அகத்தியம்
அகத்தியரைப் பற்றியும் அகத்தியத்தைப் பற்றியும் இறையனார் களவியலுரை கூறுகின்து. இவ்வுரை, அகத்தியம் தலைச்சங்கத்திலும் இடைச்சங்கத்திலும் இலக்கண நூலாக இலங்கிற்று எனவும் இயம்புகின்றது.
அகத்தியரைப் பற்றிய குறிப்புக்கள் சங்க இலக்கியங்களில் வெளிப்படையாகக் காணப்படவில்லை. பரிபாடலில் உள்ள 'பொதியின் முனிவன்' என்னும் தொடருக்கு, 'அகத்தியன் என்று ஓர் நட்சத்திரம்' என்று உரை வரைந்துள்ளார். பரிமேலழகர். மதுரைக் காஞ்சியில், 'தென்னவற் பெயரிய துன்னருந் துப்பின், தொன்முது கடவுள்' என்னும் பகுதியில், தொன்முது கடவுள்' எனவரும் தொடருக்கு, 'தொன்முது கடவுள் என்பது அகத்தியரைக் குறிக்கும்' என நச்சினார்க்கினியர் உரை கூறியுள்ளார். இவ்விரண்டு இடங் களும், உரையாசிரியர்கள், அகத்தியரைப் புகுத்திக் கூறிய இடங்களே ஆகும். சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அகத்தியரைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன.
அகத்தியரின் மாணவர்:
v அகத்தியரிடம் பயின்ற மாணவர் பன்னிருவர் என்பர். அவர்களாவார்:- தொல்காப்பியன்,
v அதங்கோட்டாசான்,
v துராலிங்கன்,
v செம்பூட்சேய்,
v வையாபிகன்,
v வாய்ப்பியன்,
v பனம்பாரனார்,
v கழாரம்பர்,
v அவிநயன்,
v காக்கைபாடினி,
v நற்றத்தன்,
v வாமனன் என்பவர். இம்மாணவர் பன்னிருவரும் பன்னிருபடலம் என்னும் புறப்பொருள் இலக்கண நூல் செய்தனர் என்றும் இந்நூலின் வழிவந்ததே புறப்பொருள் வெண்பாமாலை என்றும் வெண்பாமாலையின் சிறப்புப் பாயிரம் கூறுகின்றது. இதனால் பன்னிருபடல ஆசிரியர்களுள் தொல்காப்பியரும் ஒருவர் என அறிகிறோம். ஆனால், இளம்பூரணர் காலத்தில் பன்னிரு படலத்தில் வெட்சிப் படலம் தொல்காப்பியர் செய்ததன்று என்ற கொள்கை நிலவியது. இளம்பூரணரும் இக்கொள்கையினரே.
அகத்தியரும் தொல்காப்பியரும்:
அகத்தியர் மாணவர் பன்னிருவருள், தொல்காப்பியரே தலைமை வாய்ந்தவர் எனக் கருதினர்.
'ஆனாப் பெருமை அகத்தியன் என்னும்
அருந்தவ முனிவன் ஆக்கிய முதனூல்
பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோர்
நல்லிசை நிறுத்த தொல்காப் பியன்'
என்பது பன்னிருபடலப் பாயிர்ச் செய்யுள் எனக் கருதும் பகுதி.
'தென்மலை இருந்த சீர்சால் முனிவரன்
தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்'
என்பது வெண்பாமாலையின் சிறப்புப் பாயிரம். இவ் விரண்டும், தொல்காப்பியர் அகத்தியரின் மாணவர் என்பதனைக் காட்டும். தொல்காப்பியரோடு ஒருங்குகற்ற பனம் பாரனார், தாம்பாடிய தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில், அகத்தியனாரைப் பற்றியும் அவரது மாணவர் தொல்காப்பியர் என்பது பற்றியும் ஏதும் குறிக்கவில்லை. பனம்பாரனார் அகத்தியர் மாணவருள் ஒருவரும் கூட-இவ்வாறிருந்தும், இவர் அகத்தியரைப் பற்றிக் கூறாதது வியப்பே. ஆனால் நச்சினார்க்கினியர், பாயிரத்தில் வரும் 'அதங்கோட்டாசாற்கு அரில் தபத் தெரிந்து' என்னும் தொடரினைக் கொண்டு அகத்தியரையும் தொல் காப்பியரையும் இணைத்துக் கதையொன்று காட்டுகின்றார். இக்கதை, தொல்காப்பியத்தின் பெருமை காட்டக் கட்டப்பட்டதேயாயினும் உண்மையில் தொல்காப்பியத்தின் பெருமை கூறுவதாக இல்லை. ஆசிரியரும் மாணவரும் ஒருவர்க்கு ஒருவர் சபித்துக் கொண்ட போராட்ட நிலையே இக்கதையில் புலனாகின்றது. இக்கதையினை ஆதார முடையது என்று ஏற்றுக்கொள்ளுதல் இயலாது. இக்கதையின் தோற்றம்பற்றிப் பின் வருமாறு அறிஞர் க. வெள்ளை வாரணனார் கூறுவர்.
தொல்காப்பியனாரை அகத்தியர்க்கு மாணவர் எனக் கொள்வாரை, 'நான்கு வருணத் தொடுபட்ட சான்றோர்' எனவும், மாணவர் அல்லர் எனக் கூறுவாரை, 'வேத வழக்கொடு மாறுகொள்வார்' எனவும் பேராசிரியர் குறித்துள்ளார். இதனால் பேராசிரியர் காலத்தில், அகத்தியர்க்கு மாணவர் தொல்காப்பியர் என்னும் கதையினை உடன்படுவாரும் மறுப்பாரும் என இருதிறத்தார் இருந்தமை புலனாம். தொல்காப்பியனார் அகத்தியருக்கு மாணவரல்லர் என்னும் கொள்கையினர், தம் காலத்தில் வழங்கிய அகத்தியச் சூத்திரங்களுக்கும், தொல்காப்பியத்திற்கும் உள்ள முரண்பாடுகளைச் சான்றாகக் காட்டியிருத்தல் வேண்டும். இந்நிலையில் அகத்தியர் மாணவர் தொல்காப்பியர் என்னும் கொள்கையுடையோர், அகத்தியர்க்கு மாணவராகத் தம்மால் சொல்லப்படும் தொல்காப்பியனார், அகத்தியத்திற்கு மாறுபட நூல் செய்வதற்கு உரிய காரணத்தினைப் படைத்துரைக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. இந்நிலையில் புனைந்து வழங்கப் பெற்ற கதையே, தொல்காப்பியச் சிறப்புப் பாயிரவுரையில் நச்சினார்க் கினியரால் எடுத்துக்காட்டப் பெற்றதாகும்.!
இவற்றை நோக்கும்போது, 'அகத்தியர் மாணவர் பன்னிருவர்; அவருள் தொல்காப்பியர் சிறந்தவர்; தொல்காப்பியத்திற்கு முதனூல் அகத்தியம்' என்னும் பெருங்கதை பலநூற்றாண்டுகளாகவே வழக்காற்றில் வந்துவிட்டது என்பது புலனாகும்.
