ஆசிரியர் தொழில்சார் அபிவிருத்தியை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் -2026

ஆசிரியர் வாண்மை விருத்தி மத்திய நிலையங்களின் ஊடாக ஆசிரியர் வாண்மை விருத்திப் பயிற்சிகள் வழங்குமாறு கல்வி அமைச்சு அறிவிப்பு.

ஆசிரியர் தொழில்சார் அபிவிருத்தியை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் –2026

இலங்கை கல்வி அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த திட்டத்தின் கீழ், ஆசிரியர்களை வான்மையாளர்களாகவும் (Professionals) நவீன கல்விச் சீர்திருத்தங்களுக்கு ஏற்றவாறு தயார்படுத்தவும் விசேட பயிற்சித் திட்டங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கல்வி அமைச்சு ஆசிரியர் வாண்மை விருத்தி மையங்களுக்கான வழிகாட்டலில் தேவையான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதில் பின்வரும் விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

ஆசிரியர்களின் தொடர்ச்சியான தொழில்சார் அபிவிருத்திக்காகவும், சிறப்பாக இனங்காணப்பட்ட ஆசிரியர்களை தொழில்சார் ரீதியாக வலுப்படுத்துவதற்காகவும், ஆசிரியர் தொழில்சார் அபிவிருத்தி நிலையங்களினால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய கட்டாய விசேட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த விசேட திட்டங்களையும் உள்ளடக்கி, நிலையங்களினால் 2026 ஆண்டுத் திட்டத்திற்காக பின்வரும் திட்டங்களை உள்வாங்கி, அவற்றை கட்டாயமாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

i. பயிற்சி மற்றும் மீள் பயிற்சித் திட்டங்கள் (இதில் பின்வருவோர் கலந்து கொள்ள வேண்டும்)

1. கல்வி முறையில் கற்றல்கற்பித்தல் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள பயிற்சியற்ற பட்டதாரி, டிப்ளோமா தாரிகள், தன்னார்வ மற்றும் ஆரம்பநிலை ஆசிரியர்கள்.

2. தனியார் பல்கலைக்கழகங்களில் கல்விமானி (B.Ed) பட்டம் பெற்று நியமனம் பெற்றும், இதுவரை திசைமுகப்படுத்தல் பயிற்சி (Orientation) பெறாத ஆசிரியர்கள்.

3. கோவிட் தொற்று காலத்தில் (2020, 2021, 2022 ஆண்டுகளில்) தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கல்வி கற்று, ஆசிரியர் நியமனம் பெற்ற ஆசிரியர்கள்.

4. பிரிவேனாக்களில் கற்றல்கற்பித்தல் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள பயிற்சியற்ற கமிதுறவி ஆசிரியர்கள் மற்றும் இதுவரை திசைமுகப்படுத்தல் பயிற்சி பெறாத ஆசிரியர்கள்.

5. கடந்த 10 ஆண்டுகளுக்குள் எவ்வித தொழில்சார் அபிவிருத்தி வாய்ப்புகளையும் பெறாத ஆசிரியர்கள்.

6. மாகாண/வலயக் கல்விப் பணிப்பாளர்களினால் பரிந்துரைக்கப்பட்ட, விசேட பயிற்சி தேவையென இனங்காணப்பட்ட ஆசிரியர்கள்.

7. தனியார் மற்றும் அரைஅரசு பாடசாலைகளில் (அரசாங்கத்தால் சம்பளம் பெறுபவர் அல்லது பெறாதவர்) பணியாற்றும் பயிற்சியற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள்.

 

புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு அமைய கற்றல்கற்பித்தல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான பயிற்சித் திட்டங்கள் பின்வரும் கற்பித்தல் முறைகள் குறித்து ஆசிரியர்களை முறைப்படி வழிநடத்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்:

1. கற்றல் மையக் கல்வி (Learning Centered Education).

2. செயற்திட்ட அடிப்படையிலான கற்றல் (Project Based Learning).

3. வினவல் அடிப்படையிலான கற்றல் (Inquiry Based Learning).

4. உண்மைநிலை கற்றல் (Authentic Learning).

5. கலப்புக் கற்றல் (Blended Learning).

6. புரிதலுக்கான கருத்தியல் கற்றல் (Conceptual Learning for Understanding).

7. ஊடாட்டக் கற்றல் (Interactive Learning).

8. கல்விக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல் (Al in Education).

9. ஒன்லைன் வளங்களை (Online Resources) வினைத்திறனாகப் பயன்படுத்துதல்.

 

மேலும் ஆசிரியர் வாண்மை விருத்தி மையங்கள் முன்னெடுக்க வேண்டிய ஏனைய திட்டங்கள்:

1. கல்வி ஆய்வுகள் மற்றும் அது சார்ந்த திட்டங்கள் (ஒரு நிலையத்திற்கு 10 ஆய்வுகள்).

2. SBPTD (பாடசாலை அடிப்படையிலான ஆசிரியர் தொழில்சார் அபிவிருத்தி) க்கான வளங்களை வழங்குதல், ஒழுங்குபடுத்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்.

3. ஆசிரியர்களின் கற்றல்கற்பித்தல் செயல்பாட்டை மேற்பார்வை செய்தல், ஒழுங்குபடுத்தல், மதிப்பீடு செய்தல் மற்றும் பின்னூட்டல் வழங்குதல்.

4. விசேட பயிற்சித் திட்டங்கள் (சுகாதாரம் மற்றும் போசாக்கு, இணைப்பாடவிதானம், ஆலோசனைக் கல்வி, முறைசாராக் கல்வி மற்றும் ஆரம்பக் கல்வி தொடர்பானவை).

5. புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்குத் தேவையான வளங்களை வழங்குதல் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆதரவளித்தல்.

6. காலோசிதமான விசேட திட்டங்கள் (ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்திற்கான தொடர்ச்சியான ஆலோசனை மற்றும் கல்வித் திட்டங்கள்).

7. ஆசிரியர் தொழில்சார் அபிவிருத்தி நிலையக் கையேட்டின்படி, உங்கள் வலயத்தில் இனங்காணப்பட்ட விசேட பயிற்சித் தேவையுள்ள ஆசிரியர்களுக்கான திட்டங்கள்.

நடைமுறைப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள்

மேலே குறிப்பிடப்பட்ட திட்டங்கள் 2026 ஆம் ஆண்டுக்கான நடைமுறைப்படுத்தல் திட்டத்தில் கட்டாயமாக சேர்க்க வேண்டும். ஒவ்வொரு 6 மாத முடிவிலும் கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விப் பிரிவிடம் அதன் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பயிற்சி பெறுபவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்பதால், ஆசிரியர்களை முறைப்படி பதிவு செய்ய வேண்டும்.

மொழி ஊடகம் அல்லது விரிவுரையாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் போது, அருகிலுள்ள ஆசிரியர் நிலையங்கள் அல்லது வலயங்களுடன் இணைந்து திட்டமிட முடியும்.

இந்தத் திட்டங்களை நிலையத்தின் கல்விச் சார் உத்தியோகத்தர்களே முன்னெடுக்க வேண்டும். முடியாத பட்சத்தில் மாத்திரம் வெளிவாரி வளவாளர்களைப் பயன்படுத்தலாம்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top