18.11.25

புத்தகசாலை கவிதை விளக்கம்

புத்தகசாலை

பாரதிதாசன் (1891 - 1964)

பாரதிதாசன் தென்னிந்தியாவின் பாண்டிச்சேரியில் பிறந்தவர். கனக சுப்பு

ரத்தினம் என்ற தன் பெயரை பாரதியின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாகப்

பாரதிதாசன் என்று ஆக்கிக்கொண்டார். ஆசிரியராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும்

பணியாற்றிய இவர், திராவிடக் கொள்கையினால் ஈர்க்கப்பட்டார். வீரத்தாய், அழகின்

சிரிப்பு, போர் மறவன், பாண்டியன் பரிசு, இருண்ட வீடு முதலான படைப்புக்களையும்

ஆக்கியுள்ளார்.

 

இன்று இணையம் பெற்றிருக்கும் இடத்தை ஒருகாலத்தில் நூலகம்

பெற்றிருந்தது. கலை, இலக்கியம், அறிவியல் அனைத்தும் ஓலைச் சுவடிகளில்

எழுதப்பட்டிருந்தன. ஓலைச் சுவடிகள் செல்வந்தர்களிடமும் குறிப்பிட்ட சிலரிடமும்

முடங்கிக் கிடந்த நிலையில் அச்சு இயந்திரத்தின் வருகையுடன் இவைகள்

பதிப்பிக்கப்பட்டு நூல்களாகப் பல்கிப் பெருகி அறிவுத்தாகம் நிறைந்தவர்களைச்

சென்றடைந்தன. பின்னர் இந்நூல்கள் நூலகத்தில் குவிந்தன. இக்கவிதையும்

நூலகத்தின் மீதான ஈர்ப்பு, அது ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றை விபரிக்கின்றது.

 

தனித்தமைந்த வீட்டில் புத்தகமும் நானும்

சையோகம் புரிந்ததொரு வேளைதன்னில்,

இனித்தபுவி இயற்கையெழில் எல்லாம் கண்டேன்;

இசைகேட்டேன்! மணம்மோந்தேன்! சுவைகள் உண்டேன்!

மனிதரிலே மிக்குயர்ந்த கவிஞர் நெஞ்சின்

மகாசோதியிற் கலந்த தெனது நெஞ்சும்!

சனித்ததங்கே புத்துணர்வு! புத்தகங்கள்

தருமுதவி பெரிது! மிகப்பெரிது கண்டீர்!

பொருள்:-

தனியே உள்ள வீட்டில் புத்தகமும் நானும் இணைந்த பொழுதினிலே இனிமையான பூமியின் இயற்கை அழகு எல்லாவற்றையும் கண்டேன், அத்துடன் இசையைக் கேட்டேன், மணத்தினை நுகர்ந்தேன், சுவைகளை உண்டேன், மனிதர்களில் மிகவும் உயர்ந்த கவிஞர் உள்ளத்தின் பேரொளியில் எனது உள்ளமும் கலந்தது. அங்கே எனக்குப் புது உணர்வு பிறந்தது. புத்தகங்கள் செய்யும் உதவி பெரிதிலும் பெரிது என்பது காணுங்கள்!.

மனிதரெலாம் அன்புநெறி காண்பதற்கும்

மனோபாவம் வானைப்போல் விரிவடைந்து

தனிமனித தத்துவமாம் இருளைப் போக்கிச்

சகமக்கள் ஒன்றென்ப துணர்வதற்கும்,

இனிதினிதாய் எழுந்த உயர் எண்ணமெல்லாம்

இலகுவது புலவர்தரு சுவடிச்சாலை;

புனிதமுற்று மக்கள் புது வாழ்வுவேண்டில்

புத்தக சாலை வேண்டும் நாட்டில்யாண்டும்.

பொருள்:-

மனிதர்கள் எல்லோரும் அன்புநெறி காணவும் மனப்பாங்கு வானத்தைப் போல விரிவடைந்து, சுயநல இருளைப்போக்கி, எல்லாமக்களும் சமமானவர்கள் என உணர்வதற்கும், இனிமையாக எழுந்த உயர்ந்த சிந்தனைகள் எல்லாவற்றையும் வழங்குவது நூலகமே ஆகும். தூய்மையடைந்து புதுவாழ்வை மக்கள் பெற விரும்பினால் நாட்டில் எவ்விடத்திலும் நூல் நிலையங்கள் வேண்டும்.

 

 

தமிழர்க்குத் தமிழ்மொழியிற் சுவடிச்சாலை

சர்வகலா சாலையைப்போல் எங்கும்வேண்டும்.

தமிழிலிலாப் பிறமொழிநூல் அனைத்தும் நல்ல

தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்.

அமுதம்போல் செந்தமிழிற் கவிதைநூற்கள்,

அழகியவாம் உரைநடையில் அமைந்த நூற்கள்,

சுமைசுமையாய்ச் சேகரித்துப் பல்கலைசேர்

துறைதுறையாய்ப் பிரித்தடுக்கி வைத்தல்வேண்டும்.

பொருள்:-

தமிழ் மக்களுக்கு என்றே தமிழ் மொழியில் புத்தகசாலை பல்கலைக்கழகம் போல எங்கும் இருத்தல் அவசியம். தமிழ் இல்லாத பிறமொழிப் புத்தகங்கள் எல்லாவற்றையும் தமிழில் மொழி பெயர்த்து வாசிக்கத் தருதல் வேண்டும். அமுதம் போல இனிமையான தூய தமிழில் கவிதைப் புத்தகங்கள், அழகிய உரைநடை நூல்கள், தொகையாகச் சேர்த்து பலகலைகள் சேர்ந்த வகையில் அவற்றை . ஒவ்வொரு துறை துறையாக வேறு வேறாகப் பிரித்து அடுக்கி வைத்தல் வேண்டும்.

நாலைந்து வீதிகளுக் கொன்று வீதம்

நல்லதுவாய் வசதியதாய் இல்லம் வேண்டும்.

நூலெல்லாம் முறையாக ஆங்கமைத்து

நொடிக்குநொடி ஆசிரியர் உதவுகின்ற

கோலமுறும் செய்தித்தாள் அனைத்தும் ஆங்கே

குவிந்திருக்க வகைசெய்து தருதல் வேண்டும்.

மூலையிலோர் சிறுநூலும் புதுநூலாயின்

முடிதனிலே சுமந்து வந்து தருதல் வேண்டும்.

பொருள்:-

ஊரிலே நான்கு அல்லது ஐந்து வீதிகட்கு ஒன்று வீதம் நன்றாக அமைந்த வசதியான ஒரு வீடு தேவை. அங்கே நூல்களை முறையாக வைத்து உடனுக்குடன் உதவும் விதம் விதமான பத்திரிகை அங்கே குவிந்து நிறைந்திருக்க ஒழுங்கு செய்துதருதல் அவசியம். ஒரு பக்கத்தில் சிறிய புத்தகமும் புதிய நூலாயின் தலையிலே எடுத்து வந்து தருதல் வேண்டும்.

வாசிக்க வருபவரின் வருகை ஏற்றும்

மரியாதை காட்டி அவர்க் கிருக்கை தந்தும்,

ஆசித்த நூல்தந்தும் புதிய நூல்கள்

அழைத்திருந்தால் அதையுரைத்தும், நாளும் நூலை

நேசித்து வருவோர்கள் பெருகும் வண்ணம்

நினைப்பாலும் வாக்காலும் தேகத்தாலும்

மாசற்றதொண் டிழைப்பீர்! சமுதாயச்சீர்

மறுமலர்ச்சி கண்டதென முழக்கஞ் செய்வீர் !.

பொருள்:-

வாசிக்கவரும் வாசகர்களை வரவேற்று மரியாதை செலுத்தி அவரை ஆசனத்தில் இருக்கச் செய்தல் வேண்டும். அவர்கள் விரும்பிய புத்தகம் கொடுத்தும் புதிய புத்தகங்கள் வந்திருப்பின் அதைக்கூறுதலும் தினமும் வரும் வாசகர் எண்ணிக்கை பெருகும் வகையில் எண்ணம், சொல், உடல் என்பவற்றால் குற்றமில்லாத இத் தொண்டினைச் செய்யுங்கள். இதனால் சமுதாய ஒழுங்கு மறுமலர்ச்சி பெற்றுக்கொண்டது என்று முழக்கம் செய்யுங்கள்.

அரும்பதங்கள்

சையோகம் - இணைந்திருத்தல்

சனித்தது - பிறந்தது

கோலம் - அழகு

மாசற்ற - குற்றமற்ற

சுவடிச்சாலை - ஆவணக் காப்பகம்

ஆசித்த - விரும்பிய

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக