அம்பிகாபதி
கவிச்சக்கரவர்த்தி கம்பரின் மகன் அம்பிகாபதி. அவர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியவராவர். கவிபாடுவதில் நன்கு தேர்ச்சி பெற்றவர். ‘தந்தையர் ஒப்பர் மக்கள்‘ எனும் பழமொழிக்கு ஏற்ப,
இளமைப் பருவத்திலேயே சிறந்த கவிஞராய்த் திகழ்ந்து சீரும் சிறப்பும் பெற்று விளங்கினார்.
அம்பிகாபதியின் வாழ்க்கை வரலாறு ஒரு காதல் காப்பியமாகும். உலக இலக்கிய ஏடுகளில் பொன்றாப் புகழ் பெற்ற ‘லைலா–மஜுனு‘, ‘ரோமியோ–ஜூலியட்‘, ‘அனார்கலி –சலீம்‘ ஆகியோருக்கு இல்லாப் பெரும் சிறப்பு, நம் ‘அம்பிகாபதி–அமராபதி‘க்கு உண்டு. அவர்கள் எல்லாம் உலகம் போற்றக் கூடிய ஒப்பற்ற காதலர்களாக வாழ்ந்தனர்; மறைந்தனர். பாட்டிசைக்கும் பாவலனாகிய அம்பிகாபதி, நாடாளும் காவலனது காரிகையின் காதலைத் தனது கவித் திறனுக்குத் திறையாகப் பெற்றான். இருவரும் காதலுக்காக வாழ்ந்தனர். காதலன் கொலைக் களத்தே தனது ஆருயிரைக் காதல் தெய்வத்திற்குப் பரிசாகத் தந்தான் என்ற செய்தி செவியினுள் நுழையு முன்பே, அரசிளங்குமரி அன்பனது ஆருயிருக்குத் தக்க துணையாகப் பின் தொடர்ந்து சென்றாள்.
அம்பிகாபதியின் வாழ்வு அழியாப் பெருவாழ்வு. வாழ்வில், தான் உணர்ந்த காதலின் நுட்பத்தை நுகர்ந்த இன்பத்தின் எக்களிப்பைக் ‘கற்பனை‘ எனும் வண்ணத்தில் குழைத்துத் ‘தமிழ்‘ எனும் கிழியில், ‘அகப்பொருள்‘ எனும் எழுதுகோலால், ‘கோவை‘
எனும் அழகு ஒழுகும் உயிர் ஓவியமாகத் தீட்டி, இறந்தும் இறவாப் பெரும் புகழுடன் நம்மி டையே வாழ்ந்து வருகிறான், அம்பிகாபதி.
‘அம்பிகாபதிக் கோவை‘
என்று அவருடைய பெயரையே சிறந்த அடைமொழியாகக் கொண்டு இலங்கும் இந்நூல் தமிழில் உள்ள சிற்றிலக்கியங்களுள் ஈடும் இணையும் அற்றதாகும்.
அரசன் மகளை அம்பிகாபதி புகழ்ந்து பாடியுள்ள பாடல்கள், அவருடைய உள்ளத்தில் ஊற்றெடுத்த காதல் உணர்வின் வேகத்தையும், ஆழத்தையும், ஆற்றலையும் அறிவிப்பனவாக உள்ளன. அவை சொற்சுவையும் பொருட்சுவையும் பயப்பனவாகும். தனது தந்தை இயற்றிய இராமாயணத்திற்குக் ‘கம்ப நாடன்‘ எனத் தொடங்கும் சிறப்புப் பாயிரத்தை அம்பிகாபதி பாடியருளினார் என்பர்.
இளைஞனாக இருந்தகாலையில் காதலுக்காக உயிர் நீத்த இப் புலவர் பெருமகனார், நெடுநாட்கள் வாழ்ந்திருப்பின் தமிழ் இலக்கியம் பல வகையில் வளம் பெற்றிருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அம்பிகாபதி மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் (கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்) வாழ்ந்தவராவர்.
அம்பிகாபதி அரசகுமாரியைப் புகழ்ந்து பாடியது
மைவடிவக் குழலியர்தம் வதனத்தை
நிகர் ஒவ்வா மதியே! மானே!
செய்வடிவைச், சிற்றிடையைத், திருநகையை,
வேய்த்தோளைத் தெய்வமாக
இவ்வடிவைப் படைத்தவடிவு எவ்வடிவோ?
யான் அறியேன்! உண்மையாகக்
கைபடியத் திருமகளைப் படைத்து, இவளைப்
படைத்தனன்நல் கமலத்தோனே!
கரிய மேகத்தின் வண்ணமாகிய கூந்தலுக்கு இடையே தோன்றும் ஒளி மிகுந்த இம் மங்கையின் முகத்திற்கு இணை இல்லாத மதியே! அழகிய மிரளும் இவள் விழிகளுக்கு ஒப்புமை கூற இயலாத கண்களை உடைய மான்களே! ‘வடிவழகும், உடுக்கை போன்ற சிறுத்த இடையும், முத்துப் போன்று ஒளிவிடும் அழகிய பற்களையும், மூங்கில் போன்ற உருண்டு திரண்ட தோள்களையும் உடைய இந்த அழகுத் தெய்வத்தைப் படைத்தது யார்?’
என்பதை யான் அறியேன்! தாமரை மலரில் வாழும் பிரமதேவன் முதலில் திருமகளின் எழில் உருவைப் படைத்துப் படைப்புக் கலையிலே ஓரளவிற்குக் கைபழகிய பின்னரே, திருமகளினும் சிறந்த இவள் எழில் உருவைப் படைத்திருக்க வேண்டும்.
நயம்: அரசகுமாரியின் திருமுகத்திற்கு மதியும் இணை யாகாது, விழிகளுக்கு மான்விழியும் ஒப்பாகாது, வடிவழகில் திருமகளும் நிகராகாள். இத்தகைய பேரழகியைப் படைக்கப் பிரமன் எவ்வளவு அரும்பாடு பட்டு முயன்றிருக்க வேண்டும் என்பது அம்பிகாபதியின் கருத்து.
மை–கரி;
வதனம்–முகம்;
வேய்–மூங்கில்;
கமலத்தோன்–பிரமன்.
உருகி, உடல் கருகி, உள்ளீரல் பற்றி
எரிவது அவியாது; என்செய்வேன்? –வரி அரவ
நஞ்சிலே தோய்ந்த நளினவிழிப் பெண்பெருமாள்
நெஞ்சிலே இட்ட நெருப்பு.
வரிகளையுடைய பாம்பினது நஞ்சில் தோய்க்கப்பட்ட செந்தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணரசி, எனது உள்ளத்தில் காதல் தீயினை மூட்டி விட்டாள். அத் தீ எனது உடலைக் கருக்கி, உள்ளத்தை உருக்கி, உள்ளேயுள்ள எனது இதயத்தில் கொழுந்து விட்டு எரிகிறதே! அவிந்த பாடில்லையே! இத் துன்பத்தைத் தணிக்கும் மருந்தைப் பெறுவதற்கு யான் என் செய்வேன்?
குறிப்பு: எழில் மிக்க அரசகுமாரியைப் பல நாட்கள் சந்திக்க இயலாது, உளம் சோர்ந்து, உடல் மெலிந்து, துன்புற்ற போது,
அம்பிகாபதி அவள் தந்த நோயின் தன்மையைக் கூறியதாகும்.
அரவம் – பாம்பு;
நளினம்– தாமரை.
சோழ மன்னன் தன் மகளிடத்து அம்பிகாபதி காதல் கொண்டு இருப்பதாகக் கேள்வியுற்று வியப்பு அடைந்தான். அதனை அறிதற் பொருட்டுத் தன் அரண்மனையில் கம்பரையும், அம்பிகாபதி முதலியோரையும் ஒரு நாள் விருந் துண்ணுமாறு அழைத்தான். அரசன் தன் மகளை உணவு பரிமாறச் செய்தான். அவள் கையில் கிண்ணத்தைச் சுமந்து விருந்து பரிமாற ஒய்யாரமாக நடந்து வந்தாள். அவளைக் கண்ட அம்பிகாபதி மெய்ம் மறந்து தன் காதலியின் வடிவழகை வருணிக்கத் தொடங்கி, "இட்டடி நோவ, எடுத்த அடி கொப்புளிக்க–வட்டில் சுமந்து மருங்கு அசைய
என்று பாடத் தொடங்கினான். அதைக் கேட்ட கம்பர் தன் மகனுக்குத் தீங்கு வரும் என்று அஞ்சிக் கலைமகளைத் தியானித்தார். அந்நிலையில் தெருவில் ஒருத்தி கொட்டிக் கிழங்கு விலை கூறிக் கொண்டு சென்றாள். உடனே கம்பர் தன் மகன் பாடிய பாட்டிற்குப் பொருந்த, எஞ்சிய பகுதியைப் பாடி முடித்தார்.
இட்டடி நோவ, எடுத்த அடி கொப்புளிக்க,
வட்டில் சுமந்து மருங்கு அசையக் – ‘கொட்டிக்
கிழங்கோ கிழங்கு‘ என்று கூறுவாள் நாவில்
வழங்குஓசை வையம் பெறும்.
நிலத்தில் மிதித்துள்ள அடி வருந்தவும், நிலத்தினின்று எடுக்கப்பட்ட மற்றொரு அடி பூமியில் அழுந்தியதனால் கொப்புளம் காணவும், வட்டிலைக் கையில் தாங்கிச் சிறுத்த இடையானது அசையவும், கொட்டிக் கிழங்கோ கிழங்கு‘ என்று கூறுவாள் நாவில் இருந்து எழுகின்ற சொற்களானது உலகம் மதிக்கத் தக்கதாகும்.
வட்டில்–கிண்ணம்;
மருங்கு–இடை;
கொட்டிக்கிழங்கு–நீரில் படரும் ஒருவகைக் கொடியின் கிழங்கு;
வையம்–உலகம்;
தன் மகளைக் காதலித்ததற்காக அரசன் அம்பிகாபதிக் குக் கொலைத் தண்டனை விதித்தான். ஆயினும் கவியரசர் கம்பருடைய மகன் என்ற காரணத்தினால் அம்பிகாபதி சிற் றின்பம் கலவாது, பேரின்பத்தைப் பற்றி நூறு பாடல்களைப் பாடினால், அவனைத் தண்டிக்காமல் விட்டு விடுவதாகக் கூறினான். அவ்வாறே அரசனது அவையில் அம்பிகாபதி, பேரின்பத்தைப் பற்றித் தொண்ணூற்று ஒன்பது பாடல்கள் பாடினான். மறைவாய் இருந்து அவனுடைய பாடல்களை எண்ணிக் கொண்டிருந்த அரசிளங்குமரி, தொண்ணூற்று ஒன்பதாவது பாடல் பாடியவுடன், காப்புச் செய்யுளையும் அதனோடு சேர்த்து, நூறு என்று தவறாகக் கணக்கிட்டு, அம்பிகாபதியை எட்டிப் பார்த்தாள். அவளைக் கண்ட அம்பிகாபதி சிற்றின்பக் கருத்து அமையப் பாடியது.
சற்றே பருத்த தனமே குலுங்கத், தரளவடம்
துற்றே அசையக், குழைஊசலாட, துவர்கொள் செவ்வாய்
நற்றேன் ஒழுக, நடனசிங்கார நடையழகின்
பொற்றேர் இருக்கத், தலையலங்காரம் புறப்பட்டதே!
சிறிது அளவு பருத்துள்ள கொங்கைகள் குலுங்கவும், முத்து மாலையானது அதன் மீது நெருங்கி அசைந்தாடவும், காதுகளில் அணிந்துள்ள அழகிய குழைகள் அசையவும், பவழம் போன்ற செவ்விதழ்களை உடைய வாயில் தேனினும் இனிமையான சொற்கள் எழ, அன்னம் போல் சிங்கார நடை அழகு அமைந்த பொன் போன்று பொலிவு மிக்க உடலாகிய தேர் இருக்க, அழகாக அலங்கரிக்கப்பட்ட தலைப்பகுதி மட்டும் வெளித் தோன்றியது வியப்பிற்குரியது!
நயம்: பொன் தேர் இருக்க – அல்குலாகிய மறைவு இடம் இருக்க, முழு மதியம் போன்ற ஒளிரும் முகத்துடன் கூடிய தலைச் சிகரம் வெளித் தோன்றிற்று என்பது சிற்றின்பக் கருத்தாகும்.
தனம்–மார்பகம்;
தரளம்–முத்து;
துற்று–மேலே தொங்கி அல்லது நெருங்கி;
குழை–பெண்கள் காதணி;
துவர்– பவழம்."
![]()