A/L, நற்றிணை, விளையா டாயமொடு வெண்மண லழுத்தி


நற்றிணை

எட்டுத்தொகை நூல்கள் பற்றிக் குறிப்பிடும் பாடலில் முதலாவதாக அமைந்துள்ளது. ஒன்பது அடி முதல் பன்னிரண்டு அடி வரை இந்நூற் பாடல்கள் அமைந்துள்ளன. அன்பின் ஐந்திணையில் வரும் களவியலையும் கற்பியலையும் பொருளாகக் கொண்டது. நீர் எவ்வாறு உலக வாழ்க்கைக்கு இன்றியமையாததோ அவ்வாறே தலைவி உயிருடன் இயங்குவதற்கு தலைவனது அருள் தோய்ந்த காதல் நெஞ்சம் இன்றியமையாதது. பண்டைத் தமிழ் மக்களின் சில பண்பாட்டுக் கூறுகளையும் இந்நூலில் காணலாம். பல்லி சொற்பலன், கண்ணை மூடிக்கொண்டு சுவரிலே வட்டம் போடுதல், கிளி,
நாரை போன்றவற்றை தூது அனுப்புதல் முதலான பழக்கவழக்கங்களையும் காணமுடிகின்றது.

திணை :- நெய்தல்
துறை :-பகற்குறி வந்த தலைவனை தோழி வரைவு கடாவியது. பகற்பொழுதில் தலைவியைச் சந்திக்க வந்த தலைவனுக்கு, பகற்பொழுதில் உள்ள இடர்பாடுகளை கூறி,
அதனால் சந்திப்பதை தவிர்த்து திருமணம் செய்யுமாறு தோழி கேட்டது.

பாடியவர் :- பரணர்

பாடல் :

விளையா டாயமொடு வெண்மண லழுத்தி

மறந்தனந் துறந்த காழ்முளை யகைய

நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப

நும்மினுஞ் சிறந்தது நுவ்வை யாகு மென்

றன்னை
கூறினள் புன்னையது சிறப்பே

அம்ம நாணுது நும்மொடு நகையே

விருந்திற் பாணர்
விளரிசை கடுப்ப

வலம்புரி வான்கோடு நரலு மிலங்குநீர்த்

துறைகெழு கொண்கநீ நல்கி

னிறைபடு நீழல்
பிறவுமா ருளவே.

பதவுரை :
விருந்திற் பாணர் புதியராய் வந்த பாணர்கள் பாடுகின்ற; விளர் இசை கடுப்பமெல்லிய இசைப்பாட்டுப் போல; வலம்புரி
வான்கோடு
வெள்ளிய வலம்புரிச் சங்கு; நரலும்ஒலிக்கும்; இலங்கு நீர் விளங்கிய நீரை உடைய; துறை கெழு கொண்க துறை பொருந்திய நெய்தல் நிலத் தலைவனே; விளையாடு ஆயமொடு – நாம் எம்மோடு விளையாடுகின்ற தோழியர் கூட்டத்தோடு சென்று; வெண்மணல் அழுத்திவெண்ணிறமான மணலிலே புதைத்து; மறந்தனம் துறந்த பின் அதனை மறந்து விட்ட; காழ்முளைபுன்னையின் விதையானது; அகைய
வேரூன்றி முளைக்க; நெய்பெய் தீம்பால் – (அது கண்டு மகிழ்ந்து) நெய் கலந்த இனிய பாலை; பெய்துநீராக ஊற்றி; இனிது வளர்ப்ப – இனிதாக வளர்க்கும் நாளில்; நும்மினும் சிறந்தது அன்னை எம் நோக்கி) நீங்கள் வளர்த்து வரும் புன்னையானது உங்களை விடச் சிறந்தது; நுவ்வை ஆகும் அது உங்களுடன் பிறந்த தங்கையாகும் தகுதியை உடையது; என்றுஎன்று; புன்னைய சிறப்பே புன்னையின் சிறப்பினை; அன்னை கூறினள் – ‘ அன்னை விளங்க உரைத்தாள்; நும்மொடு நகை நாணுதும்– ஆதலால் (எமது தங்கையாகிய இப்புன்னை மரத்தின் நிழலில் நின்று) உன்னோடு சிரித்துப் பேசி மகிழ்வதற்கு வெட்கப்படுகின்றோம்; நீ நல்கின் நீ இவளை அணைக்க விரும்பின்; நிறைபடு நீழல் பிறவுமார் உளவே – நிறைவான மரத்தின் நிழல் பிறவும் இங்குள்ளன. (எமது

அருஞ்சொற்கள் :
ஆயம்
தோழியர் கூட்டம்;

காழ் விதை;

நுவ்வை உமது தங்கை;

அகையமுளைக்க;

வான்வெண்மை;

விளர் மென்மை.

பொருள்:

புதியராய் வந்த பாணர்கள் பாடுகின்ற மெல்லிய இசைப் பாட்டுப் போல வெள்ளிய வலம்புரிச் சங்குகள் ஒலிக்கும். இத் தன்மையாக விளங்குகின்ற நீர்த்துறையுடைய நெய்தல் நில தலைவனே! நாம் எம்மோடு விளையாடுகின்ற தோழியர் கூட்டத் தோடு சென்று வெண்ணிறமான மணலிலே புதைத்து பின் அதனை மறந்துவிட்ட புன்னையின் விதையானது வேரூன்றி முளைக்க அது கண்டு மகிழ்ந்து நெய்யோடு கலந்த இனிய பாலை நீராக ஊற்றி இனிதாக வளர்த்தோம். அந்நாளில் எமது அன்னை எம்மை நோக்கி நீங்கள் வளர்த்து வரும் புன்னையானது உங்களை விட சிறந்தது. அது உங்களுடன் பிறந்த தங்கையாகும் தகுதியை உடையது என்று புன்னையின் சிறப்பினை விளங்க உரைத்தாள். ஆதலால் எமது தங்கையாகிய இப்புன்னை மரத்தின் நிழலில் நின்று உன்னோடு சிரித்துப் பேசி மகிழ்வதற்கு வெட்கப்படுகின்றோம். நீ இவளை அணைக்க விரும்பின் நிறைவான மரத்தின் நிழல் பிறவும் இங்கு உள்ளன காண்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top