23.9.25

A/L கட்டுரை உலகமயமாக்கல்

உலகமயமாக்கல்

சட்டகம்
1.
முன்னுரை

2.
உலகமயமாக்கல் என்றால் என்ன?

3.
உலகமயமாக்கலும் நவீன தொழினுட்பமும்

4.
உலகமயமாக்கலை ஊக்குவிக்கும் சக்திகள்

5.
உலகமயமாக்கலால் ஏற்படும் விளைவுகள்

6.
முடிவுரை.

உலகமயமாக்கல் என்பது உலக நாடுகளையும் அவற்றில் வாழும் மக்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு செயன்முறையாகும். அது பொருளாதார, தொழில்நுட்ப, கலாசார மற்றும் அரசியல் பிணைப்புக்களுக்கூடாக உலக மக்களை மிக அருகில் எடுத்து வருவதுடன், அவர்கள் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் நிலையையும் அதிகரிக்கச் செய்கின்றது. மிக முக்கியமானதாக இருந்து வரும் பொருளாதார கண்ணோட்டத்தில் நோக்கும் பொழுது, உலகமயமாக்கல் என்பது அனைத்து நாடுகளினதும் வளர்ந்து வரும் பொருளாதார ஒருங்கிணைப் பாகவும், தேசிய சந்தைகள் ஓர் உலகளாவிய சந்தையில் ஒருங்கிணையும் ஒரு செயன்முறையாகவும் உள்ளது. தேசிய சந்தைகள்,பொருட்கள் மற்றும் சேவைகள் என்பவற்றிலான அதிகரித்த அளவிலான எல்லை தாண்டிய வர்த்தகத்திலும் சர்வதேச மூலதனம் மற்றும் பணம் என்பவற்றின் அசைவுகளுக்கூடாகவும் தொழில்நுட்ப பரிமாற்றத்துக் கூடாகவும் இது இடம் பெற்று வருகின்றது. புதிய சந்தை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும், செலவு அனுகூலம் மற்றும் உயர் இலாபம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு பொருளாதார நடவடிக்கைகள் தேசிய எல்லைகளைத் தாண்டி வியாபித்துச் செல்லும் பொழுது பண்ட உற்பத்தி வர்த்தகம் மற்றும் முதலீடு என்பன சர்வதேசமயமாக்கப்படுகின்றன. அரசியல் அடிப்படையில் நோக்கும் பொழுது உலகமயமாக்கல் என்பது ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்கள், பால் சமத்துவம், ஒளிவு மறைவற்ற ஆட்சி மற்றும் அரசு சாரா அமைப்புக்கள் என்பவற்றின் பெருக்கம் என்ற வகையிலேயே கருதப்பட்டு வருகின்றது. இது தவிர உலகமயமாக்கல் செயன்முறை ஒரு சமூகவியல் ரீதியான பரிமாணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதாவது, உலக மொழியாக ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்வதும் பொப் இசை, ஹொலிவூட் படங்கள், நீலநிறக் காற்சட்டைகள், திடீர் உணவகங்கள் மற்றும் நவீன வாழ்க்கை மோஸ்தர்கள் என்பவற்றின் பரவலாகவும் அது நோக்கப்படுகிறது. பொதுவாகக் கூறுவதானால் உலகமயமாக்கல் சக்திகள் கைத்தொழில் நாடுகளிலிருந்தே தோன்றி வருகின்றன. வளர்முக நாடுகளை தம்மால் வடிவமைக்கப்படும் உலகளாவிய அமைப்புக்குள் உள்வாங்கிக் கொள்வதே இச்சக்திகளின் நோக்கமாகும். இது அநேகமாக மேலைய நாடுகளின் மூலதனம், தொழில்நுட்பம், கலாசாரம்,எண்ணப் போக்குகள் மற்றும் வாழ்க்கைப் பாணிகள் என்பவற்றை வளர்முக நாடுகளுக்குள் ஊடுருவச் செய்கின்றன. இந்த வகையில் இது உலக நாடுகளின் பொருளாதார, கலாசார, அரசியல் மற்றும் சித்தாந்த கொள்கைகளை ஒரு முகப்படுத்தும் (அல்லது மேலைத் தேசமயமாக்கும்) ஒரு செயன் முறையாகவே தென்படுகிறது.

நவீன தொழில்நுட்பம்
மறுபுறத்தில், உலகமயமாக்கல் என்பது தொழில்நுட்பத்திற்கு ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தின் காரணமாக காலம், இடம் மற்றும் தேசிய எல்லைகள் என்பவற்றைச் சுருக்கியும் இல்லாமல் செய்தும் வருகின்றது. இணையம், இடம்பெயர் தொலைபேசி, தொலைநகல் பொறி முதலிய புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் மலிவானவையாகவும் உயர் வேகத்திறன் கொண்டவையாகவும் பரந்த ஆட்புலத்தை உள்ளடக்கக் கூடியவையாகவும் உருவாகி வருகின்றன. அவை நிதிச்சந்தைகளின் ஒருங்கிணைப்பினையும் பல தேசிய நிறுவனங்களின் பரவலையும் மக்களிடையே தகவல் மற்றும் கருத்துக்கள் என்பவற்றின் பரிமாற்றத்தினையும் வியப்பூட்டும் அளவுக்கு துரிதப்படுத்தியுள்ளன.

நாங்கள் இன்று வாழ்ந்துவரும் உலகம் பயங்கரமான போர்கள், வன்செயல்கள் மற்றும் குற்றச்செயல்கள் என்பவற்றினாலும் பெருகிவரும் அரசியல் கொந்தளிப்புக்களினாலும் சிதைந்து சின்னாபின்னமாக்கப்பட்டுக்காணப்படுகிறது. 21ஆம் நூற்றாண்டின் முதலாவது தசாப்தத்தில் சமாதானம். செல்வச்செழிப்பு மற்றும் சகவாழ்வு என்பவற்றிற்கான எதிர்பார்ப்புக்களை குழப்பங்கள் மலிந்த அரசியல், பொருளாதாரம், சமூகொழுங்கு களங்கப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்தப் பின்புலத்தில் மேலைய அதிகார வர்க்கம் அதன் மும்மூர்த்திகளான சர்வதேச நாணய நிதியம், உலகவங்கி மற்றும் உலகமயமாக்கல் என்று அழைக்கப்படும் சிக்கலான சர்ச்சைக்குரிய செயன்முறையை முன்னெடுத்துச் செல்கின்றது. மேலைய உலகின் ஊடக வலையமைப்புக்களும் கைத்தொழில் உலகின் குறுகிய அக்கறைக் குழுக்களும் எமது உலகம் இன்று எதிர்நோக்கியுள்ள அனைத்துவிதமான பிரச்சினைகளுக்கும் துர்ப்பாக் கியங்களுக்குமான சர்வரோக நிவாரணியாக உலகமயமாக்கலைச் சிபார்சு செய்து வருவதுடன், அதற்கூடாக சகல மக்களுக்கும் புதிய வாய்ப்புக்களும் புதிய தெரிவுக்களும் கிடைக்க முடியும் என வாக்குறுதி தருகின்றது. ஆனால், மூன்றாவது மண்டல நாடுகளின் பல கோடிக்கணக்கான மக்கள் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் போஷாக்கின்மை என்பவற்றின் பிடியில் சிக்கித் திணறி வருவதனை அவர்கள் எளிதில் மறந்துவிடுகின்றனர்.

உலகமயமாக்கல் செயன்முறையைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கும், அதனைச் சரியான வரலாற்றுப் பின்புலத்தில் வைத்து நோக்குவதற்கும் இதன் வேர்களை நாங்கள் கண்டறிவது அவசியமாகும். நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒருங்கிணைப்புச் செயன்முறை 19ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் உருவாகியதுடன், 1870-1913 காலப் பிரிவின் போது உலகப் பொருளாதாரத்தில் முன்னெப்பொழுதும் இருந்திராத அளவிலான பெருமாற்றங்கள் நிகழ்ந்தன. இக்காலப் பிரிவின் போது பல நாடுகள் உலகமயமாக்கலின் அடிப்படைக் குணாம்சமான உணர் அளவிலான திறந்த தன்மையைக் காட்டின. பொருட்கள், மூலதனம் என்பவற்றின் அசைவு தொடர்பாக நிலவி வந்த பெருந்தொகையான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதுடன், பொருளாதார நடவடிக்கையிலான அரசாங்கத்தின் தலையீடு குறைந்தபட்ச மட்டத்தில் வைக்கப்பட்டிருந்தது. உலகமயமாக்கல் நிகழ்வுப் போக்கின் இந்த முதலாவது கட்டம் முழுவதிலும் உலக விவகாரங்களில் பிரிட்டன் தனது மேலாதிக்கத்தை செலுத்தி வந்தது. முதலாவது உலக மகா யுத்தத்தின் ஆரம்பம் இந்தக் கட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. இதற்கு சுமார் 6 தசாப்த காலத்தின் பின்னர் தீவிரமான மாற்றங்களை எதிர்கொண்டிருந்த ஓர் உலகச் சூழ்நிலையில் ஐக்கிய அமெரிக்கா சர்வ வல்லமை பொருந்திய வல்லரசாக எழுச்சி அடைந்ததுடன் இணைந்த விதத்தில் 1970 களின் தொடக்கத்தில் உலகமயமாக்கலின் இரண்டாவது கட்டம் ஆரம்பமாகியது. இந்த இருகட்டங்களிலும் நிலவிவந்த குறிப்பிடத்தக்க ஓர் அம்சம் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தேசிய நாணயத்தைக் கொண்ட பொருளாதார வல்லரசொன்று உலகமயமாக்கலுக்கு அவசியமாக இருந்தமையாகும்.

20
ஆம் நூற்றாண்டின் பின்னரைப்பகுதியின் போது அரசு முதன்மையான ஒரு பங்கினை வகித்து வந்த அபிவிருத்தி மாதிரி ஒன்றை வளர்முக நாடுகள் பின்பற்றி வந்தன. இந்நாடுகளின் இறக்குமதி பிரதியீட்டு உத்தி குழந்தைப் பருவத்திலிருந்து வந்த அவற்றின் உள்ளுர் கைத்தொழில்கள் செழித்து வளர்வதற்கு உசிதமான ஒரு சூழ்நிலையையும் பாதுகாக்கப்பட்ட சந்தையையும் வழங்கியது. இக்கொள்கை உத்திகள் 1950களிலும் 1960களிலும் தீவிர முனைப்புடன் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. எனினும் இந்த உள்முக வழிப்பட்ட கொள்கைகளின் விளைவாக செயன்திறன் வீழ்ச்சியும் வெளியீட்டு இழப்புக்களும் ஏற்படலாயின.

உலகவங்கி /சர்வதேச நாணய நிதிய அநுசரணையுடனான அமைப்பு ரீதியான சீராக்கல் நிகழ்ச்சித்திட்டங்கள் 1980 களிலும் 1990 களிலும் உலகமயமாக்கல் செயன்முறையை மேலும் தீவிரப்படுத்தின. பல்தேசியக் கம்பெனிகளும் இதில் ஒரு முக்கியமான பங்கினை வகித்தன. கேள்வியில் ஏற்பட்ட வீழ்ச்சி, தமது சொந்த நாடுகளில் இடம்பெற்று வந்த செலவு அதிகரிப்புக்கள் என்பவற்றின் காரணமாக இக்கம்பெனிகள் தமது உற்பத்தி வசதிகளை வளர்முக நாடுகளுக்கு எடுத்துச் சென்றன. 1990 களின் பிற்பகுதியின் போது பெருந்தொகையான வளர்முக நாடுகள் பல்தேசியக் கம்பெனிகளின் மூலதனத்துக்கென தமது பொருளாதாரங்களைத் திறந்து விட்டன. பிறிதொரு முனையில் முன்னெப்பொழுதும் இருந்திராத விதத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பத்தாக்கங்கள், போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் என்பவற்றின் செலவுகளில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சிகளுடன் இணைந்த விதத்தில் உலகமயமாக்கல் செயன்முறையை மேலும் தீவிரப்படுத்தின.

இன்றைய நிலையில் முழு உலகமும் ஒரு பூகோள கிராமமாக சுருங்கி வரும் ஒரு பின்புலத்தில் உலகளாவிய ரீதியில் பொருளாதாரங்கள் ஒன்றில் ஒன்று தங்கியிருக்கும் நிலை வரவர அதிகரித்துக் கொண்டுவருகின்றது. இந்தச் செயன்முறையில் 5 பிரதான கூறுகளை அவதானிக்க முடிகிறது. (1) சர்வதேச நிதிச் சந்தைகளில் ஏற்பட்டு வரும் துரித வளர்ச்சி. (2) குறிப்பாக பல்தேசிய கம்பெனிகளிடையே வர்த்தகத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி. (3) வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் காணப்படும் பெரும் பாய்ச்சல். (4) உலகளாவிய சந்தைகளின் எழுச்சி, (5) உலகமயமாக்கப்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் வசதிகளின் பெருக்கத்துக்கு ஊடாக தொழில்நுட்பங்களும் கருத்துக்களும் பரவலாக வியாபித்துச் செல்லல். இந்தச் சூழ்நிலையில் பேரளவிலான அரசியல் மற்றும் பொருளாதார சக்தியை தம்வசம் கொண்டிருக்கும் (ஐரோப்பா, ஜப்பான், சீனா, ருஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய) வல்லரசுகள் உருவாகியுள்ளன. 1990 களின் போது உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட (தொழில் நுட்ப மாற்றங்கள். தகவல் தொழில்நுட்ப புரட்சி மற்றும் சோவியத் யூனியனின் வீழ்ச்சியை அடுத்து சர்வதேச ரீதியில் அரசியல் சூழலில் ஏற்பட்ட திருப்பங்கள் போன்ற) பெருமாற்றங்கள் உலகப் பொருளாதாரம் படிப்படியாக ஒருங்கிணைவுதற்கான ஒரு சூழ்நிலையைத் தோற்றுவித்தன. 1990 களின் நடுப்பகுதியின் போது வளர்முக நாடுகள் அனைத்துமே உலக வர்த்தக நிறுவனத்தில் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டதுடன், வர்த்தக தாராளமயமாக்கலுக்கான கடப்பாடுகளை ஏற்றுக் கொண்டன.

எவ்வாறிருப்பினும், உலகமயமாக்கலின் அனுகூலங்கள் நாடுகளுக்கு இடையில் சமமான முறையில் பகிரப்பட்டிருக்கவில்லை என்பதனை .நா.அபிவிருத்தி திட்டத்தின் மானிட அபிவிருத்தி அறிக்கை போன்ற பல ஆவணங்கள் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளன. உலகமய மாக்கலின் விரிவாக்கத்துடன் இணைந்த விதத்தில் சமூக, அரசியல் கொந்தளிப்புக்கள் தோன்ற முடியும் என்பதனை அண்மையில் சீட்டில் நகரத்திலும் பல மூன்றாவது உலக நாடுகளிலும் இடம் பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன. உலகவங்கி /சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வர்த்தக நிறுவனம் போன்ற சர்வதேச அமைப்புக்கள் உலகமயமாக்கலை ஆதரித்து பேசிவந்த போதிலும், வறிய உலகம் எதிர்கொண்டிருக்கும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், போஷாக்கின்மை மற்றும் தொழில்நுட்ப பின்னடைவு போன்ற முக்கியமான பல பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமலேயே இருந்து வருகின்றது. கல்வி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி, பயிற்சி,நிதி,வங்கித் தொழில், காப்புறுதி மற்றும் போக்குவரத்து போன்ற வளங்கள் அனைத்தும் வளர்ச்சியடைந்துள்ள கைத்தொழில் நாடுகளிலேயே ஒன்று திரண்டுள்ளன. இந்த நிலையில் வளர்முக உலகம் எதிர்காலத்தில் மாற்றம் மற்றும் செல்வச் செழிப்பு என்பனவற்றைச் சாதித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் அரிதாகவே தென்படுகின்றன. உலகமயமாக்கலை முனைப்புடன் ஆதரித்துப் பேசி வருபவர்கள், வறிய நாடுகள் தொடர்பாக அவர்கள் முன்வைத்து வரும் அபிலாஷையுடன் கூடிய இலக்குகள் சாதித்துக் கொள்ளப்படுவதனை உறுதி செய்தாலே ஒழிய இன்றைய இருண்ட யதார்த்த நிலைமைகள் இன்னும் பல வருடங்களுக்கு அவ்வாறே தொடர்ந்து நீடித்து வரக்கூடும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக