22.8.25

நன்னூல் எழுத்ததிகாரம்

முதலாவது

எழுத்ததிகாரம் (எழுத்தினது அதிகரித்தலையுடைய படலம்)

1. எழுத்தியல்
கடவுள் வணக்கமும் அதிகாரமும்

56. பூமலி யசோகின் புனைநிழ லமர்ந்த நான்முகற் றொழுதுநன் கியம்புவ னெழுத்தே.

(-ள்) பூ மலி அசோகின் புனை நிழல் அமர்ந்த நான் முகற்றொழுது- பூக்கள் நிறைந்த அசோக மரத்தினது அலங்கரிக்கப்பட்ட நிழலின் கண் எழுந்தருளியிருந்த நான்கு திருமுகங்களை யுடைய கடவுளை வணங்கி; எழுத்து நன்கு இயம்புவன் - எழுத்திலக்கணத்தை நன்றாகச் சொல்வேன் யான்.

எழுத் தென்பது ஆகுபெயர். ஏகாரம் ஈற்றசை.

எல்லாம் வல்ல கடவுளை வணங்கலால் இனிது முடியு மென்பது கருதி நன்கியம்புவ னென்று புகுந்தமையின், இது நுதலிப் புகுத லென்னும் உத்தி. 1

எழுத்திலக்கணத்தின் பகுதி

57. எண்பெயர் முறைபிறப் புருவ மாத்திரை முதலீ றிடைநிலை போலி யென்றா பதம்புணர் பெனப்பன் னிருபாற் றதுவே.

(-ள்) எண்-எழுத்தினெண்ணும்; பெயர்-பெயரும்; முறை - முறையும்; பிறப்பு - பிறப்பும்; உருவம்-வடிவமும்; மாத்திரை - அளவும்; முதல் (நிலை) முதல்நிலையும்; ஈறு (நிலை)-கடை நிலையும்; இடை (நிலை)-இடை நிலை யும்; போலி-போலியும்; பதம் - பதமும்; புணர்பு-புணர்ச்சி யும்; எனப் பன்னிருபாற்று என்று பன்னிரு பகுதியினை யுடைத்தாகும்; அது - அவ் வெழுத்திலக்கணம்.

நன்னூல்

(வி-ம்) இச் சூத்திரந் தொகுத்துச் சுட்டல் என்னும் உத்தி; மேல் வருவனவெல்லாம் வகுத்துக் காட்டல்.

இப் பன்னிரு பகுதியுள்ளும், எண் முதலிய பத்தும் எழுத்தின் அகத்திலக்கணம், பதம் புணர்பு என்னும் இரண் டும் புறத் திலக்கணமென்பது தோன்ற என்றாவென்னும் எண்ணிடைச் சொற் கொடுத்துப் பிரித்தோதினார்.

எழுத்தின் அகத்திலக்கணம் பத்தையும் எழுத்தியல் என ஓரியலாகவும் புறத்திலக்கணம் இரண்டனுள் அல் வெழுத்தாலாம் பதத்தைப் பதவியலென ஓரியலாகவும் அப் பதம் புணரும் புணர்ப்பை உயிரீற்றுப் புணரியல். மெய்யீற்றுப் புணரியல், உருபு புணரியலென மூன்றிய லாகவும் ஓத்து முறைவைப் பென்னும் உத்தியால் வைத்தார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக