பேராசிரியர் சு.வித்தியானந்தனின் தமிழ்ப் பணிகள்.
குறிப்புக்கள் :
1. முன்னுரை
2. வாழ்க்கைப் பின்னணி, அவர் பெற்ற பட்டமும் பதவிகளும்
3. தமிழிலக்கிய ஆய்வு
4. நாட்டாரிலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள்
5. இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சிக்கு உதவியமை
6. தமிழாராய்ச்சி மகாநாடுகளுக்கு வழங்கிய பங்களிப்பு
7. தலைசிறந்த மனிதாபிமானி
8. முடிவுரை
தமிழியற் பணியினைத் தம் இலட்சியமாகக் கொண்டு தமிழ்ப்பணியாற்றிய பெருந்தகை பேராசிரியர் சு.வித்தியானந்தன் ஆவார். பேராசிரியர்கள், நிர்வாகிகள், எழுத்தாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள் எனப் பல்வேறுபட்டவர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். பேராசிரியராக, யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தராக, தமிழாராய்ச்சியாளராக விளங்கியதோடு மட்டுமன்றித் தலைசிறந்த மனிதாபிமானியாகவும் விளங்கியவர். மாணவர் தம் உளங்கவர்ந்த ஆசானாகத் திகழ்ந்த இப்பேராசிரியரின் தமிழ்ப்பணிகள் என்றும் நினைவு கூரத்தக்கன.
யாழ் மாவட்டத்தின் தெல்லிப்பழையில் உள்ள வீமன் காமம் என்னும் ஊரில் சுப்பிரமணியம் - முத்தம்மா தம்பதியினரின் இரண்டாவது மகனாக 08.05.1924இல் பிறந்த வித்தியானந்தன் தமது ஆரம்பக்கல்வியை வீமன்காமம் தமிழ்ப் பாடசாலையில் கற்றார். இடைநிலைக் கல்வியைத் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் பெற்றார். பின்னர் யாழ் பரி.யோவான் கல்லூரியிலும், யாழ் இந்துக்கல்லூரியிலும் உயர்கல்வியைக் கற்று இலங்கைப் பல்கலைக்கழகம் (1941இல்) புகுந்தார். அங்கு தமிழ், இலத்தீன், வரலாறு ஆகிய பாடங்களைப் பயின்று தமது இருபதாவது வயதிலேயே (1944) தமிழ்ச் சிறப்புப் பட்டதாரியானார். 1946இல் முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது பேராசிரியர்களான சுவாமி விபுலாநந்தர், க.கணபதிப்பிள்ளை, வி.செல்வநாயகம் ஆகியோரிடம் தமிழ் கற்கும் வாய்ப்பினைப் பெற்றார். 1948இல் இலண்டன் பல்கலைக்கழகக் கீழைத்தேயக் கல்லூரியிலே 'பத்துப்பாட்டு வரலாற்று சமூக மொழியியல் நோக்கு" என்னும் விடயம் குறித்து கலாநிதிப் பட்ட ஆய்வினை மேற்கொண்டார். கலாநிதிப்பட்டம் பெற்ற பின் இலங்கை திரும்பினார்.
1946ஆம் ஆண்டு பல்கலைக்கழக உதவி விரிவுரையாளராகவும் 1970ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றிய கலாநிதி வித்தியானந்தன் 1977இல் இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகத்தின் தலைவராகவும் 1978இல் யாழ் - பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராகவும் பணியாற்றினார்.
பேராசிரியர் வித்தியானந்தன் தமிழ் மொழி,
தமிழர்தம் பண்பாடு, கலை, இலக்கியத்துறைகளில் மிக்க ஆர்வம் கொண்டவர். பதினைந்துக்கு மேற்பட்ட நூல்களையும் ஐம்பதுக்கு மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். 1953இல் இவர் வெளியிட்ட "இலக்கியத்தென்றல்" என்னும் நூல் இவரது புலமைத்திறனை வெளிக்காட்டியது. 1955இல் இவரது இரண்டாவது நூலான "தமிழர் சால்பு" வெளிவந்தது. இந்நூல் பாராட்டுதலுக்குள்ளானது. பேராசிரியரின் தமிழிலக்கிய ஆய்வுச் சிறப்பினை, தமிழர் தம் வாழ்வியலை இலகுவான நடையில் எடுத்துக் கூறும் நூலாக இந்நூல் அமைந்தது. ஈழத் தமிழர் தம் முதுசொத்தான நாட்டார் பாடல்களைத் தொகுத்து வெளியிடுவதிலும் நாட்டுக்கூத்துக்களைத் தற்கால நெறிமுறைக் கேற்ப அரங்கேற்றுவதிலும் பேராசிரியர் ஆற்றிய பணிகள் அளப்பரியனவாகும். நாட்டார்
வழக்காற்றியல் அழிந்திடாது புத்துயிர் பெறுதற்கு இவரது பங்க பெரிதும் உதவியது எனலாம். கிராமியக் கூத்துக்களை நகரத்தா அறிந்திடவும் பார்த்து இரசித்திடவும் வழியமைத்தமை இவரது பணியெனலாம் பேராசிரியரின் பெருமுயற்சியினாலேயே மட்டக்க நாட்டுப் பாடல்கள், மன்னார் நாட்டுப்பாடல்கள் என்பன தொகுக்கப்பட் நூல்களாக வெளியிடப்பட்டன.
நாட்டுக்கூத்துக்களை அழிந்திடாது பேணிக்காத்தும், பழக்கியும் வந்த அண்ணாவிமார்களை வெளியுலகு அறிந்திடும் வகையி அவர்களைக் கௌரவித்து மேன்மைப்படுத்தினார்.
அச்சேறாது ஏட்டளவில் இருந்த கூத்துப் பிரதிகளைத் தேடிப்பெற்று அவற்றை நூல்கள் வடிவில் அச்சேற்றி வெளியிடக் காரணராகத் திகழ்ந்தார். இவரது பெரு முயற்சியினாலேயே அலங்காரரூபன் நாடகம், எண்டிறீக்கு எம்பரதோர் நாடகம், மூவிராசாக்கள் நாடகம்,ஞான் சௌந்தரி நாடகம் என்பன நூல் வடிவம் பெற்றன.
பல்கலைக்கழகத்தில் பதினாறு நாடகங்களைத் தயாரித்த பெருமையும் இவரையே சாரும். நாட்டுக் கூத்துக்களை நவீன முறையில் தயாரித்து அரங்கேற்றிய சிறப்பும் இவருக்குண்டு. பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் அரங்கேற்றிய கர்ணன்போர், நொண்டி நாடகம், இராவணேசன், வாலிவதை ஆகிய நாட்டுக் கூத்துக்கள் பார்த்தோர் அனைவரதும் பாராட்டுதல்களைப் பெற்றன. அவற்றை மிகச்சிறந்த முறையில் அரங்கேற்றிய பெருமை பேராசிரியரையே சாரும்.
இலங்கைக் கலைக்கழகத்தின் தமிழ் நாடகக் குழுவினதும் இலங்கை சாகித்திய மண்டலத்தின் தமிழ்க்குழுவினதும் தலைவராக இவர் பணியாற்றிய காலத்தில் தமிழ் நாடகக்கலையும் தமிழ் இலக்கியக் கலையும் புத்துயிர் பெற்றன எனலாம். கருத்தரங்குகள், கலைவிழாக்கள், நாடகங்கள், எனப் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. இவையெல்லாம் பேராசிரியரின் கலை, இலக்கியப் பணிகளுக்குச் சான்றாக விளங்கின.
இஸ்லாமியர்களின் பண்பாட்டினையும் அவர்களது தமிழ் இலக்கியப் பணிகளையும் பேராசிரியர் என்றும் போற்றிவந்துள்ளார். அவற்றின் சிறப்பினை உணர்த்தும் வகையில் பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் மன்ற இதழில் (University Majlis) இஸ்லாமியரும் தமிழும்", "இஸ்லாமியர் தமிழிற் பாடிய புதிய பிரபந்தவகைகள் , "இஸ்லாமியர் நாடோடிப் பாடல்கள்" "இஸ்லாத்தின் திருத்தூதர் காட்டிய வழி" முதலான கட்டுரைகளை எழுதியுள்ளார். "பிறையன்பன் என்னும் புனைபெயரில் இஸ்லாமியரின் கலை, இலக்கியப் பண்பாடுகளை ஆராய்ந்து இவர் எழுதிய நூல்
"கலையும் பண்பும்" என்பதாகும். இந்நூல் இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதினையும் (1961) பெற்றது.
கிறிஸ்தவர்கள் தமிழுக்காற்றிய பணிகள் குறித்தும் பேராசிரியர் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றுள் பேராதனைத் தமிழ்ச் சங்க இதழான இளங்கதிரில் வெளியான "கிறித்தவரும் ஈழத்திலே தமிழ் வளர்ச்சியும் , என்னும் கட்டுரையும் உடுவில் மகளிர் கல்லூரி இதழில் பிரசுரமான அமெரிக்க மிசனும் தமிழர் கல்வியும்" என்னும் கட்டுரையும் குறிப்பிடத்தக்கனவாகும்.
மலேசியாவில் நடைபெற்ற முதலாவது தமிழாராய்ச்சி மாநாட்டிலே பேராசிரியர் "ஈழத்து மிஷனரிமாரின் தமிழ்த் தொண்டு" என்னும் தலைப்பில் படித்த (ஆங்கிலமொழியில்) ஆய்வுக் கட்டுரை மிஷனரிமாரின் தமிழ்ப்பணிகளை விரிவாக எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினருடன் நெருங்கிய தொடர்பு கொண்டுழைத்த பேராசிரியர் வித்தியானந்தன் சிறந்த செயல்வீரர் என்பதை 1974இல் யாழ்ப்பாணத்தில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் வெளிப்படுத்தினார். பல்வேறு தடைகளுக்கும் எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் மனந்தளராது இம் மாநாட்டினை அவர் சிறப்பாக நடத்தியமை பெரும்சாதனை என்றே கூறலாம். அனைத்துலகத் தமிழாராய்ச்சிமன்றம் நடத்திய மாநாடுகள் அனைத்துக்கும் பேராசிரியர் உறுதுணையாக விளங்கியமையை எவரும் மறந்திடமுடியாது. பேராசிரியரின் தமிழ்ப்பணிகள் விரிவானவை. அவை காலத்தால் மறக்கவொண்ணாச் சிறப்புக்குரியன.
மட்டக்களப்பிலும் (1976இல்) முல்லைத்தீவிலும் (1983இல்) இவர் முன்னின்று நடத்திய தமிழாராய்ச்சி மாநாடுகள் அவ்வப்பிரதேசங்களின் வரலாறு, சமூக,
அரசியல், பொருளாதார, கலை, சமயம் பற்றிய பல்வேறு தரவுகளை அறிந்து கொள்ளவும் அவற்றை ஆவணப்படுத்தவும் வழி சமைத்தன. பேராசிரியர் தமிழியலுக்கு ஆற்றிய தொண்டுகள் அளப்பரியன. மரபுவழித் தமிழறிஞர்களையும் அவர்தம் ஆய்வுகளையும் பல்கலைக்கழகக் கலைத்திட்டத்தில் புகுத்தியமை, ஆக்க இலக்கிய கர்த்தாக்களுக்கு ஊக்கமளித்தமை, நுண்கலை, நாடகம் சார்ந்த புதிய பாடநெறிகளைப் பல்கலைக்கழகத்தில் ஆரம் பித்தமை, பல்கலைக்கழகத்துக்கும் சமூகத்துக்குமிடையே நிலவிய பாரிய இடைவெளியை அகற்றியமை ஆகியன பேராசிரியரின் குறிப்பிடத்தக்க பணிகளாகும்.
பேராசிரியரின் "தமிழியற் சிந்தனைகள்", "நாடகம், நாட்டாரியல் சிந்தனைகள்" போன்ற நூல்கள் அவரது பணிகளை என்றும் நினைவூட்டுமெனலாம். எல்லாவற்றுக்குமேலாகப் பேராசிரியர் வித்தியானந்தன் சிறந்த மனிதாபிமானியாக விளங்கினார். நாற்பத்திரண்டு ஆண்டுகள் நல்லாசானாக விளங்கிய இவர் பல்லாயிரம் மாணவர்களை உருவாக்கிய பண்பாளராக மாணவர் மனதில் உயர்ந்து நிற்கிறார். 'பேராசிரியர் வித்தி' என்று மாணவர்களால் அன்புடன் அழைக்கும் பெருமைக்குரியவராகத் திகழ்கிறார். வேறெந்தப் பேராசிரியருக்கும் கிட்டாத இந்தப் பெருமை "வித்தி" அவர்களுக்கே உரித்தாகும். பேராசிரியரின் மனிதாபிமானச் செயற்பாடுகளே இதற்கு மூல காரணமாகும்.
தம் வாழ் நாளில் பெரும் பங்கைத் தமிழ்ப் பணிகளுக்கே அர்ப்பணித்த பேராசிரியர் வித்தியானந்தன் மறைந்தாலும் அவரது நாமம் என்றும் அவர்தம் பணிகள் மூலம் மாணவர் மனதில் நிலைத்திருக்குமென்பது திண்ணம். "தமிழர் சால்பு" உள்ளவரை வித்தி நிலைத்திருப்பார் என்பதில் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக