இலக்கிய வழி
1. இரட்டையர்
ஒரு தாய்வயிற்றில் ஒரே கருப்பத்தில் இரட்டை யாய்ப் பிறந்தவர்கள் இரட்டையர். ஒருவர் குருடர் ; மற்றவர் முடவர். இருவரும் புலவர். குருடரின் தோளில் முடவர் ஏறிக்கொள்வார். ஏறியதுங் குருடர் நடப்பார். முடவர் வழிகாட்டுவார். இரு வரும் ஒருவர். ஒரு பாட்டின் ஒரு பாதியை ஒருவர் பாட மற்றவர் மறு பாதியைப் பாடுவர். இருவரிலும் அதிட்டமுடையவர் முடவர். நடப்பதன் வருத்தம் முடவருக்குத் தெரிவதில்லை. சில சமயங்களிலே வழி வேறாயிருக்கக் குறுக்கு வழியில் இறக்கி விடுவார் முடவர். அந்த வழி ஏற்றமும் இறக்கமுங் குன்றுங் குழியுமாய் இருக்கும். ஏற்றத்திலிருந்து இறக்கத்துக்கு ஓடாமலிருக்க முடியாமற் குருடர் ஓடும்போது முடவருக்குப் பிரயாணம், சுகம் பேசும். குருடர் யாது செய்வார் ? பாவம்!
"குன்றுங் குழியுங் குறுகி வழிநடந்து சென்று திரிவதென்றுந் திராதோ "
'கடவுளே, மலைகளில் ஏறியுங் குழிகளில் இறங்கியும் எத்தனை காலம் அலைவது! இதற்கு
ஒரு முடிவு வாராதோ!' என்று இரங்கி ஒரு வெண்பாவின் முதற் பாதியைப் பாடினார் குருடர்.
குருடரின் தோளிலே வெகு குதூகலமாக அமர்ந்திருந்த முடவர்,
"ஒன்றுங்
கொடாதானைக் கோவென்றுங் காவென்றுங் கூறின் இடாதோ நமக்கிவ் விடர்"
என்று மறு பாதியைப் பாடி வெண்பாவைப் பூர்த்தி செய்தார்.
" எச்சிற் கையாலே காகந் துரத்த உடன் படாத உலோபிகளைக் காமதேனுவே, கற்பகதருவே என்று பாராட்டிப் பாடினால், இல்லாததைப் பாடிய குற்றத்துக்காகக் கடவுள் குன்றிலுங் குழிகளிலும் அலைந்து திரிகிற இந்த இடர்களை யெல்லாம் நமது தலையில் எழுதிவைப்பார்தாமே. இதில் ஒரு நூதன மும் இல்லையே" என்பது, நடந்து களையாத முட வரின் சித்தாந்தம். முடவர் இப்படிக் குறும்பு செய்தபோதும், அந்தக் குருடர் வெறுப்படையாமல் தமது விதியை நொந்துகொண்டு, அந்த முடவரைத் தமது கண்ணேபோற் பேணித் தோள் வலிக்கச் சுமந்து செல்லுவார்.
ஒருநாள் இருவருக்கும் மிக்க களையுங் கொடிய பசியும் எழுந்துவிட்டன. ஓர் அரண்மனையை அணு கினார்கள். அத்தாணி மண்டபத்தில் அரசர் அரசு வீற்றிருக்கின்றார். அவருடைய தம்பியார் பக்கத்தில் அமர்ந்திருக்கின்றார். மந்திரிகள், தானைத்தலைவர் கள், புலவர்கள் குழுமியிருக்கின்றார்கள். அது பெரிய ஒலக்கம். இரட்டையர்கள் அங்கே பிரவேசித்தார்கள். அரசருக்குப் பெரிய இரக்கம் வந்து விட்டது. அவர்களுக்கு வேண்டிய திரவியங்களை உதவும்படி மந்திரிக்கு உத்தரவு பிறந்தது. மந்திரி மறுத்து அவர்கள் விரும்பியவாறு உதவுவது, அவர்களைச் சோம்பர்கள் ஆக்குவதாய் முடியும் என்று நியாயம் பேசினான். அரசர் கொடுப்பதற்கு மந்திரி பெரிய இடறுகட்டை ஆயினான். மௌனஞ் சாதித்தது. அங்கிருந்த புலவர்கள் எரிந் தார்கள்; வெளிக்காட்டவில்லை. சபை
முடவர், 'புராதனமான தமிழ்ப்புலவீர் இந்த’ என்று தொடங்கி ஏதோ ஒரு வார்த்தையை மனசுக்குள் உச்சரித்துக்கொண்டு, "மராமரம் விட்டிங்கு வந்த தென்னே" என்று, ஒன்றே முக்கால் அடி பாடினார்.
"புலவர்களே, பழைமைகளை உணர்ந்த வர்களே, அரசருக்குப் பக்கத்திலிருந்து நியாயம் பேசுபவர் யாவரோ? இந்தப் பிறப்பு', அடர்ந்த பெரிய மரங்கள் நிறைந்த காடுகளில், மரக் கொம்பர்களில் தனது வாழ்க்கையை வைத்துக் கொள்ளாமல் இவ்விடம் போந்தகாரணம் என்னையோ! இதற்கும் இராசசபைக்கும் எவ் வளவு தூரம்! இதற்கு இங்கே என்ன அலுவல்!" என்று கருத்தும் விரிக்கப்பட்டது.
அதனைக் கேட்டதுங் குருடருக்குப் பாட்டுக் குமுறிக்கொண்டு வந்தது. முடவரின் பாகமான இரண்டாவது அடியிலுங் குருடர் பங்கெடுத்துக் கொண்டார். "வந்தவாறு சொல்வேன்" என்று முதலில் அந்த அடி பூர்த்தி செய்யப்பட்டது.
இந்தப் பெரிய சபையிலே அரசருக்கும் அவர் தம்பிக்கும் பக்கத்திலே நின்று, கொடுப்பதைத் தடுத்துச் சேட்டை செய்கின்ற வஸ்து, காடுகளிலே மரந்தடிகளிலே வாழ்க்கை நடத்தவேண்டியதே யாம். அதில் எவ்வித சந்தேகமுமில்லை. அதற்கு மனிதர் கொடுக்கல் வாங்கல் செய்கிற இந்தச் சபையிலே என்ன அலுவல்! என்று யாரும் நினைத்தல்கூடும். நினைக்க வேண்டும்! நினைப்பதில் தவறு இல்லை. ஆனால், அந்த வஸ்து இங்கே வந்து நிற்பதிலும் நூதனம் இல்லை. அது வந்ததற்குப் போதிய காரணம் இருக்கிறது. 'வந்தவாறு சொல்வேன்' என்கிறார் குருடர்.
சபையிற் குதூகலம்! 'வந்தவாறு' இன்ன தென்று, என்ன காரணங் கற்பிக்கப் போகின் றாரோ எனப் புலவர்கள் தங்கள் கற்பனை உல கத்திற் சஞ்சரிக்கின்றார்கள்.
குருடர் தமது பங்கைப் பாடுகின்றார்
“தராதல மன்னுத் தமிழ்மா றனையுந்தன் றம்பியையும் இராகவ னென்று மிலக்குவ னென்றும்வந் தெய்தியதே"
என்று பாட்டுப் பூர்த்தியானது." இது இராமயண காலத்தைச் சேர்ந்தது; நீண்ட வாலுள்ள வருக்கத் தைச் சார்ந்ததாயிருத்தல் வேண்டும். எங்கேயோ பராக்குப் பார்த்தமையினால் இராம இலக்குமணர் களிலிருந்து தவறிவிட்டது. அவர்கள் அயோத் திக்குப் போனதையறியாமல் இங்கே தங்கித் தமிழ்நாட்டில் அலைந்து அவர்களைத் தேடித் திரிந் திருத்தல் வேண்டும். தமிழை வளர்க்கின்ற எங்கள் அரசரையுந் தம்பியையும், இது, தன் கண் மயக்கத்தினால் இராம இலக்குமணர்கள் என்று நம்பிவிட்டது. ஆகையினாலே இங்கே இது வந்து நிற்பது நியா யந்தானே." குருடரின் கண்ணான கற்பனை இது.
அங்கே குழுமியிருந்த புலவர்கள் கவிதா லோகத்திலே தம்மையறியாமலே குதித்துக் கூத் தாடிச் சேட்டை செய்தார்கள். முடவர் வெளிப் படாமல் உச்சரித்த வார்த்தையும் புலவர்களுக்கு இன்னதென்று தெரிந்துவிட்டது. இதோ மரா மரம் விட்டிங்கு வந்து நிற்பது 'புன்குரங்கு 'புன்குரங்கு' என்று சத்தமிட்டார்கள். சிலர் பாட்டை எழுதிக்கொண்டார்கள். சிலர் உரத்தும் படித்தார்கள். பாட்டுப் பின்வருமாறு:
புராதன மான தமிழ்ப்புல வீரிந்தப் புன்குரங்கு மராமரம் விட்டிங்கு வந்ததென் னோவந்த வாறுசொல்வேன் தராதல மன்னுந் தமிழ்மா றனையுந்தன் றம்பியையும் இராகவ னென்றுமி லக்குவ னென்றும்வந் தெய்தியதே.
இரட்டையர்கள் காளமேகப் புலவரிலே பெரிய மதிப்பு உள்ளவர்கள். அவரைக் காண வேண்டுமென்பது அவர்களின் நெடுநாள் ஆசை. ஒருநாட் காளமேகத்தைத் தேடி அவருடைய ஊருக்குப் பயணஞ் செய்தார்கள். எத்தனையோ அபசகுனங்கள் எதிர்ப்பட்டன. ஒன்றையும் பொருட்படுத்தாமற் புறப்பட்டார்கள். காளமே கத்தைத் தரிசித்து உரையாட வேண்டுமென்ற ஆசை அவர்களை இழுத்துச் சென்றது. ஒருவாறு காளமேகத்தின் ஊருக்குச் சென்றுவிட்டார்கள். சென்றவர்கள் காளமேகத்தின் வீட்டை விசாரித் துக்கொண்டு செல்கின்றார்கள். வீடு கிட்டிவிட்டதென்று அறிய அறிய அவர்களுக்கு ஆவல் பொங்கத் தொடங்கிவிட்டது. வீட்டு வாசலை அடைந்துவிட்டார்கள். ஆகாயத்திலே சஞ்சாரஞ் செய்த ஒருவன், பாதாளத்திலே வீழ்ந்தால் எப்படி இருக்குமோ, அப்படியான நிலை அவர்களுக்கு அந்த வேளையில் உண்டானது. வீடு அமங்கல மாய்க் கிடந்தது. " புலவர் பெருமான்! காள மேகம்! அதோ சுடலை நோக்கிச் செல்லு கின்றார்" என்று கண்ணீர் விட்டார்கள் அங் குள்ளவர்கள். இரட்டையர்கள் வந்த கால் ஆற வில்லை; சுடலையை நோக்கி நடந்தார்கள். காள மேகத்தின் தூல தேகம் கொழுந்து விட்டெரிகிறது. கண்டார் முடவர்.
"ஆசு கவியால் அகிலஉல கெல்லாம் வீசுபுகழ்க் காள மேகமே - பூசுரா
என்று விம்மி விம்மி யழுதார் அவர். காளமேகம் ஆசுகவி. ஆசுகவி யென்றால் விரைந்து பாடு. கின்ற புலவன் என்பது கருத்து. ஒருவர் ஒன்று பாடவேண்டுமென்று கேட்கு முன்னமே, காளமேகத்தின் வாயிலிருந்து பாட்டு வழுக்கிக் கீழே விழும். 'இம்மென்னும் முன்னம் எழுநூறும் எண்ணூறும் அம்மென்றால் ஆயிரம்' பாட்டும் பாடிவிடும் காளமேகம். அந்தச் சாமர்த்தியத்தை நினைந்து நினைந்து உருகினார் முடவர். நிகழ்ச்சியை அறிந்ததும்,
"விண்கொண்ட செந்தழலாய் வேகுதே ஐயையோ மண்டின்ற பாணமென்ற வாய் "
என்று கதறினார் குருடர்.
ஒரு சமயம் சிவபெருமா னுக்கு நிந்தாஸ்துதி ஒன்று பாடினார் காளமேகம், நிந்தாஸ்துதி-வஞ்சப் புகழ்ச்சி. "திருவாரூரிலிருக்குஞ் சிவபெருமானே, உனது வில்லோ கல்லு; வளைக்க முடியாதது. நாணோ நஞ்சிருப்பது; தளர்வுள்ளது. இந்த நிலை யிலே பாணமோ மண்டின்ற பாணம். சிவ சிவா! உனது யுத்த ஆயத்தம் எத்தகையது ! முப்புரத் தைப் பார்த்துப் பல்லை இளியாமல் நீ வேறென்ன தான் செய்யமுடியும்!" என்பது, அப்பாட்டின் கருத்து. 'நாணென்றால் நஞ்சிருக்கும் ' என்று தொடங்குகிறது அந்தப் பாட்டு.
அப் பாட்டிலே பாணத்தை மண்டின்ற பாணம்' என்று பாடியதன் அருமை குருடரின் இருதயத்தைக் கவர்ந்துவிட்டது.
சிவபெருமா னுக்கு வில் மகாமேரு; கல். நாண் ஆதிசேஷன்; நஞ்சுள்ளது. பாணம் மகா விஷ்ணு; ஒரு காலத்தில் மண்ணுலகை விழுங் கினவர்; மண்டின்றவர்.
மகா விஷ்ணுவை " மண்டின்ற பாணம்" என்று பாடிய காளமேகத்தின் வாயும் வேகின்றதே என்று வேகின்றார் குருடர்.
கவிஞரின் அருமையைக் கவிஞரே அறிவர். புன்கவி அறியுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக