தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின்
வாழ்வும் தொண்டும் (1893 – 1967)
தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக
மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி.
கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று
நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.
‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே‘
என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை
நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள்
தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர்.
தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச்
செய்தவர்.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும்
மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக்
கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப்
பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை
வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது.
இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச்
சிலவாகும். அவை :-
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில்
கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர்
சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம்
பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள
ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும்
போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய
இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார்.
ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர்
மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில்
பணியாற்றினார்.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும்
கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும்
பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ்
மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார்.
அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய
நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார்.
இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு
வருகை புரிந்தார். சென்னையில் "ஒற்றுமை நிலையம்" என்னும்
பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர்.
அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை
வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம்,
திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக
நசி.கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார்
இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும்
மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல
ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின்
மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி.
கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967 இல் இலங்கையில்
மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும்
நிலைத்து நிற்கும்.
தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு
மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு,
தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில்
அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது
நோக்குவோம்.
அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர்
எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின,
வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா
பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள்
ஐந்து.
1. செந்தமிழ் அகராதி,
2. தமிழ் இலக்கிய அகராதி,
3. தமிழ்ப் புலவர் அகராதி,
4. திருக்குறள் அகராதி,
5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரையில்
"நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச்
செய்து முடித்தோம்" என்கிறார்."நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ
வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து
முடித்தோம்" என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர்
முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள்
பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல
நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள்
தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில்
இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை "இந்நூல் ஓர் அறிவுக்
களஞ்சியம்" என்கிறார் முனைவர்.மா.இராச மாணிக்கனார்.
இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச்
செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில்
வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.
பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து,
பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது
போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில்
உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும்,
நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.
தமிழ்மொழி – தமிழினம்
தமிழ்மொழி – தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட
ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா,
தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட
பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம்,
முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு,
தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும்
புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர்.
ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள்
அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால்
மலைப்புத் தோன்றும். தமிழின் – தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம்
பண்பாட்டை- நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த
பேரறிஞர் கந்தையா பிள்ளை.
திராவிட நாகரிகமும் – ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும்
வகையில் பல நூல்களை எழுதினார். அவை :-
திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா,
தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை
எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர்
கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம்
நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.
பிற
மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள்
குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு
நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல
நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர்.
ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி.
கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.
"ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின
வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து
நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள்
முட்டறுத்தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க
வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய்
அகன்று மெய்க்கை உயர்ந்தது."
வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர்
களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு
விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும்
எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல,
தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி
எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன்.
நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம்
இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும்
புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.
கோ. தேவராசன்
அன்பன்
![]()