தரம் 10 & 11
தமிழ் இலக்கிய நயம்
அலகு:- 01
புத்தகசாலை
வினாக்களும் விடைகளும்
1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது?
கனகசுப்புரத்தினம்.
2. இவரால் படைக்கப்பட்ட ஆக்கங்கள் 5 தருக?
அகத்தியன் விட்ட புதுக்கரடி
அமைதி
அழகின் சிரிப்பு
கற்புக்காவியம்
வேங்கையே எழுக
பெண்கள் விடுதலை
3. "தனிமனித தத்துவமாம் இருளைப்போக்கி……" எனும் தொடரில் தனி மனித தத்துவம் எனக் குறிப்பிடப்படுவது எது?
சுயநலக் கொள்கை.
4. புத்தக வாசிப்பில் மூழ்கியிருந்தபோது கவிஞர் கண்டவை எவை?
இதமான இப்புவியின் இயற்கை அழகு அனைத்தையும் கண்டேன், இசை கேட்டேன், மணம் நுகர்ந்தேன், சுவைகள் உண்டேன் என இங்கே பாரதிதாசன் புத்தக வாசிப்பில் ஈடுபட்டபோது கண்டவைகளாகக் கூறுகின்றார்.
5. புத்தகசாலையை நோக்கி வருவோருக்கு நூலகர் செய்ய வேண்டியவையாகக் குறிப்பிடப்படுபவை எவை?
வாசிக்க வருபவர்களின் வருகையை ஏற்றல்.
மரியாதை காட்டி அவர்களுக்கு இருக்கை தருதல்.
விரும்பிய நூல்களை வழங்குதல்.
புதிய நூல்கள் அங்கிருந்தால் அதைக் கூறுதல்.
நாளும் நூலை நேசித்து வருவோர் பெருகும் வண்ணம் செயற்படல்.
6. "தமிழிலாப் பிறமொழி நூல் அனைத்தும் நல்ல தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்" என்ற தொடரின் மூலம் வலியுறுத்தப்படும் உண்மை என்ன?
வாசிப்பதனால் மனிதன் பூரணமடைகிறான். இதனால் தமிழிலாப் பிறமொழி நூல்களையும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வழங்குவதால் நல்ல பரந்துபட்ட அறிவு கிடைக்கப்பெறும். இதனால் சிறந்த மறுமலர்ச்சி சமுதாயத்தில் ஏற்படும் என்பது அவரது கருத்தாகும்.
7. பின்வரும் சொற்களின் பொருளை எழுதுக.
சையோகம் – சேர்ந்திருத்தல்
சனித்தல் – பிறத்தல்
மகாசோதி – மிகப்பெரிய ஜோதி / ஒளிப்பிழம்பு
கோலமுறும் செய்தித்தாள் – பல்வேறு தகவல்களையும் உள்ளடக்கிய பத்திரிகை
8. "மனோபாவம் வானைப்போல் விரிவடைந்து" இங்கு கையாளப்பட்ட அணியினைக் குறிப்பிடுக?
உவமையணி
உவமானம் – வானம்
உவமேயம் – மனோபாவம்
பொதுத் தன்மை பரந்திருத்தல்
9. "சுவடிச்சாலை" என்று இங்கு குறிப்பிடப்படுவது எது?
புத்தகசாலை.
10. "ஆசித்த நூல் தந்தும்…….." இங்கு ஆசித்தல் எனக் குறிப்பிடப்படுவது யாது?
விரும்புதல்.
11. "புத்தகசாலை நாட்டில் வேண்டும்" எனக் கவிஞர் கூறுவதற்கான காரணங்கள் எவையெனக் குறிப்பிடுக?
- மக்கள் அன்பு நெறியைக் கடைப்பிடித்து கருணையுடன் வாழ.
- குறுகிய எண்ணங்கள் நீங்கி, பொதுவுடைமைச் சமுதாயம் மலர.
- மக்களிடையே ஒற்றுமையும், சமத்துவமும் வளர.
- மக்கள் புதுவாழ்வு பெற நூலகங்கள் அவசியம்.
12. "மகாசோதியில் கலந்தது எனது நெஞ்சு" விளக்குக?
நூல்களை வாசிக்க வாசிக்க மனதில் ஏற்படும் ஒரு பேரொளியே "மகாசோதி". புத்தக வாசிப்பால் கிடைத்த தெளிவும், நல்லெண்ணமும், ஊக்கமும் கவிஞரின் நெஞ்சத்தை அந்த அறிவுப் பேரொளியில் கலக்கச் செய்தது.
13. "அமுதம் போன்ற செந்தமிழ்க் கவிதை நூல்கள்" – அணி விளக்கம்?
இவ்வரியில் உவமை அணி பயின்று வந்துள்ளது.
- உவமானம்: அமுதம்
- உவமேயம்: கவிதை நூல்கள்
- பொதுத்தன்மை: இனிமை
- விளக்கம்: அமுதம் போன்று இனிமையானதும், தெவிட்டாததும், பயன்தர வல்லதுமான நூல்கள் என உவமைப்படுத்தப்பட்டுள்ளது.
14. கவிஞர் காண விழையும் நூலகம்?
கவிஞர் பாரதிதாசன் பின்வரும் வசதிகள் கொண்ட நூலகத்தை விரும்புகிறார்:
- நூல்கள்: தமிழ் நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், கவிதை மற்றும் உரைநடை நூல்கள் என அனைத்தும் நிறைந்திருக்க வேண்டும்.
- அமைப்பு: நூலகம் பறந்து விரிந்து, பல்கலைக் கழகம் போல் எங்கும் பரவி இருக்க வேண்டும்.
- பராமரிப்பு: நூல்கள் வகை வாரியாகவும், துறை வாரியாகவும் பிரிக்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- புதியவை: நாளிதழ்கள் மற்றும் புதிய நூல்கள் உடனுக்குடன் கிடைக்க வேண்டும்.
15. பிறமொழி நூல்களை விரும்புவதன் காரணம்?
- பிறமொழி நூல்களை நேரடியாக வாசிக்க முடியாதவர்களுக்கு, அவை தமிழில் மொழிபெயர்க்கப்படும்போது பயனுள்ளதாக அமையும்.
- இதன் மூலம் மக்கள் நல்ல அறிவு பெற்று, சமுதாயத்தில் அறிவுப் பெருக்கம் ஏற்படும் என்பதால் கவிஞர் இதனை விரும்புகிறார்.
பகுதி – II
புத்தகசாலை கவிதையின் பயன்கள்
உணர்வு: இயற்கையின் அழகை அனுபவிக்கவும், கவிஞர்களின் உணர்வோடு ஒன்றவும் உதவுகிறது.
மாற்றம்: அறியாமை இருள் நீங்கி, மனிதன் புதுவாழ்வு வாழவும், மனிதநேயம் வளரவும் வழிவகை செய்கிறது.
அறிவு: பல்வேறு துறைகளில் புலமை பெறவும், ஆளுமை வளர்ச்சியை அடையவும் நூலகங்கள் உதவுகின்றன.
சமூகம்: சமூகச் சீர்திருத்தத்திற்கு நூல்களும் நூலகங்களும் அடிப்படை ஆதாரமாக விளங்குகின்றன.
கவிஞருக்கு கிடைத்த புத்துணர்வு
உயர்ந்த கவிஞர்களின் உள்ளக்கிடக்கைகளே நூல்களாக உருவாகின்றன. அவற்றை வாசிக்கும்போது ‘மகாசோதியில்‘ கலந்தது போன்ற பேரானந்தமும், அறிவொளியும் கிடைப்பதாகக் கவிஞர் குறிப்பிடுகிறார். இதன் மூலம் தனக்கு புத்துயிர், உத்வேகம் மற்றும் இன்பம் கிடைத்ததாக அவர் விளக்குகிறார்.
![]()