13.12.25

G.E.C.O/L- 2024(2025), தமிழ் இலக்கிய நயம், செய்யுட்பகுதி

 

தமிழ் இலக்கிய நயம்

செய்யுட்பகுதி

G.E.C.O/L- 2024(2025)

 

2.

அனை! எதிர்ந்து இவண் ஆய்வளையாரோடும்

மனையின் வாயில் வழியினை மாற்றினால்.

நினையும் வீரன் அந் நீள் நெறி நோக்கலான்;

வினையம் ஈது" என்று, அனுமன் விளம்பினான்.


நீரெலாம் அயல் நீங்குமின்; நேர்ந்து, யான்

வீரன் உள்ளம் வினவுவல்" என்றலும்,

பேர நின்றனர் யாவரும்; பேர்கலாத்

தாரை சென்றனள் தாழ்குழலாரொடும்.


உரைசெய் வானரவீரர் உவந்து உறை

அரசர்வீதி கடந்து, அகன்கோயிலைப்

புரசையானை அன்னான் புகலோடும், அவ்

விரைசெய் வார்குழல் தாரை, விலக்கினாள்.


விலங்கி மெல்லியல், வெள் நகை, வெள்வளை,

இலங்கு நுண்ணிடை, ஏந்து இள மென் முலை,

குலம்கொள் தோகை மகளிர் குழாத்தினால்,

வலம்கொள் வீரன் வருவழி மாற்றினாள்.


வில்லும் வாளும் அணிதொறும் மின்னிட

மெல் அரிக்குரல் மேகலை ஆர்த்து எழ,

பல்வகைப் புருவக்கொடி பம்பிட

வல்லிஆயம் வலத்தினில் வந்ததே.


ஆர்க்கும் நூபுரங்கள் பேரி, அல்குலாம் தடந்தேர் சுற்ற,

வேற்கண் விற்புருவம் போர்ப்ப, மடந்தையர் மிடைந்த போது

பேர்க்க அரும் சீற்றம்பேர, முகம்பெயர்த்து ஒதுங்கிற்றல்லால்

பார்க்கவும் அஞ்சினான், அப்பருவரை அனைய தோளான்.

(i). இங்கு, இலக்குவனின் வீரம் வெளிப்படுமாற்றை விளக்குக?

"நினையும் வீரன் (சிந்தித்து முடிவெடுக்கும் வீரனான இலக்குவன்) - அனுமன் கூற்று

புரசை யானை அன்னான் (யானை போன்றவன்) - கவிக்கூற்று

"
வலம் கொள் வீரன் (வெற்றியும் மேன்மையும் பொருந்திய இலக்குவன்) - கவிக்கூற்று

"
பருவரை அனைய தோளான்" (பருத்த மலை போன்ற தோள்களை உடையவன்) - கவிக்கூற்று

வீரன் - தாரை கூற்று


(ii). தாரையின் ஆளுமைத் திறத்தை உணர்ந்துகொள்ளக்கூடிய சந்தர்ப்பத்தை விவரிக்குக?

"நீரெலாம் அயல் நீங்குமின்; நேர்ந்து யான் வீரன் உள்ளம் வினவுவன் என்ற கூற்றின் தன்னம்பிக்கை வெளிப்படல்.

தன் உறுதியான கொள்கையிலிருந்து பின்வாங்காத் தன்மை "பேர்கலாத் தாரை"

"
விரைசெய் வார்குழல் தாரை, விலக்கினாள் ....

" இலக்குவன் வரும் வழியை தாரை தடுத்தமை.

"
மகளிர் குழாத்தினால் வலங்கொள் வீரன் வருவழி மாற்றினாள் - மகளிரோடு சென்று இலக்குவனின் சீற்றத்தை தணிய வைத்துப் புத்திசாலித்தனத்தோடு எதிர்கொண்டமை.

 

(iii). இலக்குவனின் ஒழுக்கத்தின்மீது அனுமன் கொண்ட நம்பிக்கையும், அந் நம்பிக்கை வீண்போகாதவாறும் வெளிப்படுமாற்றை விளக்குக?

நம்பிக்கை - "அந்நீள்நெறி நோக்கலான்"

இலக்குவன் வரும் வழியை பெண்களோடு சென்று தடுத்து விட்டால் பெண்கள் நிற்கும் வழியில் இலக்குவன் தொடர்ந்து வரமாட்டான் என்பது நம்பிக்கை

வீண்போகாதவாறு - "பார்க்கவும் அஞ்சினான்" - வானர மகளிர் தன்னைச் சூழ்ந்தபோது, இலக்குவன் அவர்களை ஏறெடுத்தும் பார்க்க அஞ்சி உள்ளம் கூசி ஒதுங்கி நிற்றல்.


(iv). வானர மகளிர் குழுவானது சேனையாக, பொருத்தமுற உருவகிக்கப்பட்டிருக்குமாற்றை விளக்குக?

வானர மகளிரின் தோற்றம் போர்க்கோலம் கொண்ட படையாக உருவகிக்கப்பட்டுள்ளது.

சிலம்பொலி - பேரிகையாக

அல்குல் - பெரிய தேராக

வேற்படை - கண்களாக

கொடி - புருவங்களா

உருவகிக்கப்பட்டுள்ளன.

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக