காலம் பொன் போன்றது
குறிப்புக்கள் :
1. முன்னுரை
2. காலம் குறித்த முதுமொழிகள்
3. காலமும் கடமையும்
4. காலத்தைப் பொன் செய்வோம்
5. காலத்தை வீணாக்காதீர்
6. முடிவுரை
காலம் பொன் போன்றது. அதனை நன்கு மதித்து வாழ்வதே மக்கள் தம் கடமையாகும். இதனையே பேரறிஞர் அண்ணாவும் "காலம் பொன் போன்றது: கடமை கண்போன்றது" என்றார். மக்கள் தம் வாழ்வுக்காலம் எல்லையுடையது. அதனை நாம் வரையறையிட்டு உரைத்தல் இயலாது. மனிதன் தன் இளமைப் பருவத்திலும் உறக்கத்திலும் முதுமையிலும் வாழ்வின் பெரும் பகுதியை இழந்து விடுகிறான். எஞ்சிய சிறு பகுதிக்காலமே அவன் தன் அறிவை வளர்த்திடவும் ஆளுமையை விருத்தி செய்யவும், பணிபலபுரிந்திடவும் வாய்ப்புக்கிட்டுகிறது. எனவே அவன் தனக்குக்கிடைக்கும் சிறுகாலத்தைப் பொன்போற் போற்றி மதித்து வாழ வேண்டிய கடப்பாடுடையவனாகிறான்.
'பருவத்தே பயிர் செய்',
'இளமையிற் கல்' என்ற முது மொழிகள் ஆழ்ந்த கருத்துடையன. அவை நம்முன்னோர் மொழிந்த அனுபவமொழிகளாகும். பயிர் செய்ய வேண்டிய காலத்திற் பயிர் செய்ய வேண்டும். வயலை உழவேண்டிய வேளையில் உழுது, விதை விதைத்து பயிர் செய்யவேண்டியவன் உழவன். அவன் பயிர்செய்ய வேண்டிய காலத்தை விட்டுவிட்டுப் பின்னர் அறுவடை நிகழவேண்டிய காலத்தில் பயிர் செய்ய முற்பட்டால் என்ன விளையும்? பயிர் செய்ய வேண்டிய பருவத்திலேயே பயிர் செய்ய வேண்டும். இந்த உண்மையை நாம் ஒரு போதும் மறக்கக் கூடாது. 'பருவத்தே பயிர் செய்'
என்னும் பழமொழி இதனையே நமக்கு உணர்த்துவதோடு காலத்தின் அருமையினையும் புலப்படுத்துகிறது.
'இளமையிற்கல்' என்னும் முதுமொழியும் இதனையே வலியுறுத்துகிறது. இளமைக் காலந்தான் கற்றலுக்கு ஏற்றகாலம். அக்காலத்தை நாம் தக்கவகையில் பயன்படுத்தத் தவறுவோமானால் பின்னர் அதன் அருமையினை நினைந்து வருந்த நேரிடும். ''ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்னும் மற்றோர் பழமொழியும் இதனையே நமக்கு உணர்த்துகிறது. எனவே ஒருவன் இளமைப்பருவத்தில் தவறாமல் கல்வியைக் கற்றுத் தேற வேண்டும். இளமையில் கற்கும் கல்வி 'உரிய'
காலத்தில் செய்யும் பயிரைப் போன்றது. இளமைப்பருவத்தில் கல்வியைப் பெற்றவர் தம் வாழ்வில் பெரும் பயனடைவது திண்ணம். காலமென்பது கறங்குபோற் சுழல்வது. அதன் வேகத்தை அறிந்து, மேற்கொண்ட பணிகளில் வெற்றி பெற ஒவ்வொருமனிதனும் அயராது உழைக்க வேண்டும். 'முயற்சி திருவினையாக்கும்' என்பதை மறந்துவிடக் கூடாது. காலத்தை நன்கு பயன்படுத்திக் கடமையைச் செய்ய வேண்டும்.
ஆற்றலோடு காலமும் அறிந்து செய்தால், செய்தற்கு அரிய செயல் என எதுவுமில்லை என்பது வள்ளுவர்வாக்காகும்.
'ஞாலங் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின் என்பது திருக்குறள். உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயற்பட்டால் உலகமே கூடக் கைக்குள் வந்து விடும் என்கிறார் வள்ளுவர். இதன் மூலம் காலமறிந்து செயற்படுவதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஆதலால் காலத்தின் அருமையை உணர்ந்து நாம் கடமையாற்ற முனைய வேண்டும்.
காலத்தைப் பொன் என மதித்து வரையறை செய்து வாழும் வாழ்வே உன்னத வாழ்வாகும். வையத்து வாழ்வாங்குவாழும் வழியும் இதுவேயாகும். உலகில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் யாவும் வரையறுத்தே செய்யப்படுகின்றன. எந்த நிகழ்வையும் குறிப்பிட்டபடி குறிப்பிட்ட காலத்தில் நடத்தாவிட்டால், நடாத்துவோர்க்குப் பொன்னான பொழுது வீணாகும். அதனால் மற்றவர்க்கும் தொல்லை ஏற்படும். காலத்தைப் பொன்னாகக் கருதிச் செயற்பட்டவர்களே வாழ்வில் உயர்வடைவர். இதற்குச் சான்றுபகர்வோர் பலருளர். அவர்களுள் பகுத்தறிவுத் தந்தை ஈ.வே.ரா குறிப்பிடத்தக்கவராவார். அவர் எதிலும் காலந்தவறாதவர்.
சிலர் காலத்தை வீணாக்குகிறார்கள். பொழுதே போகவில்லை என்று கூறுகிறார்கள். கிடைக்கும் பொழுதைத் தீய வழியில் - சூதாடுதல், மதுவருந்துதல் போன்ற பயனற்ற செயல்களில் செலவிடுகின்றனர். இவர்கள் தமக்குக் கிடைக்கும் பொன்னான நேரத்தை வீணாக்குவதுடன் பொருளையும் பொறுப்பற்ற நிலையில் பாழாக்குகின்றனர். பயனற்ற பேச்சுக்களைப் பேசிக் காலம் கழிப்போரும் இன்பக்களியாட்டங்களில் ஈடுபட்டுக் காலத்தை வீணாக்குவோரும் தமக்கும், தாம் வாழும் சமுதாயத்திற்கும் தீங்கே விளைவிக்கின்றனர். இங்ஙனம் பொன்னான நேரத்தைப் பாழடிப்போரே 'மக்கள் பதடிகள்' ஆவர்.
முயற்சியோடு உழைப்பவர்கள், காலத்தைப் பொன் செய்பவர்கள் எக்காலத்திலும் வறுமையடைவதில்லை. 'முயற்சி தன் மெய்வருந்தக் கூலிதரும்' என்னும் ஆன்றோர் வாக்கை நாம் நினைவிற் கொண்டு உயர்ச்சியடைய முனைய வேண்டும்.
காலத்தின் அருமை தெரிந்து கடமை செய்வோரே ஞாலத்தில் சிறந்து விளங்குவர். உரிமையோடு வாழ விரும்பும் நாம் கடமையைச் செவ்வனே ஆற்றவேண்டும். இதனைக் கருத்திற் கொண்டு செயற்படின் வெற்றிப் பாதையில் வீறு நடை போட முடியும்.
பயன் மிக்க செயல்களைக் காலம் அறிந்து செய்வோர்க்குச் செல்லும் பாதை செவ்வனே அமைந்து செல்வம் நல்கும். அவர்தம் செயல்கள் யாவும் சிறப்புற அமையும். என்றும் புகழுடன் வாழ்வர். எனவே காலத்தைப் பொன் செய்ய அனைவரும் முற்படவேண்டும். காலத்தின் அருமை உணர்ந்து தம் செயல்களைச் செய்திட வேண்டும். காலத்தைப் பொன் எனக் கருதிச் செயற்படுவோமாக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக