்கியங்களுள் குறிப்பிடத்தக்க இலக்கியமாக அமைவது ஞானப்பள்ளு ஆகும். இயேசுநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு கத்தோலிக்க மதத்தைப் போற்றியும் புகழ்ந்தும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டு பள்ளுப் பிரபந்த இலக்கணத்திற்கமைய ஆக்கப்பட்டுள்ளது. ஞானப்பள்ளுப் பிரபந்தத்தில் இடம்பெறும் பாத்திரங்களாகிய மூத்தபள்ளி, பள்ளன் ஆகிய இருவரும் கிறிஸ்துநாதரின் பிறப்பிடமாகிய ஜெருசலேம் நாட்டவராகவும் இளைய பள்ளி கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைப்பீடமான றோமாபுரி நாட்டவராகவும் பண்ணைக்காரன் றோமாபுரி என்னும் பண்ணைக்கு உரிமை யாளனாகவும் சித்திரிக்கப்படுகின்றனர். இப்பள்ளுப் பிரபந்தம் சிந்து, கலிப்பா, விருத்தப்பா, வெண்பா ஆகிய யாப்புக்களால்
ஆக்கப்பட்டு 257 செய்யுட்கள் உடைய நூலாக விளங்குகின்றது. இதனைப் பாடிய ஆசிரியர் யாரென அறியுமாறில்லை. இந்நூல் வேதப்பள்ளு என்றும் அழைக்கப்படுகின்றது. இது கி.பி. 1642 ஆம் ஆண்டு தோன்றியது என்பர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்.
போர்த்துக்கேயர் காலத்தில் தோன்றிய மற்றோர் இலக்கியம் அர்ச்சயாகப்பர் அம்மானையாகும். யாழ்ப்பாணத்தில் பச்சிலைப் பள்ளிப் பற்றில் கிளாலி என்னும் இடத்தில் கோயில் கொண்ட யாக்கோப்பு என்னும் சந்யேம்ஸ் என்ற கிறிஸ்தவப் புனிதர் பேரில் எழுந்ததாகும். இந்நூல் பொதுப்பாயிரம், முடிவுரை நீங்கலாக 53 பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. நூலின் முற்பகுதியிலும், பிற்பகுதியிலும் கோயில் வரலாறு கூறப்பட்டுள்ளது கி.பி. 1647 ஆம் ஆண்டு கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் பாடப்பட்ட தாகப் பாயிரம் கூறுகின்றது. இந்நூலின் ஆசிரியர் தெல்லிப்பளையைச் சேர்ந்த பேதுருப் புலவர் ஆவார். இந்நூல் விருத்தப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பளையைச் சேர்ந்த தொம்பிலிப்பு அவர்களால் தொம் தியோகு முதலியின் விருப்பப்படி கிறிஸ்தவ மத விளக்கமாகிய ஞானாநந்த புராணம் பாடப்பட்டது. இப்புராணம் 1104 விருத்தப் பாக்களால் ஆனது.
இந்நூலின் காலம் பற்றிய கருத்து முரண் பாடுகள் காணப்படுகின்றன. இதனால் இதனது காலம் பற்றித் தெளிவாகக் கூறமுடியாதுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக