‘யாழ்நூல்’ தந்த விபுலானந்த அடிகளார்
இலங்கை தம்புசிவா
வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும்போது, ஆங்கிலேயரின் காலணித்துவ ஆட்சிக்காலத்தில் எமது நாட்டின் மொழி, சமயம், கலை கலாசாரம், பண்பாடுகள் எதிர்நோக்கிய சவால்களுக்கெல்லாம் முகம் கொடுத்து அவற்றைப் பாதுகாக்கும் பெரும்பணியினை முன்னெடுத்த எம்மூதாதையர்களை நன்றியுடன் நோக்குகின்றோம். அவர்கள் ஆற்றிய தன்னலங்கருதாப் பணிகள் தமிழ் கூறும் நல்லுலகத்தில் இன்றும் மதித்துப் போற்றப்படுகின்றன.
அந்தவகையில் ஈழநாட்டின் தமிழின் ஞாயிறாக உதித்த பெருந்தகை. அருந்தமிழும், ஆங்கிலமும் திருத்தமுறப் பயின்று எண்ணூல், பூதநூல், வேதநூல் என்னும் பல்கலையும் தேர்ந்து – இமயம் முதல் ஈழம்வரை தமிழ்த்தொண்டும், சமயத்தொண்டும் செய்தருளிய வித்தகச்செம்மல் விபுலானந்த அடிகளார் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழின்பால் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார். தமிழ் மரபு பற்றிய அவருடைய தெளிநிலைப் பார்வைகள் அவரது பணிகளின் நெறிமுறைகளிலே பெரிதும் காணமுடிந்தது.
விபுலானந்த அடிகள் கிழக்கு மாகாணத்திலுள்ள காரை தீவு என்னும் இடத்தில் சாமித்தம்பி – கண்ணம்மையார் தம்பதியினரின் புத்திரராக 1892 ஆம் ஆண்டு பங்குனித்திங்கள் இருபத்தியாறாம் திகதி பிறந்தார். மயில்வாகன் என்று அழைக்கப்பட்டவர் 1924இல் இராமகிருச்ணமிசனில் சேர்ந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். சமூகத்தைத் துறந்து வாழ்க்கை முறைக்கு மாறாக, சமூகத்தில் மக்களோடு இணைந்திருந்து, அவர்களுக்கு ஆற்றும் தன்னலமற்ற தொண்டையே இறைவழிபாடாகக் கொண்டு உய்யும் புதிய துறவு மார்க்கத்தை இன்றைய காலத்தின் தேவையாக அமைத்தவர் விவேகானந்தர் அடிகள். இப்புதிய துறவுமார்க்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் துறவிகளின் அமைப்பாக ‘ராமகிருச்ண மிசன்’ அவரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த மிசனின் பெருமைமிகு மூத்த துறவிகளில் ஒருவராகவும் முதலாவது தமிழ்த்துறவியாகவும் விபுலானந்தர் அடிகள் மதிக்கப்பட்டார்.
‘முத்தமிழ் வித்தகர்’ எனத் தமிழ் உலகம் பெரிதும் போற்றும் வகையில் விபுலானந்த அடிகளின் இலக்கிய ஆழுமை ஆழ்ந்தும் விரிந்தும் காணப்பட்டது. அத்தகைய இலக்கியப்பணிக்கு மத்தியிலும், சமூகத் தொண்டுக்கு அதுவும் குறிப்பாக கல்வித்தொண்டுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
இலக்கியப் பணியும் சமூகப்பணியும் அவரது ஆளுமையின் இரு பரிமாணங்கள் எனலாம். பல்கலைக் கழக நிலைக் கல்வி பற்றியும் முறைமை பறறியும் போதனா மொழி பற்றியும் அவரது கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை. தமிழ் ஆய்வின் இக்கால விரிவுக்கு வேண்டிய வித்துக்களை அவரது புலமை ஈடுபாடுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தமிழ் இலக்கியத்தினூடே வெளிவருகின்ற சிந்தனை மரபு பற்றிய அக்கறையை விபுலானந்தரிடம் காணலாம். இயற்கை அறிவியல் நோக்கு முறையினை உள்வாங்கிய ஒவ்வொரு வகையிலும் அதேவேளை ஆத்மார்த்த அழகியல் துறையில் ஈடுபாடு கொண்டவர் என்ற வகையிலும் தமிழ்ப் பண்பாடு பற்றிய பல விடயங்களையும் பன்முகப் படைப்பாக்கும் ஆற்றலுடையவராக விளங்கினார்.
விபுலானந்தரின் தமிழ் நாடக ஈடுபாடு தமிழிசை ஆய்வு ஆகியவற்றை நோக்கும் போது அவரால் எழுதப்பட்ட மதங்க சூளாமணி என்னும் நாடக நூலும், இசை ஆய்வின் வெளிப்பாடாகத் தோன்றிய யாழ்நூலும் மிகவும் முக்கியம் பெறுகின்றன. பொதுவாகச் சுவாமி விபுலானந்தர் பற்றிக் கூறும்போதும், எழுதும்போதும் பெரும்பாலானோர் அவரது தமிழ்த்தொண்டினையும் அரும்பெரும் பொக்கிசமாகத் தமிழ் இசையுலகத்திற்கு வழங்கிய ‘யாழ்நூலையும் குறிப்பிடத் தவறமாட்டார்கள்.
விபுலானந்த அடிகளைப் பற்றி நோக்குவோமானால் அவர் ஒரு பல்வகைக் கழகமாகவே இருந்து செயற்பட்டார் என்பது புரியவரும். ஆசிரியராக, தமிழ்ப் பண்டிதராக விஞ்ஞானப்பட்டதாரியாக, கல்விக் கூடங்களின் அதிபராக, பாடசாலைகளின் முகாமையாளராக மட்டுமன்றி பல்கலைக்கழகங்களின் (இலங்கைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ) தமிழ்த்துறைப் பேராசிரியராக, எழுத்தாளராக, பேச்சாளராக, பல்சுவைக் கவிஞராக (வெள்ளை நிறப் பூவுமல்ல, வேறெந்த மலருமல்ல, உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.) பதிப்பாசிரியராக, பலசஞ்சிகைகளின் ஆசிரியராக, மொழியியல் ஆராய்ச்சியாளராக, மொழிபெயர்ப்பாளராக, நாடகவிற்பன்னராக, யாழ் இசைக்கருவி பற்றிய ஆய்வாளராக பல்கலைப்பரிமாணங்களைக் கொண்டவராக வாழ்ந்து காட்டினார்.
தமது பிறந்த ஆண்டின் பெருமையையும், தமது ஆய்வு நூல் தோன்றுவதற்கு வித்திட்ட சிலப்பதிகாரத்தின் மகிமையையும், யாழ்நூலில் ‘நூல் தோன்றிய வரன் முறையும் அவயைடக்கமும் நூற்பயனும்’ என்ற பகுதியில் சுவாமி விபுலானந்தர் பின்வருமாறு இயம்பியுள்ளார்.
“தமிழ்நாடு செய்த தவப்பயனாகத் தோன்றி, சங்க நூற் செல்வத்தை
தமிழுலகிற் கீந்த அறிவுக் கொடை, பெரு வள்ளலும், பெரும் வள்ளலும்,
பெரும் பேராசிரியர், தென்னாட்டுக் கலைச்செல்வர், எழுத்தறி புலவர் எனும்
சிறப்புப் பெயர்களுக்குச் சிறப்பளித்த சாமிநாதையர் அவர்கள்,
சிலப்பதிகாரத்தை முதன் முதலாக அச்சிட்டது 1892ஆம் ஆண்டிலாகும்.
அந்த ஆண்டிலேயே யானும் பிறந்தேனாதலினாலே பள்ளியிற் படிக்கும் காலத்திலே மூத்தோர் கையிலே அந்நூற் பரிதியிலிருக்கக் காண்பதும் என் கையில் அதைத் தீண்டுவதும் எனக்குப் பேருவகையைத் தரும் செயல்களாக இருந்தன.” கல்வி மூலம் நாமாவகன்றித் தாமாகவே பட்டம் பதவிகளும், பேரும் புகழும் ஒருவரைச் சென்று சேரும் என்ற உயரிய கருத்தினைக் கொண்டவராகிய சுவாமி விபுலானந்தர்…
“இருக்குமிடந்தேடி என்பசிக்கே யன்னம்
உருக்கமுடன் கொண்டு வந்தா லுண்பேன்”
என்ற கருத்தமைவாகக் கூறி, “தொண்டு புரிவதையே குறிக்கோளாகக் கொண்டு இரவு பகல் ஓய்வற்றுக் கல்வியைப் பெருக்கிப் பொதுக் கழகங்களில் விரிவுரையாற்றுதல், நூலெழுதுதல், திங்கள் வெளியீடுகளிலே ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடுதல் என்றித்தகைய தமிழ்த் தொண்டுகளைச் செய்து கொண்டு வந்தால், வேண்டிய உயரிய இடமெல்லாம் தானாகவரும்” என்கிறார்.
ஆராய்ச்சித் துறையில், முன்மாதிரியுயான பணிகளில் ஆர்வத்துடன் சுவாமி விபுலானந்தர் செயற்பட்டு வந்துள்ளார். இத்தகைய முயற்சிகளின் சிகரமாக விளங்குவது பன்னெடுங்கால ஆராய்ச்சியின் விளைவாக அடிகள் ஆக்கியளித்திருக்கும் ‘யாழ்நூல்’ எனும் அரும் பெரும் பொக்கிசமாகும். தமக்கிருந்த தமிழ்ப் பற்றும் பண்டைய இலக்கிய ஈடுபாடும் காரணமாக, அவர் ஏற்கனவே பெற்றிருந்த பூதநூலறிவையும், கணித நூலறிவையும் துணை கொண்டு பண்டைத் தமிழரின் இசைக் கருவிகளைத் துருவித் துருவியாராய்ந்து பண்டையரின் வரலாறு, அமைப்பு முறை போன்ற அரிய விடயங்களையெல்லாம் திரட்டித் தொகுத்துத் தம் ஆராய்ச்சி முடிபுகளை ‘யாழ்நூல்’ வாயிலாக வெளிக்கொணர்ந்தார். விபுலானந்த அடிகளாரது இலக்கிய இலக்கணப்புலமை, மற்றையோர்க்கு எட்டாதவாறு கருகலாய்க் கிடந்த சிலப்பதிகாரத்து அரங்கேற்றுக் காதைக்கு விளக்கத்தந்தது. பழந் தமிழ் இசைக்கருவிகளான சகோட யாழ், பேரியாழ், சீறியாழ், மகரயாழ் என்னும் இசைக்கருவிகளெல்லாம் அடிகளாரது அகச்செவியில் இன்னிசை பொழிவதை உணர்ந்தார்.
முத்தமிழ் இலக்கியமாம் சிலப்பதிகாரம் காட்டிய அந்தப் பழம்பெருஞ் செல்வத்தை விபுலானந்த அடிகளார் விஞ்ஞானக் கண்கொண்டு நோக்கினார். அவரது விஞ்ஞான ஆளுமையும் கணிதப் புலமையும் இலக்கியச் செல்நெறியும் அத்தகைய ஆய்வை மேற்கொள்ள வழிசமைத்தன. தமிழிசை அமைப்புகளுக்குரிய நீண்ட வாய்ப்பாடுகள் யாவும் அவருள்ளத்தே தோன்றிய நீருள்ளிருந்தெழுந்து நின்ற மடநல்லாராக ஏழிசைகளையும் உருவகம் செய்து ‘யாழ்நூல்’ படைக்கலாயினர்.
பாயிரவியல், யாழுறுப்பியல், இசைநரம்பியல், பாலைத் திரிபியல், பண்ணியல், தேவாரவியல், ஒழியியல் என்னும் ஏழு இயல்களாக வகுக்கப்பெற்ற பழந்தமிழ் இசைச் செல்வம் ‘யாழ்’ என்னும் பெயரோடு தரணிக்குத்தரப்பட்டது. அன்னைத் தமிழின் சிறப்புக்கு ‘யாழ்நூல் மகுடம் சூட்டியது. இந்த யாழ்நூல் வெளிவருவதற்கு முன்பு சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில், கழகமன்றில் சுவாமி விபலானந்தர் தொடர்ந்து எட்டு நாட்கள் ‘பண்டைத் தமிழிசைபற்றி நான்கு சொற்பொழிவுகளும், ‘தமிழ்க்கலையும் சிற்பமும்’, இருசொற்பொழிவுகளும் ஆராய்ச்சியும்’ அறிவியல் ‘தமிழும் ஆற்றியிருந்தார்கள். பற்றி
அச்சொற்பொழிவின் போது மக்கள் “சங்க இலக்கியங்களிலே பயனடையவில்லை. விலை அவற்றை மதிக்கவொண்ணாத பொக்கிசங்கள் இருக்கின்றன. அப்பரெக்கிசங்களால் தற்காலத்துத் தமிழ் அறிவுமேம்பாட்டிற்காக உபயோகித்துக் கொள்ளவுமில்லை. எனவே தற்கால மக்களின் அதிகப் படியான பலன் தருவனவாகச் செய்ய உதவியான படிப்பினைக்காகவே நாம் பழமையான நூல்களையும் வாழ்க்கை முறைகளையும் ஆராய்கின்றோம்” என்று சுவாமி விபுலானந்தர் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பியுள்ளார்.
ஐயிரண்டு ஆண்டுகளாக நேரங்கிடைக்கும் போதெல்லாம் முயன்ற குருவருளினாலும் தமிழ்த்தெய்வத்தின் நோக்கினாலும் இவ்வாராய்ச்சி நூலினை ஒருவாறு எழுதி முடித்தேன். இசை ஆராய்ச்சிக்கு இன்றியமையாது வேண்டப்படுவனவாகிய கணக்கு முறைகளையும், பிறவற்றையும் மாணவர்கள் படித்துப் பயனடைவார்களாக” என்ற ஆராய்ச்சியின் நோக்கம் வருங்கால சமுதாயத்தைச் சென்றடைய வேண்டும் என்பதை உணர்த்தி நிற்கின்றதாக அமைகின்றது.
1947ஆம் ஆண்டு ஆனித்திங்கள் 20ஆம் நாள் சென்னை மாநிலக்கல்வி மந்திரி அவிநாசலிங்கம் செட்டியார் அவர்கள் தலைமையில், கரந்தைத் தமிழ்ச்சங்க ஆதரவில் திருக்கொள்ளம் புத்தூரில் அறிஞர் பேரவையின் முன் ‘யாழ்நூல்’ அரங்கேற்றப்பட்டது. ஆராய்ச்சித் திறனும் இசைக்கருவி வரலாற்றையும், அமைப்பினையும் ஆராய்ந்து வெளியிட்ட முடிபுகளும், கருத்துக்களும் இசைக்கல்வியில் நாட்டங்கொண்டோருக்கு வரப் பரசாதமாக அமைந்தன. தமிழுக்கு உரமூட்டும் வகையில் அவர் ஆக்கிய ‘யாழ்நூல்’ மறைமுகமாகக் கல்வித் துறைக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ளமை சிறப்பே.
நன்றி
நூல் – தன்னேர் இலாத தமிழ்
![]()