இருபாலைச் சேனாதிராய முதலியார்
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த இருபாலை என்னும் ஊரில் வாழ்ந்த நெல்லைநாத முதலியாரின் புதல்வரே சேனாதிராய முதலியார் ஆவார். இவர் மாதகல் சிற்றம்பலப் புலவரிடமும் கூழங்கைத் தம்பிரானிடமும் கல்வி பயின்றவர். போர்த்துக்கேயம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் தேர்ச்சிபெற்றவர். நியாயதுரந்தரராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அரசபதவி வகித்தவர், கவிபாடும் ஆற்றல் மிக்கவர். அங்கதச்சுவை, சிலேடைச்சுவை, சந்தச்சுவை ததும்பும் பாடல்கள் படைப்பதில் வல்லவர். புலவர்திலகமாய் விளங்கிய இவரிடம் நல்லூர்ச் சரவணமுத்துப் புலவர், நீர்வேலிப் பீதாம்பரப் புலவர், நல்லூர் ஆறுமுகநாவலர் போன்றோர் கல்வி பயின்றனர். சேனாதிராய முதலியார் இயற்றிய நூல்களுள் நல்லையந்தாதி, நல்லை வெண்பா (102 பாடல் கொண்டது), நீரரவிக் கலிவெண்பா, நல்லைக் குறவஞ்சி என்பன குறிப்பிடத்தக்கனவாகும். இவை யாவும் சமய சம்பந்தமான படைப்புக்களாக விளங்கியபோதிலும் பல்வேறு பாவினங்களில் ஆக்கப்பட்டபோதிலும் அவற்றின் அமைப்பும் கருத்தும் புலவரின் புலமைத்திறனை, வித்துவத்தன்மையை வெளிக்காட்டுவனவாகவே விளங்கின. முத்துக்குமார கவிராசரின் நண்பராக விளங்கிய சேனாதிராய முதலியார் தனது நண்பரைப் போன்றே கவிமழை பொழியும் ஆற்றல்மிக்கவராவார். இருவரும் சிலேடைக் கருத்துக்கள் அமைந்த பாடல்கள் படைப்பதில் மிக்க வல்லமை கொண்டவர்கள். சேனாதிராய முதலியார் பாடிய நல்லை வெண்பாவில் நல்லூரின் பெருமையை நன்கு காணலாம்.
இவருடைய பாடல்கள் தனிச்சிறப்புடையன என்பர். எடுத்துக்காட்டாக. நல்லைவெண்பா, நல்லைக்குறவஞ்சி ஆகியவற்றில் சில பாடல்களை நோக்குவோம்.
நல்லைவெண்பா:
"கந்துகமுந் தானைவேற் காளையரும் கன்னியரும்
கந்துகமுந் திக்களிகூர் நல்லூரே – சந்திரமா
மாவைப் பிழந்தார் மகிழ்பூப்ப வீரையிலோர்
மாவைப் பிழந்தார் மனை."
(கந்துக முந்து ஆனை வேல் காளையர் – கட்டுத்தறி முறியும்படி மதத்தால் முற்பட்டுச் செல்லும் யானைப் படையையுடைய வேல்வீரர், உந்து –(காலால்) தள்ளுகின்ற எனினுமாம். கந்துகம் – குதிரையும் பந்தும். சந்திரமாம் மாவைப்பு – பெரியபொன்னுலகம். சந்திரம் – பொன். வீரை – கடல். பிழத்தல் –பிளத்தல்)
நல்லைக்குறவஞ்சி:
"திருவாரு நல்லைநகர்ச் செவ்வேற் பெருமானார்
இருவாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ரம்மானை
இருவாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ராமாயின்
தருவாரோ சட்டிகுடம் சாறுவைக்க வம்மானை
தருவார்காண் சட்டிகுடம் சாறுவைக்க வம்மானை."
(இருவாலைக் குயத்தியர் – இரண்டு இளம் பெண்கள் (வள்ளி தெய்வ நாயகிகள்) குயம் – ஸ்தனம், சட்டி – சட்டித்திதி. குடம் – கும்பமாதம் (மாசிமாதம்), சாறு – திருவிழா)
சிலேடைக் கருத்துக்கள் கொண்ட இப்பாடல் மிக ஆழ்ந்த தத்துவக் கருத்துக்களைக் கொண்டமைந்தது என்பதைப் பாடலை நுணுகி நோக்குவார் நன்கு புரிந்து கொள்வர். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது திருவாரும் நல்லை நகரில் உள்ள செவ்வேற் பெருமானார் இருபாலையிலே குயத்தியரோடு சம்பந்தம் வைத்திருக்கிறார். அதன் காரணமாகச் சட்டி, குடம் சாறு வைக்கத் தருவாரோ? என்று கேட்கலாம். குயவ குடும்பத்தோடு சம்பந்தம் வைத்தவர் சட்டி, குடம் சாறுவைக்கத் தரத்தானே வேண்டும்; தருவார். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? என்ற கருத்தே வெளிப்படையாகத் தோன்றுகிறது. வள்ளி, தெய்வநாயகி என்னும் இரு இளம் பெண்களுடன் சம்பந்தம் வைத்துக்கொண்ட நல்லைநகர் செவ்வேற்பெருமான் கும்ப(மாசி)மாதத்திலே சட்டித்திதியிலே திருவிழாத் தொடங்க (கொடியேற்றம் செய்ய) அநுக்கிரகிப்பார் என்பதே இப்பாடலின் உட்பொருளாகும்.
சேனாதிராய முதலியாரின் ஊர் இருபாலை. அந்த இருபாலையில் உள்ள குயவ குடும்பத்தோடு சம்பந்தம் வைத்தவர் முருகன் என்றும் கொள்ளலாம். அதே வேளையில் இரு இளம் பெண்களோடு (வள்ளி, தெய்வநாயகியோடு) சம்பந்தம் கொண்டவன் முருகன் என்றும் சிலேடைக் கருத்துக்கள் பொதியப் புலவரவர்கள் இப்பாடலைப் பாடியுள்ளார் எனலாம்.
நல்லைக் குறவஞ்சியில் வரும் மற்றொரு பாடலில் நல்லைக் கந்தன் அடியார்தம் உள்ளத்து இருள் அகல, அமரர் அகமும் முகமும் மலர மயிலேறி வரும் அரிய காட்சியினைக் காட்டுகிறார்.
"கொடிவளரு மணிமாடக் கோபுரஞ்சூழ் நல்லூரிற் குமர மூர்த்தி
அடியருளத் திருளகல அமரர் முகமலரவர அணிமானீன்ற
கொடியினொடும் பிடியினொடும் குலவுமுடம் பிடியொடுங்கோ தண்ட மேந்தி
மிடியகல மயிலேறி விடியவந்த தினகரன் போல் மேவினானே"
சொற்சுவை பொருட்சுவை நிறைந்த பாடல்கள் இயற்றுதலில் சேனாதிராய முதலியார் வல்லார் என்பதற்கு இப்பாடல்களே தக்க எடுத்துக் காட்டுக்களாகும்.
கோவைப்பதியிலமைந்த கண்ணகைபேரில் இவர் ஊஞ்சல் பாடியுள்ளார். இந்நூல் 1962இல் திரு. க. சிவகுமாரன் என்பவரால் சுன்னாகம் திருமகள் அச்சகத்தில் அச்சிடப்பெற்றுள்ளது. இந்நூலில் உள்ள ஒரு பாடல் வருமாறு:-
"கனகநவ ரத்நமணி மவுலிமின்னக்
கவின் கொணெற்றிச் சுட்டியிளங் கதிர்கள்காலப்
பனகமணிக் குண்டலங்கள் பகலை வெல்லப்
பணித்தரளத் தொடைநிலவின் பரப்பை யெள்ள
அனகவிடைக் கிரங்கியமே கலைக ளார்ப்ப
அடியவரை யஞ்சலெனச் சிலம்பு மார்ப்பத்
தினகரமண் டலமளவு மதில்சூழ் கோவைத்
தேவிதிருக் கண்ணகையே யாடீ ரூஞ்சல்"
இலக்கிய, இலக்கணங்களை நன்கு மனனம் செய்யும் ஆற்றல் மிக்கவராக விளங்கிய சேனாதிராயர் தமிழ் அகராதித் தொகுப்பில் ஈடுபட்டிருந்த வண. நைற் பாதிரியாருக்குப் பெரிதும் உதவினார் என்பர். இதற்கு ஆதாரமாக மானிப்பாய் அச்சியந்திரசாலையில் அச்சிடப்பெற்ற தமிழ் அகராதிச் சாத்து கவியைக் கூறுவர். இக்கவியில் "தெல்லியம்பதியில்வரு நெல்லை நாதக்குரிசில் செய்த தவமெனாவுதித்த சேனாதி ராசகலை ஞானாதி ராசனொடு" எனப் பாடப்பெற்றவர் இவரேயாவர். நல்லூர்க்கந்தசுவாமி கோவிலில் முதலிற் புராணப் பிரசங்கம் செய்தவரும் இவரே என்பர் வித்துவசிரோமணி சி. கணேசையர்.
சிறந்த புலவராக, நல்லாசானாக, பிரசங்கியாக, நியாயது ரந்தரராக, இலக்கண, இலக்கியக் கடலாக மிளிர்ந்த சேனாதிராச முதலியார் 1840 இல் இவ்வுலக வாழ்வை நீத்தார். சின்னத்தம்பிப் புலவரின் பின் யாழ்ப்பாணக் கவி மரபைப் பேணிக் காத்தவர்களில் இவருக்குச் சிறப்பிடம் உண்டென்பர். அவரது சிலேடை நயம்மிகும் பாடல்கள் உள்ளவரை அவரது நாமம் அழியாது நின்று நிலைக்கும் என்பது திண்ணம்.
இவரது காலம் 1750 – 1840 ஆகும். இவரது மறைவுச் செய்தி கேட்டதும் வல்லிபட்டிக் குறிச்சி குமாரசுவாமி முதலியார் சொல்லிய பின்வரும் கவி இவர்தம் பெருமைக்கு ஏற்ற உரைகல்லெனலாம்.
"நானா திராவிடமு நன்னிலக்க ணாறுறச்செய்
சேனா திராயனையோ செத்ததென்றீர் வானாதி
பொன் னிலத்து முண்மை புகனூ லுரைப்பதற்காய்
இந்நிலத்து விட்டெடுத்த தே."
![]()