சுன்னாகம் வரதபண்டிதர்.

சிவராத்திரி புராணம் தந்த

சுன்னாகம் வரத பண்டிதர்.


"அரங்க நாதன் அருளிய புதல்வன்

இயலிசை நாடகம் இசை பெறு சோதிடம்

பயில் தரு வாகடம் படித்தினி துணர்ந்தோன்."

எனப் போற்றப்பெறும் பெருமை வாய்ந்தவர் சுன்னாகம் வரத பண்டிதர், இவர் வரகவி எனப் போற்றப்பெற்றவர். பல்துறை ஆற்றல் பெற்ற பாவலர். இவர் காசியிலிருந்து வந்து சுன்னாகத்தில் குடியேறியவர்கள் என்பர். இவரது தந்தையார் பெயர் அரங்கநாதையர். இதனைப் பிள்ளையார் கதைச்சிறப்பு பாயிரச் செய்யுள் ஒன்று உறுதி செய்கின்றது.

"செந்தமிழ் முனிவன் செப்பிய கதையும்

கந்தபுராணக் கதையினுள் ளதுவும்

இலிங்க புராணத் திருந்த நற் கதையும்

உபதேச காண்டத் துரைத்த நற் கதையும்

தேர்ந்தெடுத் தொன்றாய்த் திரட்டியைங் கரற்கு

வாய்ந்த நல் விரத மான்மிய முரைத்தான்

கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்கும்

துன்னிய வளவயற் சுன்னா கத்தோன்

அரங்க நாத னளித்தருள் புதல்வன்

திரம்பெறு முருகனைத் தினந்தொறும்

வரம் பெற வணங்கும் வரதபண் டிதனே."

பாவலர் சரித்திர தீபகம்படைத்த ஜே. ஆர் ஆர்ணல்ட் சதாசிவம் பிள்ளையும் வரத பண்டிதர் சுன்னாகத்தில் வாழ்ந்த புலவரென்றே பலவிடத்தும் குறிப்பிட்டுள்ளார். வரதபண்டிதர் குடும்பத்தினர். காசியிலிருந்து இங்கு வந்து குடியேறி வாழ்ந்தனர் என்பதை நல்லை நகர்ச் சின்னத்தம்பிப் புலவர், சிவராத்திரி புராணத்திற்கு வழங்கிய சிறப்புப் பாயிரப் பாடல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

பரத்துவாச கோத்திரன் அரங்கன் அருளும் மைந்தன் சத்தபுரிகளிற் காசி நகர் வரத பண்டிதன் முத்தமிழ் வல்லோனே". பரத்துவாச கோத்திரரான வரத பண்டிதர் புலவர்களால் பெரிதும் மதிக்கப்பெற்றவர். தமிழில் இலக்கிய இலக்கணங்களும் சோதிடமும் வைத்தியமும் நன்கு கற்றுத் தேறியவர். புகழ்பெற்ற புலவர்களான நல்லூர்ச் சின்னத்தம்பிப் புலவரும், மயில்வாகனப்புலவரும் "பண்டிதன் முத்தமிழ் வல்லோன்" என்றும் "மிகு மதுர ஆசு கவிராசன்" என்றும் பாராட்டியுள்ளனர்.

வரகவியான வரத பண்டிதர் சிவராத்திரிபுராணம், கிள்ளை விடு தூது, பிள்ளையார் கதை, பிள்ளையார் புராணம், ஏகாதசிப்புராணம், அமுதாகரம் ஆகிய ஆறு நூல்களை இயற்றியுள்ளார். இந் நூல்களை விடத் தனிப் பாடல்கள் பலவற்றையும் இவர் பாடியுள்ளார். அவை இன்று கிடைப்பனவாயில்லை. இவர் இயற்றிய சிவராத்திரிப் புராணம் சிவராத்திரி விரத மகிமையினையும் ஏகாதசிப் புராணம் ஏகாதசி விரத மகிமையையும் கூறுகின்றன. இவரது நூல்களுள் முதன்மையாகக் கொள்ளத்தக்கது. எழுநூற்று நாற்பத்து நான்கு அடிகளைக் கொண்ட பிள்ளையார் கதையாகும். ஆசிரியப் பாவாலான பிள்ளையார் கதை விநாயகர் ஆலயங்களில் பாராயணம் செய்யும் வழக்கமும் உண்டு. இலங்கையில் உள்ள பிள்ளையார் கோவில்களில் "பிள்ளையார் பெருங்கதை" என்னும் பெயரில் பாராயணம் செய்து இருபத்தொரு நாள் மக்கள் விரதம் அனுட்டிப்பதைக் காண முடியும். இப்பிள்ளையார் பெருங்கதையைப் பாராயணம் செய்வதனால் ஏற்படும் பயனை நூற்பயன் கூறும் பாடலொன்று
பின்வருமாறு கூறுகிறது:-

"
வெள்ளை எருதேறும் விரிசடையோன் பெற்றெடுத்த

பிள்ளையார் நோன்பின் பெருங்கதையை – உள்ளபடி

நோற்றார் மிகவாழ்வார் நோலா தருகிருந்து

கேட்டார்க்கும் வாராது கேடு".

வரத பண்டிதர் இயற்றிய மற்றொரு நூலானஅமுதாகரம்விசக்கடி முதலானவற்றுக்கு மருத்துவமுரைக்கும் வகையிலமைந்த தாகும். இவரதுகிள்ளை விடு தூதுஎன்னும் நூல் காங்கேசன் துறைக்கு தென்பாகத்திலே கண்ணியவளை என்னும் தலத்தில் வீற்றிருக்கும் குருநாத சுவாமியாகிய முருகனைப் போற்றும் வகையில் அமைந்தது. நூலாசிரியரின் கற்பனை வளத்தையும் புலமைத்திறனையும் பறை சாற்றுவதாக விளங்குவது.

பிள்ளையார் புராணம் என்னும் நூலும் இவராலேயே பாடப்பட்டதாகக் கருதப்படுகின்றது. பிள்ளையார் கதையில் கூறப்படும் விடயங்களே பிள்ளையார் புராணத்தில் வேறு விதமாகப் பாடப்பெற்றுள்ளன. சுன்னாகம் வரத பண்டிதரினால் இயற்றப்பெற்ற ஆறு நூல்களையும் ஒரு சேரத்திரட்டி இலங்கை அரசின் இந்து சமய கலாசாரத்திணைக்களம் "வரத பண்டிதம்" என்னும் பெயரில் ஒரு நூலாக வெளியிட்டுள்ளது. காலத்தால் மறக்க வொண்ணா இந்நூல்கள் மக்கள் மனதில் என்றும் நின்று நிலைத்திட இந்நூற் பணி உதவுமெனலாம். இலங்கையில் போர்த்துக்கேயராட்சி அடக்கு முறைக்குள் சிக்கித்தவித்த மக்களுக்கு ஒல்லாந்தராட்சிக் காலத்தில் ஓரளவு சமய சுதந்திரம் கிட்டிய வேளையிலேயே இந்நூல்கள் எழுந்தன எனலாம். இவற்றின் மூலம் விரதமகிமைகளை மக்கள் அறிந்திடவும், சைவ சமய மரபைப் பேணிக் காத்திடவும் வரத பண்டிதர் வழி காட்டியுள்ளார். அக்காலகட்டத்தில் அவரது நூற்பணி மகத்தானதும் ஒப்பற்ற தெனவும் உறுதிப்படக் கூறலாம்.

 

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top