வ.அ.இராசரத்தினம்
மண்வாசனை தவழும் சிறுகதைகள், நாவல்கள் பலவற்றைப் படைத்த பெருமைக்குரியவர் வ.அ.இராசரத்தினம். தமிழ் ஒளி, கலாபூஷணம் ஆகியபட்டங்களைப் பெற்றதோடு கிழக்கிலங்கை, மண்ணையும் மக்களையும் பாத்திரங்களாகத் தம் நாவல்களிலும் சிறுகதைகளிலும் உலாவவிட்டவர்.
ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் இலங்கையர்கோனைத் தம் வழிகாட்டியாகக் கொண்டு சிறுகதைகள் பல படைத்தவர். இலங்கையில் உள்ள பத்திரிகைகள் அனைத்திலும் எழுதியுள்ள இவர் "ஈழகேசரியில்" மட்டும் 29 சிறுகதைகளைப் படைத்துள்ளார்.
இவரது தோணி என்னும் சிறுகதைத் தொகுதியும்,"மண்ணிற் சமைந்த மனிதர்கள்" என்ற நாவலும் இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதுகளைப் பெற்றன. கொழு கொம்பு, துறைக்காரன், கிரௌஞ்சப் பறவைகள், ஒரு வெண் மணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கிறது. மண்ணிற் சமைந்த மனிதர்கள், ஆகியன இவர்படைத்த நாவல்களாகும். தேய்பிறை, சந்தானாள் புரவி, ஒரு காவியம் நிறைவு பெறுகிறது ஆகிய குறு நாவல்களையும் எழுதியுள்ளார். உருதுக் கவிஞர் ஒருவரின் கவிதைகளை மொழிபெயர்த்து 'பூவரசம பூ என்னும் கவிதை நூலையும் வெளியிட்டுள்ளார்.
பொச்சங்கள், திணைக்கதைகள் என்பனவும் இவரது புதிய படைப்புக்களாகும்.
மூதூரை வாழ்விடமாகக் கொண்ட இவர் மூதூர் மீனவ, விவசாய மக்களின் வாழ்க்கை முறைகள், பேச்சு வழக்குகள், நடையுடை பாவனைகள், சம்பிரதாயங்கள் அனைத்தையும் பின் புலமாகக் கொண்டு அம் மக்களது அவலங்கள், எழுச்சிகள், வீழ்ச்சிகள் என்பனவற்றைப் படம்பிடித்துக் காட்டும் வகையில் தன் நாவல்களையும் சிறுகதைகளையும் படைத்துள்ளார் என்றாலது மிகையல்ல. ஆசிரியராக, அதிபராகப் பணியாற்றிய இவர் இறக்கும் வரை எழுதிக் கொண்டிருந்தவர். இவரது எழுத்தாற்றல் ஏனைய எழுத்தாளர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்திருந்தது. இவரது எழுத்தாற்றலைப் போற்றி மதிக்கும் வகையில் வட கிழக்கு மாகாணசபை ஆளுநர் விருது வழங்கிக் கௌரவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக