சரசோதிமாலை
இலங்கையில் எழுந்த தமிழ் நூல்களுள் காலத்தால் முந்தியதாகக் கருதப்படுவது சரசோதிமாலை என்னும் சோதிட நூலாகும். இந்நூல் தம்பதெனியாவை இராசதானியாகக் கொண்டு அரசு செலுத்திய நாலாம் பராக்கிரமபாகு (பண்டித பராக்கிரமபாகு என்பவனின் அவைக்களப் புலவராக விளங்கிய தேனுவரைப் பெருமாள் எனும் போசராச பண்டிதர் என்பவரால் கி.பி.1310ஆம் ஆண்டில் அரங்கேற்றப்பட்டது.
இலங்கையின் முதன் முதல் தமிழ் நூல் என்னும் பெருமைக்குரிய சரசோதிமாலை சோடச கருமப் படலம், ஏர் மங்கலப்படலம், பலகருமப் படலம், அரசியற் படலம், யாத்திரைப் படலம்,மனை செயற்படலம், தெய்வ விரதப் படலம், குணா குணப்படலம், சுபாசுபப்படலம், நாழிகைப் படலம், சாதகப் படலம், நட்சத்திர தெசைப்படலம் ஆகிய பன்னிரு படலங்களைக் கொண்டுள்ளது. 394 விருத்தப்பாக்களாலானது.
நூலாசிரியரான போசராசர் ஓர் அந்தணர். இவரது தந்தையார் சரசோதி. தமது தந்தையின் பெயராகிய சரசோதி என்பதை அடியொற்றி இந்நூலுக்குச் சரசோதி மாலை எனப் பெயரிட்டுள்ளார்.
"புண்டரீகத்தார் மார்பன் புகழ்ச்சரசோதி மைந்தன்
மண்டலமென்னுந் தேனு வரைப் பெருமாளென்றோது
பண்டித போசராசன் பரவு நற் குருவைப் போற்றித்
தண்டமிழ் விருத்தப்பாவாற் சரசோதி மாலை செய்தான்."
(- பாயிரம்)
எனும் பாடல் போசராச பண்டிதர் தமது தந்தை பெயரில் இச்சோதிட நூலை ஆக்கி அரங்கேற்றினார் என்பதை உறுதிப்படுத்துகிறது. நூலின் பாயிரத்திலும் பல்வேறிடங்களிலும் நாலாம் பராக்கிரமபாகுவினைப் புலவர் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக