1. மணிமேகலை பிறப்பு
முற்காலத்திலே தென்னிந்தியாவை மூன்று தமிழ்மன்னர் ஆட்சி புரிந்து வந்தனர். அவர்கள் சேர, சோழ, பாண்டியர் எனப்படுவர். அவர் களுட் சோழ அரசர்களால் ஆளப்பட்ட சோழ வளநாடு, சோறுடையநாடு என ஆன்றோ ராற் புகழப்பட்ட சிறப்பினை உடையது. அந் நாட்டினூடே காவிரி என்னும் நதி பாய்ந்து அந்நாட்டை வளப்படுத்திற்று. இதனாலேயே, சோழநாட்டின் தலைப்பட்டினமும் காவிரிப்பூம் பட்டினமென, அழைக்கப்படலாயிற்று. இந்நதி, காவிரிப்பூம் பட்டினத்தின் அயலிற் கடலொடு கலக்கிறது.
கடற்றுறையான காவிரிப்பூம்பட்டினத்தில், பல கப்பல்கள் தங்கி, ஏற்றுமதி இறக்குமதி செய்தமையால், அது பல நாடுகளின் மத்திய வாணிகத்தலமாக விளங்கிற்று. இதனால், அப் பட்டினத்தில் வணிகர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் அளவிலாச் செல்வம் படைத்த மாசாத்துவான் என்னும் வணிகர் பெருமகனும் ஒருவன். அவன் புதல்வன் கோவலன்; அவன் இசை தேர்ந்த கலைஞன் ; ஆடல் பாடல்களிலும் இசையிலும் மிகவும் ஈடுபாடுடையவன். இவன், சோழநாட்டின் தலை நகராகிய காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த மற்றொரு வணிகனான மாநாய்கன் என்பவனின் புதல்வி கண்ணகியை, முறைப்படி திருமணஞ் செய்தான். கோவலனுங் கண்ணகியும் பரந் தகன்ற மாளிகை யொன்றில், இனிதாக இல்லறம் நடாத்திவந்தனர். அந் நாளில், சோழநாட்டைக் கரிகாற்பெருவளத்தான் என்னும் பேரரசன் ஆட்சி புரிந்துவந்தான்.
சோழன் கரிகாலன் பல நாடுகளையும் தன் னடிப்படுத்தி நீதி தவறாது ஆட்சி புரிந்தவன். இளமையிலே மணிமுடி புனைந்து ஆட்சியேற்ற கரிகாலன், தன்னிடம் வழக்கொடு வந்த இரு பெருங்கிழவர், தன் இளமையைக் கண்டு வழக்கை உரையாது நிற்ப, தான் முதுமை வேடம் புனைந்துவந்து வழக்குக் கேட்டு, நீதியான தீர்ப்புக்கூறி அவர்கள் நாணும்வண்ணம் தன் பொய்முதுவேடம் நீக்கி இளமைகாட்டி நின்ற வன். அவன் ஆட்சிக்காலத்தில் சோழவளநாடு பலவகை வளமும் உடையதாய்ச் சிறப்புற்றிருந் தது. அவன் அவைக்களம் இன்பக்களியாட்டம் நிறைந்திருந்தது. அவனையும் அவன் அவையி லுள்ளவரையும் மகிழ்விக்க அவ்வவையில் நங்கை யர் பலர் ஆடிப்பாடினர்.
மாதவி என்பாள் இளமையும் அழகும் மிக்க ஆடல் நங்கை. அவள் ஒருநாள், கரிகாலன் அவைக்களத்தில் ஆடியும் பாடியும் தான் கற்ற கலைகளை அரங்கேற்றினாள். அவள் ஆடலிலும் பாடலிலும் மகிழ்ந்த அரசன், அவளுக்கு ஆயிரத் தெட்டுப் பொற்காசுகள் இணைத்த பொன்மாலை யொன்றைப் பரிசாக அளித்தான்.
அரங்கேற்றத்தின்போது மாதவியின் ஆடல் பாடல்களைக் கண்டுங் கேட்டும் அவற்றில் ஈடுபாடு கொண்ட கோவலன், அவ்வாடல் நங்கையுடன் பழக விரும்பினான். அதனால், அவளுக்குப் பரி சாகக் கிடைத்த பொன்மாலையை உயர்ந்த விலை கொடுத்து வாங்கி, அதனை மீண்டும் அவளுக்கே பரிசாக அளித்தான். இவ்வாறு அவளோடு தொடர்புகொண்ட கோவலன், தன் மனைவி யாகிய கண்ணகியை மறந்தான்; மாதவியை விட்டுநீங்க இயலாதவாறு அவளிடத்து அளவற்ற காதல் கொண்டான். மாதவியும் செல்வம் மிக்க வணிகனான கோவலனைத் தன் காதற்கணவனாக ஏற்றுக்கொண்டாள். இதனால், ப மனமகிழ்ந்த கோவலன், மாதவியின் பொருட்டுத் தன் செல் வம் அனைத்தையுஞ் செலவு செய்தான். இவ்வாறு அவனது பெருஞ்செல்வம் சிறிது சிறிதாகக் குறைந்தது.
நாளடைவில் மாதவி ஓர் அழகிய பெண் மகவை ஈன்றாள். இக் குழந்தைக்கு மணிமேகலை எனப் பெயர் இட்டார்கள். மணிமேகலை பிறந்து, சில ஆண்டுகளிற் கோவலன் தன் செல்வவளம் முழுவதையும் மாதவியின் பொருட்டு இழந் தான். அதன் பின்னரும் அவன் தன் மனைவி யாகிய கண்ணகியின் அணிமணிகளை அவளிட மிருந்து பெற்று, ஒவ்வொன்றாக விற்று, செல விட்டு வந்தான். கண்ணகியும் மனமகிழ்ச்சியுடன் தன் நகைகளைக் கோவலனிடங் கொடுத்துக் கொண்டே வந்தாள்.
சோழநாட்டில் ஆண்டுதோறும் இந்திரவிழா நடைபெறுவது வழக்கம். அவ்விழா இருபத் தெட்டு நாள்கள் நிகழும். விழாவின் இறுதி நாள்களில் காவிரிநதி கடலொடு கலக்குமிடத்தில் மகளிரும் மைந்தரும் நீர்விளையாடி மகிழ்வர். இத்தகைய ஒரு விழாவிலே கோவலனும் மாதவியுங் கலந்துகொண்டனர். ஆங்கு அவ் விருவருக்கும் இசை காரணமாக ஏற்பட்ட ஊடலினாலும் விதிவசத்தினாலும், கோவலன் மாதவியைப் பிரிந்து தன் மனையை அடைந்தான்.
தன் கணவனாகிய கோவலனின் வருகையைக் கண்ட கண்ணகி, மாதவிக்குக் கொடுப்பதற்கு வேண்டிய பொருளின்மை காரணமாகவே அவன் வந்தனன் என எண்ணி, அவனை அடைந்து தன் காற்சிலம்பைப் பெற்றுக்கொள்ளுமாறு அவனிடங் கூறினாள். அப்பொழுது கழிந்தனவற்றுக்காக மனம் வருந்திய கோவலன், அவளை நோக்கி, நான் இச் சிலம்பை முதலாகக்கொண்டு வாணிகஞ்செய்து இழந்த செல்வமனைத்தையும் மீட்பேன், எனக் கூறினான். இவ்வெண்ணப் படியே கோவலனும் கண்ணகியும் பொருளீட்டுவதற்காக வழிநடந்து மதுரையை அடைந்தனர். கோவலன் கண்ணகியை மதுரையில் இடைச் சேரியிலே தங்கவைத்து, அவளது காற்சிலம்பு ஒன்றைப் பெற்று அதை விற்க மதுரைமாநகருக் குச் சென்றான். ஆங்கு, அவன் கள்வனெனப் பாண்டிய அரசனாற் கொல்லப்பட்டான். இதனை அறிந்த கண்ணகி, தன் கற்பின் மகத்துவத்தால் மதுரையை எரித்தாள். பின்னர் இறந்த தன் கணவனைத் தரிசித்து அவனுடன் துறக்கம் புகுந்தாள்.
இதனைக் கேள்வியுற்ற மாதவியும் மணிமேகலையும் மனம் வருந்திப் பெருந்துயருற்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக