புத்தகசாலை கவிதை விளக்கம்

புத்தகசாலை

இக்கவிதையின் ஆசிரியர் பாவேந்தர் பாரதிதாசன் ஆவார். இவர் 29.04.1891இல் தமிழ்நாடு புதுவையில் பிறந்தார். தந்தை கனகசபை முதலியார். தாய் இலக்குமி அம்மாள். இவரது இயற்பெயர் கனக் சுப்புரத்தினம். இவர் 21.04.1964 இல் இயற்கை எய்தினார். பாரதியார் இவரை சுப்புரத்தினம் கவி இயற்ற வல்லன் எனக் கூறுவார். மொழியறிவு, இசையுணர்வு கொண்டவர்.

தனித்தமைந்த வீட்டிற் புத்தகமும் நானும்

சையோகம் புரிந்ததொரு வேளைதன்னீல்

இனித்தபுவி இயற்கையெழில் எல்லாம் கண்டேன்;

இசைகேட்டேன், மணம்மோந்தேன், சுவைகள் உண்டேன் மனிதரிலே மிக்குயர்ந்த கவிஞர் நெஞ்சின்

மகாசோதியிற் கலந்த தெனது நெஞ்சும்!

சனித்ததங்கே புத்துணர்வு! புத்தகங்கள்

தருமுதவி பெரிது! மிகப்பெரிது கண்டீர்!

தனியே உள்ள வீட்டில் புத்தகமும் நானும் இணைந்த பொழுதினிலே இனிமையான பூமியின் இயற்கை அழகு எல்லாவற்றையும் கண்டேன், அத்துடன் இசையைக் கேட்டேன், மணத்தினை நுகர்ந்தேன், சுவைகளை உண்டேன், மனிதர்களில் மிகவும் உயர்ந்த கவிஞர் உள்ளத்தின் பேரொளியில் எனது உள்ளமும் கலந்தது. அங்கே எனக்குப் புது உணர்வு பிறந்தது. புத்தகங்கள் செய்யும் உதவி பெரிதிலும் பெரிது என்பது காணுங்கள்!.

மனிதரெலாம் அன்புநெறி காண்பதற்கும்

மனோபாவம் வானைப்போல் விரிவடைந்து

தனிமனித தத்துவமாம் இருளைப் போக்கிச்

சகமக்கள் ஒன்றென்ப துணர்வதற்கும்,

இனிதினிதாய் எழுந்த உயர் எண்ணமெல்லாம்

இலகுவது புலவர்தரு சுவடிச்சாலை

புனிதமுற்று மக்கள் புது வாழ்வு வேண்டில்

புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும்.

மனிதர்கள் எல்லோரும் அன்புநெறி காணவும் மனப்பாங்கு வானத்தைப் போல விரிவடைந்து, சுயநல இருளைப்போக்கி, எல்லாமக்களும் சமமானவர்கள் என உணர்வதற்கும், இனிமையாக எழுந்த உயர்ந்த சிந்தனைகள் எல்லாவற்றையும் வழங்குவது நூலகமே ஆகும். தூய்மையடைந்து புதுவாழ்வை மக்கள் பெற விரும்பினால் நாட்டில் எவ்விடத்திலும் நூல் நிலையங்கள் வேண்டும்.

தமிழர்க்குத் தமிழ்மொழியிற் சுவடிச்சாலை

சர்வகலா சாலையைப்போல் எங்கும் வேண்டும். தமிழிலிலாப் பிறமொழிநூல் அனைத்தும் நல்ல

தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்.

அமுதம் போல் செந்தமிழிற் கவிதைநூற்கள்,

அழகியவாம் உரைநடையில் அமைந்த நூற்கள், சுமைசுமையாய்ச் சேகரித்துப் பல்கலைசேர்

துறைதுறையாய்ப் பிரித்தடுக்கி வைத்தல் வேண்டும்.

தமிழ் மக்களுக்கு என்றே தமிழ் மொழியில் புத்தகசாலை பல்கலைக்கழகம் போல எங்கும் இருத்தல் அவசியம். தமிழ் இல்லாத பிறமொழிப் புத்தகங்கள் எல்லாவற்றையும் தமிழில் மொழி பெயர்த்து

வாசிக்கத் தருதல் வேண்டும். அமுதம் போல இனிமையான தூய தமிழில் கவிதைப் புத்தகங்கள், அழகிய உரைநடை நூல்கள், தொகையாகச் சேர்த்து பலகலைகள் சேர்ந்த வகையில் அவற்றை ஒவ்வொரு துறை துறையாக வேறு வேறாகப் பிரித்து அடுக்கி வைத்தல் வேண்டும்.

நாலைந்து வீதிகளுக் கொன்று வீதம்

நல்லதுவாய் வசதியதாய் இல்லம் வேண்டும்.

நூலெல்லாம் முறையாக ஆங்கமைத்து

நொடிக்குநொடி ஆசிரியர் உதவுகின்ற

கோலமுறும் செய்தித்தாள் அனைத்தும் ஆங்கே

குவிந்திருக்க வகைசெய்து தருதல் வேண்டும்

மூலையிலோர் சிறுநூலும் புதுநூலாயின்

முடிதனிலே சுமந்துவந்து தருதல் வேண்டும்.

ஊரிலே நான்கு அல்லது ஐந்து வீதிகட்கு ஒன்று வீதம் நன்றாக அமைந்த வசதியான ஒரு வீடு தேவை. அங்கே நூல்களை முறையாக வைத்து உடனுக்குடன் உதவும் விதம் விதமான பத்திரிகை அங்கே குவிந்து நிறைந்திருக்க ஒழுங்கு செய்துதருதல் அவசியம். ஒரு பக்கத்தில் சிறிய புத்தகமும் புதிய நூலாயின் தலையிலே எடுத்து வந்து தருதல் வேண்டும்.

வாசிக்க வருபவரின் வருகை ஏற்றும்

மரியாதை காட்டி அவர்க் கிருக்கை தந்தும்,

ஆசித்த நூல்தந்தும் புதிய நூல்கள்

அழைத்திருந்தால் அதையுரைத்தும், நாளும் நூலை

நேசித்து வருவோர்கள் பெருகும் வண்ணம்

நினைப்பாலும் வாக்காலும் தேகத்தாலும்

மாசற்றதொண் டிழைப்பீர்! சமுதாயச்சீர்

மறுமலர்ச்சி கண்டதென முழக்கஞ் செய்வீர்!

வாசிக்கவரும் வாசகர்களை வரவேற்று மரியாதை செலுத்தி அவரை ஆசனத்தில் இருக்கச் செய்தல் வேண்டும். அவர்கள் விரும்பிய புத்தகம் கொடுத்தும் புதிய புத்தகங்கள் வந்திருப்பின் அதைக்கூறுதலும் தினமும் வரும் வாசகர் எண்ணிக்கை பெருகும் வகையில் எண்ணம், சொல், உடல் என்பவற்றால் குற்றமில்லாத இத் தொண்டினைச் செய்யுங்கள். இதனால் சமுதாய ஒழுங்கு மறுமலர்ச்சி பெற்றுக்கொண்டது என்று முழக்கம் செய்யுங்கள்.

வினாக்கள்

01. இக்கவிதையின் ஆசிரியர் யார்?

பாவேந்தர் பாரதிதாசன்

02. கவிஞர் புத்தக வாசிப்பில் முழ்கியபோது எவற்றைக் கண்டதாகக் கூறுகின்றார்?

இனிய பூமியின் இயற்கை அழகு அனைத்தையும் கண்டார்.

03. கவிஞர் எவற்றைக் கேட்டு, நுகர்ந்து, உண்டதாகப் பாடுகிறார்?

இசையைக் கேட்டதாகவும், சுகந்த மணத்தினை நுகர்ந்ததாகவும், இனியசுவையை உண்டதாகவும் பாடுகின்றார்.

04. நாட்டில் புத்தகசாலை யாண்டும் வேண்டும் என கவி கூறுவதற்கான காரணங்கள் எவை?

மானிடர் அன்பு நெறிகாண, மனப்பாங்கு விரிவடைய, எம்மிடம் உள்ள சுயநல இருளைப்போக்க, சகல மக்களும் ஒன்று (சமமானவர்களே) என உணர்வதற்கு, எமக்கு இனிய உயர் எண்ணங்களை வழங்க நாட்டிலே எப்போதும் புத்தகசாலைகள் வேண்டும்.

அரும்பதங்கள்

1. புவிபூமி

2.
சையோகம்இணைந்திருத்தல், ஒன்றிப்பு

3.
சனித்ததுபிறந்தது, உருவானது

4.
சுவடிச்சாலை ஆவணக்காப்பகம், புத்தகசாலை

5.
நாட்டில் யாண்டும்நாட்டில் எவ்விடத்தும்

6.
சர்வகலாசாலை பல்கலைக்கழகம்

7.
கோலமுறும் செய்தித்தாள்விதம் விதமான பத்திரிகை

8.
ஆசித்தவிரும்பிய, கேட்டுக்கொண்ட

9.
மகா சோதிபேரொளி

10.
முடி – தலை

11.
இருக்கைஆசனம்

 

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top