7.9.25

அரசகேசரி பெறும் முக்கியத்துவம்

ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் அரசகேசரி பெறும் இடத்தினை மதிப்பிடுக.?

 

ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருந்த இவர் சங்கிலியனின் (எட்டாம் பரராஜசேகரன்) மருமகன் என்றும், கி.பி 16ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் கருதப்படுகின்றார். ஈழத்தில் பூதந்தேவனாருக்குப் பின் ஈழத்து இலக்கிய வரலாற்றில் தோன்றிய பெரும் புவராக விளங்குகின்றார். இவர் காளிதாச மகாகவியின் இரகுவம்ச காவியத்தைத் தழுவி நூல் செய்தவர். இவரது இரகுவம்சம் பொதுக்காண்டம், சிறப்புக் காண்டம், பொதுச்சிறப்புக் காண்டம் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. மேலும் 26 படலங்களையும் 2444 செய்யுட்களையும் கொண்டுள்ளது.

யாழ்ப்பாண இராச்சியத்தில் அரசு புரிந்த எட்டாம் பரராஜசேகரனின் வேண்டுகோளின் படியே இந்நூல் ஆக்கப்பட்டது. இரகுவம்சம் ஈழத்து முதற் காவியம் என்ற பெருமையைப் பெற்று விளங்குகின்றது. இவர் இருமொழிப் புலமை பெற்றவர். இதனை

வண்திசைக் காளிதாசன்வடமொழி

தென்திசைத்தமிழால் நனிசெய்தனே என்ற பாடல் சான்று பகர்கின்றது.

அரசகேசரி தமிழ் நாட்டிலே திருநெல்வேலியை அடுத்துள்ள ஆழ்வார் திருநகரியிலே இராமனுஜ கவிராஜரிடம் பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தவர். இவர் கல்வி கற்ற வைஷ்ணவ சமயச் சூழலும் இராமாயண கதைப் பரிச்சயமும் இரகுவம்ச அரசர் வரலாறு கூறும் காவியத்தைப் பாடச் செய்தது எனலாம்.

ஆற்றுப்படலம், நாட்டுப்படலம், நகரப்படலங்கள் தீலீபன் அரசியற்றியது, புத்திரப் பாக்கியமில்லாது வசிட்டரிடம் தன் குறை கூறுவது, வசிட்டர் வேண்டுகோள் படி காமதேனுவின் கன்றாகிய நந்தினியை வழிபடுவது, யாகம் இயற்றுவது, அயன் புத்திரன் பிறப்பது, அகலிகை சாபம் நீங்கியமை, இராம அவதாரம், இராவணன் வதம் போன்ற விடயங்கள் இங்கு இடம் பெறுகின்றன. இதில் 21 மன்னர்களில் வரலாறு தொடர்ச்சியாகக் கூறப்படுகிறது. திலீபன், இரகு, அயன், தசரதன், குசன், இராமன் ஆகியோரது வரலாறுகள் விரித்துரைக்கப்படுகின்றன.

அரசகேசரி தமது காலத்துக்குரியதான கடினமாக நடையில் செய்யுள்களைச் செய்துள்ள போதும் கம்பராமாயணத்தின் செல்வாக்கும் இதில் இடம் பெறுகிறது. கம்பன் கையாண்ட சொற்கள், சொற்றொடர்கள், உவமை, உருவகம் முதலானவற்றை அரசகேசரி தாரளமாகக் கையாண்டுள்ளார்.

கம்பருடைய காப்பிய அமைப்பினையே கையாண்டு பாடியுள்ளாார். சான்றாக

"உலகம்யாவையும் நிற்பனவுத்தொழில் - காப்பு

உலகம்யாவையும் சாமுனவாக்கலும்.....',

எனத் தொடங்கும் செய்யுளை நினைவுபடுத்துகின்றது. மேலும் மூல நூலான காளிதாச மகாகவியின் நூலில் இடம்பெறாத பகுதிகளையும் புதிதாக சேர்த்துள்ளார். எனினும், கம்பராமாயணத்தின் தரத்தை இரகு வம்சத்தினால் எட்ட முடியவில்லை.

கம்பராமாயணத்தில் மாத்திரமன்றி பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் அரசகேசரிக்கு ஆழ்ந்த புலமை இருந்தமையை அவரது காவியத்திலேயே காணமுடிகின்றது. யாழ்ப்பாணத்துத் தமிழ் கல்விப் பாரம் பரியத்திலே மிக நீண்ட காலமாக அரசகேசரியின் இரகுவம்சம் பாடஞ் சொல்லப்பட்டு வந்துள்ளது. மிக அண்மைக்காலம் வரை இப்பாடல் சொல்லும் மரபு வழங்கி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இக்காவியம் பாடஞ் சொல்லப்பட்டு வந்துள்ளமையினாலேயே தப்பிப் பிழைத்தது எனக் கருதலாம். 19ம் நூற்றாண்டிலே புகழ் பெற்று விளங்கிய யாழ்ப்பாணத்துப் புலவர்கள் பலர் அரச கேசரியின் இரகுவம்சத்திலே சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்றும் அறிய முடிகிறது.

யாழ்ப்பாணத்தில் அரச சேகரிக்கு இருந்த மதிப்பை அரச சேகரி வளவு நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் என்பன இன்றும் நினைவுபடுத்துகின்றன. கால இடைவெளிக்குப் பின் ஈழத்தமிழ்) வரலாற்றில் அமையும் ஒரு புலவர் அரச கேசரிப் புலவராவார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக