A/L, ஆகமங்கள்

ஆகமங்கள்

இந்து சமய மரபில் வேதங்கள் ஆகமங்கள் என்பன முதன் நூல்கள் என்று கொள்ளப்படுகின்றன. இவற்றுள் ஆகமங்கள் இந்து சயமத்தின் சிறப்பு நூல்கள் என்று போற்றப்படுகின்றன. இதனால் ஆகம இலக்கியங்கள் இந்து சமயத்தின் அறுவகை நெறிகளின் வளர்ச்சியிலும் மிக முக்கியத்துவம் பெறுகின்றன.
ஆகமம் என்பதிலுள்ள என்பது பாசத்தையும், என்பது பசுவையும், பதியை யும் சுட்டி, சைவ சித்தாந்தம் கூறும் முப்பொருள் உண்மையை விளக்கும் நூல் என்று பொருள் கூறப்படுகிறது.. ஆகமம் என்பதில் உள்ள ஆ- சிவஞானம், மோட்சம், ம- மலநாசம் என்பனவற்றைச் சுட்டி ஆன்மாவிற்கு மலத்தை நாசம் பண்ணி, சிவஞானத்தை உதிப்பித்து மோட்சத்தை நல்குவது என்று பொருள்படுகின்றது.
சிவாகமங்களின் தோற்றமும் தொகையும்
சிவாகமங்களைச் சிவனே அருளினார் என்பது சைவ சமயத்தவர்களின் நம்பிக்கை. மாணிக்கவாசக சுவாமிகள்மன்னுமாமலை மகேந்திரமதனில் சொன்ன ஆகமம்…..’ எனவும்ஆகமமாகி அண்ணிப்பான் தாள் வாழ்க……’ எனவும் கூறியுள்ளார். ‘வேதமோ டாகமம் மெய்யாம் இறைவன்நூல்‘, ‘அண்ணல் அருளில் அருளும் சிவாகமம்…..’ என வரும் திருமந்திர பாடல் வரிகளும் இவ்வுண்மையைத் தெளிவுபடுத்துகின்றன. இறைவனின் ஐந்து முகங்களில் இருந்து இருபத்தெட்டு ஆகமங்களும் தோன்றியதாக அவற்றின் உபதேச வரிசைக் கிரமம் மூறுப்படுகிறது. அது பின்வருமாறு அமையும்.
சத்தியோசாத முகம் :- காமிகம், யோகதம், சிந்தியம், காரணம், அஜிதம்

வாமதேவ முகம் :தீப்தம், சூஷ்மம், சகஸ்ரம், அம்சுமம், சுப்ரபேதம்

அகோர முகம் :-விஜயம், நிச்வாசம், சுவாயம்புவம், அனிலம், வீரம்

தத்புருஷ முகம் :-ரௌரவம், மகுடம், விமலம், சந்திராஷ்னம், விம்பம்

ஈசான முகம் :-புரோதகீதம், லலிதம், சித்தம், சந்தானம், சர்வோட்சம்.

காராமேஸ்வரம், கிரணம், வாதுளம்

இந்தவகையில் ஆகமங்கள் உபதேசிக்கப்பட்ட ஞான குரு பரம்பரை சதாசிவ மூர்த்தி அனந்ததேவர் ஸ்ரீகண்ட ருத்திரர் திருநந்தி தேவர்சனற்குமாரர் முனிவர்கள் மானிடர்கள் என்று கூறப்படுகிறது.
ஆகமங்கள் குறித்த காலப்பகுதியில் தோற்றம் பெற்றவை என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்து அதாவது கி.பி. 6ம் நூற்றாண்டை இறுதி எல்லையாக் கொண்டு அதற்கு முற்பட்ட காலத்தில் ஆகமங்கள் அருளப்பட்டதாகக் குறிப்பிடுகின்றனர்.

சிவாகமங்களுள் மூலாகமங்கள் காமிகம் முதல் வாதுளம் ஈறாக இருபத்தெட்டு. இவை சிவபேதம் கூறுபவை -10, உருத்திரபேதம் 18 என இருவகைப்படும். சங்கிதை. பாகவதசாத்திரம் என்று அழைக்கப்படும் வைணவ ஆகமங்கள் 108 என்று கூறுவர். வைணவ ஆகமங்களை வைகாசன மரபு, பாஞ்சராத்திர மரபு, என இரண்டாகக் கூறுவர். வைகாசனம் வைதிக ரிஷியான விகாணஸ் என்பவரால் தொகுக்கப்பட்டது. இவை ஒரே தத்துவங்களைக் கொண்டவை. வைணவ ஆகமங்களும் சகஸ்தியசங்கிதை, ஈஸ்வர சங்கிதை, காசிப சங்கிதை, அனிருத்தசங்கிதை முதலானவை குறிப்பிடத்தக்கவை. சக்தி வழிபாட்டின் சிறப்பைக் கூறும் சாக்த ஆகமங்களைத் தந்திரங்கள் எனவும் அழைப்பர்.இவை 77 ஆகும். இவற்றுள் மகாநிருவாணதந்திரம், திரிபுரரகசியம். காமகலா விலாசம் சாரதா திலகம் முதலானவை குறிப்பிடத்தக்கவை. சாக்த தந்திரங்களுள் சுப ஆகமங்கள், தரிணாசாரம் (வலது) எனப்படும் 05 ஆகமங்கள் ஞானம். மோஷத்திற்கான வழியைப்பற்றிக் கூறுவன. கெளல ஆகமங்கள், வாமாசாரம் (இடது) எனப்படும் 64 ஆகமங்கள் மந்திர வித்தை, இடக்கரான வழிபாடு பற்றிக் கூறுவன. மிசிர ஆகமங்கள் எனப்படும் 08 ஆகமங்களும் இருவகையும் கலந்து விளங்குவன.

சிவாகமங்கள் ஒவ்வென்றும் கர்ம காண்டம், ஞான காண்டம் என்னும் இருபெரும பிரிவுகளை உடையன. இவற்றுள் கர்ம காண்டம் செயல் (கிரியை) சார்ந்த விடயங்களையும், ஞான காண்டம் அறிவியல் சார்ந்த தத்துவக் கருத்துக்களையும் கூறுவனவாக உள்ளன.
சிவாகமங்கள் ஒவ்வொன்றும் சரியா பாதம், கிரியா பாதம், யோக பாதம், ஞான பாதம் என்னும் நான்கு பிரிவுகளை உடையன. அவையாவன:

1. சரியா பாதம்பிராயச்சித்த விதி, பவித்திர விதி, ஆலய அமைப்பு விதி, சுற்று பிரகாரம், கோபுரம், பரிபாலகர் அமைப்பு உமாமகேசுவரர் இலக்கணம், சிவலிங்க இலக்கணம்.

2. கிரியா பாதம் – மந்திரம், உற்சவம், நித்திய, நைமித்திய, காமிய கிரியைகள், சிவசின்னங்களை அணியும் முறை.

3. யோக பாதம்அட்டாங்க யோகம், அட்டமாசித்திகள், ஆறுவகை ஆதாரங்கள்.

4. ஞான பாதம் முப்பொருள் உண்மை, புவனங்களின் தோற்றம்.

ஞானபாதம் ஆகமாந்தம் எனவும் அழைக்கப்படுகின்றது.
ஆலய நிருமாணமும் திருவுருவ அமைப்பும்

சிவாகமங்கள் கடவுள், ஆன்மா, கடவுள் வழிபாடு, ஆன்மாக்கள் ஆற்றும் வினைகள், சைவ சமய வாழ்க்கை. ஆலய அமைப்பு, ஆலயக் கிரியைகள், சித்தாந்த சிந்தனைகள் என்று சைவநெறிசார் பல விடயங்களைக் கூறுகின்றன. சைவாகமங்கள் சைவ மக்களின் ஆன்மீக வாழ்வை ஆலயங்களை மையமாகக்கொண்டு கூறுகின்றமையைக் காணலாம். ஆலய வழிபாட்டையும், சமய அனுட்டானங்களையும் விதிகளாக விளக்குவதனால் சிவாகமங்களுக்கு சாத்திரங்கள் என்ற பெயரும் உண்டு. அனைத்து மக்களும் ஆன்ம விடுதலை பெறவேண்டும் என்ற வகையிலேயே ஆகமங்கள் ஆலய வழிபாட்டை வகுத்துக் கூறுகின்றன. வேதங்கள் கூறும் அக்கினி வழிபாடும் சாதாரண மக்களுக்கு ஏற்புடைய உருவ வழிபாடும் சிவாகமங்களில் இணைவுறுகின்றன.

சிவாகமங்கள் ஆலயம் அமைக்கும் இடம், ஆலய அமைப்பு, ஆலயத்தின் உறுப்புகள், அவை அமைய வேண்டிய இடங்கள், அவற்றின் அளவைப்பிரமாணங்கள், கோயிற் கிரியைகள், ஆலய அனுட்டானங்கள் போன்ற விடயங்களை விதிகளாக விபரிக்கின்றன. சிவாலயத்தில் இடம்பெற வேண்டிய கருவறை, மண்டபங்கள், பரிவாரக் கோயில்கள், பிரகாரங்கள் மற்றும் கோபுரம், விமானம் என்பன அமைய வேண்டிய விதிகள் என்பன இவற்றில் கூறப்பட்டுள்ளன. ஆலயம் ஒன்றில் அமைய வேண்டிய பிரகாரங்கள் பற்றி காமிக ஆகமம் பிரகாரலட்சண விதிப்படலம்எனும் தலைப்பில் விபரிக்கிறது. ஆலயத்தில் எத்திசையில் எவ்வெவ் மூர்த்தங்கள் அமையவேண்டும் என்பதும் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக, கிழக்கில் சூரியன், தெற்கில் ஷண்முகன், மேற்கில் விஷ்ணு, வடமேற்கில் துர்க்கை, வடக்கில் சப்தமாதர், வடகிழக்கில் சிவன், தென்மேற்கில் ஐயனார் எனும் நிலையில் அமைய வேண்டுமென விதிக்கப்பட்டுள்ளது. காமிகாமத்தில் ஆலய அமைப்பு, ஆலயத்தை அமைக்கத் தகுந்த இடம், பரிவார தேவதைகள், பிரகாரங்கள் என்பன பற்றிக் கூறப்பட்டுள்ளது

மனிதன் ஒருவன் தரையிலே நேராக படுத்திருப்பது போன்ற அமைப்பில் ஆகம முறைப்படி அமைந்த ஆலயங்கள் விளங்குகின்றன. ‘ஷேத்ரம் சரீரப் ப்ரஸ்தாரம்என்ப தற்கு அமைவாக மனித உடலுக்கும் ஆலய அமைப்பிற்கும் மிக நெருங்கிய தொடர்பு கூறப்படுகிறது.
கர்ப்பக்கிரகம் தலையும்
அர்த்தமண்டபம் கழுத்தையும்
மகாமண்டபம் மார்பையும்
யாகசாலை நாடியையும்
கோபுரம் பாதத்தையும்

உணத்துகின்றன. திருமூலரும் உள்ளம்பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம், வள்ளற் பிரானுக்கு வாய் கோபுர வாசல் ……’ என்று கூறியுள்ளார். அதாவது உடலுக்கும் ஆலயத்திற்கும் உள்ள தொர்பினைப் இவ்வாறு கூறியுள்ளார். ‘காயமே கோயிலாக…’ எனவரும் பாடலும் மேற்குறித்த விடயத்துடன் தொடர்புடையதாக அமைவதைக் காணலாம்.

சிவாகமங்கள் ஆலய அமைப்பினூடாக திருவுருவ வழிபாட்டை வகுத்துக் கூறுகின்றன. சிவலிங்கத் திருமேனி, அர்த்தநாரீஸ்வரர், இலிங்கோற்பவர், கங்காதரர், தட்சணாமூர்த்தி போன்ற 25 மூர்த்தி பேதங்களை அமைக்க வேண்டிய விதிகளை ஆகமங்களே வகுத்துக் கூறுகின்றன. திருவுருவங்களை செதுக்குவதற்குரிய கருங்கல்லைத் தெரிவு செய்தல் பற்றி சிவாகமங்கள்சிலா பரீட்சணம்என்ற தலைப்பில் கூறுகின்றன. திருவுருவங்களின் பங்க அமைதிகள், அங்கலட்சணம், அவற்றின் அளவுப் பிரமாணம், ஆடை ஆபரணம் என்பன பற்றியும் அவற்றில் கூறப்பட்டள்ளன. காமிக, காரண ஆகமங்களில் சிற்பங்கள், திருவுருவங்கள் அமைப்பதற்கான நுணுக்கங்கள் பற்றியும் உத்தரகாரணாகமத்தில் திருவுருவங்களின் அளவுப் பிரமாணங்கள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. சுக்கிர நீதிதிருவுருவங்கள் அளவில் மிகினும் குறையினும் நலமுடையன அல்லஎன்கிறது. திருவுருவங்களின் பிரதிமாலட்சணத்தில் ஆகமப் பிரமாணம் முதன்மையான இடம் பெறுகின்றது. சிற்பங்கள், ஆலயங்கள் என்பவற்றை அமைக்கின்ற ஸ்தபதிகளிடத்தில் காணப்பட வேண்டிய தகுதிகள், பின்பற்றவேண்டிய நியமங்கள் என்பவையும் கூறப்பட்டுள்ளன.

ஆலயக் கிரியைகளும் அனுட்டானங்களும்
அனைத்து மக்களின் ஆன்ம ஈடேற்றம் சிவாகமங்களின் உயிர் நாதமாக உள்ளது. சிவாகமங்கள் இந்நோக்கத்தை அடையும் வகையில் திருவுருவ அமைப்பையும் அவை சார்ந்த கிரியை முறைகளையும் வகுத்துக் கூறுகின்றன. ஆகமம் கூறும் உருவ வழிபாட்டின் அடிப்படையில் ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி தெள்ளேணம் கொட்டாமோஎன்னும் மணிவாசகரின் வாக்கு அமைகிறது. சிவாகமங்கள் கூறும் கிரியை முறைகள் திருக்கோயிலையும் திருவுருவங்களையும் மையமாகக கொண்டவை. நித்திய கிரியை நைமித்திய கிரியை, காமிக கிரியை, பிரதானமானவை. நித்திய கிரியைகள் 3,6,12 வேளைகளில் இடம்பெறுதல் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

கோயிலில் நடைபெறும் நைமித்திய கிரியைகளை சிவாகமங்கள் கர்ஷணம், பிரதிட்டை, உற்சவம், பிராயச்சித்தம் எனும் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளன.

கர்ஷணம்

பிரதிட்டை

உற்சவம்

பிராயச்சித்தம்

ஆலயம் அமைப்பதற்குரிய இடத்தைப் பண்படுத்துதல். ஆலயத்தில் திருவுருவங்களை பிரதிட்டை (நிறுவுதல்) செய்தல். ஆலயத்தில் வருடமொரு முறை இடம் பெறும் திருவிழா ஆலய கிரியைகளின்போது இடம்பெறும் குற்ற நிவர்த்தியின் பொருட்டு ஆற்றப்படும் கிரியை

கோயில்களில் இடம்பெற வேண்டிய கிரியைகள், அவற்றை ஆற்றும் விதிகள், பூசையின் அங்கங்கள், மந்திர உச்சாடனம், நிவேதனப் பொருள்கள் யாகங்கள், யாகசாலை, மேடைகள், யாக குண்டங்களின் எண்ணிக்கைகள், பூஜையின் தன்மை, காலம், அபிஷேகம் செய்யும் முறை, அலங்காரம், பூசை அமைப்பு, ஷோடஸ உபசாரங்கள், வீதியுலா, உற்சவங்கள் என்பன பற்றிக் கூறுகின்றன. சிவாகமங்களில் வரும் பூஜா விதிப்படலம், மந்திராவதாரப் படலம் போன்ற பிரிவுகள் மேற்கூறிய அம்சங்களுடன் தொடர்புபட்டவை.

ஆகமங்கள் கூறும் கோயிற் கிரியைகளுள் இகோற்சவம், பிரதிட்டை என்பன பிரதான மானவை. இவ்வாறான கிரியைகளினபோது இடம்பெறும் கொடியேற்றம் அனுக்ஞை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரணம், அங்குரார்ப்பணம், ரஷாந்தணம், கும்பம் தாபிக்கும் முறை கும்பத்தை தேங்காய், வஸ்திரம், மலர்மாலை, கூர்ச்சம் முதலியவற்றால் அலங்கரிக்கும் முறை, கும்பத்தின் தன்மை, சுற்றப்படும் நூல், நெல்லின் அளவு, தர்ப்பை, மாவிலை, நெல், பச்சையரிசி, பஞ்சகெளவியம், பொரி, நவதானியம், சமித்து, பஞ்சதிரவியம் மகோற்சவத்தின் போது நடைபெறும் கொடியேற்றம், வாகனத் திருவிழா, மௌன உற்சவம், தேர்த்திருவிழா, தீர்த்தத் திருவிழா என்பனவற்றை ஆற்றும் முறைகள் பற்றி இவற்றில் உண்டு.

ஆகமங்கள் நால்வகை பிரதிட்டைகள் பற்றிக் கூறுகின்றன. அவை அநாவர்த்தனம், ஆவர்த்தனம், புனராவர்தத்னம், அந்தரிதம் என்பன. இவற்றுள் அநாவர்த்தனம் என்பது ஆலயத்தை புதிதாக அமைத்து அங்கு தெய்வப் படிமங்களை புதிதாக ஸ்தாபனம் செய்து ஆற்றப்படுவது எனவும். பூசைகள் நடைபெற்றுவரும் ஆலயத்தை புனர்நிருமாணம் செய்வதற்காக மூலமூர்த்தியை பாலத்தாபனம் செய்த பின்பு, புனர்நிருமாணத்தைத் தொடர்ந்து இயற்றப்படுவது புனராவர்த்தனம் எனவும். நீண்டநாள் கிரியை நடைபெறாத கோவிலில் கிரியை ஆற்றும் பொருட்டு செய்யப்படுவது ஆவர்த்தனம் எனவும் ஆலயத்தில் நிகழும் ஆசாரக் குறைகளை நிவர்த்த செய்யும் நோக்கில் செய்யப்படுவது அந்தரிதம் எனவும் குறிப்பிடப்படுகின்றன.

சைவசித்தாந்த சிந்தனைகள்
சிவாகமங்கள் ஆலய வழிபாட்டுடன் சித்தாந்த சிந்தனைகளையும் கொண்டுள்ளன.
சிவாகமங்களின் யோகபாதம், ஞானபாதம் என்பனவற்றில் சைவ சித்தாந்தக் கருத்துகள் அதிகமாகக் காணப்படுகின்றன. கிரணம், ரௌரவம், பௌஷ்கரம் முதலான ஆகமங்கள் சித்தாந்த சிந்தனைகளைப் பெரிதும் கொண்டவை. பதி, பசு, பாசம் எனும் முப்பொருள் உண்மை, அவற்றின் இயல்புகள் பதியின் மூவகைத் திருமேனிகள், அவற்றின் இயல்புகள், ஐந்தொழில்கள், ஆன்ம ஈடேற்றம், மும்மலங்கள் போன்ற விடயங்களை ஆகமங்கள் கூறுகின்றன. கிரண ஆகமம் பதி படலம், பசு படலம், மாயா படலம், சத்திநிபாத படலம் போன்ற தலைப்புகளின் கீழ் சைவசித்தாந்த உண்மைகளை விபரிக்கின்றது. சிவாகமங்களில் சரியா பாதம், கிரியா பாதம், யோக பாதம், ஞான பாதம் என்பனவற்றில் சைவ சித்தாந்த சாதனைகள் குரு லிங்க சங்கம வழிபாடு, சிவசின்னங்கள், தீட்சை பற்றிய விளக்கங்கள் உள்ளன. இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி எனும் அட்டாங்க யோகங்கள் பற்றியும் இவற்றில் காணப்படுகின்றன. அட்டாங்க யோகம் மூலம் கைகூடும் அடடமா சித்திகளாகிய அணிமா, லகிமா, மகிமா, கரிமா,பிராப்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் பற்றிய செய்திகளும் கூறப்பட்டுள்ளன. ஆன் மாவின் இறுதி இலட்சியமான வீடுபேறாகிய சுத்தாத்துவித முத்தி பற்றியும் சிவாகமங்கள் கூறியுள்ளன.

ஆகமங்களின் முக்கியத்துவம்
இந்து சமய வரலாற்றில் வேதங்களைப் போல் ஆகமங்கள் முதனூல்கள் ஆகும்.

சிரளதம், சுப தந்திரம் என ஆகமம் சிறப்பிக்கப்படுகிறது.

வேதங்கள் பொது நூல் எனவும், ஆகமங்கள் சிறப்பு நூல் எனவும் கொள்ளப்படுகின்றன.

ஆகமங்கள் சிறப்பு நூல்கள் என்ற வகையில், சைவ ஆகமங்களை சிவாகமங்கள் என்றும் வைணவ ஆகமங்களை சங்கிதைகள் என்றும் சாக்த ஆகமங்களை தந்திரங்கள் எனவும் அழைப்பர்.

இந்து சமய தத்துவக் கோட்பாடுகள் பலவற்றில் ஆப்த வாக்கியப் பிரமாணமாக அமையும் சிறப்புடையவை ஆகமங்கள்

ம்: வேதமொடாகமம் மெய்யாம் இறைநூல் ஒதும் பொதுவும் சிறப்புமென்றுள்ளன நாதன் உரையவை …. திருமந்திரம்

இந்துக்களின் கோயில் கட்டட, சிற்பக் கலைகளை எடுத்துக் கூறுவது ஆகமம்மாகும். பிற்கால சிற்பசாத்திர நூல்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. ஆகமங்கள்

இந்துக்களின் கிரியை மரபுகளை நெறிப்படுத்துவதில் ஆகமங்கள் முக்கியமான இடம் பெறுகின்றன.

ஆகமங்கள் இறை வழிபாட்டை கிரியை நெறி மூலம் வழிப்படுத்துகின்றன. இக்கிரியை நெறியை எடுத்துக் கூறும் நூல்களே பத்ததிகள்.

ஆகமங்கள் ஆலய வழிபாடு, சமய அனுட்டானங்கள், சைவ சித்தாந்தசிந்தனைகள் போன்ற பல விடயங்களின் ஊடாக மக்களின் வாழ்க்கையுடன் நெருக்கமுற்று விளங்குகின்றன.

 

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top