A/L, ஈழத்து இலக்கிய வரலாறு, அறிமுகம்

ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு

 

(அ) அறிமுகம்:-

அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழி தொன்மைச் சிறப்பும் நெடிய மரபும் கொண்டது. இம் மொழி வழங்கும் நாடுகள் பலவுள. அவற்றுள் தமிழ் நாடும் ஈழமும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே தமிழ் மொழியின் தாயகமாக, நிலைக்களமாகத் திகழும் பெருமைக்குரியன. என்றுமுள தென்றமிழ் இயம்பி இசை கொண்ட புலவர்களும் அறிஞர்களும் ஈழத்திருநாட்டில் வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டே வாழ்ந்துள்ளனர். மிகப்பழைய புராண இதிகாசங்கள் ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள தொடர்புக்குச் சான்று பகருகின்றன. இலங்கை வேந்தனான இராவணன் குறித்து இராமாயணம் பேசுகிறது. பட்டினப் பாலை, அகநானூறு போன்ற சங்க இலக்கியங்களும் தமிழகத்திற்கும் ஈழத்திற்குமுள்ள தொடர்பு பற்றிக் கூறுகின்றன.

சங்கநூலான பட்டினப்பாலை ஈழத்துணவும் காளகத் தாக்கமும்….." என்றும் "நன்னகர் மாந்தை முற்றத்துண்ணா பணிதிறை தந்த பாடுசார் நன்கலம் பொன் செய் பாவை. வைரமோடாம்பல் ஒன்னுவாய் குவையியன்ற நிலத்தினைத் துறந்த நிதியத்தன….." எனவரும் அகநானூற்றுப் பாடல்வரிகளும் ஈழத்திற்கும் தமிழகத்திற்குமிருந்த வணிகத் தொடர்புகளை உறுதிப் படுத்துகின்றன.

தமிழகத்தில் முச்சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமைக் குரியது பாண்டிநாடு.

பாடுதமிழ் வளர்த்த கூடல்

புறத்திரட்டு

"உறைவான் உயர் மதிற் கூடலில் ஆய்ந்த ஒண் தீந்தமிழின்

துறைவாய் நுழைந்தனையோ"

திருக்கோவையார்

"தமிழ் நிலைபெற்ற தாங்கருமரபின்

மகிழ்நனை மறுகின் மதுரை"

சிறு பாணாற்றுப்படை

என்னும் பாடல்களின் வரிகள் பாண்டி நாட்டில் தமிழ்ச்சங்கங்கள் இருந்தமையை உறுதிசெய்கின்றன. அத்தகு சங்கங்களின் தோற்றத்திற்கு நிலைக்களமாக அமையாத போதிலும் பூதன் தேவனார் போன்ற புலவர்களை மதுரையம்பதிக்கு அனுப்பிச் சங்கப் புலவர்களோடு ஒருங்கமர்ந்து தீஞ்சொற் கவிபல புனைந்திட வழி செய்த பெருமை நம் ஈழத்துக்குண்டெனக் கருதப்படுகிறது.

(ஆ) காலத்து நகர்வினடிப்படையில்……!

"இலக்கிய காலப் பகுதிகள் வழி தமிழிலக்கிய வளர்ச்சிப் படிகளைக் கண்டறிவது சாலச்சிறந்த முறையாகும். இலக்கிய வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்கள், திருப்பங்களுக்கு அரசியல் வரலாற்றில் ஏற்பட்ட திருப்பங்களும் மக்கள் சமுதாய வாழ்விலேற்பட்ட மாற்றங்களுமே அடிப்படைகளாகும். இலக்கியம் மக்கள் வாழ்வினில் பயிராகி வளர்வது. அவ்வாழ்வில் ஏற்படும் மாற்றங்களால் இலக்கிய வளர்ச்சியில் பாதிப்புகள் தவிர்க்க வொண்ணாதது. எனவே அரசியல், சமுதாய, சமய மாற்றங்கள் பற்றிய வரலாற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு. அவ்வக்காலப்பகுதியிலேற்பட்ட இலக்கிய வளர்ச்சியைக் கணித்தறிய வேண்டும்" என்பார் முனைவர் தமிழண்ணல்

இதனடிப்படையில் ஈழத்துத் தமிழிலக்கிய வளர்ச்சியைக் காலத்து நகர்வு நோக்கில் நோக்குவதே இந்நூலின் நோக்கமாகும். ஈழத்து வரலாற்றின் முக்கிய திருப்பங்களை அறிவது ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் ஏற்பட்ட மாறுதல்களை நன்குணரத் துணைசெய்யும். ஈழத்துத் தமிழிலக்கிய வளர்ச்சிக்குச் சமுதாய, அரசியல் காரணிகளே அடிப்படையானவை, எனவே காலத்து நகர்வினடிப்படையில் ஈழத்துத் தமிழிலக்கிய வளர்ச்சியினைப் பின்வரும் தலைப்புக்களில் நோக்குவோம்.

1. மகாவம்ச அரசர்காலம் (கி.பி.300க்கு முன்)

2. யாழ்ப்பாணத் தமிழ் வேந்தர் காலம் (கி.பி. 1216 – கி.பி.1620 வரை)

3. போர்த்துக்கேயர் ஆட்சிக்காலம் (கி.பி. 1621 1658 வரை)

4. ஒல்லாந்தர் ஆட்சிக்காலம் (கி.பி.1658-1796 வரை)

5. ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் (கி.பி.1796-1900 வரை)

(இ) மகாவம்ச மன்னர் காலம்

"ஈழ நாட்டுச் சிங்கள மன்னர் வரலாற்றினைக் கூறும் மகாவம்சமும் தீபவம்சமும் மகாசேனன் மன்னன் காலத்துடன் முடிவுறுகின்றன. எனவேதான் மகாசேனனுடன் முடிவுறும் காலப்பிரிவை மகாவம்சகாலம் எனக்கூறுவர். இக்காலப் பிரிவில் ஈழத்துத் தமிழ் மக்களின் வரலாறு தெளிவாகாமையாலும் மகாவம்ச அரசர்களிற் சிலர் தமிழருடைய பகுதிகளிலும் தமது ஆணையை நிலை நிறுத்த முற்பட்டமையாலும் இப்பிரிவு ஈழத்துத் தமிழிலக்கியப்பரப்பின் பிரிவாக அமைவதாலும் கி.பி. 300 இன் முற்பட்ட காலப்பிரிவை மகாவம்ச அரசர்காலம் என்று கூறுவது பொருத்தமாகும்." என்கிறார் இலக்கிய கலாநிதி எப்.எக்ஸ்.ஸி. நடராசா.

 

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top