அகத்தியரைப்பற்றி:
தமிழ் உலகில் அகத்தியரைப்பற்றிய பல குறிப்புக்கள் காணப்படுகின்றன. இலக்கியம், இலக்கணம், மருத்துவம், சோதிடம் முதலிய அத்தனை துறைகளிலும் அகத்தியர் இடம் பெறுகின்றார். வடநாட்டிலும் தென்னாட்டிலும் அகத்தியர் என்ற பெயருடன் பலர், பலகாலங்களில் வாழ்ந்தனர் ஒவ்வொரு சமயத்தோடும் அகத்தியர் தொடர்புற்ற வரலாறுகளைக் காண்கிறோம். சிவபெருமானிடத்தில் தமிழ் கற்ற அகத்தியர் ஒருவர்; முருகப் பெருமானிடத்தில் தமிழ் கற்றார் என்றும் கூறுவர். போதிசத்துவராகிய அவலோகி தரிடத்தில் தமிழ் கற்ற அகத்தியர் மற்றொருவர். கண்ணனோடு தொடர்பு கொண்ட அகத்தியர் வேறொருவர். இவரைச் சைனர்கள் போற்றுவர். சித்தர்களில் ஒருவராகத் திகழ்ந்த அகத்தியர் பிறிதொருவர். அகத்தியர் பற்றிய குழப்பம் வரலாற்று உலகில் பெருங் கலக்கம் என்பதனை இலக்கிய வரலாறு கற்றார் நன்கு அறிவர். அகத்தியர் இருந்ததில்லை என ஒரு சாராரும், தொல்காப்பியர்க்கு முன் அகத்தியர் ஒருவர் இருந்தார்; அவர் செய்ததே அகத்தியம் என மற்றொரு சாராரும் கூறுவர். அகத்தியர் இயற்றியனவாகக் கூறப்படும் நூல்கள் கூறும் குறிப்புக்கள் கொண்டும் வரலாற்றுக் கண்ணோடு கற்பனை.யுலகில் பறக்காமல் அகத்தியரைப் பற்றி ஆராயவேண்டும்.
அகத்தியம் :
அகத்தியம் தொல்காப்பியத்தின் முதனூல் முத்தமி ழுக்கும் இலக்கணம் கூறுவது. 12,000 நூற்பாக்கள் கொண்டது என்பர். அகத்தியம் தொல்காப்பியத்தின் முதனூலாயின் சிறப்புப் பாயிரம் கட்டாயம் குறித்திருக்கும். இப்பாயிரம் குறிக்காத செய்தியைப் பின்வந்தோர் எங்குத் தேடிக் கண்டனரோ அறியோம்.
அகத்தியர் பெயரால் சிலசில நூற்பாக்களை இளம் பூரணர், மயிலைநாதர் முதலிய உரையாசிரியர்கள்' காட்டுகின்றனர். பேரகத்தியத் திரட்டு என்னும் நூலொன்றும் வெளிவந்துள்ளது. சிற்றகத்தியம் என ஒரு நூலும் செய்தார் என்று கூறுவர். சிற்றகத்தியம் என்பது பேரகத்தியம் கண்டு சுட்டிவிட்ட கதை போலும் இன்று உரையாசிரியர்களும் அகத்தியத் திரட்டும் காட்டும் அகத்திய நூற்பாக்கள், தலைச்சங்க அகத்தியர் செய்தன என்று கூற முடியாது. பிற்காலத்தில் அகத்தியர் பெயர் கொண்ட யாரோ ஒருவர் செய்திருத்தல் வேண்டும். ஒருவேளை அகத்தியர் பாட்டியல் ஆசிரியராகிய அகத்தியர் செய்தனவாகவும் இருத்தல் கூடும். அடியார்க்கு நல்லார், 'நாடகத் தமிழ் நூலாகிய பரதம், அகத்தியம், முதலாகவுள்ள தொன்னூல்களும் இறந்தன என்று கூறியுள்ளார். இதனால் அடியார்க்கு நல்லார் காலத்துக்கு முன், அகத்தியம், வழக்கிறந்தது என்பது. பெறப்படும். இவ்வழக்கிறந்த அகத்தியமே தலைச்சங்க அகத்தியமாக இருத்தல் வேண்டும்.- தொல்காப்பியம் இயற்றமிழ் இலக்கணமும், இசை நுணுக்கம் இசைத் தமிழ் இலக்கணமும், பரதம் நாடகத்தமிழ் இலக்கணமும் பற்றித் தனித்தனியே விரித்துக் கூறியதனால், முத்தமிழ் இலக்கண மான அகத்தியம் வழக்கிறந்து விட்டது போலும் என்பர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக