புராணங்கள்
வேத உபநிடதங்களில் காணப்படுகின்ற வடமொழிக்கருத்துக்களும் தத்துவ சிந்தனைகளும் மக்கள் இலகுவில் விளங்கக் கூடிய அளவிற்கு கதைவடிவில் அமைந்ததனால் மக்கள் மனதில் செல்வாக்குச் செலுத்தின. அத்துடன் இந்துசமயமரபு வழிபாட்டுமுறை தெய்வ இயல் விரத மகிமை தீர்த்த மகிமை முதலிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றில் புராணங்கள் வேதங்களைப் போன்ற பெருமையும் புனிதமும் உள்ளவை என்று கூறப்படுகின்றது. புராணம் என்பது தெய்வீக வரலாற்றுக் கதை எனப் பொருள்படுகின்றது. பூரணாத் புராணம் இதி உச்சயதே. இது முழுமையானதால் புராணம் என்ற கருத்தும் உண்டு. தெய்வீக அகத் தூண்டுதலாய் அமைந்த உள்ளுயிர்ப்பு செய்து வரும் நூல்களில் இது முதல் இடம் பெறுகின்றது. சண்மதக் கொள்கைகளின் மைய சிந்தனைகள் இதில் காணப்படுகின்றன. புராணங்கள் கி.மு 400 – 200 க்கும் இடையில் தோற்றம் பெற்ற நூல்கள் எனக் கூறப்படுகின்றது. குப்தர் காலத்தில் புராணங்கள் இறுதி வடிவம் பெற்றன. புராணங்கள் பழையதாயினும் புதிதாக தோன்றுவது என்றும் தன்னிடத்தில் ஈடுபட்டவரை முன்னுக்குக் கொண்டு வரும் தன்மை உள்ளது என்றும் புராணத்திற்கு பொருள் கூறுவர்.
ஆகவே புராணங்கள் பௌராணி கர்களால் தோற்றுவிக்கப்பட்டு, வைதீக ஒழுகலாறுகளைப் பேணும் வகையிலும் தெய்வீக வரலாற்றைப் பரப்பும் நோக்கிலும் தோற்றம் பெற்றனவாகக்காணப்படுகின்றன. ஆகர் ஓதிய மூவாறு தொல்கதை என கந்தபுராணம் கூறுகிறது. புராணங்கள் வடமொழிப் புராணங்கள், தமிழ்மொழிப் புராணங்கள் என பிரிக்கப்படுகின்றன.
வடமொழிப் புராணங்கள் பதினெண்புராணங்கள், மகா புராணங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. அவையாவன
1. சிவபுராணங்கள் – 10
1. சிவ புராணம்
2. பவிபிய புராணம்
3. மார்க்கண்டேய புராணம்
4. இலிங்க புராணம்
5. ஸ்கந்த புராணம்
6. வராக புராணம்
7. வாமன புராணம்
8. மச்ச புராணம்
9. கூர்ம புராணம்
10. பிரமாண்ட புராணம்
2. விஷ்ணு புராணம் – 04
கருட புராணம்
நாரதீய புராணம்
வைணவ புராணம்
பாகவத புராணம்
3. பிரம புராணம் – 02
பிரம புராணம்
பதும புராணம்
4. அக்கினி புராணம்- 01
ஆக்கினேய புராணம்
5. சூரிய புராணம் – 01
பிரம கைவர்த்த புராணம்
புராணங்கள் பஞ்ச இலட்சணங்களைக் கொண்டிருக்கும்.
1. சர்க்கம் – சிருட்டி
2. பிரதிசர்க்கம் – அழிந்து மீண்டும் உண்டாதல்
3. வம்சம் – தெய்வ பரம்பரை
4. மன்வந்தரம் – மனுக்களின் காலம்
5. வம்சியானுசரிதம் – வம்சங்களின் வரலாறு
வடமொழிப் புராணங்கள் தசலட்சணங்களையும் கொண்டிருக்கும். எனைய 5 இலக்கணங்களில்
6. விருத்தி – தொழில்
7. ரக்ஷா – தெய்வங்களின் அவதாரம்
8. முத்தி – வீடுபேறு
9. ஹேது – அவ்யக்தமான உயிர்
10. அபாச்சய – பிரம்மம்
இவ்வாறான மகா புராணங்கள் பிரமா விஷ்ணு சூரியன், உருத்திரன் முதலானவர்களின் பரத்துவங்களைக் கூறுகின்றன. வாழும் உலகில் படைத்தல், காத்தல், அழித்தல் என்பவற்றையும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் புருடார்த்தங்களையும் கூறுகின்றன. புராணங்களிலே அரசர்களின் பாரம்பரியங்கள் கூறப்படுகின்றன. (உ.ம்) சிசு, நாகவம்சம், நந்த வம்சம், மௌரிய வம்சம் முதலியவை.
புராணங்கள் இந்து நாகரிகத்தையும் இந்து சமயக் கோட்பாட்டையும் இந்திய தரிசனங்களின் வரலாற்றையும் இயமம், நியமம், நிஷ்டை முதலியவற்றையும் அறிந்து கொள்ள உதவும் கருவூலங்கள் என்பர்.
மேலும் புராணங்கள் கோவில்களையும் பக்திக்குரிய இடங்களையும் கூறுவன. நாட்டு மக்களிடையே நிலையான ஒருமைப்பாட்டை வளர்ப்பதில் புராணங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. அவை பாரம்பரியமாக நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் வரன்முறையாகக் கூறுவன. உருவவழிபாடு பக்திமார்க்கம், கன்மம், மறுபிறப்பு, உபநிடதக்கொள்கை, ஞானம் மோட்சம், விரதம், தீர்த்தம், தவம், யாத்திரை, தோத்திரம் போன்றவற்றையும் தெய்வீகபரத்துவத்தையும் விளக்குகின்றன. தெய்வீக பரத்துவங்களாவன
1. சிவபரத்துவம் – அடிமுடி தேடிய கதையையும்
2. விஷ்ணு பரத்துவம் – பாகவத புராண அவதாரம்
3. சக்தி பரத்துவம் – துர்க்கை மகிடாசுரனை சங்கரித்தல்
4. பக்தி மரபுகள் – மார்க்கண்டேயர், பக்த பிரகலாதன் கதைகள் கலை,அரசியல்,
மரபுகள் கொண்டமைந்தவையாகக் காணப்படுகின்றன.
புராணங்கள் பழைமையானவையாயினும் சூரியனைப்போன்று உயிர்ப்புள்ளவை. அவை வேதங்களிலே முறை கொண்டவை. புராணங்கள் பெரிய விஞ்ஞான நுணுக்கங்களைக் கூறுவன. தூலநியதி, அறநியதி, அருள் நியதி, வானத்தின் உடுக்கள், கிரகங்கள், வடதுருவம், தென்துருவம் என்பவற்றின் விபரங்களையும் விளக்கமாக கூறுகின்றன.
பிற்காலத்தில் புரோகிதர்கள் புராணங்களைப் பின்பற்றி சமய போதனைகள் செய்தனர். ஆறுமுகநாவலர் போன்றோர் எமது சமயத்தை வளர்க்கப் புராண படனம் செய்தார்கள். தற்காலத்தில் கந்தசஷ்டி விரத காலத்திலும் கந்தபுராணம் படிக்கப்பட்டு பொருள் கூறப்படுகிறது. புலவர்கள் இலக்கியம் கண்டு இலக்கணம் செய்தல் என்ற மரபிற்கேற்ப பஞ்சலட்சண, தசலட்சணங்களை கொண்டு இன்றும் விளக்கம் கூறுகின்றார்கள். ஆறுமுகநாவலர் போன்றோர் எத்துணைக் காலம் திருப்பித் திருப்பிப் படிப்பினும் தெவிட்டாது தித்தித்து அமுது ஊட்டும் அதிதிவ்விய அதிமதுரத் தேன் என்று வருணித்திருப்பது கந்தபுராணத்தின் சிறப்பைக் காட்டி நிற்கின்றது.
புராணக்கதைகளை அடிப்படையாகக் கொண்டு அட்டவீரத் தலவரலாறு கூறப்பட்டது. திரிபுரமெரித்த கதை இதில் சிறப்பானது. திருமாலின் அவதாரத் தத்துவமும் இதில் சிறப்பாக கூறப்பட்டுள்ளது. இது சைவ வைணவ மரபிற்குச் சான்றானது.
வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற வாக்கிற்கு இணங்க மனிதனை நல்வழிப்படுத்தும் சிறந்த கருவூலங்களாகவும் நண்பனைப் போன்று அறிவுரை கூறி வழிப்படுத்தும் சிறந்த கலைக்களஞ்சிய மாகவும் புராணங்களைக் கொள்ளலாம் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.
புராணங்களும் பிற்கால இந்துசமய மரபுகளும்
பிற்கால தோத்திர மரபுகளுக்கு புராணக் கதைகள் சான்றானவை சகஸ்ர நாம தோத்திரம் அஸ்டோத்தர நாமார்ச்சனை என்பவை புராணங்களை அடிப்படையாக கொண்டுள்ளன. அடிமுடி தேடியகதை என்பன பிரதானம். புராணங்களை தழுவிய வகையில் இலக்கிய மரபுகள் எழுச்சிபெற்றன. சாத்வீக, தாமச, ராஜச அடிப்படையில் புராணக்கதைச் செல்வாக்கை காணலாம். கரிபிரசாத் சாஸ்திரி அவர்கள் புராணங்களை பின்வருமாறு பிரித்துள்ளார் அவை.
1. கலைக் களஞ்சியபுராணங்கள்.
2. விரத தீர்த்த மகிமை கூறும் புராணங்கள்
3. வரலாற்றுக் கதைப்புராணங்கள் என்பன.
தேவாரப் பாடல், ஆழ்வார்பாடல்களிலும் புராணக்கதை மரபு உண்டு. தானம் விரதம் பக்தி, கோகம், கலை மரபு என்பன பிரதான உள்ளடக்கங்கள்.
தமிழ்ப்புராணமரபு, தலபுராண மரபு, புராணபடன மரபு, புராணங்கள் தொடர்பான நாட்டாரியல் கலைகள் என்பவை பிரதானமானவை. கூத்து நாடக வடிவங்களும் புராணங்களைத்தழுவியனவே.
![]()